• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Srirangam Kaisika Ekadasi

ஸ்ரீரங்கத்தில் கைசிக ஏகாதசி(நாளை 15/11/2021 )--பதிவு 1

பல கோடி ஆண்டுகளுக்கு முன்னால்,ஒரு கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசி
யன்று,திருக்குறுங்குடியில் பாணர் குலத்தில் தோன்றிய ஒரு பரம பக்தர் திருக்குறுங்குடி நம்பியைப் போற்றி கைசிகப் பண் பாடினார்(கைசிகம் என்பது,காந்தாரம், துரையா, நாட்டை, தனாசு, கொல்லி, போன்ற ஒரு ராகம்).அந்த வைபவம் "கைசிக மஹாத்மியம்/புராணம்" என்று அழைக்கப் படுகிறது.ஆதலால் இந்த ஏகாதசி, கைசிக ஏகாதசி என்று அழைக்கப் படுகிறது.

ஸ்ரீரங்கத்தில் ஒரு மாதம் முன்னதாகவே கைசிக ஏகாதசியும்/ஸ்ரீவைகுண்ட ஏகாதசியும்.

19 வருடங்களுக்கு ஒருமுறை கார்த்திகை மாதத்திலே, ஸ்ரீரங்கம் திவ்ய தேசத்தில், மட்டும் வைகுண்ட ஏகாதசி வரும்
விஜயநகர பேரரசு காலத்தில் தைத்திருநாள் ( தை பிரம்மோற்ஸவம்) ஏற்படுத்தப்பட்டபோது,மார்கழி கடைசி
யில் வைகுண்ட ஏகாதசியும், தை முதலில் தை திருநாளும் வந்தால்,எதைக் கொண்டாடுவது எப்படிக் கொண்டாடு
வது என கேள்வி வந்தபோது,
ஸ்ரீ மணவாள மாமுனிகளின் நியமனத்தின்படி,19 வருடங்களுக்கு ஒருமுறை இந்த மாதிரி வைகுண்ட ஏகாதசி (பகல்பத்து, ராப்பத்து) திருவிழாவை கார்த்திகையில் பெரிய
பெருமாளின் திருவுள்ளம் அறிந்து மாற்றியமைத்து ஏற்படுத்தினார்.

அதன்படி இந்த ஆண்டு,வைகுண்ட ஏகாதசி கார்த்திகை மாதத்தில்--
14/12/2021--அநுஷ்டிக்கப் படுவதால்,
அதற்கேற்ப, கைசிக ஏகாதசியும் ஒரு மாதம் முன்னரே--ஐப்பசி மாத வளர்பிறை ஏகாதசி--15/11/2021--அனுஷ்டிக்கப் படுகிறது.
ஸ்ரீபெரும்புதூரிலும் தை மாதம் குரு புஷ்யம் நடப்பதால், இவ்வாறாக ஒரு மாதம் முன்னரே கொண்டாடுகிறார்கள்.
மற்ற எல்லா திவ்ய தேசங்களிலும் எப்போதும் போல கைசிக ஏகாதசி கார்த்திகையிலும்(14/12),ஸ்ரீவைகுண்ட ஏகாதசி மார்கழியிலும்(13/01/2022) அனுஷ்டிக்கப் படுகிறது.

நமது பதிவுகள்,ஸ்ரீரங்கம் பெரிய கோயில் நடைமுறைப்படியானது.

வராஹப் பெருமாள் உபதேசித்த கைசிக புராணம்:

வராஹ அவதாரத்தில்,வராஹப் பெருமாள்,பூமிப்பிராட்டியாருக்கு கைசிக புராணத்தை உபதேசித்தார்.பூதேவியார் தம் குழந்தைகளான ஜீவாத்மாக்கள் உஜ்ஜீவனம் அடையும் வழியை உபதேசிக்குமாறு வேண்டியதற்கு இணங்க,பெருமாள் உபதேசம் செய்ததில்
கைசிக புராணம் முக்கியமானது. வராஹப்பெருமாள் பாணர் வைபவத்தைக் கூறிய போது, அவரை
"நம் பாடுவான்" என்று கொண்டாடினார்.
இரண்யாட்சனுடன் நடந்த போர் முடிந்த அமைதியான நேரத்தில் கைசிக புராணம் விளைந்தது.வராஹ
புராணத்தின், 48வது அத்யாயத்தில், 92 ஸ்லோகங்களைக் கொண்டது.

கைசிக மஹாத்மியம்/நம்பாடுவான் வைபவம்:

திருக்குறுங்குடி(திருநெல்வேலியிலிருந்து 25 கி.மீ), மகேந்திர மலை அடிவாரத்
தில்,பாணர் குலத்தில் தோன்றிய திருமால் அடியார் ஒருவர் தினமும் விடிகாலையில் கோயிலின் வாயிலுக்குச் சென்று பெருமாள் குறித்து பண் இசைத்துப் பாடுவார். தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்ததால் கோயிலுக்குள் செல்ல அனுமதியில்லாமல் இருந்தது.
கோயில் வாசலில் நின்று, குறுங்குடி அழகிய நம்பியைப் பாடி, சேவித்து
வந்தார்.நம்பாடுவான் பாடும், அழகை காண்பதற்காகவே திருக்குறுங்குடி நம்பி துவஜ ஸ்தம்பத்தை சற்று நகர்த்தியதாக சரித்திரம்.

ஒரு கார்த்திகை மாதம் வளர்பிறை ஏகாதசி அன்று, இரவு அழகிய நம்பியைச் சேவிக்க காட்டுவழியே வரும் வழியில், அவரை, ஒரு பிரம்ம ராட்சசன் பிடித்துக் கொண்டு,"நான் பத்து நாட்களாகச் சாப்பிடவில்லை;அகோரப் பசி;உன்னைக் கொன்று சாப்பிடப் போகிறேன்” என்றான். அதற்கு நம்பாடுவான், “நான் ஏகாதசி விரதம் இருக்கிறேன். அழகிய நம்பியை சேவித்துவிட்டு என் விரதத்தை முடித்துக்கொண்டு வருகிறேன்; அதன் பின்னர் நீ விரும்பியபடி என்னைச் சாப்பிட்டுக் கொள்"என்று கூற அதை ராட்சசன் நம்ப மறுத்தான்.

அதற்கு நம்பாடுவான் “நான் பாணர் குல பரம பக்தன். நான் பொய்சொல்ல மாட்டேன். சத்தியம் செய்கிறேன்” என்று கூறி,திரும்பி வராவிட்டால் பதினெட்டு விதமான, கொடிய பாபங்கள் தம்மை வந்து சேரும் என்று சத்தியம் செய்தார்.17,18 ஆவது பாபங்களைக் கேட்ட ராட்சசன் அதிர்ந்து, ஆடிப்போய் விட்டான்.அவரது விஷ்ணு பக்தியை மெச்சி, ராட்சசன் அவரை அனுப்பி வைக்கிறான்.(18 பாபங்கள் படம் 1ல்.)

ஏகாதசி விரதத்தை முடித்துவிட்டு, நம்பியைச் சேவித்துவிட்டு ராட்சசனைத் தேடி திரும்ப வரும் சமயத்தில், நம்பாடுவானைச் சோதிக்கும் பொருட்டு அழகிய நம்பி, கிழவனாக அவர் முன்னே தோன்றி “இந்த வழியில் ராட்சசன் இருக்கிறான் வேறு வழியில் செல்” என்று சொல்ல, “என் உயிரே போனாலும் நான் சத்தியத்திலிருந்து தவறமாட்டேன்” என்று நம்பாடுவான் சொல்ல, நம்பி அவரது உறுதியைக் கண்டுகந்து, அருள்புரிந்து மறைந்தார்.

நம்பாடுவான் ராட்சசனைக் கண்டு “என்னை சாப்பிட்டு உன் பசியைத் தீர்த்துக்கொள்"என்று கூற, அவர் திரும்பி வர மாட்டார் என்றி எண்ணியிருந்த,
ராட்சசன்,நம்ப முடியாமல் திகைத்தான்.
தான் முற்பிறவியில், சோமசர்மா என்னும் பிராமணராகப் பிறந்ததாகவும், சாபத்தால் இந்த மாதிரி பிரம்ம ராட்சசன் ஆன கதையைச் சொல்லி, "என்னை இந்த சாபத்திலிருந்து விடுவிக்க,நீ பாடிய பாடலின் பலனைக் கொடு"என்று கேட்க, அதற்கு நம்பாடுவான் "அடியேன் பலனுக்காகப் பாடவில்லை; என்ன பலன் என்றே தெரியாது"என்று மறுத்தார். பிரம்ம ராட்சசன் தம்மைக் கடைத்தேற்று மாறு, மன்றாடிக் கேட்டு சரணடைய, நம்பாடுவான் பெருமாளைப்பிரார்த்தித்து,
கடைசியாக, கைசிக ராகத்தில் பாடிய, ஒரு பாட்டின் பலனைக் தந்தார்.பிரம்ம ராட்சசன் சாபம் நீங்கி மோட்சம் அடைந்தான்.நம்பாடுவான் மேலும் பல ஆண்டுகள் இங்கிருந்து நம்பியைப் பாடி மகழ்வித்து, இறுதியில் மோட்சம் அடைந்தார்.

அரங்கனிடம்,வராஹரைச் சேவித்த பூமிப் பிராட்டி:

கைசிக புராணம் உரைத்த வராஹப் பெருமாளை ஶ்ரீரங்கநாதரிடம் சேவிக்கலாம்.புராணம் கேட்ட பூதேவி, ஶ்ரீ ஆண்டாள் நாச்சியார் தம் நாச்சியார் திருமொழி 11-8ல், இவ்வாறு பாடுகிறார்.

"பாசிதூர்த்துக்கிடந்த பார்மகட்கு,
பண்டொருநாள்,
மாசுடம்பில் நீர்வார மானமிலாப்
பன்றியாம்,
தேசுடைய தேவர் திருவரங்கச்
செல்வனார்,
பேசியிருப்பனகள் பேர்க்கவும் பேராவே"

திருவரங்கத்தில் கைசிக ஏகாதசி:

நாளை காலை நம்பெருமாளுக்குத் திருமஞ்சனம்;இரவு 9 மணிக்கு மேல் அர்ச்சுன மண்டபத்தில் நம்பெருமாளுக்கு 365 வஸ்திரங்கள்/சால்வைகள் சாற்றப் படுகின்றன.ஒரு வஸ்திரத்துக்கு மேல்,
இன்னொரு வஸ்திரம் சாற்றச் சாற்ற,
நம்பெருமாள் ஒரு வஸ்திர மலை மேல் நிற்பது போலக் காட்சி அளிப்பார். இதற்காக,பக்தர்கள பலரும், வஸ்திரம் வாங்கிச் சமர்ப்பிப்பார்கள்.

இரவு 12 மணிக்கு மேல்,ஸ்ரீ பராசர பட்டர் வம்சத்தில் வந்த ஆசார்ய ஸ்வாமிகள்,
அவரவர் முறைப்படி, ஸ்ரீபராசர பட்டர் அருளிச் செய்த வியாக்யானத்துடன் கைசிகபுராணம் வாசிப்பார்.

🙏🙏இந்த ஆண்டு அடியேனது ஆசார்யர், ஸ்ரீ.உ.வே.பராசர அழகிய சிங்க பட்டர் ஸ்வாமிகள் வாசிக்கிறார் 👣👣

அவர் வாசித்து முடிந்ததும் ஆசார்ய ஸ்வாமியை கோவில் மரியாதைகளுடன் பிரம்ம ரதத்தில் அமரவைத்து, உத்திர வீதிகளில் வலம் வந்து அவர் திருமாளிகையில் விட்டு வருவார்கள்.(தற்போது பிரம்மரத மரியாதை
நடைபெறுவதில்லை.).ஆனாலும் கோவில் மரியாதைகளுடன், மணியகாரர் மற்றும் கைங்கர்யபரர்கள், அவரை, ஊர்வலமாக அழைத்துச் செல்வார்கள்.

சுமார் 850 ஆண்டுகளுக்கு முன்னர்,
ஸ்ரீபராசர பட்டர்--பெரிய பெருமாளும், பெரிய பிராட்டியாரும் திருமணத்தூணில் தொட்டில் கட்டித் தாலாட்டி வளர்க்கப்பட்ட,
திவ்யதம்பதிகளின் ஞானப்பிள்ளை!!--முதன்முதலாக,கைசிக புராணம் உரைத்தார். அதில் மிக உகந்த, அரங்கன் அவருக்குக் கோவில் மரியாதைகள்/பிரம்மரத மரியாதை அளித்தருளிக் கெளரவித்தார்.இவை எல்லாம் சாதாரணம்,என்றெண்ணிய பெருமாள், மிக உயர்ந்த மோக்ஷப்பிராப்தியையும் அருளினார்.பட்டர் அந்த உந்நத பரிசை,
"மஹா பிரசாதம்" என்று ஏற்றுக் கொண்டார்.(நாளைய பதிவு 2 ல் விரிவாக..).

நாளை மறுநாள், துவாதசியன்று,
நம்பெருமாள் அதிகாலை அர்ச்சுன மண்டபத்திலிருந்து புறப்பட்டு,சரியாக 5.45 மணிக்கு மேலப்படியேறி ஆஸ்தானம் சென்று சேர்வார். இதற்கு"கற்பூரப் படியேற்ற சேவை"என்று பெயர்.(பதிவு 3 ல்)

திருக்குறுங்குடியில் கைசிக ஏகாதசி:

ஏகாதசி காலை ஶ்ரீவைஷ்ணவநம்பிக்குத்
திருமஞ்சனம் நடைபெறும்.இரவு 10 மணியிலிருந்து,காலை 2 மணி வரை,ஸ்ரீ வைஷ்ணவ நம்பி திருமுன்னர், கைசிக மஹாத்மியம் நாடகமாக நடத்தப்படும்.
கைசிக மஹாத்மிய மண்டபத்தில், நம்பி உபயநாச்சிமார்களுடன் எழுந்நருளி யிருப்பார்.ஆழ்வார்,ஆசார்யர்களும் உடன் எழுந்தருளி இருப்பார்கள்.
நாடகத்தில் நடிப்பவர்கள் பெருமாளை நேர்ந்து கொண்டு,பத்து நாட்கள் விரதம் இருப்பார்கள். பெருமாளுக்கு திருமேனிக்காவல் கைங்கர்யம் செய்வோரின் வம்சத்தாரும்,தேவதாசி பரம்பரையில் வந்தோரும் சிறப்பு அலங்காரங்களுடன் தத்ரூபமாக நடிப்பார்கள்.துவாதசி இரவு, திருக்குறுங்குடி நம்பி கருட சேவை நடைபெறும்.

கைசிக ஏகாதசி விரதம் இருந்து, கைசிக புராணம் பாராயணம் செய்பவர்களும்/கேட்பவர்களும் பாபங்கள் விலகி உயர்ந்த நற்கதியை அடைவார்கள் என்று ஶ்ரீவராஹப் பெருமாள் அருளிச் செய்துள்ளார்.

(--அடியேன் பார்த்தசாரதி ராமாநுஜ தாசன்)

படங்கள்:
ஸ்ரீரங்கம் கைசிக ஏகாதசி (பழைய படங்கள்)
1,நம்பெருமாள் புறப்பாடு.
2,3.நம்பெருமாளுக்கு 365 சால்வைகள் சாற்றுதல்.
4.கைசிக புராணம் வாசிக்க எழுந்தருளும் அஸ்மத் ஆசார்யர் ஸ்ரீ.உ.வே.பராசர அழகிய சிங்க டட்டர் ஸ்வாமிகள்.


WhatsApp Image 2021-11-14 at 6.21.49 PM.jpeg

WhatsApp Image 2021-11-14 at 6.22.09 PM.jpeg

WhatsApp Image 2021-11-14 at 6.22.29 PM.jpeg

WhatsApp Image 2021-11-14 at 6.22.44 PM.jpeg
 

Latest ads

Back
Top