• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

என் கவிதை முயற்சிகள்

Status
Not open for further replies.
குறட்பா முயற்சிகள்
ரமணி, 20/11/2012

மருத்துவச் சாலையில் பெற்ற குழந்தை
மருத்துவர் சொன்ன பொழுது. ... 1

அழகான பேர்வைக்க இன்டர்நெட் சேவை
குழந்தைக்குச் சின்ன பெயர். ... 2

மாலையில் அம்மாப்பா பேணும் குழந்தையைத்
காலையில் தாதி வளர்ப்பு. ... 3

ஓய்ந்திட வாரம் குழந்தை உலாவரும்
சாய்ந்தபடி தள்ளுவண்டி யில். ... 4

உடையில் கிழக்கு மனதினில் மேற்கு
தடையில்லா நம்பெண் மகள். ... 5

உடையில் மனதில் விழைவது மேற்கு
கடைதேடும் நம்மாண் மகன். ... 6

குன்றாமல் கொள்வது கொஞ்சம் கொடுப்பது
இன்றைய வர்த்தக வாழ்வு. ... 7

வலியோரை வாழ்த்தி எளியோரத் தாழ்த்தும்
கலிசூழ்ந்த தீய உலகு. ... 8

பெற்றோரைப் பேணிடார் சுற்றத்தை நாடிடார்
கற்றும் உதவாக் கரை. ... 9

பொருளும் பணமும் புகழும் உவந்து
அருளும் விலைபேசும் மா. ... 10 ... [மா = உலகு]

பற்றும்கை பிள்ளையார்கை என்றாகி வாழ்க்கையில்
உற்றதுணை என்றுகைப் பற்று. ... 11

அறுதலைக் கந்தன் உறுதுணை என்றாகி
மீண்டும் பிறத்தல் அறு. ... 12

தாமதம் இல்லாமல் நற்கதி பெற்றிடப்
பூமகளே சம்மதம் தா. ... 13

*****
 
Dear Saidevo,

என் சிறு மதிக்கு எட்டிய அளவில் நான் புரிந்து கொண்டது:

கடைதேடும் நம்மாண் மகன்.

எதிலும் எல்லைகளைத்தேடும்/தொட்டிடத்துடிக்கும் நமது இளைஞர்கள்.

அறுதலைக் கந்தன் உறுதுணை என்றாகி
மீண்டும் பிறத்தல் அறு

மோட்சத்தை விரும்பும் வேட்கை இங்கு தொடங்குகிறது.

தாமதம் இல்லாமல் நற்கதி பெற்றிடப்
பூமகளே சம்மதம் தா.

இதில் உள்ள தத்துவம் வைணவத்தின் சரணாகதி ஆகும். புருஷகாரபூதையான ஸ்ரீயை வேண்டும் ஒரு ஆர்த்தப்ப்ரபன்னனின் வேகமும் தாகமும் இதில் காணப்படுகிறது.

குறிப்பு: ப்ரபன்னன்-சரணாகதி செய்த பக்தன். இவர்கள் இருவகையினர். த்ருப்த ப்ரபன்னன் என்றும் ஆர்த்தப்ரபன்னன் என்றும். இந்த ஜன்மத்தின் முடிவுவரைக்காத்திருந்து அதன் முடிவில் மேலும் பிறவிகள் இன்றி இறைவனை அடைய வேண்டும் என்று விரும்புபவன் த்ருப்தன். தாங்கமுடியாத வேட்கையுடன் இந்த ஜன்மத்தையும் உடனே முடித்து என்னை ஏற்றுக்கொள் என்ற நிலையிலிருப்பவன் ஆர்த்தப்ரபன்னன். இறைவனிடம் சரணடைய ஸ்ரீ யின் அருளும் வேண்டும். இவை வைணவத்தின் அடிநிலைகளும் நிலைப்பாடுகளுமாம்.

ஒரு வேளை நீங்கள் இதை எண்ணி இவற்றை எழுதவில்லை என்றாலும் நான் அணிந்திருக்கும் கண்ணாடி வழித்தானே நான் பார்க்கமுடியும். நான் கண்டதை எழுதினேன். உங்கள் கவிதை முயற்சி நன்றாக அமைந்துள்ளது. நன்றி.
 
Last edited:
Dear Suraju Sir,
i am waiting for your stories in TB... hope you are on the task and will not disappoint me. Your interpretation of Shri Saidevo poem is wonderful as the poem itself. BTW your viewing glass is a wonderful one as it has given us a beautiful post.

Cheers.
 
நண்பர்கள் ராஜு, மனோஹர் அவர்களுக்கு,

வணக்கம். என் குறட்பாக்கள் பிடித்திருப்பது குறித்து மகிழ்ச்சி. ராஜுவின் சரணாகதித் தத்துவ விளக்கம் அவர் குறிப்பிட்ட குறட்பாக்குப் பொருண்மை சேர்க்கிறது. சரணாகதியைக் குறித்தாலும் நான் இந்த அளவுக்கு ஆழ்ந்து சிந்தித்தெல்லாம் எழுதவில்லை!

’சந்தவசந்தம்’ என்ற கூகிள் குழுமம் ஒன்றில் இலந்தை ராமசாமி அவர்கள் முயன்ற குறட்பாக்களில், முதற்சொல் இறுதியாக வேறு பொருளில் வரும் உத்தியை அமைத்திருந்தார். நான் அதைக் கொஞ்சம் மாற்றி முதற்சீரில் இருசொற்கள் வருமாறும் அது மாறி இறுதி அடியின் கடைசியிரு சீர்களில் வருமாறும் அமைத்து முயன்றது கடைசி மூன்று குறட்பாக்கள். இதுபோன்று இங்கு நம் கவிதை ஆர்வலர்கள் முனையலாமே?

’கடைதேடும்’ என்ற பிரயோகத்துக்கு ராஜுவின் விளக்கம் சொல்லிலும் பொருளிலும் அவர் தேடும் எல்லைகளைக் காட்டுகிறது. நான் நினைத்தது ’கடை’ என்ற சொல்லின் நேர்பொருளான வியாபார ஸ்தலம். காலத்தின் போக்கில் இன்றைய இளைஞர்கள் வேலை விட்டு வேலை தாவ முயல்வதும் நேரிடுவதும் ஒரு நாகரிகமாகிவிட்ட போக்கைக் குறிக்க நான் பிரயோகித்தது ’கடைதேடும்’ என்னும் பதம்.

மதி யெனும் நிலவு தூரத்தில் இருந்து பார்கும்போது ’சிறு மதி’ என்றுதான் தோன்றும். அதே நிலவை நாம் ஒரு தொலைநோக்கியில் பார்க்கக் கிட்டேவந்து விஸ்வரூபம் எடுக்கும். ராஜு தான் அணிந்துள்ள கண்ணாடி வழியே அவ்வப்போது தன்னைப் பார்த்துக்கொளவது நமக்கெல்லாம் மகிழ்ச்சி தருவதாக இருக்கும் அல்லவா மனோஜ்?
 
அன்புள்ள மனோஹர் & சாயிதேவ்,

உங்களுடைய பதிவுகளுக்கு நன்றி. நான் ஒரு வேம்பின் புழு. ஆழ்வார் சொன்னது போல வேம்பின் புழு வேம்பன்றி வேறொன்றும் அறியாது. நன்றி.
 
முன்னரே நான் இங்குப் பதிந்து கீழே மேற்கோளாய் வரும் கவிதையின் மரபு வடிவம்:

கவிதையை/கழுதையைக் கட்டிப் போடு!
ரமணி 20/11/2012

(நிலைமண்டில ஆசிரியப்பா)
புதுக்கவிதை யென்றுநான் புனைந்திட முனைந்தது
புதுக்கழுதை யாகியே புறங்கால் உதைவிட்டுத்
தலைதெறித்(து) ஓடியும் திரிந்தும் கணிணியின்
வலைமின் தாள்களை விழுங்குவது கண்டதை
அசைச்சீர் தளைத்தொடை ஓசை கொண்டுவந்(து)
இசைவலி யுறுத்திக் கட்டிப் போட்டேனே.

உதைத்தது கடித்துக் குதறிவிட் டாலோ
பதைத்தது விடுத்தெனை ஓடிவிட் டாலோ
நியதி இல்லா சுதந்திர உரிமையில்
அவதி யுறுவது அடியேன் அன்றோ!

*****
saidevo said:
03. கவிதையை/கழுதையைக் கட்டிப்போடு!
புதுக்கவிதை எழுத முனந்து
அது புதுக் கழுதையாகி
உதைத்துக்கொண்டு மனம்போல் திரிந்து,
என் மின்வலைக் காகிதங்களைக்
கபளீகரம் செய்வதுகண்டு
அதை அசைச் சீர்தளைகளால்
கட்டிப்போட்டேன்:
உதைத்தது கடித்துவிட்டாலோ
அல்லது ஓடிவிட்டாலோ
எனக்கல்லவோ அவதி!

இந்தக் கவிதையை இப்படிக் கட்டினேன்:
புதுக் கவிதை எழுத முனைந்தது
புதுக் கழுதை யாகி உதைவிட்டு
மனம் போலத் திரிந்து எனது
மின்வலைத் தாள்களை விழுங்குவது கண்டதை
அசைச்சீர் தளைகள் கொண்டு நன்கு
கட்டிப் போட்டு விட்டேன் இன்று.
உதைத்தது என்னைக் கடித்து விட்டாலோ
அல்லது கழுதை ஓடிவிட் டாலோ
அவதி யுறுவது அடியேன் அல்லவோ!
--நம்பினால் நம்புங்கள், இது ஆசிரியப்பா!

*****
 
5. நகைச்சுவை வெண்பாக்கள்
யார் உங்கள் ருக்கு?
ரமணி, 28/11/2012


நாருக்குப் பூமணம்போல் நீருக்குத் தீஞ்சுவைபோல்
ஊருக்குக் கோவில்போல் சீருக்கு ஓசைபோல்
காருக்குப் பெட்ரோல்போல் யாருக்கும் தீங்கெண்ணா
வேருக்கு நீராவாள் ருக்கு.

எருக்கு முளைபோல் கிறுக்குப் பிடிபோல்
முருக்குப் புளிபோல் நறுக்குத் தெறிபோல்
கருக்குதல் காய்க்கத் தருக்கு நிறைந்தே
செருக்குடன் வாழ்ந்திடும் ருக்கு.

[முருக்கு=எலுமிச்சை கருக்குதல்=திட்டுதல்
தருக்கு=வலிமை, தைரியம் செருக்கு=கர்வம்]

*****
 
5. நகைச்சுவை வெண்பாக்கள்
ரமணி, 30/11/2012


பெருங்காயம் வெங்காயம் ஓர்விகுதி யாயின்
பெருங்காயம் ஆகுமோ வெங்காயம் -- முன்னது
உண்ணும் உணவில் மணம்பெருக்கும் -- பின்னதோ
கண்ணீர் பெருக்கி விடும்.
[விகுதி=சொல்லின் இறுதிப் பகுதி]

மாவிளம் பிஞ்சுதான் மாவடு ஆயினும்
மாவடு என்றால் பெருங்காயம் என்றுபொருள்
மாவடுவி லேது பெருங்காய(ம்) ஏனெனில்
மாவடுவின் காயம் சிறிது.
[காயம்=உடல்]

மாவடு தன்னுருவில் ஓங்கி வளர்ந்திட
மாங்காய் பெயரில் பெருங்காயம் பெற்றந்த
மாங்காயே கல்லடி வாங்கிப்பின் காயத்தில்
மாவடு வோடு விழும்.
[காயம்=உடல், அடிபட்ட காயம் வடு=தழும்பு]

*****
 
நண்பரே,

மாவடு தன்னுருவில் ஓங்கி வளர்ந்திட....

மாவடு தன்னுருவில் ஓங்கி வளருமா?
 
நண்பரே,

’தன்னுருவில்’ என்றபோது ’மரத்தில்’ என்பது முன்தொக்கி நிற்பதாக நினைத்தேன்.
அதற்குப் பதிலாக ’தன்மரத்தில்’ என்று மாற்றிக் கொள்ளலாம்.


நண்பரே,
மாவடு தன்னுருவில் ஓங்கி வளருமா?
 
8. மரபு வழியில் புதுக்கவிதை: கடவுளிடம்...
ரமணி, 24/12/2012
(இணைக்குறள் ஆசிரியப்பா)


கடவுளிடம் வேண்டிக் கேட்பது தவறா?
என்றான் சிஷ்யன்.
கடவுளிடம் வேண்டிக் கேட்பதினும்
கடவுள் கொடுப்பதைக் கொள்வது மேலாகும்
என்றார் அவன்குரு.
ஏனிப்படி குருவே என்றான் சிஷ்யனே.

குழந்தை தின்பண்டம் விழைந்து எடுத்தால்
குறையளவே கொள்ளுமன்றோ?
குழந்தை இருகைகள் குவித்து அள்ளினாலும்
குறையளவே ஆகுமன்றோ?
அம்மா கொடுத்தால் அதிகம் ஆகாதோ?
என்றார் அவன்குரு:
யோசித்துப்பார் சிஷ்யா யாசிக்கும் போதினிலே!

[குறிப்பு: பேரா. பசுபதி தமது ’கவிதை இயற்றிக் கலக்கு’ புத்தகத்தில் இணைக்குறள் ஆசிரியப்பாவைப் பற்றி, "இது, வடிவில், தற்காலப் புதுக்கவிதை மாதிரி இருக்கும்" என்கிறார் (பக்.93) இந்த உத்தியை முயன்று பார்க்க எழுதிய கவிதையிது. கதை பழைய குமுதம் பக்தி இதழில் இருந்து.]

*****
 
24. தமிழ் ஹைக்கூவின் புதுவடிவம்: ஐக்குறள்
ரமணி
(அஞ்சல் 71-இன் தொடர்ச்சி)


14/11/2012
அம்மா எனும்பசு அய்யோஓ என்கிறது.
வாயில் நெகிழிப்பை யோடு! ... 1
[நெகிழி=plastic]

புல்லிருந்த பூமியை நக்கித் துடைத்திடும்.
நாயாய் அலையும் பசு. ... 2

எறும்புக்கு இட்ட அரிசிமாவுக் கோலம்.
கரந்துண்ணும் காக்கை அணில். ... 3

சுட்டெரிக்கும் வெய்யில். சுவரோரம் வண்டி.
எருதுகள் வாயில் நுரை. ... 4

முன்னே ஒளிவெள்ளம். சாலை விருட்சம்.
சுவரில் எறிந்துசெல்லும் கார். ... 5

14/11/2012
கற்சிலை வாழ்வின் வழிகாட்டி? ஹஹ்ஹஹ்ஹா!
ஐகானே எங்கள் வழி. ;) ... 6

மழைத்துளிகள் ஒன்றாகும். அத்வைதம். கம்பி.
பழையது வேலைக்கா ரிக்கு. ... 7

நீயேநான் நானேநீ என்றதோழா! பில்பணம்.
பர்ஸினை விட்டேன் மறந்து. ... 8

தங்கும் கடன்கள். கழுதை பறிமுதல்.
வங்கியின் லெட்ஜர் பணால். ... 9

வரும்நாள் விதியினால் இன்றுநேற்(று) ஆகும்.
வெறும்கனவில் வாழ்க்கை நடப்பு. ... 10

16/11/2012
நானுறங்கத் தானெழுந்து என்பணி மும்முரத்தில்
தான்மறைந்து போகுமென் பானு. ... 11

தும்பிபோல் சாகசங்கள் செய்யும் ஹெலிகாப்டர்.
பூவில் அருந்துமோ தேன்? ... 12

22/11/2012
தொட்டால் நசித்திடும் வாசனைப் பன்னகம்.
ஊதுவத்திச் சாம்பல் புகை. ... 13
[பன்னகம் = பாம்பு]

பொன்னிற நெற்றிவானில் அந்திவண்ணச் சூரியன்.
சின்ன விபூதி முகில். ... 14

கற்பூரம் சாம்பிராணி ஊதுவத்தி யென்றுநாளும்
உற்சவம் வேண்டும் -- கொசு. ... 15

09/01/2013
தங்கச் சிறுகூண்டு. மங்காத ஆசைபல.
பங்கப் படுமே கிளி. ... 16

கிளைத்த மரமொன்றைக் கிள்ளைகள் கொஞ்சும்.
கிளியோ மரமோ நிஜம்? ... 17

*****
 
09/01/2013
வீண்சண்டை. நான்வெளுப்பு நீகறுப்பு. கிள்ளைகாள்!
கூண்டோ கிளியோ கறுப்பு? ... 18

ஒருகிளி காணும். ஒருகிளி உண்ணும்.
இருகிளி தாங்கும் தரு. ... 19

பஞ்சவர்ணம். பச்சை. கிளிகளில் பேதமோ?
குஞ்செனில் யாக்கை வெளுப்பு. ... 20

*****
 
துறவியின் தர்மசங்கடம்
(குறளடி வஞ்சிப்பா)

பலபலவென விடிந்தபோது
சலசலக்கும் நதியினிலே
கலகலத்திட நீராடி
சளசளவெனக் குருவிகத்தப்
பளபளத்திடும் நீறணிந்து
மளமளவென்று ஜபம்செய்யக்
கரையேறினால்
தலையில் காக்கை எச்சம் இட்டிட
நிலைதடு மாறி நின்றார் துறவி!

நேற்றுவரையில் இத்துறவி
ஆற்றோரம் இருந்தநிலையின்
மாற்றத்தினைச் சாற்றினாலே
பாடல்
இப்படி யோர்நல்ல முடிவினைப் பெற்றுச்
செப்படி வித்தையாய் ஜொலிக்கக் காண்பீர்.

ஆதவத் துறவி!
(குறளடி வஞ்சிப்பா)

பலபலவென விடிந்தபோது
சலசலக்கும் நதியினிலே
கலகலத்திட நீராடி
சளசளவெனக் குருவிகத்தப்
பளபளத்திடும் நீறணிந்து
மளமளவென்று ஜபம்செய்யக்
கரையேறினால்
ஆதவன் ஆற்றின் அக்கரை யுதிக்க
மாதவத் துறவி ஆதவ னாவார்!

ஒரு பாட்டில் இரு முடிவு:

பலபலவென விடிந்தபோது
சலசலக்கும் நதியினிலே
கலகலத்திட நீராடி
சளசளவெனக் குருவிகத்தப்
பளபளத்திடும் நீறணிந்து
மளமளவென்று ஜபம்செய்யக்
கரையேறினால்
ஆதவன் ஆற்றின் அக்கரை யுதிக்க
மாதவத் துறவி ஆதவ னாவார்!
இன்றோ?
தலையில் காக்கை எச்சம் இட்டிட
நிலைதடு மாறி நின்றார் துறவி!

--ரமணி, 09/01/2013

*****
 
11/01/2013
உடல்களின் சேர்க்கை. உயிர்கள் கலப்போ?
உடலுள் உடலோ டுயிர். ... 21

உறைக்குள் உறைகிழித்தால் அன்பளிப்புப் பாப்பா.
உறைக்குள் உறையென் றுலகு. ... 22

*****
 
16. அனுமன் ஜெயந்தி
(வெண்பா)

விஞ்சிடும் ஞானமும் வீரமும் தாங்கிடும்
அஞ்சனை மைந்தன் அனுமனை எப்போதும்
தஞ்சம் அடைந்தால் தடைகள் விலகிட
அஞ்சுவது அஞ்சும் நமக்கு.

மார்கழி மாதத்தின் மூலவிண் மீன்குழுவில்
பார்புகழ் ராமதூதன் சீர்மிகத் தோன்றியது
கௌதமர்பெண் அஞ்சனை கேசரி மன்னனின்
மௌனத் தவத்தின் விளைவு.

விந்தைக் குழந்தையாய் விண்மணியை நாடிட
இந்திரன் ஆயுதமுன் தாடையினைத் தாக்கிவீழ்ந்து
எத்தனை ஆசிபெற்றாய் வித்தக மைந்தனே
பித்தன் உருவாய்ப் பிறந்து!

பிரம்மனின் ஆசி சிரஞ்சீவிப் பட்டம்
விரும்பும் உருவும் விரைந்திடும் ஆற்றலும்
ஆதவன் ஆசி அணுவுரு வெற்புரு
மாதொரு பாகன் அறிவு.

அரியொன்றும் ஈந்திலையோ ஆசியெனக் கேட்டால்
அரியேதான் ராமனாக ஆட்கொள்ள வந்தார்!
பிறதேவர் ஆசிதர ராமன் பலமாய்
உருவாகி நின்ற கவி!

ஹனுமன் பெயரிலேயே அர்த்தம் இரண்டு!
ஹனுவெனில் தாடையாம் மன்னே பெரிதாம்!
ஹனுவென்றால் கொல்வது மன்னென்றால் மானம்!
ஹனுமன் பெருமை இரண்டு!

எத்தனையோ சொல்லலாம் எவ்வளவோ பாடலாம்
வித்தகன் நித்தியன் வாயுவின் புத்திரன்
சத்திய மித்திரன் நாளைய நான்முகனாம்
அத்தனின் ஞான வித்து.

புத்தி பலமும் புகழும் துணிகரம்
சத்திய ஞானம் உடல்நலம் சொல்வன்மை
அத்தனையும் கைகூடும் அச்சமற்ற வாழ்க்கை
அனுமனை எண்ண வரும்.

--ரமணி, 11/01/2013

[விண்மணி=சூரியன்; அணுவுரு=அணிமா சித்தி; வெற்புரு=மலைபோல் உருவம், மஹிமா சித்தி;
மானம்=தற்பெருமை; நித்தியன்=என்றும் நிலைத்திருக்கும் கடவுள்; நாளைய நான்முகன்=அனுமனே அடுத்த பிரம்மா என்பர்.]

*****
 
Last edited:
17. பிரிவினை மனிதர்கள்!
(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

நாற்றுகள் நின்ற நிலத்தைக் கூறிட்டார் நாகரிகம் விளைக்க!
ஆற்றினைக் கூறிட்டு ஆணைமீறி அணைகளில் தேக்கினார் -- நல்லவேளை
காற்றினைக் கூறிடக் கருதவில்லை கருதினும் கருவி யில்லை!
ஆற்றலின் மூலம் ஆதவன் ஒளியைக் கூறிட முடிந்திலை!

உடலைக் கூறிட்டார் உயரமும் வண்ணமும் வளர்ச்சியும் கொண்டு!
சுடலையும் கூறிட்டார் சுடவோ புதைக்கவோ இறந்து போனதை!
அடலைத் தலைப்பட்டார் நடலையர் வார்த்தைகள் தடித்த போது!
முடலை மைந்தர் விடவில்லை எதுவும் எல்லாமும் கூறுகளே!

[அடலை=போர்(க்களம்), துன்பம்; நடலை=வஞ்சனை, பொய்;
முடலை=உருண்டை (இங்கு globe--உலகம்]

மண்ணைத் தோண்டினார் எண்ணெய் விளைத்து இன்பமாய் வாழ!
விண்ணைத் தோண்டினார் விளைவுகள் அறிந்து வலிமை சேர்க்க!
திண்ணைப் பேச்சுகளில் தீமை விளைக்கத் தவறாது தலைப்படுவார்!
தன்னைத் தோண்டி மெய்ஞ்ஞானம் தழைக்கச் செய்வது வெகுசிலரே!

[திண்ணைப் பேச்சு=lobbying]

கலிகாலம் கலிகாலம் கொண்டதே கோலம் காண்பதே கோலாகலம்!
வலிமை விளைக்கும் வலிகளில் மெலியோர் நலிவுறுங் காலம்!
புலமைகள் பொழுது போக்கிட புன்மைகள் பூமி யாண்டிட
தலைமை தாங்கி தர்மம் தழைக்கச் செய்வோர் எங்குளரோ?

இறையே வந்தாலும் கறைபட்ட உலகின் குறைகள் தீருமோ?
முறைகள் பிறழும் போது இறையும் முனியும் என்செயும்?
உறைகளே உண்மையென உவந்திடும் மாந்தர் உரைப்பது கேட்பாரோ?
இறையது உறைவது எழுவது தன்னுள்ளென உணர்ந்தால்தான் விடிவு!

--ரமணி, 13/01/2013

*****
 
19. செவ்வேள் சேவடிக்கோர் செய்யுட் காவடி!

தைப்பூச நன்னாள் திருக்குமரன் நாமங்கள்
கைக்கூச்ச மின்றிக் கவனித் தெழுதுவோம்
மெய்யில் அலகிட்டு மேவினை தீர்த்தார்போல்
செய்யுள் அலகிட்டுச் செய்து. ... 1

விடியலைக் கொண்டாடி வெண்ணீ றணிந்து
அடிமேல் அடிவைத்(து) அணிகள் அணிசெய்யக்
காவடி தூக்கியாடும் கண்ணும் கருத்துடன்
பாவடிவில் நாவிசைத்துப் பாட்டு. ... 2

அம்மையப்பன் சேர்ந்துநடம் ஆடிய நன்னாளில்
இம்மைக்குத் தீர்வாய் இடைநின் றிலங்கிய
உம்மையே வேண்டிட உம்புகழ் ஓங்கியே
எம்மையும் காத்தபழம் நீ. ... 3

சிவநுதற் கண்ணுற்ற தீப்பொறிகள் சேர்ந்து
சிவஞான பண்டித னாகி - சிவனுக்கே
மூலப் பொருளுரைத்த சாலச் சிறந்தவனாம்
வேலவன் அக்கினிக் குஞ்சு. ... 4

அழியா இளமை அழகு இனிமை
வழியும் முருகுநீ மூவகை சக்திகளில்
உள்ளம் தழைத்து உவகை நிறைந்திடக்
கள்ளம் அறுப்பதுன் வேல். ... 5

சூர பதுமன் மரமான போதுனது
வீரசக்தி வேலால் பிளக்க மயிலெனச்
சேவலெனத் தோன்றியவன் தாக்க அருள்கூர்ந்துன்
சேவடியால் நீசெய்தாய் காப்பு. ... 6

உமையீசன் பிள்ளைக்கு எத்தனை நாமம்!
அமரேசன் அன்பழகன் கார்த்திகேயன் கந்தன்
குமரேசன் வேலன் சிவபாலன் செவ்வேள்
உமைபாலன் இன்னும் பல. ... 7

எத்தனையோ நாமங்கள் வித்தகன் வேலனுக்கு!
அத்தனையும் வித்தெனச் சித்தம் விழுதிட்டால்
அத்தனின் பிள்ளையவன் ஆறுமுகன் ஆசிபெற்று
நித்தமும் வாழலாம் நாம். ... 8

--ரமணி, 27/01/2013 (தைப்பூச நாள்)

*****
 
20. இறைவன் அருள்!
(நிலைமண்டில ஆசிரியப்பா)

அனைத்தும் இறைவன் அருளே என்று
அரசனின் ஏவலன் ஒருவனெப் போதும்
பணிகள் யாவும் புரிந்திடும் போது
முணுமுணுத் தவாறே வணங்கிச் செய்தான். ... 1

எரிச்சல் அடைந்த அரசன் அவனை
நெரித்த புருவம் காட்டிக் கடிந்தும்
முணுக்கும் வாயை மூடுதல் இன்றிப்
பணித்தது புரிந்து வந்தான் பணியாள். ... 2

ஒருநாள் ஏவலன் ஓய்வில் தன்னூர்
விரும்பிச் சென்று திரும்பிய போது
அரண்மனைத் தோப்பில் பறித்த திராட்சைகள்
புரவலன் முன்பு பணிவுடன் வைத்தான். ... 3

பழங்களைப் புரவலன் புசிக்கா(து) அவன்மேல்
விழுமா றொவ்வொன் றாக எறிந்து
விளையாடப் போக ஏவலன் தன்மேல்
விழுந்த அடிகளை விருப்புடன் ஏற்றான். ... 4

அரசன் கடைசிப் பழத்தை ஏறிந்து
சிரித்துக் கொண்டே சொன்னான் அவனிடம்
அடிகள் வாங்கிய இந்தச் சமயம்
கடவுள் அருள்தான் காணாமற் போனதோ? ... 5

ஏவலன் சொன்னான் ஏற்ற பதிலாய்:
காவல! கடவுள் அருளால் அன்றோ
நன்மை யாக முடிந்ததிப் போது!
மன்னவன் முகத்தில் புரியா வியப்பு! ... 6

விழும! உங்கள் தோப்பில் கண்ட
பழுத்த விளாமரப் பழங்களை நானும்
கொண்டு வந்து கொடுத்திருந் தாலெனக்கு
உண்டு இல்லையன ஆயிருக்கு மன்றோ? ... 7

ஏவலன் புத்தியும் பக்தியும் மெச்சிக்
காவலன் தக்க பரிசுகள் தந்தனுப்பித்
தன்னுள் புதிதாய் மன்னிய வித்தினை
உன்னிப் பார்த்து வியப்பில் ஆழ்ந்தான். ... 8

--ரமணி, 29/01/2013
[கதை: பழைய குமுதம் பக்தி இதழில் இருந்து.]

*****
 
22. வெண்பாவில் கடிஜோக்ஸ்!

கருப்பையா: ஜிம்மி குறைப்பதில் சிக்கல்!
மிருக மருத்துவர்: ஐநூறு ஆகுமே?
ஏன்டாக்டர் கொஞ்சம் குறைக்கலாமே கட்டணம்?
நான்குறைத்தால் நாய்குரைக் காது! ... 1

தமிழா சிரியர் தடியடிஏன் பட்டார்?
தமிழா சிரியர் எவரெனக் கேட்க
அடியேன் எனச்சொன்ன தால்! ... 2

புத்தகம் அஞ்சல் கடிதம் இரண்டுக்கும்
வித்தியாசம் என்ன தெரியுமா தோழா?
படித்துக் கிழிப்பாயே புத்தகம் ஒன்றை!
கடிதம் கிழித்துப் படி. ... 3

ஒருசிறுவன் இன்னோர் சிறுவனிடம் சொன்னான்:
திருமுருகா, எங்கப்பா ரொம்ப பயங்கொள்ளி!
இன்னைக்கு சாலையை க்ராஸ்செய்தார் பாருடா
என்கையை நல்லாப் பிடிச்சு! ... 4

--ரமணி, 07/02/2013

*****
 
22. வெண்பாவில் கடிஜோக்ஸ்!

கண்ணிரண்டும் பேசினால் காதல் உருவாகும்
கண்ணீரே பேசினால் நட்பாகும் -- பண்ணும்
பணமது பேசினால் யார்யாரோ சொந்தம்
அனைவரும் பேசினால் இவ்வுலகம் -- நீயே
தனியாகப் பேசினால்நீ லூசு! ... 5

பாட்டீநான் பள்ளியில் ஓட்டப்பந்த் யத்திலே
ஸ்மார்ட்டாக வின்பண்ண உன்னாசி வேணுமே!
பையவே ஓடுகண்ணா வேகமாக ஓடினா
கைகால் ஒடிஞ்சிடு மே! ... 6

வகுப்பறையில் மாணாக்கன்: போடாநீ முட்டாள்!
வகுப்பிலேயே நீதான் வடிகட்ன முட்டாள்!
வரலாற்று வாத்தியார்: என்னசத்தம்? நாஅன்
ஒருத்தன் இருக்கேனில் ல? ... 7

என்னதான் சார்நீங்க சென்டிமென்ட் பாத்தாலும்
முன்னால் எலுமிச்சை வைக்க முடியாது
கப்பல் கிளம்பிடும் நேரம் வரும்போது
தப்பாமல் ஊதுவது சங்கு! ... 8

’தன்கட்சி ஆட்சி தலைவருக்கே சந்தேகம்!’
’என்னையா சொல்லவறே? கன்னையா கீர்த்தி
தெரியாதா?’ ’தான்ஜெயித்தால் ஊழலற்ற ஆட்சி
தருவோம்னு சொல்றார் அவர்!’ ... 9

என்கணவர் எப்போதும் டாக்டரின் அட்வைஸை
நன்றாகக் கேட்டு நடப்பார் நளினி!
அடேடே மருத்துவர் அட்வைஸா, காலால்
நடப்பதற்குக் கூட அவர்! ... 10

--ரமணி, 07/02/2013
 
22. வெண்பாவில் கடிஜோக்ஸ்!

குறுநாவல் ஒண்ணு கிறுக்கி யிருக்கேன்
அருமையான எங்க தமிழ்வாத்யார் பத்தி!
குருநாவல் அப்படீன்னு சொல்லு! ... 11

பெரிய மனிதர்கள் யாரேனும் ஊரில்
பிறந்திருக் கார்களா தம்பீ? அதுபோல
ஒன்றும் நடக்கலையே ஐயா, பிறந்ததெல்லாம்
சின்னக் குழந்தைகள் தான்! ... 12

போஸ்ட்மேன் நடக்கறப்ப ஸ்லிப்பாய் விழுந்தார்னா?
வேஸ்ட்டா அவர்விழுந்து போஸ்ட்டெல்லாம் கொட்டிடும்!
எப்’டி விழுவார்னு கேட்டேன்! தெரியலையே?
இப்’டி விழுவார் தபால்னு! ... 13

’வாகனங்கள் போகும் வழியில்லை இத்தடம்!’
நாகசாமி கான்ஸ்டபிள் நாக்கிலே பீடியுடன்.
’நானிந்த சாலைவழிப் போலாமா காவலரே?’
கான்ஸ்டபிளைக் கேட்டார் ஒருமனிதர். ’வாகனங்கள்
தானே நுழைய முடியாது, நீங்கபோலாம்.’
’நான்மயில் வாகனன் சார்!’ ... 14

நம்பமக்கு கேட்டான்பார், நா’ஆடிப் போய்ட்டேன்யா!
சும்பனாச்சே? அப்படி என்னதான் கேட்டான்?
எசமான்நான் எல்லாபாங்க் ஏடீஎம் பாத்தேன்
ரிசர்வ்பாங்க்கின் ஏடீஎம் மாத்திரம் ஏங்க்ட்ட
வசமா அகப்படலை யே! ... 15

சொல்லுங்க, பையன் படிப்புல சாதனை
நல்லாநீர் ஊக்குவித்த தால்தானே கன்னையா?
இல்லைநான் வித்தது பாக்கு. ... 16
--ரமணி, 08/02/2013

சாரங்கன் பாடம் முடித்தபின் கூறினார்:
யாரேனும் ஏதேனும் சந்தேகம் உள்ளதென்றால்
தாராள மாய்க்கேள் தயக்கம் எதுவுமின்றி.
சார்-உங்கள் பெண்பெயர் யாது? ... 17

நேர்முகத் தேர்வு நடந்த சமயத்தில்
தேர்வாளர் கேட்டது: மேசைமேல் மொய்த்தஈ
மொத்தமாய் ஐந்து. அடித்தேன்நான் ஒன்றினை.
எத்தனை இன்னும் இருக்குமென்று சொல்லுங்கள்?
வந்தவர்: ஒன்றுமட்டும். தேர்வாளர்: எப்படி?
கொன்றது மிஞ்சுமே அங்கு? ... 18

சினிமாக்கு டிக்கட் எடுத்திருக்கேன் சாரூ!
இனிமேலா, என்னங்க இல்லையே நேரம்?
உடுத்துக் கிளம்பனுமே? மெல்லச்செய், டிக்கட்
எடுத்தது நாளைக்குத் தான்! ... 19

தாயார்: மருந்தெல்லாம் பாட்டிதான் எப்பவுமுன்
வாயில் விடணும்னு சொல்றியே ஏண்டா?
சிறுமகன்: பாட்டிக்குக் கைநடுங்கி பாதி
மருந்துபோய்டும் கீழே அதான்! ... 20
--ரமணி, 10/02/2013

*****
 
24. உத்திக் கவிதைகள்

1. வினை-பெயர் அடுத்து இருபொருள் படவரும் எண்ணும்மைகள்
(இருவிகற்ப அறுசீர் விருத்தம்)

முள்ளும் மலரும் மலரும் காயும் காயும் கனியுமே
பள்ளும் பறையும் பறையும் ஒலியும் ஒலியும் ஒளியுமே
காகமும் கரையும் கரையும் உடையும் உடையும் கிழியுமே
தாகமும் குறையும் குறையும் மறையும் மறையும் நிறையுமே.

கல்லும் கரையும் கரையும் அணையும் அணையும் உடையுமே
சொல்லும் விளக்கும் விளக்கும் இருளும் இருளும் மருளுமே
காற்றும் அலையும் அலையும் சுழலும் சுழலும் கழலுமே
நாற்றும் தழையும் தழையும் ஆடும் ஆடும் மேயுமே.

[ஒலிதல்=தழைத்தல்; கிழி=பரிசு; மறை=வேதம்]

இதுபோல் அமைத்தெழுத வேறென்ன எண்ணும்மைகள் பயன்படும்?

*****
 
25. சிலேடை வெண்பாக்கள்

01. குரங்கு மனமா மனக் குரங்கா?

(இன்னிசை வெண்பா)
ஓடிடும் ஆடிடும் ஊரெலாம் தேடிடும்
நாடியது கைப்படின் நாராய்க் கிழிக்கும்
வனம்வாழ் குரங்குமனம் மானிடமோ அன்றி
மனிதன் மனமோ குரங்கு?

02. ஆவினமும் பாவினமும்

(இன்னிசை வெண்பா)
அசைபோடச் சீராகும். கட்டித் தளைக்க
இசையும். அடிவைத்து மேயும். தொடையிற்
பொசிந்து செழித்திடும் வெண்பாற் றருவதால்
ஆவினமே பாவினமாய்ப் பாடு.

--ரமணி, 05/03/2013

*****
 
26. விஜய வருஷ சங்கல்பம்
(குறளடி வஞ்சிப்பா)

விஷுபுண்ணிய தினப்பிறப்பில்
விஷாலாக்ஷியின் அருட்பார்வையில்
விஜயவருஷம் பிறந்தெழுந்தது
விஷ்வரூபமாய் வளர்ந்தாளவே
தீவினையெலாம் தீப்பட்டு
நல்வினைகள் எழுந்தோங்கி
வல்லமைகள் பலசேர்ந்து
நலங்கள்பல விளைந்திடவே
பலவகைகளில் வணங்கிடுவோம்
இவ்வாண்டில்
ஊமைகள் பேசி உண்மைகள் வெளிவர
ஆமைகள் முயலாகி ஆற்றல் காட்டிடத்
தீமைகள் விலகி நன்மைகள் பெருகவே
பாமரர் பண்டிதர் யாவரும் நலம்பெறத்
தாமத மின்றிப் பூமகள் அருள்பெற
நாமெலாம் உழைப்போம் நம்பிக்கை யுடனே.

--ரமணி, 01/01/5114 | 14/04/2013

*****
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top