Paba Mochani Ekadasi

இந்த ஏகாதசியின் பெருமையை படித்தாலோ (அ ) கேட்டாலோ ஒருவர் ஆயிரம் பசுக்களை தானம் அளித்த பலனை அடைவார்

பங்குனி மாதம்', (March/April) தேய் பிறையில் (கிருஷ்ண பட்சம்) வரக்கூடிய ஏகாதசியே "பாப மோசனி ஏகாதசி" (Paba Mochani Ekadasi) என்று அழைக்கப் படுகின்றது.

பாப மோச்சனி ஏகாதசி பற்றி 'பவிஷ்ய உத்தர புராண' விளக்கம்:

ஸ்ரீ கிருஷ்ணரிடம், யுதிஷ்டிர மஹராஜ் கேட்கிறார்...ஓ பரந்தாமா, பங்குனி மாதத்தில் தேய் பிறையில் வரக்கூடிய ஏகாதசியின் பெயர் என்ன மற்றும் அதன் மகிமை என்ன என்று விவரியுங்கள் என்று கேட்கிறார்.

ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார், ஓ அரசர்களில் சிறந்தவனே, பங்குனி மாத தேய்பிறையில் வரும் ஏகாதசி 'பாப மோச்சனி ஏகாதசி' என்று அழைக்கப்படும். பாவங்களில் இருந்து விமோச்சனம் அளிப்பதால் அது பாப மோச்சனி ஏகாதசி ஆயிற்று; அதன் பெருமைகளை கூறுகிறேன் கேள் என்று ஸ்ரீ கிருஷ்ணர் கூறியதை நாம் இங்கு விவரிக்கின்றோம்...

இந்த ஏகாதசி விரதத்தினை முறையாக கடைபிடிப்பவர்கள் அனைவரும், தான் செய்த அனைத்து பாவங்களில் இருந்தும் விடுபடுவர், அதன் பின்பு மோக்ஷத்தை அடைவர்.

முன்பு, கந்தர்வர்களின் தலைமை இசை வித்தகனான 'சைத்ரதா' தலைமையில் அனைத்து இசை வல்லுனர்களும் மற்றும் மனதை மயக்கும் நடன மங்கைகளும் ஆடிப்பாடி, ஒரு வனத்தில் இந்திரனை மகிழ்வித்துக் கொண்டிருந்தனர். அந்த வனத்தில் சிறிது தொலைவில் பல்வேறு ரிஷிகளும், முனிவர்களும் தவமிருந்து கொண்டிருந்தனர்.

சிறிது தொலைவில் இருந்த, பல வருடங்கள் தொடர்ந்து தவம் செய்து அற்புத சக்திகளை பெற்ற, பார்ப்பதற்கு மிகவும் இளமையாக இருக்கக்கூடிய 'மேதாவி' எனும் முனிவர் ஒருவரும் அங்கு தவம் செய்து கொண்டிருந்தார்.

நடன மங்கைகளில், மிகவும் அழகு வாய்ந்த 'மஞ்சுகோஷா' எனும் மங்கை காண்போர் அனைவரையும் வசீகரிக்கும் பொலிவு பெற்றவளாக விளங்கினாள். மற்ற அனைத்து நடன மங்கைகளும் தவத்தில் இருக்கும் அந்த முனிவரின் அருகில் செல்லத் தயங்கிய பொழுது 'மஞ்சுகோஷா' மட்டும் அவரது அருகில் செல்ல முயன்றாள்.

இருப்பினும் அவரது மனம் முழுவதும் தவத்திலேயே மூழ்கி இருந்ததால், அவரது அருகில் 'மஞ்சுகோஷா'வும் நெருங்க முடியவில்லை. தவக்கனல் தகித்து கொண்டிருந்தது. இதன் காரணமாக சற்று தொலைவில் இருந்தே, பாடல் பாடி, ஆடல் செய்து நறுமண மலர்களை அவருக்கு அருகில் போட்டு அவரது தவத்தை கலைக்க முயன்றாள். தொடர்ந்து பல்வேறு முயற்சிகளுக்கு பின் தனது கண் திறந்து பார்த்தார் 'மேதாவி'.

அப்பொழுது, தனது தவத்தை கலைத்ததற்கு கோபப்பட வேண்டிய 'மேதாவி' முனிவர் அதற்கு மாறாக தனது கண் முன் நிற்கும் அழகே வடிவான 'மஞ்சுகோஷா' வின் மேல் காதல் கொள்கிறார். அவளை ஒரு நாள் தனது குடிலில் தங்கிவிட்டு செல்லுமாறு கேட்கிறார். அவளும் முனிவருடன் தங்குகிறாள். 'மேதாவி' முனிவர்க்கு காதல் மயக்கம் மற்றும் மோக மயக்கம் வந்ததால், எத்தனை நாட்கள் கடந்தது என்று கூட தெரியாத அளவுக்கு இருந்தார்.

ஆனால், 57 ஆண்டுகள் கடந்து விட்டன. அதனால், மஞ்சுகோஷா தனது இருப்பிடம் செல்ல தீர்மானித்து முனிவரிடம் மீண்டும் விடைபெற முயல்கிறாள். ஆனால், முனிவரோ, நீ வந்து ஒரு நாள் தானே ஆகிறது, அதனால் இன்னும் ஒரு நாள் இருந்து விட்டு செல் என்கிறார்.

அப்பொழுது, மஞ்சுகோஷா சற்று கோபமாக, முனிவரே, நான் வந்து பல வருடங்கள் ஆகிறது, இன்னும் ஒரு நாள் இருக்கச்சொல்லி வற்புறுத்துகிறீர்களே, இது தங்களுக்கே நியாயமா என்று கேட்கிறாள்.?

'மேதாவி' முனிவர்க்கு அதன் பின்னரே தனது சுயநினைவு வருகிறது. அடடா, இத்தனை ஆண்டுகள் மோகத்தின் காரணமாக ஒரு பெண் பின்னால் சுற்றி தனது தவ வலிமையை குறைத்து விட்டோமே என்று வருந்தினார்.

தனது கோபத்தின் காரணமாக 'மஞ்சுகோஷா'-வை, பிசாசாக மாறும்படி சாபம் இடுகிறார்.

மஞ்சுகோஷா தனது நிலையை எடுத்து சொல்லி , தான் மட்டுமே இதற்கு காரணம் அல்ல என்று முனிவரிடம் வேண்டி, தனக்கு கொடுக்கப்பட்ட சாபத்தை போக்க உபாயம் ஒன்றை கூறுங்கள் என்று கேட்கிறாள்.

முனிவரும், சிறிது தியானத்தில் ஆழ்ந்து அதன் பின்னர், ஓ பெண்ணே, பங்குனி மாத கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசி விரதத்தினை முழுவதும் கடைபிடிப்பாயாக, அதன் மூலம் உனக்கு சாப விமோச்சனம் கிடைக்கும் என்று கூறி அவளை விட்டு செல்கிறார்.

அதன் பின்னர், 'மேதாவி' முனிவருக்கு தான் செய்த தவறும் விளங்கிற்று. அதற்கு பிராயச்சித்தம் தேட எண்ணி 'ச்யவன' முனிவரிடம் தான் செய்த தவறை கூறி வருந்தி உபாயம் கேட்க, 'ச்யவன' முனிவரும், 'மேதாவி' முனிவர் மஞ்சுகோஷாவிற்கு கூறிய அதே பங்குனி மாத ஏகாதசி அன்று முழு உபவாசம் இருந்து அன்று இரவு உறங்காமல் பகவான் ஸ்ரீ விஷ்ணு நாமத்தினை கூறி பஜனை செய்து விரதத்தினை கடைபிடிக்கும் படி அறிவுறுத்தினார்.

மஞ்சுகோஷாவும் விரதம் இருந்து தனது பாவம் நீங்கப்பெற்று பிசாசாக பிறக்க இருந்ததை தடுத்து சுக வாழ்வு கிடைக்கப்பெற்றாள்.

அதேபோல், முனிவர் 'மேதாவியும்' ஏகாதசி விரதம் இருந்து தனது பாவம் நீங்கப்பெற்று விஷ்ணுவின் பாத கமலங்களை அடைந்தார்.

இவ்வாறு, பாவங்கள் நீங்கப்பெறும் / பாவங்களுக்கு விமோச்சனம் தரும் ஏகாதசி 'பாப மோச்சனி ஏகாதசி' என்று அழைக்கப்படுகிறது, என்று பவிஷ்ய உத்தர புராணம்' கூறுகிறது.

இந்த ஏகாதசியின் பெருமையை படித்தாலோ (அ ) கேட்டாலோ ஒருவர் ஆயிரம் பசுக்களை தானம் அளித்த பலனை அடைவார்.
 
Back
Top