Cuddalore District Temples-அருள்மிகு தேவநாத பெருமாள் திருக்கோ&#2

Status
Not open for further replies.
Cuddalore District Temples-அருள்மிகு தேவநாத பெருமாள் திருக்கோ&#2

Cuddalore District Temples-அருள்மிகு தேவநாத பெருமாள் திருக்கோயில்

அருள்மிகு தேவநாத பெருமாள் திருக்கோயில், திருவகிந்தபுரம்-607 401, கடலூர் மாவட்டம்.

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

+91 04142 - 287515


T_500_499.jpg



பொது தகவல்:

இங்கு மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் சுத்த சத்வம் எனப்படுகிறது. வைணவ ஆகமப்படி 6 கால பூஜைகள் தினம் நடந்து வருகிறது. திருப்பதிக்கு செல்ல முடியாதவர்கள் இத்தலத்தில் சென்று நேர்த்திகடன் செலுத்தலாம்.

தல வரலாறு:

ஒரு காலத்தில் அகம்பாவம் பிடித்த தேவர்கள் அசுரர்களால் தோற்கடிக்கப்பட்டு விரட்டப்பட்டார்கள். அவர்கள் ஒளஷதாசலத்துக்கு வந்து வணங்க நாரயணன் அவர்களுக்கு உதவுவதாக வாக்களித்தார். அசுரர்கள் பிரம்மனிடம் முறையிட பரமனை துணை கொண்டு யுத்தம் செய்யுங்கள் என்று கூறியனுப்பினார். அசுரர்களுக்கு பக்கபலமாக சிவன் நின்றார். சிவனால் தேவர்கள் தாக்கப்பட்டு அல்லலுறுவதைக் கண்ட நாராயணன் சக்ராயுதத்தை ஏவினார். அசுரர்களை விரட்டிச் சென்று கொன்று குவித்தது.இறுதியில் எல்லோரும் நாராயணனிடம் சரணடைந்தனர்.எல்லாரையும் பகவான் அரவணைத்தார். தாமே மும்மூர்த்தியாகக் காட்சியளிப்பதாகக் கூறிய பகவான் தமது திருமேனியில் பிரமனையும் சிவனையும் காட்டி அனைவரையும் மகிழ்வித்தார்.தேவர்களுக்கு தலைவனாக இருந்தது கொண்டு தேவநாதன் என்ற திருநாமம் உண்டாயிற்று. அங்கேயே ஸ்ரீமந் நாராயணன் நித்ய வாசம் செய்ய இருப்பதை அறிந்த ஆதிசேசன் அங்கு ஒரு நகரத்தை உண்டு பண்ணினான்.அதுதான் திரு அஹீந்த்ர (ஆதிசேஷ) புரம் என பெயர் பெற்று விளங்கியது.


தல சிறப்பு:

இவ்வூர் ஆதிசேஷனால் நிர்மாணிக்கப்பட்ட தலம்.அருகில் உள்ள மலை பிரம்மா தவம் செய்த இடம். அதனால் பிரம்மாச்சலம் என்றும் பெயர் பெற்றது. கருடன் கொண்டு வந்த நதி கருடநதி என்றழைக்கப்பட்டு அருகில் ஓடுகிறது.தெற்கிலிருந்து வடக்கு நோக்கி பாய்வதால் இந்த நதியில் குளித்தால் கங்கை நதியில் குளித்த புண்ணியம் உண்டாகும்.ரிஷியினுடைய சாபத்தால் இன்றும் இந்த நதியின் தீர்த்தம் மழைக்காலத்தில் ரத்தம் போல் சிவப்பாக ஓடுகிறது. பொதுவாக பெருமாள் கோயில்களில் லட்சுமி நரசிம்மர் சன்னதியில் நரசிம்மர் லட்சுமியை இடதுமடியில் அமரவைத்திருப்பார். ஆனால் இத்தலத்தில் நரசிம்மர் தனது வலது தொடையின்மீது அமரவைத்து அருள்பாலிப்பது இத்தலத்தின் சிறப்பம்சமாகும்.

இலங்கைக்கு சஞ்சீவி பர்வதத்தை எடுத்துச் சென்றபோது அனுமானின் கையில் இருந்த சஞ்சீவி மலையிலிருந்து சிறிதளவு சரிந்து இந்த மலையில் விழுந்ததனால் இது ஒளஷாதாசலம் என்ற பெயரை உறுதிப்படுத்திக் கொண்டதாம். உடற்பிணிகளை போக்கும் ஒளஷதிகள் இங்கே காணப்படுகின்றன. அந்த மலையில் லட்சுமி ஹயக்ரீவர் எழுந்தருளியுள்ளார்.வேதாந்த தேசிகன் இங்குள்ள ஒளஷதாசலத்தில் தவம் புரிந்து ஹயக்ரீவனையும் கருடனையும் கண்டு வரம் பெற்றார்.ஹயக்ரீவனுக்கு உலகிலேயே இவ்வூரில்தான் முதன்முதலில் கோயில் ஏற்பட்டது.பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 42 வது திவ்ய தேசம்.


தலபெருமை:

பெருமாளுக்கு தீர்த்த தாகம் ஏற்பட்டபோது அங்கிருந்த கருடாழ்வாரிடம் தீர்த்தம் கொண்டு வரப் பணித்தார். அவர் எடுத்து வர தாமதம் ஆனதால் ஆதிசேஷனிடம் சொல்லி தன் வாலால் அடித்து பெருமாளுக்கு தீர்த்தம் தந்தார். அதனால் அதற்கு சேஷ தீர்த்தம் என்று பெயர் வந்தது. இது ஒரு பிரார்த்தனை கிணறு ஆகும். இது கோயிலின் உள்ளே தெற்கு பிரகாரத்தில் உள்ளது. இதில் உப்பு மிளகு வெல்லம் போட்டு பிரார்த்தனை செய்தால் வியாதிகள் குணமாகும். கட்டி,பால் உண்ணி ஆகியவை மறையும். சர்ப்ப தோசம் உள்ளவர்கள் இங்குள்ள சர்ப்பத்தை வழிபட்டால் தோசம் நீங்கும்.
இவ்வூர் ஆதிசேஷனால் நிர்மாணிக்கப்பட்ட தலம். அருகில் உள்ள மலை பிரம்மா தவம் செய்த இடம். அதனால் பிரம்மாச்சலம் என்றும் பெயர் பெற்றது. ஆதிசேஷனால் நிர்மாணிக்கப்பட்ட கிணறு இன்றும் கோயிலில் உள்ளது.

பிரம்மா, சிவன், இந்திரன், பூமாதேவி, பிருகு , மார்க்கண்டேயர் முதலானோர் தவம் செய்த தலம்.
இத்தலம் நடு நாட்டு திவ்ய தேசங்களில் மிகவும் சிறப்பு பெற்றது.

கலியனாலும் நிகமாந்த மகா தேசிகனாலும் பாடப்பெற்றுள்ளது.

வேதாந்த தேசிகன் இவ்வூரில் சுமார் 40 ஆண்டுகள் வசித்து வந்தார். அநேக நூல்களை எழுதினார். அவர் எழுந்தருளிய இடம் ஸ்ரீ தேசிகன் திருமாளிகை என்ற பெயரோடு இன்றும் விளங்குகிறது.

வேதாந்த தேசிகன் தன் திருக்கரங்களாலேயே கட்டிய கிணற்றையும் இந்த ஊரில் காணலாம்.
தேசிகன் பெருமாளை நாயகா நாயகி பாவத்தில் (பெருமாள் - நாயகன் தேசிகன் - நாயகி) அனுபவித்து வழிபட்டுள்ளார்.

தன் விக்ரத்தை தானே செய்து கொண்ட தேசிகரது விக்ரகம் இன்னும் இத்தலத்தில் உள்ளது.
யுகம் கண்ட பெருமாள் என்று போற்றப்படுகின்றார்.

பாடியவர்கள்:


மங்களாசாசனம்

திருமங்கையாழ்வார்

மூவராகிய ஒருவனை மூவுல குண்டு உமிழ்ந் தளந்தானை தேவர் தானவர் சென்று சென்றிறைஞ்சத் தண் திருவயிந்திர புரத்து மேவு சோதியை வேல் வலவன் கலிகன்றி விரித்துரைத்த பாவு தண் டமிழ்ப் பத்திவை பாடிட பாவங்கள் பயிலாவே.

-திருமங்கையாழ்வார்


திருவிழா:

சித்திரை மாதம் - தேவநாதபெருமாள் பிரம்மோற்சவம் -10 நாட்கள் திருவிழா 5 ம் நாள் இரவு கருடசேவை - 9ம் நாள் தேர் தீர்த்தவாரி விடையாற்றி - அன்று மட்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடுவார்கள். வைகாசி விசாகம் - வைகாசி விசாகம் நம்மாழ்வார் சாத்து முறை 10 நாள் (உற்சவம்) பெருமாள் வசந்த உற்சவம் -10 நாள் (பௌர்ணமி சாத்து முறை) நரசிம்ம ஜெயந்தி ஆடி அமாவாசை, ஆடிபூர உற்சவம், ஆவணி பவித்ர உற்சவம், கிருஷ்ண ஜெயந்தி உற்சவம், புரட்டாசி மகா தேசிகன் பிரம்மோற்சவம், ஐப்பசி தீபாவளிப் பண்டிகை முதலாழ்வார்கள் உற்சவம், திருக்கார்த்திகை உற்சவம், மார்கழி அனுமத் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, போகி, ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம், தைமாதம் மகரசங்கராந்தி, பங்குனி ஸ்ரீ ராம நவமி உற்சவம் ஆகியவை முக்கியமான விழா நாட்கள் ஆகும்.





பிரார்த்தனை

தேவநாத பெருமாளை வணங்குவோர் பெரிய பதவி, நிலைத்த செல்வம், மக்கட்பேறு , நோயற்ற வாழ்வு, நீண்ட ஆயுள் ஆகியவற்றை பெறுவார்கள். கோயிலுக்குள் உள்ள கிணற்றில் உப்பு, வெல்லம், மிளகு, பால் இவற்றை பிரார்த்தனையாக சேர்ப்பது சர்வரோக நிவாரணம் அளிக்கும். குரு, ராகு, கேது தோசம் உள்ளவர்கள் இங்கு வணங்கினால் அத்தகைய தோசம் நிவர்த்தி ஆகும்.

தங்கள் பிரார்த்தனை நிறைவேறப்பெற்ற பக்தர்கள் பெருமாளுக்கு துளசி மாலை சாத்துகிறார்கள். நெய்தீபம் ஏற்றுகிறார்கள். முடிகாணிக்கை நேர்த்திகடனும் செய்கிறார்கள்.மாவிளக்கு போடுகிறார்கள்.இவை தவிர சுவாமிக்கு திருமஞ்சனம் செய்தல், உலர்ந்த தூய வெள்ளாடை சாத்துதல் அபிசேக ஆராதனைகள் செய்கிறார்கள்.பிரசாதம் செய்து சுவாமிக்கு நைவேத்தியம் செய்து விட்டு பக்தர்களுக்கு தருகிறார்கள். வசதி படைத்தோர் அன்னதானம் செய்கிறார்கள்.

இருப்பிடம் :
கடலூரிலிருந்து பண்ருட்டி செல்லும் வழியில் திருவகிந்திபுரம் உள்ளது. பாண்டிச்சேரியிலிருந்து 25 கி.மீ தூரத்திலும், கடலூரிலிருந்து 3 கி.மீ. தூரத்திலும் திருவகிந்திபுரம் உள்ளது.

அருகிலுள்ள ரயில் நிலையம் :
திருப்பாதிரிப்புலியூர்

அருகிலுள்ள விமான நிலையம் :
சென்னை

தங்கும் வசதி :
கடலூர்



Devanatha Perumal Temple : Devanatha Perumal Devanatha Perumal Temple Details | Devanatha Perumal - Thiruvaheendrapuram | Tamilnadu Temple | ?????? ????????
 
Status
Not open for further replies.
Back
Top