சொர்க்கவாசல்:
சொர்க்கவாசல்:
சொர்க்கவாசல்: வைகுண்ட ஏகாதசியன்று, திருவரங்கத்தில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. காலப்போக்கில், வைணவக்கோயில்கள் அனைத்திலும் சொர்க்க வாசல் திறப்பது ஒரு திருவிழாவாகவே நடைபெறுகிறது. பெருந்திரளான மக்கள் இதில் பங்கு கொள்கின்றனர். எல்லையற்ற பலன்களை வைகுண்ட ஏகாதசி விரதம் தருவதால், இவ்விரதம் மிகச் சிறப்பாக மதிக்கப்படுகிறது. எனவே காயத்ரியை விட சிறந்த மந்திரமில்லை; தாயை விட சிறந்த தெய்வமில்லை; ஏகாதசியை விட சிறந்த விரதமில்லை என்ற வழக்கும் ஏற்பட்டது.
திருச்சி-பெயர்க்காரணம்: ஆழ்வார்களால் பாடல்பெற்ற திருத்தலங்களில் முதன்மையானது ஸ்ரீரங்கம். 108 திவ்யதேசங்களில் ஒன்று. கோயில், திருமலை, பெருமாள்கோயில் என்று ஒரு சொல்வழக்கு உண்டு. இதில் கோயில் என்பது ஸ்ரீரங்கத்தையும், திருமலை என்பது திருப்பதியையும், பெருமாள்கோயில் என்பது காஞ்சிபுரத்தையும் குறிக்கும். அக்காலத்தில் திருச்சிஸ்ரீரங்கநாதன்பள்ளி என்று அழைக்கப்பட்டது. மகாவிஷ்ணு பள்ளி கொண்ட கோலத்தில் காட்சியளித்ததால் இந்தப்பெயர் உண்டானது. இதில் ஸ்ரீ என்னும் எழுத்தை தமிழில் திரு ஆக்கிதிருச்சீரங்கநாதன்பள்ளி என்று அழைத்தனர். பின்னாளில், இப்பெயர் திருச்சிராப்பள்ளி என்றாகி, திருச்சியாக சுருங்கி விட்டது.
சூரியவம்ச குலதெய்வம்: பிரம்மா சத்தியலோகத்தில் ரங்கநாதப்பெருமாளை வழிபட்டு வந்தார். அப்போது பூலோகத்தை ஆண்ட சூரியகுல மன்னனான இக்ஷ்வாகு பிரம்மாவை நோக்கி தவம் இருந்தான். மன்னனின் தவக்கனல் சத்திய லோகத்தைச் சென்றடைந்தது. நேரில் தோன்றிய பிரம்மா, வேண்டும் வரம் தருவதாக அருள்புரிந்தார். பிரம்மதேவா! உம்மால் நாள்தோறும் பூஜிக்கப்படும் பெரிய பெருமாள் சிலையை எனக்குத் தரவேண்டும்! என்று வேண்டினான். பிரம்மாவும் பள்ளி கொண்ட நிலையில் இருந்த அந்தப்பெருமாளை அவனிடம் கொடுத்தார். இக்ஷ்வாகுவின் வம்சாவழியில் வந்தவரே ராமபிரான். அவரது காலத்தில், அவர் விபீஷணரிடம் தனது பட்டாபிஷேக பரிசாக அந்தச் சிலையைக் கொடுத்தார். அதை விபீஷணர் இலங்கைக்கு கொண்டு செல்ல முயன்ற போது, காவிரிக்கரையில் கீழே வைத்து விட்டு நதியில் நீராடினார். திரும்ப வந்து எடுத்தபோது சிலையைத் தூக்க முடியவில்லை. அந்த இடமே ஸ்ரீரங்கம் ஆனது. பிற்காலத்தில், அவ்விடத்தில் கோயில் எழுப்பப்பட்டது.
ஸ்ரீரங்கம் கோயில் பிறந்த கதை: விபீஷணர் ராமபிரானின் பட்டாபிஷேக நிகழ்ச்சியில், சூரியவம்சத்து குலதெய்வமான ரங்கநாதப்பெருமாளை பரிசாகப் பெற்றார். பிராண வாக்ருதி என்னும் விமானத்தில் பெருமாளைத் தாங்கிக் கொண்டு ஆகாயமார்க்கமாக பறந்து வந்தார். காவிரிநதிக்கரையில் கோயில் கொள்ள விரும்பிய பெருமாள், அவருக்கு உடல்சோர்வை ஏற்படுத்தினார். அரங்கம் என்னும் அம்மேட்டுப்பகுதியில் பெருமாளை வைத்துவிட்டு நீராடிய வீபிஷணன், மீண்டும் அவ்விக்ரஹத்தை அவ்விடத்தில் இருந்து எடுக்கமுடியவில்லை. தகவல் அறிந்த சோழமன்னன் தர்மவர்மன் அங்கு ஒரு கோயில் கட்டி வழிபட்டான். காலப்போக்கில் அக்கோயில் சிதிலமடைந்து காவிரி ஆற்றில் புதைந்தது. தர்மவர்மனின் மரபில்வந்த கிள்ளிவளவன் என்னும் மன்னன் காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். அங்கே, ஒரு மரநிழலில் இளைப்பாறினான். அம்மரத்தில் வசித்த கிளி மன்னனிடம், மன்னா! பாற்கடல் வாசனான மகாவிஷ்ணு இங்கே ரங்கநாதராகப் பள்ளி கொண்டிருக்கிறார். ஸ்ரீரங்கம் என்னும் திருத்தலம் இது என்று அரங்கநாதரின் வரலாற்றை எடுத்துச் சொன்னது. அப்போது பெருமாளே தன் இருப்பிடத்தை கிள்ளிவளவனுக்கு காட்டியருளினார்.
பாசுரங்கள் கிடைக்க உதவிய பாசுரம்: ஆழ்வார்கள் பாடிய பாடல்களைத் தொகுத்தவர் நாதமுனிகள். இதுவே நாலாயிர திவ்ய பிரபந்தம் எனப்படுகிறது. இவர் ஒருமுறை கும்பகோணம் சாரங்கபாணி பெருமாள் மீதானஆராவமுதே என்று தொடங்கும் திவ்யபிரபந்த பாசுரத்தை சிலர் பாடக்கேட்டு மெய் மறந்தார். அதில் ஓராயிரத்துள் இப்பத்தும் என்னும் அடி வந்தது. அவர்களிடம் அன்பர்களே! நீங்கள் பாடிய பாடலின் பொருள்படி, ஆயிரத்தில் பத்துபாடல் போக மீதி 990 பாடல்கள் எங்கே? என்று கேட்டார். ஆனால், அவர்களுக்கு இதற்கான பதில் தெரியவில்லை. எனவே நாதமுனிகள் ஆழ்வார்திருநகரி சென்று இந்த கேள்வியை மதுரகவியாழ்வாரின் வம்சாவழியினரிடம் கேட்டார். அவர்கள் பாசுரங்களைப் பெறுவதற்கு ஒரு வழியைக் கூறினர். மதுரகவியாழ்வாரின் பாசுரங்களை 12 ஆயிரம் முறை யார் ஒருவர் பாடுகிறாரோ, அவர் முன் ஆழ்வாரே தோன்றி அருள் செய்வார். அவரிடம் விபரம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம், என்றனர். நாதமுனிகளும் 12ஆயிரம் முறை மதுரகவி யாழ்வாரின் பாசுரத்தைப் படித்தார். ஆழ்வாரின் அருளால் ஆழ்வார்கள் பாடிய அனைத்துப் பாசுரங்களையும் பெற்றார். அந்தப் பாடல்களுக்கு தமிழ்ப்பண் அமைப்பில் இசையமைத்து திவ்ய பிரபந்தம் என்று பெயரிட்டார். தனது சீடர்களான உய்யக்கொண்டார், குருகைக்காவலப்பன், மேலையகத்தாழ்வான் மூலம் அந்தப் பாசுரங்களை திவ்யதேசங்கள் எங்கும் பாடும்படிச் செய்தார். இவ்வாறு நமக்கு 4000 பாசுரங்கள் கிடைத்தன.
அரையர் சேவை: வைகுண்டத்தைதிருநாடு என்று தமிழில்குறிப்பிடுவர். அத்திருநாட்டிற்குச் செல்பவர்கள் எப்போதும் பெருமாளைத் தரிசிக்கும் பாக்கியம் பெறுவர். அவர்களுக்கு நித்யசூரிகள் என்று பெயர். இவர்களுக்கு பசி, தாகம், உறக்கம் என்னும் எவ்வித உணர்வும் இருக்காது. பேரானந்தத்தில் மூழ்கி இருப்பர். பரசவநிலையில் பெருமாளை புகழ்ந்து ஆடிப்பாடுவர். இக்காட்சியைப் பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கத்திலும் நிகழ்த்த வேண்டும் என்ற ஆவல் நாதமுனிகளின் உள்ளத்தில் எழுந்தது. அரையர் என்னும் அபிநயத்தோடு ஆடும் கலைஞர்களை உருவாக்கினார். இதுவே அரையர் சேவை என்று வழங்கப்படுகிறது. ஸ்ரீரங்கத்தில் அரையர் சேவை நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது.
பட்டாடை உடுத்தும் தினம்: அரையர் சேவைக்கென்று தனி உடை, பிற அலங்காரம் எதுவும் செய்து கொள்வதில்லை. கூம்பு வடிவ குல்லா ஒன்றை தலையில் அணிந்து கொண்டு பெருமாளுக்கு சூடிக்களைந்த மாலை, பரிவட்டம் ஆகியவற்றை மட்டும் அணிந்து கொண்டு அபிநயம் செய்வர். நாலாயிரத்தை தொகுத்த நாதமுனிகளே இச்சேவையை தொடங்கினார். பாசுரங்களை பாடும்போது, அதற்கேற்ப முகம், கை பாவம் காட்டி அரையர் நடிப்பர். அரையர் சேவையில் முத்துக்குறி என்னும் பகுதி உண்டு. குறிசொல்லும் ஒரு பெண்ணிடம், தாய் தன் மகளின் எதிர்காலம் குறித்து கேட்பதே முத்துக்குறி. முத்துக்குறியைக் காண வரும் ஆண்களும், பெண்களும் பட்டு உடுத்தி வருவது மரபு. அன்று அரையர் ஒருவர் பட்டு உடுத்தி, தாயாக, மகளாக, குறிசொல்பவளாக மாறி மாறி அபிநயத்தோடு பாடி ஆடுவது சிறப்பு.
பகல் பத்து ராப்பத்து: தமிழகத்தில் ஆழ்வார்திருநகரி, ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீரங்கம் ஆகிய மூன்று திவ்யதேசங்களில் மட்டும் வைகுண்ட ஏகாதசியை ஒட்டி அரையர் சேவை நடக்கிறது. வைகுண்ட ஏகாதசிக்கு முந்தைய பத்துநாட்களை பகல் பத்து என்றும், (மார்கழி அமாவாசைக்கு அடுத்த பிரதமை முதல் தசமி வரை) வைகுண்ட ஏகாதசிக்கு பிறகு வரும் பத்து நாட்களை (ஏகாதசி முதல் பஞ்சமி வரை) ராப்பத்து நாட்களாகவும் கொள்வர். ஸ்ரீவில்லிபுத்தூரில் மார்கழி தவிர ஆடி,தை மாதங்களிலும் அரையர் சேவை உண்டு. கர்நாடகாவில் உள்ள மேல்கோட்டைநரசிம்மர் கோயிலில், அபிநயம் இல்லாமல் தாளத்தோடு மட்டும்அரையர் சேவை நடந்து வருகிறது.
Festival