• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Patal Bhuvaneshwar Cave Temple in Uttarakhand

praveen

Life is a dream
Staff member
அதிசயங்கள் பல நிறைந்த பாதாள புவனேஸ்வர் கோயில்!


உத்தரகாண்ட் மாநிலம், பித்தோராகர் மாவட்டத்தின் குமாஊன் என்னுமிடத்தில் அமைந்துள்ளது பாதாள புவனேஸ்வரர் கோயில். உயர்ந்த மலை, சுற்றிலும் பாய்ந்து ஓடிச் செல்லும் நதி, அடர்ந்த மரங்கள் நிறைந்த சோலை என இயற்கையோடு இணைந்த அற்புதமான ஆலயம் இது. சுமார் 100 அடி ஆழம் 160 அடி நீளம் கொண்ட ஒரு சுண்ணாம்பு குகை கோயில் இது. சுத்தமான காற்று சுமந்து வரும் வாசம் நாம் மூலிகை காட்டில் இருக்கும் உணர்வை ஏற்படுத்தும். இந்தக் குகை கோயில் இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தால் பாதுகாக்கப்படுகிறது.

கயிலாயத்தில் ஒரு சமயம் சிவபெருமான் வெளியே சென்று இருந்தபோது, பார்வதி தேவி நீராடச் சென்றார். அப்போது தனக்குக் காவல் காக்க ஒருவர் வேண்டும் என்று நினைத்த அவர், குளிப்பதற்காக வைத்திருந்த சந்தனத்தை எடுத்து ஒரு உருவம் செய்து இறைவன் அருளால் அதற்கு உயிர் கொடுத்தார். அதை தனது பிள்ளையாக பாவித்த பார்வதி தேவி, எவரையும் உள்ளே நுழைவதற்கு அனுமதிக்கக் கூடாது என்று சொல்லி விட்டு நீராடச் சென்றார். அந்த சமயம், பார்வதியைக் காண ஈசன் அங்கு வந்தார். உள்ளே செல்ல முயற்சிக்கும்போது சிவனை விநாயகர் தடுத்தார். அதனால் சினம் கொண்ட ஈசன் அந்தப் பிள்ளையாரின் தலையை தனது சூலாயத்தால் வெட்டி வீழ்த்தினார்.

குளித்து முடித்துவிட்டு வந்த பார்வதி நடந்ததைக் கண்டு மனம் வருந்தினாள். இதைக் கண்ட சிவபெருமான், பிரம்மனை அழைத்து விநாயகரின் தலையில்லாத உடம்பில் பொருத்துவதற்காக ஒரு தலையை கொண்டு வரச் சொன்னார். அவர் வெளியில் செல்லும்போது எதிரே வந்த ஒரு யானையின் தலையை வெட்டிக் கொண்டு வந்து விநாயகரின் உடலில் பொருத்தினார். சிவபெருமான், விநாயகர் மேல் வைத்த யானை தலையை எட்டு இதழ் தாமரை மூலம் தண்ணீர் தெளித்து உயிர் பெறச் செய்தார். வெட்டப்பட்ட விநாயகர் தலை இன்றும் இந்தக் குகையில் அப்படியே இருக்கிறது. இந்த ஆலயத்தில் இயற்கையாக அமைந்துள்ள எட்டு இதழ்களுடன் கூடிய பாரிஜாத பூ மேலே இருக்கிறது. அதிலிருந்து நீர் சொட்டுகிறது. அந்த நீர் துண்டிக்கப்பட்ட விநாயகர் தலை மேல் விழுகிறது.


பாதாள புவனேஸ்வர் கோயில் கடல் மட்டத்திலிருந்து 1350 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. குறுகலான குகையின் வாயில் வழியாக ஒவ்வொருவராக தவழ்ந்து பக்கவாட்டில் உள்ள கம்பியை பிடித்துக்கொண்டு சுமார் 80 படிகள் இறங்கிச் செல்ல வேண்டும். அனைவரும் ஆக்ஸிஜனை வைத்துக்கொண்டுதான் குகைக்குள் சென்று பார்க்க முடியும். பண்டாரிகள் எனப்படும் குருமார்கள் இங்கே இன்றுவரை பூஜை செய்கிறார்கள். இந்தக் குகையில் சிவபெருமானுடன் முப்பத்து மூன்று கோடி தேவர்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள்.


திரேதா யுகத்தில் ரித்தூபர்ணன் என்ற மன்னன் முதலில் பாதாள புவனேஷ்வர் கோயிலை கண்டுபிடித்து வழிபட்டார். அப்போது நாகர்களின் ராஜாவான ஆதிசேஷனை அவர் சந்தித்தார். ஆதிசேஷன் ரித்துபர்ணனை குகையைச் சுற்றி அழைத்துச் சென்றார். அங்கு ரித்துபர்ணன் வெவ்வேறு கடவுள்களின் பிரம்மிக்க வைக்கும் காட்சியை கண்டார். சிவபெருமானையும் அவர் தரிசித்தார். அதன் பின்னர் துவாபர யுகத்தின்போது பாண்டவர்கள் சிவபெருமானை இங்கு பிரார்த்தனை செய்தார்கள். கலியுகத்தில் வாழ்ந்த ஆதிசங்கரர் இங்கு வந்து லிங்கத்திற்கு செப்பிலான காப்பு வைத்து பூஜை செய்தார்.


இந்தக் குகைக்கு நான்கு கதவுகள் இருந்ததாகவும் அதில் இரண்டு கதவுகள் சென்ற யுகத்தில் மூடப்பட்டு விட்டதாகவும் கந்தபுராணத்தில் குறிப்பு உள்ளது . படிகளின் நடுவே நரசிம்மரின் உருவம் பிரம்மாண்டமாகக் காட்சி அளிக்கிறது. கீழே இறங்கியவுடன் முதலில் இருப்பவர் ஆதிசேஷன், பூமியை தாங்கி பிடித்திருப்பது போன்ற காட்சி கொடுக்கிறார். அதைத் தாண்டி ஒரு யாக குண்டம் உள்ளது. இங்குதான் ஜனமேஜயன் தனது தந்தை பரீட்சித்தின் மரணத்துக்கு பழிவாங்குவதற்காக உல்லாங்க முனிவரின் கூற்றுப்படி சர்ப்ப யாகம் செய்தான். காலபைரவர் நீண்ட நாக்கை நீட்டிக் கொண்டிருக்கிறார். அதிலிருந்து தண்ணீர் கொட்டிக் கொண்டிருக்கிறது. இந்த குகையில் இருந்து பிரியும் ஒரு கிளை குகை கயிலாய மலையை சென்று அடைகிறது என்று புராணங்கள் கூறுகின்றன.


அதன் முன்பாக சிவபெருமான் பாதாள சண்டியுடன் சிம்மத்தின் மேல் மண்டை ஓட்டுடன் தனது சடா முடியை அவிழ்த்து விட்டது போல் குகைக்குள் காட்சி தருகிறார். இந்த சடா முடி மலையின் ஒரு பகுதி வரை தொங்குகிறது. அதிலிருந்து தண்ணீர் கொட்டிக் கொண்டே இருக்கிறது. கீழே பைரவர் முன்பு முப்பத்து முக்கோடி தேவர்கள் வணங்கிக் கொண்டு இருக்கிறார்கள். கருவறையில் உள்ள, இயற்கையின் மூன்று சக்திகளான படைத்தல், காத்தல், அழித்தலை குறிக்கும் வண்ணம் மூன்று லிங்கங்கள் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகும், இதன் மேல் செப்பு கவசம் சாத்தப்பட்டுள்ளது. இந்த லிங்கங்கள் மேல் நீர் கொட்டிக் கொண்டே இருக்கிறது. அடுத்து, கழுத்தில் பாம்பை சுற்றியபடி ஜடாமுடியுடன் சிவன் பார்வதியுடன் சொக்கட்டான்ஆடுவது போல் காட்சி கொடுக்கின்றார்.

பாதாள புவனேஸ்வரரை வழிபட்டு வணங்க, நீண்ட ஆயுள், குறையாத செல்வம், நோய் இல்லாத வாழ்வு, சந்ததி வளர்ச்சி போன்ற பலவித வேண்டுதல்கள் பலிக்கும் என்கிறார்கள். இங்கு சனி பிரதோஷம் மிகவும் விசேஷம். அன்றைய தினம் நந்தி வழிபாட்டில் கலந்துகொள்ள மூதாதையர்கள் அனைவருக்கும் சிவபெருமானே சாந்தி அளித்து காப்பதாகவும் அப்படி சாந்தி அடைந்தவர் மகிழ்ந்து நமக்கு ஆசீர்வாதம் செய்வர் என்பதும் ஐதீகம்.

1720488255155.webp
 

Latest ads

Back
Top