Pudukkavitai Pazhaiyadu

Status
Not open for further replies.
........
028. பேயாழ்வார்

2344. தாழ்சடையும் நீண்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்
சூழரவும் பொன்னாணும் தோன்றுமால் சூழும்
திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு
இரண்டுருவு யொன்றாம் இசைந்து.......
களி தெலுங்கில் அன்னமய்யா அமைத்த 'ஹரியும் சிவனும் ஒன்று!' என்ற தத்துவப் பாடலுக்கு,

திருமதி M S அம்மா அவர்கள் இதனை விருத்தமாகப் பாடியது மிகவும் ரசிக்க வைக்கின்றது!


Entha Mathramuna MS Subbulakshmi - YouTube
 
சங்கத் தமிழில் புதுக்கவிதை எளிமை

இன்று அதிகம் புழங்காத சில சொற்களின் பொருள் தெரிந்துகோண்டால் சங்கத் தமிழிலும் புதுக் கவிதையின் எளிமையப் பொருள்செறிந்து காணலாம்.

030. தொல்காப்பியர்
8. செய்யுளியல்
குறிலே நெடிலே குறில் இணை குறில் நெடில்
ஒற்றொரு வருதலொடு மெய்ப் படநாடி
நேரும் நிரையும் என்றிசின் பெயரே. 3

இயற்சீர் இறுதி முன் நேர் அவண் நிற்பின்
உரிச்சீர் வெண்பா ஆகும் என்ப. 18

நாற் சீர் கொண்டது அடி எனப்படுமே.
அடி உள்ளனவே தளையொடு தொடையே.
அடி இறந்து வருதல் இல் என மொழிப.
அடியின் சிறப்பே பாட்டு எனப்படுமே. 31-34

*****

031. அகநானூறு

அகவல் ஓசையுடன் ஆசிரியப் பாக்களால் அமைந்த அகநானூற்றுக் கவிதைகளை--செய்யுட்களை, நீங்கள் விரும்பினால்--வரிகள் மாறினாலும் பொருள் மாறாமல் இன்றையநடைக் கவிதைகளில் எழுதியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்தருள்க!

44. வந்துவினை முடித்தனன் வேந்தனும்; பகைவரும்
தம்திறை கொடுத்துத் தமர்‍ஆ யினரே;
முரண்செறிந் திருந்த தானை இரண்டும்
ஒன்றுஎன அறைந்தன பணையே;
[திறை=கப்பம்; பணை=ஒருவகை இசைக் கருவி]

வேந்தன் போரினை முடித்து வென்றான்;
பகைவரும் கப்பம் கட்டி நண்பர் ஆயினர்.
முரண்பட்ட சேனைகள் இரண்டும்
இனி ஒன்றே என்று முழங்கியது முரசு.
=====

66. ’இம்மை உலகத்து இசையொடும் விளங்கி
மறுமை உலகத்தும் மறுஇன்று எய்துப
செறுநரும் விழையும் செயிர்தீர் காட்சிச்
சிறுவர்ப் பயந்த செம்மலோர்’ எனப்
பல்லோர் கூறிய பழமொழி எல்லாம்
வாயே ஆகுதல் வாய்த்தனம் தோழி!
[செறுநர்=பகைவர்; செயிர்=குற்றம்; பயந்த=பெற்ற;
வாயே=உண்மையே (நோக்குக, வாய்மை)]

பகைவரும் விரும்பும்
குற்றம் இல்லாத மக்களைப் பெற்ற
மாட்சிமை தாங்கியோர்
இந்த உலகில் புகழுடன் விளங்கி
மறு உலகம் செல்வர் மாசற என்று
பலர் மொழிந்த பழமொழி எல்லாம்
உண்மையே என்று பார்க்கிறோம் தோழி!
-----

101. அம்ம வாழி தோழி! ’இம்மை
நன்றுசெய் மருங்கில் தீதுஇல்’ என்னும்
தொன்றுபடு பழமொழி இன்றுபொய்த் தன்றுகொல்?
[மருங்கு=இடம்]

தோழி, நீ வாழ்க! சொல்கிறேன் கேள்!
இப்பிறவியில் நல்லது செய்தால்
தீமை நம் பக்கம் வருவதில்லை என்று
தொன்றுதொட்டு வந்த பழமொழி
இன்று பொய்யானதோ?
-----

120. நெடுவேள் மார்பின் ஆரம் போலச்
செவ்வாய் வானம் தீண்டி மீன் அருந்தும்
பைங்காற் கொக்கினம் நிரைபறை உகப்ப
எல்லை பைப்பய கழிப்பிக் குடவயின்
கல்சேர்ந் தன்றே, பல்கதிர் ஞாயிறு.

சிவந்த வானம் பார்த்து மீன் உண்ணும்
பசுங்கால் கொக்குகள்
முருகக் கடவுள் மார்பு முத்தாரம் போல
வானில் பறந்தன வரிசையாக.
பகல் பொழுதினை மெல்லப் போக்கி
பல்கதிர் ஆதவன் மலையை அடந்தது,
மேற்றிசையில் மறைய.
-----
(இன்னும் வரும்)
 
141. அம்ம வாழி தோழி! கைம்மிகக்
கனவுங் கங்குல்தோ றினிய; நனவும்
புனைவினை நல்‍இல் புள்ளும் பாங்கின!
நெஞ்சும் நனிபுகன்று உறையும்;

தோழி, நீ வாழ்க! சொல்கிறேன் கேள்!
அளவில்லாத இனிய கனவுகள்
இரவுதோறும்!
நனவிலும் நல்ல வாழ்க்கை
என் அலங்கரித்த வீட்டில்;
பறவைகள் சொல்வதும் நல்ல அறிகுறி;
எனவே என் இதயமும்
நல்லதை எண்ணியே வாழ்கிறது.
-----

149.சேரலர்
சுள்ளியம் பேரியாற்று வெண்நுரை கலங்க
யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
வளம்கெழு முசிறி ஆர்ப்பெழ வளை‍இ
அருஞ்சமங் கடந்து படிமம் வவ்விய
நெடுநல் யானை அடுபோர்ச் செழியன்

சேரமன்னனின் (நாட்டில்)
வெண்நுரை பொங்கும் சுள்ளி பேரியாற்று வழியே
யவனர்கள் வந்த அனுபவமிக்க மரக்கப்பல்
பொன்னை விலையாகக் கொடுத்து
மிளகை ஏற்றிச் செல்லும்
வளம் நிறைந்த முசிறிப் பட்டினத்தை
பெரும் ஆரவாரத்துடன் போரிட்டு வென்று
அங்கிருந்த தெய்வப் பொற்சிலையைக் கவர்ந்தான்
உயர்ந்த யானைகளுடன் போர் வெல்லும் பாண்டியன்.
-----

247. அரும்புமுதிர் வேங்கை அலங்கல் மென்சினைச்
சுரும்புவாய் திறந்த பொன்புரை நுண்தாது
மணிமருள் கலவத்து உறைப்ப, அணிமிக்கு
அவிர்பொறி மஞ்ஞை ஆடும் சோலை...

அன்றலர்ந்த வேங்கைமரப் பூக்கள்
மெல்லிய கிளைகளில் ஆட,
வாய்திறந்த பூக்களில் வண்டுகள் நுழைய,
பொன்துகள் போலப் பூக்களின் மகரந்தம்
நீலமணி நிறத்த தோகைகளில் விழ,
ஒளி சிதறும் புள்ளிமயில் ஆடும் சோலை...
-----

267. புகையின் பொங்கி வியல் விசும்பு உகந்து
பனி ஊர் அழற் கொடி கடுப்பத் தோன்றும்
இமயச் செவ்வரை மானும் கொல்லோ?
பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர்
சீர்மிகு பாடலிக் குழீ‍இ கங்கை
நீர்முதல் கரந்த நிதியம் கொல்லோ?

(தலைவன் தலைவியைப் பிரிந்து சென்றதற்கு உவமையாகத் தோழி கூறியது)
புகைபோல உயர்ந்து பரந்த வானில் எழுந்து
பனி படர்ந்து தீச்சுடர்போலத் தோன்றும்
சிறந்த இமய மலையைப் போன்றதோ (தலவன் பிரிவு)?
(அல்லது) பலவகைப் புகழுடன்
போரெல்லாம் வென்ற நந்தர் எனப் பெயருடைய
சீர்மிகு பாடலிபுத்திர நகரில்
திரண்டிருந்த செல்வம் (பகைவர் படையெடுப்பால்)
கங்கை நீரடியில் புதைக்கப் பட்டது போன்றதோ?

-----

327. இன்பமும் இடும்பையும் புணர்வும் பிரிவும்
நன்பகல் அமையமும் இரவும் போல
வேறுவே றியல ஆகிமா றெதிர்ந்து
உளவென உணர்ந்தனை யாயின் ஒரூஉம்
இன்னா வெஞ்சுரம் நன்னசை துரப்பத்
துன்னலுந் தகுமோ துணிவில் நெஞ்சே.

இன்பமும் துன்பமும் கூடலும் பிரிவும்
பகல் இரவு போல
வேறுவேறு தன்மையால் எதிர்த்து நிற்பன;
இதை நீ உணர்ந்தால்
இவளைப் பிரியமுடியாதாகிய
வெஞ்சுரத்தால் இவள் அருகிலேயே இருந்து
பொருள் தேடும் வேட்கை இல்லாமல் இருப்பது
தகுமோ, துணிவில்லாத என் நெஞ்சமே.

-----
 
032. புறநானூறு
புறநானூற்றில் உள்ள சில, புதுக்கவிதையின் எளிமை அமைந்த பாடல்களின் பொருளை, இன்றைய கவிதைநடை வரிகளால் புரிந்துகொள்ள முயலுவோம். (பாடல்கள் பதம்பிரித்துத் தரப்பட்டுள்ளன.)

2. சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதனை வாழ்த்தி
முரஞ்சியூர் முடிநாகராயர் பாடியது:
மண் திணிந்த நிலனும்
நிலம் ஏந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித் தலை‌இய தீயும்
தீமுரணிய நீரும் என்றாங்கு ... 5
ஐம்பெரும் பூதத்து இயற்கை போலப்
[முதல் ஐந்து வரிகளில் உள்ள அந்தாதி உத்தியைக் கவனிக்கவும்.]

போற்றார்ப் பொறுத்தலும் சூழ்ச்சியது அகலமும்
வலியும் தெறலும் அளியும் உடையோய்
நின்கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்துநின்
வெண்தலைப் புணரிக் குடகடல் குளிக்கும் ... 10
யாணர் வைப்பின் நன்னாட்டுப் பொருந
வான வரம்பனை நீயோ பெரும
அலங்குளைப் புரவி ஐவரொடு சினை‌இ
நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
ஈரைம் பதின்மரும் பொருது களத்து ஒழியப் ... 15
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்
பா‌அல் புளிப்பினும் பகல் இருளினும்
நா‌அல் வேத நெறி திரியினும்
திரியாச் சுற்றமொடு முழுதுசேண் விளங்கி
நடுக்கின்றி நிலியரோ அத்தை அடுக்கத்துச் ... 20
சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை
அந்தி அந்தணர் அருங்கடன் இறுக்கும்
முத்தீ விளக்கிற் றுஞ்சும்
பொற்கோட்டு இமயமும் பொதியமும் போன்றே.
=====

மண் செறிந்த நிலமும்,
நிலத்தில் இருந்து ஓங்கிய வானும்
வானைத் தடவிவரும் காற்றும்
காற்றில் பரவும் நெருப்பும்
நெருப்போடு முரண்பட்ட நீரும் என்றுள்ள
பஞ்சபூதங்களின் இயல்புபோல,

பகைவர் பிழைகளைப் பொறுப்பதும்
...அப்பிழைகள் அத்துமீறினால்
...கண்காணிக்கப் பரந்த உளவும்
...அதனால் பகவரை அழிக்கவல்ல மன வலிமையும்
...அவர்கள் உன்னை வணங்கினால் நீ காட்டும் அருளும் உடையவனே!

உன் கடலில் தோன்றிய ஆதவன்
...இடம் பெயர்ந்து உன்
வெள்ளை நுரைபொங்கும்
...மேற்குக் கடலில் மூழ்கும்;
புது வருவாய் என்றும் வரும்
...ஊர்கள் நிறைந்த நாட்டின் வேந்தே!
வானவரம்பனே! பெருமையில் சிறந்தவனே, நீயோ

கொண்டைகள் தாங்கித் தலையாட்டிவரும் குதிரைகள்
...கொண்ட (பாண்டவர்) ஐவருடன் சினந்து,
நிலம் முழ்தும் கைக்கொண்டு தும்பைப்பூ சூடிய
துரியோதனாதிகள் நூறுபேரும்
...போரிட்டுக் களைத்திருக்க
பெருமளவு சோற்றினை இருபடைக்கும்
...உண்ணக் கொடுத்தாய்! (எனவே)

பால் புளித்தாலும், பகல் இருண்டாலும்
நான்கு வேதம் சொல்லும் அறம் திரிந்தாலும், நீ
உனக்கு எதிராகச் சூழ்ச்சிகள் செய்யாத
...அமைச்சர் குழுவுடன்
கலக்கம் இன்றி இருப்பாயாக,

...அரைமலையில்
சிறிய தலையும் பெரிய கண்ணும் உள்ள பெண்மான்கள்
மாலையில் அந்தணர் தம் கடமையான வேள்வி செய்யும்
மூவகை நெருப்பின் ஒளியில் தூங்கும்,
பொன் சிகரங்கள்கொண்ட இமயமலையும்
...பொதியமலையும் போன்று!

*****
 
எருமை யன்ன கருங்கல் லிடைதோ
றானிற் பரக்கும் யானைய முன்பிற்
கானக நாடனை நீயோ பெரும
நீயோ ராகலி னின்னொன்று மொழிவல்
அருளு மன்பு நீக்கி நீங்கா 5
நிரயங் கொள்பவரொ டொன்றாது காவல்
குழவி கொள்பவரி னோம்புமதி
அளிதோ தானேயது பெறலருங் குரைத்தே.
=====

எருமைகளுடன் சேர்ந்து மேயும்
பசுக்கூட்டம் போலக்
கருங்கற்களிடையில் தென்படும்
யானைகள் நிறைந்த
பழமை வாய்ந்த காடுசூழ்ந்த
நாட்டினை உடையவனே, நீ பெரியவன்!
இப்படிப் பகைவர் அணுகாத பெரும்வளம்கொண்ட
உனக்கு நான் ஒன்று சொல்வேன்:
அருளும் அன்பும் தவிர்த்து அதனால்
என்றும் நரகத்தில் உழல்பவர்களுடன்
நீ சேராது, நீ காக்கும் உன் தேசத்தை
குழந்தை வளர்ப்போரைப்போல் பாதுகாப்பாயாக.
அத்தகைய காவல் பிறருக்குக் கொடுக்கக்கூடியதோ
பிறரிடம் இருந்து பெறுவதோ அல்ல.

*** *** ***

033. சிற்றிலக்கியம்: குறவஞ்சி
புறநானூற்றுக் கவிதைகளுக்கு இடையிடையே, இருநூறு ஆண்டுகளுக்குமுன் இயற்றப்பட்ட சிற்றிலக்கியங்களில் உள்ள புதுக்கவிதை உத்தியின் எளிமையையும் காண்போம்.

திரிகூடராசப்பக் கவிராயரின் திருக்குற்றாலக் குறவஞ்சி

தமிழில் உள்ள 96 வகை சிற்றிலக்கியங்களில் குறவஞ்சி, இரட்டை மணிமாலை, மும்மணிக்கோவை, நான்மணிமாலை, கலம்பகம், அந்தாதி, பள்ளு முதலியன பிரபலமானவை. (96 வகைகளின் பெயர் தெரிந்தவர்கள் விவரங்களை இங்கு பகிர்ந்துகொள்ளலாம்).

குறவஞ்சி வகையில் ஒரு பாட்டுடைத் தலவனின் அழகையும் சிறப்பையும் அவன் உலா வரும்போது கண்டு, ஏழுவகைப் பருவ மகளிரும் (பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண்) அவனைக் காதலித்து, அவன் தன் கரம் பற்ற விழையும் ஆசையில் மயங்கியிருக்க, குறமகள் ஒருத்தி வந்து பாட்டுடைத்தலைவியைக் கண்டு அவள் கனவுகள் நனவாகக் குறி சொல்லுவாள். அப்போது அவள் தான் இருக்கும் மலைவளம் பற்றியும், அதன் தலவர் பற்றியும், தம் வாழ்க்கை நெறிகள், முறைகள் பற்றியும் கவிதை அழகும், செய்யுள் அழகும் ஒன்றுசேர, ராக தாளமுடன் பல்லவி, அநுபல்லவி, விருத்தங்கள், கண்ணிகள் சேர்ந்த கீர்த்தனைகளில் பாடுவாள். இதுபோன்ற கவிதைகளின் தொகுப்பே குறவஞ்சி.

குறிசொல்லும் குறவஞ்சி வீறாப்பான நடைபயின்று தளுக்கிக் குலுக்கி வரும்போது அவள் நடை, உடை, பாவனைகளைக் கவிஞர் சந்தத் தமிழின் ஒழுங்குடன் புதுக்கவிதையின் எளிமையும் சேர்த்து வர்ணிப்பதைப் பாருங்கள்:

தேவர்கள் தம்பிரான் திருவருள் பாடி
இலகுநீ றணிந்து திலகமும் எழுதிக் [இலகுநீறு=நெற்றியில் திகழும் திருநீறு]

குலமணிப் பாசியும் குன்றியும் புனைந்து 20 [குன்றி=குன்றிமணி]
சலவைசேர் மருங்கிற் சாத்திய கூடையும் [மருங்கு=இடுப்பு]
வலதுகைப் பிடித்த மாத்திரைக் கோலும்
மொழிக்கொரு பசப்பும் முலைக்கொரு குலுக்கும்
விழிக்கொரு சிமிட்டும் வெளிக்கொரு பகட்டுமாய்

உருவசி அரம்பை கருவமும் அடங்க 25
முறுவலின் குறும்பால் முனிவரும் அடங்கச்
சமனிக்கும் உரையால் சபையெலாம் அடங்கக்
கமனிக்கு மவரும் கடைக்கண்ணால் அடங்க [கமனிக்குமவர்=வான்வழிச் சித்தர்கள்]
கொட்டிய உடுக்குகோ டாங்கிக் குறிமுதல்

மட்டிலாக் குறிகளும் கட்டினால் அடக்கிக் 30
கொங்கணம் ஆரியங் குச்சலர் தேசமும்
செங்கைமாத் திரைக்கோற் செங்கோல் நடாத்திக்
கன்னடம் தெலுங்கு கலிங்காரச் சியமும்
தென்னவர் தமிழாற் செயத்தம்பம் நாட்டி

மன்னவர் தமக்கு வலதுகை நோக்கி 35
இன்னகை மடவார்க் கிடதுகை பார்த்துக்
காலமுன் போங்குறி கைப்பல னாங்குறி
மேல்‌இனி வருங்குறி வேண்டுவோர் மனக்குறி
மெய்க்குறி கைக்குறி விழிக்குறி மொழிக்குறி

எக்குறி யாயினும் இமைப்பினில் உரைக்கும் 40
மைக்குறி விழிக்குற வஞ்சிவந் தனளே.

(இன்னும் வரும்)

*****
 
Last edited:
032. புறநானூறு

12. அறம் இதுதானோ?
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைக் குறித்து
பலவர் நெட்டிமையார் வஞ்சப் புகழ்ச்சியாகப் பாடியது.

பாணர் தாமரை மலையவும் புலவர்
பூநுதல் யானையொடு புனைதேர் பண்ணவும்
அறனோ மற்றிது விறன்மாண் குடுமி
இன்னா வாகப் பிறர்மண்கொண்
டினிய செய்திநின் னார்வலர் முகத்தே.
=====

பாணர்கள் பொற்றாமரை மலர் சூடவும்,
புலவர்கள் நெற்றியில் பொன்பட்டம் அணிந்த யானையுடன்
அலங்கரிக்கப்பட்டுத் தயாராக உள்ள தேர் ஏறவும்
வழிசெய்த வெற்றிவீரன் குடுமியே!
நீ பிறர் நிலம் வென்று அவர்களுக்கு அது
இல்லையெனச் செய்யும்போது
உன் ஆர்வலர்களுக்கு இவ்வாறு இனிது செய்தல் தகுமோ?

குறிப்பு:
பாணர்களுக்கு மன்னர்கள் பொற்றாமரைப் பூக்களை வெள்ளி நாரால் தொடுத்த பொன்னரிமாலையும், புலவர்களுக்குக் களிறும் தேரும் வழங்குதல் மரபு.
=====

59. பாவலரும் பகைவரும்!
மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்
பாண்டியன் சித்திர மாடத்துத் துஞ்சிய நன்மாறப் மேல் படியது.

ஆரம் தாழ்ந்த அணிகிளர் மார்பின்
தாடோய் தடக்கைத் தகைமாண் வழுதி
வல்லை மன்ற நீநயந் தளித்தல்
தேற்றாய் பெரும பொய்யே யென்றும்
காய்சினந் தவிராது கடலூர்பு எழுதரும்
ஞாயிறு அனையைநின் பகைவர்க்குத்
திங்கள் அனையை யெம்ம னோர்க்கே.
=====

ஆரம் தாழ்ந்து ஒளிவிடும் மார்பின்
முழங்கால் தொடும் வலிய கைகளை உடைய
கௌரவமிக்க பாண்டிய மன்னா!
நீ விரும்பிக் கொடுப்பதில் வல்லவன்,
எல்லோரிடமும் தெளிவாயிருப்பவன், பெரியவன்!
ஒழியாத கடும் வெப்பத்துடன்
கடாலில் இருந்து கிளர்ந்து எழும்
ஞாயிறு போன்றவன் நீ உன் பகைவர்க்கு.
எம் போன்றோர்க்கோ திங்கள் போன்றவன்!

[ஆஜானுபாஹு என்ற வடமொழிச்சொல்லின் தமிழாக ’தாள் தோய் தடக்கை’ என்று வருவது காண்க.]

*****

033. சிற்றிலக்கியம்: குறவஞ்சி
திரிகூடராசப்பக் கவிராயரின் திருக்குற்றாலக் குறவஞ்சி


திருக்குற்றால நாதர் வெள்ளெருதின் மீதேறி, அவர் வரவை கட்டியக்காரன் முகமன் கூறி முன்செல்ல, அடியார் புடைசூழ, வாத்தியங்கள் முழங்க உலா வருகிறார். அவர் உலாக்காண வந்த பெண்கள் அவசரத்தில் ஒரு கைவளை மறந்து, ஒரு கண்ணுக்கு மையிட மறந்து, மார்க்கச்சையை இடுப்பில் அணிய முயன்று, ஈசன் தம் தெருவில் நெடுநேரம் நில்லாது போய்விடுவானோ என்று விரைந்தபோது தமக்குள் பேசிக்கொண்டது:

ஒருமானைப் பிடித்து வந்த பெருமானைத் தொடர்ந்துவரும்
ஒருகோடி மான்கள் போல் வருகோடி மடவார்

புரிநூலின் மார்பனிவன் அயனென்வர் அயனாகில் [அயன்=பிரம்மா]
பொங்கரவ மேது-தனிச் சங்கம்-ஏ தென்பார் [சங்கம்=குண்டலம்]

விரிகருணை மாலென்பார் மாலாகில் விழியின்மேல் [மால்=திருமால்]
விழியுண்டோ முடியின்மேல் முடியுண்டோ என்பார்

இருபாலும் நான்முகனுந் திருமாலும் வருகையால்
ஈசனிவன் திரிகூட ராசனே யென்பார்

ஒருகைவளை பூண்ட பெண்கள் ஒருகைவளை பூணமறந்
தோடுவார் நகைப்பவரை நாடுவார் கவிழ்வார்

இருதனத்து ரவிக்கைதனை அரையிலுடை தொடுவார்பின் [’ரவிக்கை’ என்ற சொல் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது போலும்!]
இந்தவுடை ரவிக்கையெனச் சந்தமுலைக் கிடுவார்

கருதுமனம் புறம்போக‌ஒரு கண்ணுக்கு மையெடுத்த
கையுமாய் ஒருகணிட்ட மையுமாய் வருவார்

நிருபனிவன் நன்னகரத் தெருவிலே நெடுநேரம் [நிருபன்=(வடமொழி) அரசன்]
நில்லானோ மதனை இன்னம் வெல்லானோ என்பார்


உலாவரும் நாயகரைக்காணா பாட்டுடைத்தலைவி வசந்தவல்லியும் வருகிறாள், அதுவும் எத்தனை எழில் மிடுக்குடன்?

வங்காரப் பூஷணம் பூட்டித் திலகந்தீட்டி [வங்காரம்=பொன்]
மாரனைக்-கண் ணாலே மருட்டிச் [மாரன்=மன்மதன்]
சிங்கார மோகனப் பெண்ணாள் வசந்தவல்லி
தெய்வ-ரம்பை போலவே வந்தாள்.

கண்ணுக்குத் கண்ணிணை சொல்லத் திரிகூடக்
கண்ணுதலைப் பார்வையால் வெல்லப்
பெண்ணுக்குப் பெண்ம யங்கவே வசந்தவல்லி
பேடையன்னம் போலவே வந்தாள்.

கையாரச் சூடகம் இட்டு-மின் னாரைவெல்லக் [சூடகம்=கைவளையல்]
கண்ணிலொரு நாடக மிட்டு
ஒய்யார மாக நடந்து வசந்தவல்லி
ஓவியம் போலவே வந்தாள்;

சல்லாப மாது லீலர் குற்றாலநாதர் [மாது=குற்றாலநாதரின் துணை குழல்வாய்மொழியம்மை]
சங்கநெடு வீதி தனிலே
உல்லாச மாது ரதிபோல் வசந்தவல்லி
உருவசியும் நாணவே வந்தாள்.


*****
 
032. புறநானூறு
சேரமான் பெருஞ்சேரலாதன் சோழன் கரிகாள் பெருவளத்தானோடு செய்த போரில் சோழன் எறிந்த வேல் சேரனின் மார்பில் பட்டு முதுகில் வெளிவந்து புண் செய்தது. முதுகில் புண்பட்ட சேரன் பெரிதும் நாணி வடக்கிருந்தான். அந்த ஆற்றாமையால் கழாத் தலையார் சேரனது நாடு நலிவுறும் விதத்தை இப்பாடலில் வர்ணித்துள்ளார்.

65. மண்முழா மறப்பப் பண்யாழ் மறப்ப
இருங்கட் குழிசி கவிழ்ந்திழுது மறப்பச்
சுரும்பார் தேறல் சுற்ற மறப்ப
உழவ ரோதை மறப்ப விழவும்
அகலு ளாங்கட் சீறூர் மறப்ப ... 5
உவவுத்தலை வந்த பெருநா ளமயத்
திருசுடர் தம்மு ணோக்கி யொருசுடர்
புன்கண் மாலை மலைமறைந் தாங்குத்
தன்போல் வேந்தன் முன்புகுறித் தெறிந்த
புறப்புண் ணாணி மறத்தகை மன்னன் ... 10
வாள்வடக் கிருந்தன னீங்கு
நாள்போற் கழியல ஞாயிற்றுப் பகலே.

முரசு தனக்கு ஒலிமெருகு ஊட்டும்
...மண்பூச்சை மறக்க, யாழ் பண் மறக்க,
தயிர்கடையும் பெரும்பானை கவிழ்ந்து
...வெண்ணெய் மறக்க,
பூமரத்தின் கிளைகளில் வண்டுகள்
...மதுவுண்ண மறக்க,
உழவர் தம்தொழில் ஆரவாரங்களை மறக்க,
அகன்ற தெருக்களை உடைய சீறூர்
...விழாக்களை மறக்க,
சந்திரன் உதித்த ஒருபெரும் நாளில்
சூரியன் சந்திரன் எதிர்நோக்கி யிருக்க
ஒருசுடர் இழிந்த மாலைப் பொழுதில்
...மலையில் மறைய,
தன்போன்ற மன்னன் மார்பினைக் குறித்து எறிந்தது
முதுகில் புண்பட்டது கண்டு நாணி
வீரம் செறிந்த மன்னன்
...வாளுடன் வடக்கிருந்ததால், இங்கு
எமக்கு ஞாயிறு பயிலும் பகற்பொழுது
...முன்போல் கழியாது.

*****

033. சிற்றிலக்கியம்: குறவஞ்சி
திரிகூடராசப்பக் கவிராயரின் திருக்குற்றாலக் குறவஞ்சி

வசந்தவல்லி பந்தடித்து விளையாடுவதன் வர்ணனை
இராகம்: பைரவி, தாளம்: சாப்பு

செங்கையில் வண்டு கலின்கலின் என்று செயஞ்ஜெயம் என்றாட - இடை [வண்டு=வளையல்]
சங்கதம் என்று சிலம்பு புலம்பொடு தண்டை கலந்தாட - இரு [சங்கதம்=ஐயம், புலம்பு=ஒலி]
கொங்கை கொடும்பகை வென்றனம் என்று குழைந்து குழைந்தாட - மலர்ப்
பைங்கொடி நங்கை வசந்த சவுந்தரி பந்து பயின்றாளே;

எங்கோ கேட்டமாதிரி இருக்கிறதா? ’ஆதி பராசக்தி’ திரைப்படத்தில் ’சொல்லடி அபிராமி’ பாடலில் வரும் வரிகள் இவை. கண்ணதாசன் முதல் மூன்று வரிகளை அப்படியே கையாண்டு, கடைசி வரியைப் படத்தின் சூழ்நிலைக் கேற்ப மாற்றிவிட்டார்! கர்நாடக இசை தெரிந்தவர்கள் படத்தில் வரும் பாடல் வரிகள் இங்குக் குறித்ததுபோல் பைரவி ராகத்திலும் சாப்பு தாளத்தில் வருகிறதா என்று உறுதி செய்யலாம்.

*****
 
033. சிற்றிலக்கியம்: குறவஞ்சி
திரிகூடராசப்பக் கவிராயரின் திருக்குற்றாலக் குறவஞ்சி

வசந்தவல்லி பந்தடித்து விளையாடுவதன் வர்ணனை தொடர்கிறது.
இராகம்: பைரவி, தாளம்: சாப்பு
கண்ணிகள்

இந்தக் காலத்தில் பெண்கள் இருவர் டென்னிஸ் விளையாடுவதை ஒரு கவிஞன் எப்படி வர்ணிப்பானோ தெரியாது (வாசகர்கள் இதை ட்ரை பண்ணலாமே?), கவிராயரின் வர்ணனைகளின் கவிதையின் அழகுடன் எளிமையும் சேர்ந்து அணிசெய்கிறது.

[அவள் பந்தடிக்கும்போது கனத்த காதணிகள் அவள் கெண்டை விழிகளை மறைத்துப் புரண்டு ஆடுகின்றன; மேகக் கூந்தலிலிருந்து வண்டுகள் கலைந்தோட, மன்மதனின் மலர்க்கணை வண்டுகள் அவற்றைப் பின்தொடர்கின்றன; மெல்லிய இடையோ துவண்டு திண்டாடுகிறது. செந்தாமரை மலர் வீற்றிருக்கும் திருமகளின் அழகுடைய வசந்த வல்லி இவ்விதம் பந்தடித்தாள்.]

பொந்கு கனங்குழை மண்டிய கெண்டை புரண்டு புரண்டாடக்---குழல்
மங்குலில் வண்டு கலைந்தது கண்டு மதன்சிலை வண்டோட---இனி
இங்கிது கண்டுல கென்படு மென்படு மென்றிடை திண்டாட---மலர்ப்
பங்கய மங்கை வசந்த சவுந்தரி பந்து பயின்றாட.

[முன்கைகளில் சூடகமும் சங்கு வளைகளும் ஆட, தோல்வளைகள் மேலெழும்ப, காலில் கொலுசுகள் ஒலிக்கத் தண்டை மேலும் கீழும் போய்வர, குற்றால நன்னகர் தெருவில் நாட்டியமாடும் மயில்போல பொற்கொடி ஒய்யாரி வசந்தவல்லி நெருங்கிப் பந்தடித்து விளையாடுவாள்.]

சூடக முன்கையில் வால்வளை கண்டிரு தோள்வளை நின்றாடப்---புனை
பாடக முஞ்சிறு பாதமு மங்கொரு பாவனை கொண்டாட---நய
நாடக மாடிய தோகை மயிலென நன்னகர் வீதியிலே---அணி
ஆடகவல்லி வசந்த ஒய்யாரி அடர்ந்துபந் தாடினளே.

[பொன்னின் ஒளியில் வந்து தாவிய மின்னலின் ஒளிபோலச் சட்டென்று திரும்பி தன்னை ஊக்குவித்து ஆரவரிக்கும் தோழியருடன் சொல்நயம் ததும்பப் பேசிக்கொண்டு நன்னகர் திரிகூடம்பாடியில் ’திகுர்தத் தகுர்தத் தொம்’ என்னும் தாள ஓசை உண்டாகும்படி பந்தடித்தனள்;]

பொன்னின் ஒளியில் வந்து தாவிய மின்னின் ஒளிபோலவே
சொல்நயத்தினை நாடிநாடித் தோழியருடன் கூடிக்கூடி
நன்ன கர்த்ரி கூடம் பாடி நகுர்தத் திகுர்தத் தகுர்தத் தொம் மனப் (பந்)

*****

032. புறநானூறு
தமிழ்க் புலவர்களாலும் அரசியல் தலைவர்களாலும் தவறாது எடுத்தாளப்படும் சங்ககாலச் செய்யுட்களின் இது தலையாயது.

சிறந்த மறக்குடியில் பிறந்து வாழ்க்கப்பட்டு, போர் என்று வந்தால் தன் ஒரே மகனையும் போரிட அனுப்புவதே தன் தர்மம் என்று வழ்ந்த ஒரு இல்லாளை, இன்னொருத்தி ’உன் மகன் எங்கே?’ என்று கேட்டபோது தாய் இந்தச் செய்யுளில் அவளுக்கு பதில் சொன்னாள்.

86. காவற் பெண்டு
சிற்றி னற்றூண் பற்றி நின்மகன்
யாண்டுள னோவென வினவுதி யென்மகன்
யாண்டுட னாயினு மறியே னோரும்
புலிசேர்ந்து போகிய கல்லளை போல
ஈன்ற வயிறோ விதுவே
தோன்றுவன் மாதோ போர்க்களத் தானே.

எனது சிறுவீட்டின் வலிய தூண்பற்றி, உன்மகன்
எங்கே இருக்கிறான் என்று கேட்கிறாய்: என்மகன்
எங்கி ருக்கிறான் என்று அறியேன்; ஆயினும்
புலிகிடந்து வெளிப்போன கற்குகை போன்றது
அல்லவா ஈன்ற இவ்வயிறு? எனவே
தோன்று வானவன் போர்க்களதில் தானே!

*****
 
032. புறநானூறு

தமிழ் படித்த எல்லோரும் நிச்சயம் கபிலர் பாண்டி நாட்டுப் பறம்பு மலைசூழ்ந்த குறுநில மன்னன் வேள் பாரியைப் பழிப்பதுபோல் புகழ்ந்து (வஞ்சப் புகழ்ச்சி அணியில்) பற்றிப் பாடிய இந்தப் பாடலை படித்திருப்பார்கள், அல்லது கேள்விப்பட்டிருப்பார்கள். (பறம்பு மலை இப்போது பிரான் மலை என்ற பெயரில் உள்ளது).

107. பாரி பாரி யென்றுபல வேத்தி
ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர்
பாரி யொருவனு மல்லன்
மாரியு முண்டீண் டுலகுபுரப் பதுவே.


பாரி பாரி என்று பலவிதமாக ஒருவனை செவ்விய நாவன்மை படைத்த புலவர்கள் பலர் புகழ்ந்து ஏத்துகின்றனர். பாரி ஒருவன் மட்டும்தானா இருக்கிறான்? மாரி (மழையும்) இருக்கிறதே உலகினைச் செழிக்கச்செய்ய!
=====

மூவேந்தருடைய சூழ்ச்சியால் வேள் பாரி இறந்தபின் அவனது உற்ற நண்பனாகிய கபிலர் அவன் மகளிர் இருவரைப் பாதுகாத்து வந்தார். ஓர் இரவு முழு நிலாக் கண்டு தம் தந்தையின் பிரிவை எண்ணிக் கையறு நிலையில் வருந்தி அந்த மகளிர் பாடிய பாட்டு இது. எவ்வளவு எளிமையான சொற்கள் பாருங்கள்!

112. அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவில்
எந்தையும் உடையோம்; எம்குன்றும் பிறர்கொளார்.
இற்றைத் திங்கள் இவ்வெண் நிலவில்
வென்றெறி முரசில் வேந்தரெம்
குன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே.

=====

ஆய் அண்டிரன் கடையேழு வள்ளல்களில் ஒருவன். யானைக்கொடை அவனது கொடைச் சிறப்பு. உறையோர் ஏணிச்சேரி முடமோசியார் என்ற புலவர் ஒரு முறை காட்டு வளம் காணச் சென்றபோது யானைகள் அங்கு நிரைநிரையாக மேய்வதைக் கண்டு, ’இந்தக் காடும் ஆய் ஆண்டிரனைப் பாடி யானைகளைப் பரிசிலாகப் பெற்றதோ?’ என வியந்து பாடிய பாட்டு எது.

131. மழைக்கணம் சேக்கு மாமலைக் கிழவன்
வாழைப் பூங்கண்ணி வாய்வாள் அண்டிரன்
குன்றம் பாடின கொல்லோ
களிறுமிக வுடையவிக் கவின்பெறு காடே.


[மழைக்கணம்=மழை பொழியும் முகில் கூட்டங்கள். சேக்கு=சென்று.]

*****
 
034. மரபுக் கவிதைகள் இன்று

இன்றைய வழக்கில் மனதில் தோன்றும் எண்ணங்கள் பெரும்பாலும் புதுக்கவிதை வடிவத்தில் காணப்பட்டாலும், வியக்கத்தக்க வகையில் நூதனமாக அவ்வெண்ணங்கள் மரபுசார்க் கவிதைகளிலும் காணப்படுகின்றன. ’அன்புடன்’ குழும வலைதளத்திலிருந்து திரட்டிய மரபுக் கவிதைகள் கீழே, புதுமைக் கருத்துகளுடன். எல்லாக் கவிதைகளும் வெண்பா வகையின.

ஜெயபாரதன் சி.
சீரெதற்கு? காரெதற்கு? செல்வம் எதற்குச்சொல்?
ஆருயிர்நீ பட்டதாரி! போதுமது - காரிகையே!
ஆண்டாண்டு தோறும் அனுப்பும் உடையெதற்கு?
வேண்டாம் வரதட் சணை.

வயிற்றுக்குச் சோறில்லை, வாங்கிடக் காசேது?
அயர்ச்சியில் சோர்வாய் அறிவு - மயங்கிடினும்
நாடுவேன் வெண்பாவை, நாள்தோறும் சிந்தித்துப்
பாடுவேன் பைந்தமிழ்ப் பா.

அரையுடையில் தோற்றம்! அறுபதுபேர் ஆட்டம்!
திரையிலே தேவையற்ற கூத்தா? - அரங்கத்தில்
புல்லரின் எந்திரப் பொம்மைகள் பேயாட்டம்
கல்லாதான் ஆக்கும் கலை.

வெண்பா பனித்துளி வெள்ளிபோல் துள்ளிடுமே!
பெண்ணின் கவர்ச்சிபோல் பேசிடுமே!- கண்விழிபோல்
காவியத்தைச் சாளரத்தில் காட்டிடுமே! பாவமைப்பில்
ஓவியம் என்றே உணர்.

இக்பால்
புன்னகை என்னும் புதுத்தீபம் ஏற்றியே
இன்னல் துடைக்கவரும் ஏந்திழையே - உன்றன்
கருவிழிகள் மட்டுமல்ல கட்டாத கூந்தல்
இருளும் வெளிச்சம் எனக்கு.

தன்னை மறைக்கும் தவஞானி வேராவார்
புன்னகை செய்பவர் பூக்களாம் - இன்புறவே
அள்ளிக் கொடுப்பார் அருங்கனி; கைவிரித்து
இல்லையெனச் சொல்வார் இலை.

குறிப்பிட்ட வேளையில் கூட்டம் தொடங்கி
வெறுஞ்சடங்கு எல்லாம் விலக்கி - நறுந்தமிழில்
கற்றார் உரையாற்றுங் காலத்தில் அல்லவோ
வெற்றி பெறும்நம் விழா!

தந்தை,தாய் நல்லுயிர்; தாரம் சுடர்விழி
கந்தம் கமழ்பிள்ளை கைநமக்கு - சொந்தபந்தம்
கால்கள்; துயரம் களையப் பறந்துவரும்
தோழன் சுமைதாங்கும் தோள்.

யாப்பும் இலக்கணமும் எத்தனைநாள் கற்றாலும்
பாப்புனைய ஒண்ணுமோ பாரதிபோல்? - மூப்புடைய
வள்ளுவன் அவ்வை வடித்த கவியெல்லாம்
பள்ளியில் கல்லாத பண்பு.

(இன்னும் தேடுவோம்)
 
Status
Not open for further replies.
Back
Top