megam

நிர்மலமான வானில் ஒரு வெண் மேகமும் , ஒரு கரு மேகமும் மிதந்து கொண்டிருந்தன. வெண் மேகம் சற்று மேலாக இருந்தது. '' என்னடி கறுப்பி , சோகமா இருக்க? '' என்று வெண்மேகம் சீண்டியது. '' ஒண்ணுமில்ல'' என்று பதில் சொல்லிசொல்லியது, கரு மேகம். '' என்னைப்பாரடி நான் எவ்ளோ சந்தோஷமா இருக்கேன். ரொம்ப வெண்மையா இருக்கேன், பஞ்சு போல காத்துல வேகமா மிதந்துகிட்டே இருக்கேன். நீ என்னடான்னா கறுப்பா , குண்டா, இருக்க, ரொம்ப மெதுவா நகருரே , பாக்கவே நல்லா இல்ல நீ'' என்று மீண்டும் சீண்டியது. கரு மேகம் ஒன்றும் பேசாமல் மௌனமாய் இருந்தது.



'' அது சரி , நீ எங்க போற '' என்று கேட்டது வெண் மேகம். ''நானா , நான் என்னோட காதலனை பாக்கப்போறேன் '' என்றது கரு மேகம்.'' காதலனா ? ஒனக்கா ? அது யாருடி ? '' என்றது வெண் மேகம். '' அதோ தூரத்தில் தெரிகிறதே , அந்த இமய மலை தான்'' என்றது கரு மேகம். '' அது சரி நீ எங்க போற? என்றது கருப்பு. '' நானா , நான் , அந்த இமய மலைக்கு மேலே இருக்குற சிவ பெருமானை பாக்கப்போறேன் '' என்றது வெண்மை.



காற்று சற்று வேகமாய் வீசியது . வெண்மேகம் பஞ்சுபோல் மேலாக வேகமாய் பறந்து கைலாயத்தை அடைந்தது. கருமேகம் , மெல்ல நகர்ந்து , தன் காதலனாகிய இமய மலையை அடைந்தது. காதலியை கண்ட மகிழ்ச்சியில் , இமயம், தன் காதலியை இறுக தழுவியது.

அதன் சில்லிப்பான தழுவலில் , தன்னை மறந்து உடைந்தது கருமேகம். பெரு மழை பெய்தது. கங்கை பூரித்தாள் , மழை வெள்ளத்தை அள்ளிக்கொண்டு ,பாய்ந்தோடினாள். போகின்ற வழியெங்கும் , பூமித்தாயை , குளிர்வித்தாள் .காவிரியும், கோதாவரியும், கிருஷ்ணாவும் , கரை புரண்ட , மகிழ்ச்சியில் , பூமியை , செழிப்பாக்கினார்கள். அனைத்து உயிரினங்களும் , தாவரங்களும் , மழையில் நனைந்து , ஆனந்த நடனமாடினார்கள் . பூமித்தாய் பூரித்தாள் , இறைவன் மகிழ்ந்தான்.


'' நந்தியே ,என்னைப்பார் , என் அழகைப்பார் ,என் வெண் பனி போன்ற மேனியைப்பார், என்னை உடனே இறைவனிடம் அழைத்துப்போ '' என்றது வெண்மேகம். '' வெண் மேகமே உள்ளே ஒரு இடம் தான் இருந்தது , அதை இறைவன் ஒருவருக்கு கொடுத்துவிட்டான்'' என்றது நந்தி. '' இறைவன் யாருக்கு கொடுத்தான்? ''என்று கோபமாய் கேட்டது பஞ்சு மேகம்..'' கருமேகத்திற்கு '' என்று அமைதியாய் சொன்னது நந்தி. '' என்னது, அந்த விகாரமான கருப்பு மேகத்திற்கா ?. என்னிடம் இல்லாதது என்ன இருந்தது அதனிடம் ''? என்று கத்தியது வெண்மேகம்.



'' அதனிடம் ஈரம் இருந்தது '', என்று அமைதியாய் சொன்ன நந்தி, கண்ணை மூடி தியானத்தில் ஆழ்ந்தது .
 
Back
Top