• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

SANI PEYARCHI.

kgopalan

Active member
சனிப்பெயர்ச்சி (27 -12 -2020) பற்றி அனைவரும் அவசியம் அறிய வேண்டிய அபூர்வ உண்மை தகவல்களும், செய்ய வேண்டிய பரிகார ரகசியங்களும்....

கடந்த சில தினங்களாக சனிக்கிரக பெயர்ச்சி தனுசிலிருந்து மகர ராசிக்கு இடம் பெயருகிறார் என்று வலைத்தளம், முகநூல் மற்றும் நாளிதழ்களில் செய்திகளை காண்கிறோம். பெயர்ச்சி பலன்களை விகித அடிப்படையில் பதித்தும் சுபம் அசுபம் என்று வகுத்தும் தெய்வீக ரகசியங்களை கொண்ட இந்த சாஸ்திரத்தை பலர் கேலி செய்யும் படியும் குழப்பிக்கொள்ளும் படியும் பதிந்து அவமரியாதை செய்வதை காணும் பொழுது வருத்தமாக இருக்கிறது. இதை பற்றிய தெளிவு அனைவருக்கும் ஏற்படவே இந்த அற்புத பதிவு....

முகநூலில் மற்றும் நட்பு வட்டாரத்தில் மகர ராசிக்கு சனிப்பெயர்ச்சி மிகவும் கடுமையானதாக இருக்கும் என்று சோதிடர்கள் பலன் பதித்து உள்ளார்கள். என்ன பரிகாரம் செய்து கொள்ளவேண்டும் என்று பலர் கேட்டு உள்ளார்கள். பரிகாரத்தை பற்றி கவனிக்கும் முன் சனீஸ்வர பகவானை பற்றிய சிறு தகவலை நாம் முதலில் தெரிந்து கொள்வோம்....

சூரியனுக்கும் சுவர்ச்சலாவுக்கும் யமன், வைவஸ்தமனு, யமுனா என்ற மூன்று குழந்தைகள் உண்டு. சூரியனின் வெப்பம் தாளாமல் சுவர்ச்சலா தன் நிழலைக் கொண்டு ஒரு உருவத்தைப் படைத்தாள். அவளுக்குப் பெயர் சாயாதேவி என்று பெயர் வைத்து தான் தவம் செய்ய போவதாக கூறி தவம் முடிந்து வரும் வரை தன் கணவனுக்கு தன்னிடத்தில் மனைவியாக இருந்து பணிவிடைசெய்யும்படி பணிந்து விட்டுப் போய் விடுகிறாள். சாயாதேவியும் அப்படியே வாழ்ந்து வருகிறாள்.

சாயாதேவிக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன அவர்களில் கடைசியாக பிறந்தவன் சனி. அவளுக்கு குழந்தை பிறந்த பின் சாயாதேவியின் செயலில் மாற்றம் தென்பட்டதை கவனித்த சூரியனும் தலை பிள்ளை யமனும் சாயாவை கவனித்து இவள் நம் குலத்தவள் இல்லை என்று அடையாளம் கண்டவுடன் சாயாதேவி தன் குழந்தைகளுடன் தனியே வசிக்கலானாள். மற்ற இரு குழந்தைபோல சனியின் பார்வை மற்றும் உடல் வேகம் சுபமானதாக இல்லை என்று அறிந்த சாயா தேவி அவனை தன் அரவணைப்பில் வைத்து வளர்த்தாள்.

இப்படி மந்த செயல்களுடன் சனி தந்தையான சூரியனின் ஆசிகள் இல்லாமல் வளர்ந்ததால் தந்தைக்கு பகையாகவும் தாய்க்கு செல்ல பிள்ளையாக இருந்தார். இவனின் பார்வை பட்டால் உடல் நிலை பாதிக்க படும் என்று உணர்ந்த அனைத்து தேவர்களும் இவரை காண பயந்தார்கள்.

இது சனி தேவருக்கு வருத்தத்தை கொடுத்தது. தன் வேதனையை தாயிடம் கூறிய பொழுது சாயாதேவி அவனிடம் சூரியதேவரின் வெப்பம் தாளாமல் நானும் சுவர்ச்சலாவும் சிவபெருமானை நோக்கி தவம் செய்து வரங்களை பெற்று மேன்மை அடைந்தோம் உனக்கும் தவம் ஒன்றே சரியான வழி என்று சாயாதேவி மகனுக்கு ஆலோசனை வழங்கினாள்.

அதன் படி காசியில் தவம் செய்து சிவ தரிசனம் கண்ட பொழுது சிவ பெருமான் சனி தேவரிடம் இனி நீ நவகோள்களில் ஒருவனாக இருந்து மனிதர்களின் கர்மத்தினால் ஏற்பட்ட வினைகளின் தன்மை ஏற்ப தண்டனைகளை கொடுத்து அவர்களை திருத்தி நல்வழிப்படுத்தி பாவம்களை போக்கும் அதீத கோள்களாக விளங்குவாய் என்று ஆசி கொடுத்து ஈஸ்வர பட்டம் அருளினார்.

ஈஸ்வர பட்டம் பெற்றும் சனியின் மனம் நிறைவு பெறவில்லை. தன் பார்வை தன்னை பற்றிய அடுத்தவர் சிந்திப்பது மற்றவர் இவருடன் யாரும் பழக அஞ்சுவது போன்ற நிலை இவரை சங்கட படுத்தியது. மேலும் இவருடைய கடமையில் நேர்மை அஞ்சாமை தண்டனை நோய்களை தருவது போன்றவைகளினால் இவரை சனி தேவர் என்று சொல்லாமல் தோஷம் என்று மற்றவர்கள் இவரை குறிப்பிடுவது வேதனையை இவருக்கு அளித்தது.

தன்னுடைய வேதனையை வசிட்ட முனியிடம் இவர் முறையிட்டபொழுது சனி தேவரின் கைகளில் இருந்த ஆயுதத்தை பிடுங்கி விட்டு விவசாயத்திற்கு பயன்படும் கலப்பையை கொடுத்து இதை இனி கைகளில் வைத்து கொள். மேலும் உனது தாய் வழிபட்ட அக்னிஸ்வர இறைவனை பூஜித்து நற்கதி அடைவாய் என்றும் அறிவுறுத்தினார். குருவின் ஆலோசனைப்படி தவமும் பூசைகளும் செய்து சனீஸ்வர பகவான் நன்மை செய்யும் சனியாக அருள்பெற்றார்.

சனீஸ்வர பகவானை பற்றிய ஆய்வில் எனக்கு கோவிலில் மற்றும் நூல்களில் கிடைத்த தகவல் இங்கே பதியப்பட்டது. சனி தேவரின் குரு காலபைரவர் என்று சோதிட நூல்கள் சொல்கிறது. காலபைரவருக்கும் சனி தேவருக்கும் என்ன தொடர்பு என்று நான் ஆசான் அகத்தியரிடம் கேட்ட பொழுது அவர் தன் சுவடிகளில்

"அண்டத்துள் அண்டமாய் அணுவில் நிற்கும்
அண்டவெளி பிரபஞ்சத்தில் சுட்சமாய் நிற்கும்
அண்டம் பிண்டம் இருநிலை காத்து நிற்கும்
அண்டர் எல்லாம் தொழுது போற்றும்"
சதாசிவ சாதக்கிய மூர்த்தியின் அம்சமான ருத்ரர். ருத்தரின் கட்டளைக்கு உட்பட்ட காலநிரந்ஜர். காலநிரந்ஜர் கட்டளைக்கு உட்பட்ட கால பைரவர்.

கால பைரவர் கட்டளைக்கு உட்பட்ட யமதர்மராஜர். யமதர்மராஜனின் கட்டளைக்கும் உறவுக்கும் உட்பட்ட "சனீஸ்வர பகவான்" என்று பதித்து இருந்தார்.

அதாவது சனியும் தர்மராஜரும் காலபைரவரின் சீடர்கள் என்றும், காலத்தால் உண்டாகும் வினைப்பயன்களை தருவது இவர்கள் என்றும் காலத்தில் உண்டான சாபத்தையும் தோஷத்தையும் தன் ஆசிகளினால் மாற்றி அமைக்கும் வல்லமை உடையவர் காலபைரவர் என்று உணர்த்தி இருந்தார்.

10 நிற வளையம் கொண்ட 10 கோள்களில் முக்கியமான 9 கோள்களில் நீல வளையும் கொண்ட சனி கிரகம் ஆகாயத்தில் உள்ள மிக அற்புதமான கோள். இவர் ஒரு ராசி வீட்டை கடக்கும் கால அளவு இரண்டரை ஆண்டுகள் ஆகும்.

நம்முடைய ராசிநாதன் நின்ற வீடு அடுத்த வீடு முந்தைய வீடு என்ற 12,1,2 ஆகிய மூன்று வீடுகளை கடக்க எடுத்துக்கொள்ளும் கால அளவு ஏழரை ஆண்டுகள் ஆகும். இதனையே ஏழரைச்சனி என்பர். 12-ல் சனி சஞ்சரிக்கும் காலத்தை விரைய சனி என்றும் 1-ல் சனி சஞ்சரிக்கும் காலத்தை ஜென்மச்சனி என்றும் 2-ல் சனி சஞ்சரிக்கும் காலத்தை வாக்கில்சனி /குடும்பத்தில் சனி என்றும் கூறுவர்.

ஒருவர் வாழ்வில் இருப்பது இரண்டு அரையாண்டுகள் (22.5) என்பது மூன்று முறை வரலாம். முதல் ஏழரை ஆண்டுகள் வருவது மங்குசனி என்றும் இரண்டாவது ஏழரை ஆண்டுகள் வருவது
பொங்குசனி என்றும் மூன்றாவது ஏழரை ஆண்டுகள் வருவது மரணச்சனி என்றும் கோசார ரீதியில் சந்திரன் நின்ற வீட்டுக்கு 4-ல் சனி வருங்காலத்தை அஷ்டமச்சனி என்று சோதிட நூல்கள் சொல்கிறது.

மேலும் 10 ஆம் இடத்து அதிபதியை கர்மகாரகன் என்றும் சனி தேவரை கர்மாதிபதி என்றும் சோதிட நூல்கள் சொல்கிறது.

கர்மம் என்பது செயல்கள். செயல்கள் இரண்டு வகை படும் ஒன்று நன்மை, செய்வது மற்றது தீய செயல்களை செய்வது. இந்த செயல்களின் பலன் அனைத்தும் நம் உணவில் பதிந்து குருதியில் கலந்து பெண்களுக்கு கருவிலும், ஆண்களுக்கு விந்துவிலும் பதிந்து முதலில் பிறக்கும் தலைபிள்ளைக்கு அதிபதியாக இருந்து அந்த நபர்களை வழி நடத்துவார்.

கர்மத்தால் ஏற்பட்ட வினைகளை கொண்டு பலன்களை அளிக்கும் இவரை கர்மாதிபதி என்றும் கர்ம காரகர் என்று பெயர் வைக்கப்பட்டது. இவருக்கு கரியவன், முடவன், மந்தன் என்ற பெயர்கள் உண்டு. நாம் முன்னோர்களுக்கு கொடுக்கும் எள் நீர் மற்றும் தர்ப்பை காக்கை இவரின் காரத்துவம் பெற்றது.

தர்ப்பை புற்கள் நிறைந்த மனையில் சுயம்பாக உண்டான சிவலிங்கம் தர்பாரண்யேஸ்வரர் என்ற பெயருடன் தோன்றிய இடம் திருநள்ளாறு. இங்கே நம் முன்னோர்களுக்காக செய்யப்படும் தரிசனம் பூசைகள் சனி தேவரின் ஆசிகளை நாம் பெற முடியும் என்று சொல்ல படுகிறது.
1993 வருடம் உறையூர் பஞ்சவர்ணசாமி கோவில் வளாகத்தில் இருந்த ஒரு குருக்கள் அம்பாள் உபாசகரிடம் குரு பெயர்ச்சி சனி பெயர்ச்சி துவங்கும் சில நாட்களுக்கு முன் வருவார்.

உபாசகரிடம் பெயர்ச்சிக்காக பஞ்சவர்ணேஸ்வரர் கோவில் ஒரு யாகம் வளர்க்கலாம் என்று இருக்கிறேன். தங்கள் யாகத்திற்கு தேவையான பொருட்களையும் பங்குகொள்பவர்களையும் எனக்கு தெரியப்படுத்தவேண்டும் என்று ஒரு பத்திரிக்கையை தருவார். அதில் எந்த ராசியில் இருந்து சனி தேவர் அல்லது குரு தேவர் பெயர்ச்சி ஆகிறார் என்றும், எந்த ராசிக்காரர் பரிகாரம் செய்து கொள்ளவேண்டும் என்று பதிக்கப்பட்டு இருக்கும்.

ஒரு நபருக்கு 100 ரூபாய் பதிவு செய்ய என்றும், பதிந்தவர்களுக்கு அர்ச்சனையும் ஒரு டாலரும் தரப்படும் என்று தகவல் இருக்கும். உபாசகரின் ஆலோசனைப்படி பலர் சேருவார்கள். பெயர்ச்சி முடிந்தவுடன் உபாசாகருக்கு ஒரு சிறு தொகையை அந்த குருக்கள் கொடுத்து விட்டு மீதியை அவர் எடுத்து கொள்வார்.

நான் உபாசகரிடம் இதை பற்றி கேட்கும் பொழுது அவர் குருக்கள் வறுமையில் உள்ளார். பெயர்ச்சி என்று ஒரு ஹோமத்தை கோவில் செய்வது கோவிலுக்கும் நன்மை அவருக்கும் கொஞ்சம் பொருள் கிடைக்கும் அவருக்கு உதுவுகிறேன் அவ்வுளவுதான் மற்றபடி பெயர்ச்சிக்காக ஹோமம் செய்வது பற்றி எந்த வேத நூல்களிலும் சொல்லப்பட்டது இல்லை என்றார்.

இன்று எல்லாகோவில்களிலும் பெயர்ச்சியை விழாவாக கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்து அவர்களுக்குள் வருமானத்தை பிரித்து கொள்வதை காண்கிறேன். சனி பெயர்ச்சி எனக்கு நன்மையை தருமா?அல்லது தீமையை தருமா என்ற கேள்விக்கு நாம் சில கேள்விகளுக்கு விடையளிக்கவேண்டும்.

சனியின் தன்மையை உங்கள் கட்டத்தில் அறிந்து கொள்ள நீங்க கவனிக்க வேண்டியது என்பது
(1) நீங்கள் பிறந்தது இரவா பகலா?
(2) உங்களுடைய லக்னம்
(3) நட்சத்திரம், ராசி
(4) உங்களுக்கு நடக்கும் திசை
(5) சனியின் 8 வர்க்க பலன்....

இவைகளை கணக்கிட்டு தான் பலன்களை அறிந்து கொள்ளவேண்டும். பிறகு தான் பரிகாரம் செய்து கொள்ளவேண்டும். பரிகாரம் என்பது சில வரமுறைக்கு உட்பட்டது. இதை எப்படி செய்ய வேண்டும் என்றால் அவரவர் கர்மத்தின் விளைவாக ஏற்படும் பலன்களை உணர்ந்து முறையாக செய்தால் மட்டும் பலிதம் ஆகும்.

பொதுவான பரிகாரங்கள் செய்வது சிறப்பு பலனை தராது.
சிவன் கோவில் வழிபாடு,
பிதுர்கள் வழிபாடு,
சித்தர்கள் வழிபாடு,
மகான்கள் வழிபாடு,

மிக நல்ல பலன்களை தரும்.
சனீஸ்வர பகவானுக்கு பரிகாரங்கள் என்றும் பெயர்ச்சிக்கு பூசைகள் என்றும் இன்று பல சோதிடர்களும் கோவில் குருக்களும் பலவிதமான உபாயங்களை முகநூலில் பதித்தும் பரப்பியும் வருவது வேதனையாக உள்ளது.

ஒரு சோதிடர் சொன்னார் என்று நண்பர் ஒருவர் நல்லான் குளத்தில் குளித்து விட்டு ஆடைகளை அதில் விட்டு வந்ததாக சொன்னார். உண்மையில் திருநள்ளாறில் நளதீர்த்தத்தில் நீராடி சிவதரிசனம் செய்து விட்டு திருவாரூர் தியாகேசர் தரிசனத்துடன் சப்தவிட தரிசனமாக நிறைவு செய்யவேண்டும் என்பது தான் விதி.

மேலும் தர்மராஜரும் சனிதேவரும் சகோதரர்கள் என்றாலும், சனி தேவர் பலன் வேறு தர்மராஜர் பலன்வேறு கர்மாக்கள் வேறு என்று புரிந்துகொள்வது இல்லை. நாம் பரிகாரத்தை பற்றி யோசிப்பது இல்லை.

இருவரும் வழிபட்ட சிவதலங்கள் வேறு, வரம் பெற்ற தலங்கள் தண்டனை பெற்ற தலங்கள் வேறு என்று நாம் முதலில் புரிந்து கொள்ளவேண்டும்.

ஒரு அன்பர் என்னிடம் சொன்னார் எள்ளை கருப்பு துணியில் கட்டி சனிக்கிழமை தோறும் விளக்கு ஏற்றி வந்தால் சனியின் தோஷம் குறையும் என்று ஒரு சோதிடர் சொன்னார் என்றார்.

ஸ்ரீசக்ரமலைக்கு சென்ற பொழுது அங்கு தவறாக விளக்கு ஏற்றியவர்களை அங்கு இருந்த ஒரு அடியார் ஏற்றியவரை திட்டியும் சோதிடர்களை ஒட்டுமொத்தமாக எரித்து விட்டால்தான் கோவிலையும் சாமியையும் காக்கமுடியும் என்றும் திட்டினார். அவர் சொன்னது தப்பே இல்லை எள்ளை பற்றி தெரியாமல் அது பற்றி வேதத்தில் குறிப்பிட்டியுள்ளதை பற்றி அறியாமல் பேசும் பொழுது எரிச்சலாக தான் உள்ளது.

ஒரு ரகசியம் தெரிந்து கொள்ளுங்கள் பிணம் எரிக்கும் பொழுது உண்டாகும் வாடை தான் எள்ளு எறியும் பொழுது வெளிப்படும். கோவிலில் எள்விளக்கை ஏற்ற கூடாது எள் எண்ணெய் விளக்கு அல்லது சகல தோஷத்தை தீர்க்கும் நெய்விளக்கு ஏற்றலாம்.

மேலும் நவகிரகங்களுக்கு உண்டான தானியத்தில் உணவுகளை செய்து அதை கோவிலில் படைக்கலாம். சிலருக்கு வெள்ளைஎள்ளை, கருப்பு எள்ளை எதற்கு பயன்படுத்துவது என்றே தெரியவில்லை.

மகர ராசிக்கு பெயர்ச்சி பெரும் சனீஸ்வர பகவானுக்கு என்ன பரிகாரம் என்பதை பற்றி ஆசான் அகத்தியரிடம் கேட்டபொழுது அவர் சொன்னது பெயர்ச்சிக்கு பரிகாரம் என்பது இல்லை கர்ம வினைகளின் தண்டனைகளுக்கு, பாவத்திற்கு பரிகாரம் உண்டு.

உண்மை தான் சூரியன் மாதம் ஒரு முறை பெயர்ச்சி, சந்திரன் இரண்டரை நாட்களில் பெயர்ச்சி, செவ்வாய் நாற்பது ஐந்து நாட்களில், புதன் சுக்ரன் முப்பது நாட்களில் பெயர்ச்சி, குரு வருடம் ஒரு முறையும், ராகு கேது பதினெட்டு மாதத்திற்கு ஒரு முறை, சனி இரண்டரை வருடத்திற்கு ஒரு முறை என்று அவைகள் நகர்ந்து கொண்டே இருக்கும். பெயர்ச்சிக்கு பரிகாரம் என்பது எப்படி முடியும் என்பது ஒரு கேள்வி தான்.

கர்மத்தின் விளைவாக ஏற்படும் பலன்களுக்கு பரிகாரம் என்று மகா சிவ நாடியில் சொல்லப்பட்டு உள்ளது. மேலும் சனியின் வர்க்க பரல் நிலையில் மூன்று பரலுக்கு மேல் உள்ள அமைப்பு இருந்தால் ஜென்ம சனியும் ஒன்றும் செய்யாது என்பது சோதிட கணக்கு.

தனுசு ராசியில் ஜென்ம சனி அமருவதால் கும்பகோணம் சிவபுரத்தில் உள்ள காலபைரவரின் தரிசனம் சில பாதுகாப்பை தரும். மேலும் சனீஸ்வர பகவானின் ஆசிகளை தரும் வழுவூர், திருநீலக்குடி மற்றும் திருவேதிகுடி நல்ல மாற்றங்களை தரும்.

சங்கு போல வடிவம் கொண்ட நீல மலர்களை வைத்து சனிக்கு அர்ச்சனை செய்வதும், உடல் ஊனமுற்றவர்களுக்கு உடைகள் உணவுகள் அளிப்பதும், சனியின் நேரடி ஆசிகளை தரும் என்று சோதிட நூல்கள் சொல்கிறது.

சில வைணவ நூல்கள் சொல்வது ஹனுமானின் பாதம் 8 சனிக்கிழமை நம் தலையில் வைத்து ஆசிர்வதிக்க படும் பொழுது சனியின் தாக்கம் குறையும் என்பதும், சனிக்கிழமை ஒரு மிளகை தூளாக்கி தின்று நீர் விட்டு அருந்தி பெருமாள் கோவில் செல்லும் பொழுது சனியின் தாக்கம் குறையும் என்றும் சொல்லப்படுகிறது.

சனீஸ்வர பகவான் சத்தியத்திற்கும் தர்மத்திற்கும் கட்டுப்பட்டவர். சத்தியமும் தர்மமும் நம்மில் நேர்மையாக இருக்கும் பட்சத்தில் இவரால் நமக்கு நன்மையே மேலும் காகபுஜண்டர், நீளங்கிசர் சனீஸ்வர பகவானின் நேரடி தொடர்பு உடையவர்கள். இவர்களின் ஆசிகள் வழிபாடுகள் நமக்கு நன்மை செய்யும் மேலும் சனீஸ்வர பகவானின் ஆசிகளை தரும்....
(1)திருகாரவாசல்
(2)திருக்குவளை
(3)திருவாய்மூர்
(4)திருமறைக்காடு
(5)திருநாகை
(6)திருநள்ளாறு
(7)திருவாரூர்.
இவைகள் ஒரே நாளில் தரிசனம் (சப்த விட தலங்கள்) செய்ய தர்மராஜனின் ஆசிகள் கிடைக்கும்.

முக்கியமாக எக்காரணம் கொண்டும் எங்கும் சனீஸ்வர பகவானுக்கு எள் தீபம் ஏற்றாதீர்கள்.

இதுவும் தவறாகச் செய்யப்படும் ஒரு வழிபாடு. இது தோஷத்தைப் போக்குவதற்குப் பதிலாக அதிகப்படுத்தும். எள் என்பது அரிசியைப் போல ஒரு தானியம். அரிசியை எரிப்போமா? எள்ளை எண்ணையாக்கி அந்த எண்ணையைக் கொண்டு தீபமேற்றச் சொல்லித்தான் நமது பரிகாரமுறைகள் சொல்கிறதே தவிர எள்ளையே நேரிடையாக எரிக்க அல்ல.

எள்ளை நைவேத்தியமாகத்தான் படைக்க வேண்டும். மனித உருவத்தில் நமது காலத்தில் வாழ்ந்து நம் கண்முன் நடமாடிய மகான் காஞ்சித்தெய்வம் ஸ்ரீமகாபெரியவர் ஒருமுறை இந்த எள்தீபம் கூடாது என்று தெளிவுபடுத்தியும், நமது கோவில்களில் இந்த முறையைத் தொடருவது துரதிர்ஷ்டம்தான்.
சனீஸ்வர பகவானின் தாக்கத்தை குறைக்க சித்த நூல்களில் பின்வரும் 20 எளிய பரிகார முறைகள் சொல்லப்பட்டு உள்ளன!!!

(1) தினமும் காகத்திற்கு எள் கலந்த சாதத்தை வைக்கவும்.
(2) சனிக்கிழமை தோறும் பகவானுக்கு இரும்பு அகல் விளக்கில் நல்லெண்ணையில் தீபம் ஏற்றி வழி படவும்.
(3) கருங்குவளை மலர்களால் சனி பகவானுக்கு அர்ச்சனை செய்து வழிபடவும்.
(4) வன்னி மர இலைகளை மாலைகளாகத் தொடுத்து சிவபெருமானுக்கு சனிக்கிழமை தோறும் சாற்றி வணங்கி வழிபடவும்.
(5) சனிக்கிழமை அசைவ உணவு கண்டிப்பாக சாப்பிடக்கூடாது.

(6) சனிக்கிழமை தோறும் நல்லெண்ணை குளியல் செய்தால் கெடுதல் குறையும்.
(7) ஸ்ரீஆஞ்சநேயருக்கு வடை மாலை அல்லது வெற்றிலை மாலை சாற்றி வழிபடுதல் வேண்டும்.

அனுமார் வழிபாடு சனி பகவானின் தொல்லைகளை குறைக்கும்.
(8) ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால வேளையில் கால பைரவரை வணங்கி வரலாம்.
(9) தேய்பிறை அஷ்டமி நாளில் கால பைரவரை வணங்கி வரலாம்.
(10) அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்களுக்கு உதவிகளைச் செய்யவும்.
(11) கோ பூஜை,
பசுவுக்கு வழிபாடுகளை செய்யவும்
(12) ஏழை மாணவர்களின் கல்வி கட்டணம், படிப்பு செலவுக்கு உதவிகளை செய்யவும்.
(13) சனி பிரதோஷ வழிபாடு செய்வது சிறந்தது.

(14) அன்னதானத்திற்கு உதவி செய்யலாம்.
(15) சித்தர்களின் பீடங்கள், ஜீவ சமாதி பீடங்களுக்கு சென்று வணங்கி வழிபாடுகளை செய்யவும்.
(16) உடல் ஊனமுற்றவர்களுக்கு, விதவைகளுக்கு உதவி செய்யவும்.
(17) வன்னிமரத்தை சுற்றி வந்து வணங்க வேண்டும். இதனால் சனிபகவானின் கொடுமையான பாதிப்புகள் விலகி விடும்.

(18) பிரதோச காலத்தில் சிவபெருமானுக்கு வில்வ இல்லை கொடுத்து வணங்கி வரவும்.
(19) தினமும் ராம நாமம் ஜெபித்து வந்தால் சனி பகவானின் தொல்லையில் இருந்து தப்பிக்கலாம்.
(20) சனிக்கிழமை விரதமிருந்து பெருமாளை வழிபட்டு காக்கைக்கு உணவு படைக்க தாக்கங்கள் குறையும்....

சனி பெயர்ச்சியை பற்றிய கவலையும் சிந்தனையும் தவிர்த்து விட்டு சிவாலயங்களில் தரிசனத்தை உணர்ந்து பெருமானை வழிபட்டு பஞ்சாட்சர நாமத்தை ஜெபித்து ஈசனின் அருளை பெற்று எல்லா கோள்களின் ஆசிகளையும் பெற வாழ்த்தி பதிவை நிறைவு செய்கிறேன்.
நன்றி ராஜா கோவிந்தராஜ் ஐயா....

ஓம் சிவ சிவ ஓம்
ஓம் சிவ சிவ ஓம்
ஓம் சிவ சிவ ஓம்
- திருமந்திர whatsaap வகுப்பில் இருந்து
சித்தர்களின் குரல் shiva shangar
 

Latest ads

Back
Top