• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Andal Avatharam

ஸ்ரீ:
ஆடி ஆனந்தம்--ஆண்டாள்
திருநட்சித்திரம்(பதிவு 26)


ஆண்டாள் அவதாரத்தைக் கொண்டாடும்
மணவாள மாமுனிகள்:

மாமுனிகள் 'உபதேச ரத்தினமாலை'யில் ஆழ்வார்,ஆசார்யர்களைப் பற்றி 74 பாசுரங்கள் பாடியுள்ளார்.அவற்றுள் 3 பாசுரங்கள் ஆண்டாளைப் போற்றிப் பாடியுள்ளார்.

1."இன்றோ திருவாடிப்பூரம், எமக்காக வன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள்;
குன்றாத வாழ்வான வைகுந்த வான்போகம், தன்னை இழந்து ஆழ்வார் திருமகளாராய்!!"
(உபதேச ரத்தின மாலை-22)

இன்றோ திருஆடிப்பூரம்:
✡✡✡✡✡✡✡✡
ஆடிமாதமும்,பூரநட்சத்திரமும்
ஆண்டாள் அவதாரத்தால் ஏற்றம் பெற்றன.இப்படிப்பட்ட நல்லநாள் அமைந்தது இப்பூவுலகோர் பெற்ற பேறன்றோ?

எமக்காகவன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் !!

பெற்ற குழந்தை கிணற்றில் தவறி விழுந்து விட்டால்,உடனே தாய் கிணற்றில் குதித்து குழந்தையைக் காப்பாற்றுவது போல,("கூபத்தில் வீழுங் குழவியுடன் குதித்து அவ்ஆபத்தை நீக்கும் அந்த அன்னையைப் போல்") இருள் தருமா ஞாலத்திலே,மருள் கொண்டு உழன்று கொண்டிருக்கும் ஜீவாத்மாக்களாகிய நம்மை நல்வழிப்
படுத்தி உய்விப்பதற்காக அன்றோ,
சர்வலோக ஜநநியான ஆண்டாள் நம் போன்ற மானுடப் பிறவி எடுத்து இங்கு அவதரித்தாள்.

குன்றாத வாழ்வான வைகுந்த வான்போகம் தன்னை இழந்து:

ஒன்றும் குறையில்லாத, நிறைகளே பூரணமாக உள்ள ஸ்ரீவைகுண்டத்தின், போகமான பெருவாழ்வை விட்டு, ஒரு மானிடராகத் தோன்றிய நீர்மை/சீர்மை
யைப் போற்றுகிறார். "மஹாராணியாய் இருப்பவர், மகாராஜாவின் பூம்படுக்கை
யையும குழந்தையினுடைய தொட்டிலை
யும் பற்றிக்கொண்டு கிடந்து நோக்கும் போலே,பூதேவியும் நித்யவிபூதியில்,
நிரதசிய அர்த்தத்தை நெகிழ்ந்து,இங்கே அவதரித்ததது"

பகவானும் நாம் உஜ்ஜீவனம் அடையவே, குன்றாத வைகுந்த போகத்தை விட்டு, இங்கே ஸ்ரீகிருஷ்ணராக அவதரித்து பகவத் கீதை உபதேசித்தார். ஆனால் அவர் கீதையை ஓர் உயர்ந்த நிலையில் இருந்து, அதுவும் தேவபாஷையான வடமொழியில் உரைத்ததால்,
அவர் நோக்கம் நிறைவேற வில்லை.

எனவே ஸ்ரீபூதேவிப்பிராட்டியார் தாமே அவதாரம் செய்வோம் என்று சங்கல் பித்து ஆண்டாள் நாச்சியாராக அவதரித்தார்.
நெஞ்சை அள்ளும்,தெள்ளு தமிழில் "வேதம் அனைத்துக்கும் வித்தாக" "திருப்பாவையையும்"பக்தி பாவத்தைப் பறை சாற்றும் "நாச்சியார்திருமொழி"
யையும் அருளிச் செய்தார்.

ஆழ்வார் திருமகளாராய்:

"ஒரு மகள் தன்னை உடையேன், உலகம் நிறைந்த புகழால் திருமகள் போல வளர்த்தேன்" என்று பெரியாழ்வார் பாடியபடி. பெண்பிள்ளையாகப் பிறந்தாலும்,ஒரு இடைப் பெண்ணாகத் தம்மை உருவகப்படுத்திப் பாடியதால், ஆண்டாள் பாசுரங்கள் மிக எளிதாக சாதாரண மக்களையும் சென்றடைந்தன--
"கோதை தமிழ் ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை வையம் சுமப்பதுவும் வம்பு" என்னும் அளவுக்கு!!

2."பெரியாழ்வார்பெண்பிள்ளையாய்,
ஆண்டாள் பிறந்த திருவாடிப்பூரத்தின்
சீர்மை ஒரு நாளைக்குண்டோ மனமே !
உணர்ந்து பார்.ஆண்டாளுக்கு உண்டாகில், ஒப்பிதற்கும் உண்டு"(உ.ர.மாலை 23)


இப்பாசுரத்தில் மேலும் ஸ்பஷ்டமாக ஆண்டாள் பிறந்ததால் தான் ஆடி மாதம்,பூர நட்சத்திரம் சீர்மை பெற்றது என்கிறார்.இந்த நாளுக்கு ஒப்பதோர் வேறு நாளே இல்லை என்று அறுதி யிடுகிறார்.இந்தக் கருத்தை வலியுறுத்த ஆண்டாளுக்கு ஒப்பானவர் யாரேனும் இருந்தால்,இந்த திருஆடிப் பூரத்திற்கும் ஒப்பான நாள் இருக்குமா என்று பார்க்கலாம் என்கிறார்.ஆண்டாளின் பெருமையும்,எளிமையும், கருணையும் உள்ளவர் யாரேனும் உண்டா? இல்லையே!எனவே ஆடிப்பூரத்துக்கும் ஒப்பில்லை.

பெரியாழ்வார் பெண் பிள்ளையாய்:

திருமாலை கட்டும் கைங்கர்யம் செய்து வந்த பெரியாழ்வார்,திருத்துழாய் நந்த வனத்தில் கண்டெடுத்த பச்சிளங் குழந்தையை எடுத்துக் கொண்டு போய்,
தம் தேவியர் கையிலே கொடுத்தார்.
அவரும் தம் வயிற்றில் பிறக்காத ஒரு குழந்தையாயினும், மிகுந்த பாசத்துடன் எடுத்து அணைத்துக் கொஞ்ச,
அவருக்குத் தாய்ப்பால் சுரந்ததாம் !! இவ்வாறாக பெரியாழ்வார்
பெண்பிள்ளையாய் அவதரித்தது மெய்ப்பாடாகிறது.ஆண்டாள் வாழித் திருநாமத்திலும்,"பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே"என்றிருப்பது.

ஆண்டாள் பிறந்த:

பூமா தேவியே இந்தப் பூமியில் பிறந்தது;
உலகுடைய நாச்சியாரே உலகத்தில் வந்து அவதரித்தது.
ஆண்டாளும்,"நானும் பிறந்தது பொய்யன்றே"(நாச்.திரு 10-4)
என்று பாடியிருக்கிறாள்.

திருவாடிப் பூரத்தின் சீர்மை:
( முதல் பாசுரத்தில் சொன்னபடி)

சீர்மை ஒரு நாளைக்கு உண்டோ மனமே, உணர்ந்து பார்!

ஆண்டாள் பிறந்ததால் ஏற்றம் பெற்ற, திருவாடிப்பூர நந்நாளுக்கு இணையாக வேறொரு நாள் உண்டோ? மாமுனிகள் மற்ற ஆழ்வார்கள் அவதரித்த திருநட்சித்திர நாட்களை மற்ற பாசுரங்களில் கொண்டாடுகிறார்.இந்த நாளை அந்த நாட்களோடு ஒப்பிட்டால், இதன் சீர்மை அவற்றுக்கு உண்டோ என்பதாம்.

ஆண்டாளுக்கு உண்டாகில்,ஒப்பு இதற்கும் உண்டு:

சர்வலோக நிர்வாகிகையான ஆண்டாளுக்கு ஒப்புவமை உண்டாகில் இந்த நாளுக்கும் ஒப்புண்டு.
ஆண்டாளுக்கு ஒப்பு இல்லாததால் இந்த திருநாளுக்கும் ஒப்பில்லை!!
ஆண்டாளுக்கு ஒப்பில்லை என்பதை முதல் பாசுரத்திலும்,அடுத்த(மூன்றாவது) பாசுரத்திலும் தெளியச் சொல்கிறார்.

3."அஞ்சுகுடிக்கு ஓர் சந்ததியாய்,
ஆழ்வார்கள் தம் செயலை,
விஞ்சி நிற்கும் தன்மையளாய்,
பிஞ்சாய்ப் பழுத்தாளை, ஆண்டாளை,
பக்தியுடன் நாளும் வழுத்தாய்
மனமே மகிழ்ந்து!!" (உ.ர.மாலை 23)


சென்ற பாசுரத்தில் உரைத்த 'ஆண்டாளுக்கு ஒப்பில்லை' என்னும் கருத்தை இங்கு நிலைநாட்டுகிறார்.

"அஞ்சுகுடிக்கு ஒரு சந்ததியாய்"

1.'அஞ்சுகுடி' என்பது அஞ்சும் குடி என்பதின் திரிபு. குன்றாத வாழ்வான வைகுந்த வான் போகத்தை விடுத்து,
நம்மை நல்வழிப்படுத்த,உஜ்ஜீவிக்க,
பரமாத்மா ஸ்ரீமந்நாராயணன்
இந்த இருள்தரு மாஞாலத்தில், விபவ,அர்ச்சைஅவதாரங்களை எடுத்ததால் அவருக்கு ஏதேனும் அபச்சாரம்,துன்பம் விளையுமோ
என்று அஞ்சுகிறார்கள் ஆழ்வார்கள்.
அவர் சர்வயக்ஞர்,சர்வசக்தர்;அவருக்கு யாராலும் எந்தத் தீங்கும் இழைக்க முடியாது என்று அறிந்திருந்தும் பொங்கும் பரிவால்/பக்திப்பெருக்கால் அஞ்சுகின்றனர். மேலும் இந்த லெளகீக உலகில் வாழ்வதே அவர்கள் அஞ்சும் நிகழ்வாக இருந்தது. ஆண்டாளின் திருத்தகப்பனார் பெரியாழ்வாருக்கு, மதுரையில் பெருமாள் பிரத்யட்சமாகிக் கடாக்ஷித்த போது, பெருமாளுக்கு ஏதேனும் தீங்கு நேர்ந்து விடுமோ என்று அஞ்சிய பெரியாழ்வார், பொங்கும் பரிவால் ''பல்லாண்டு,பல்லாண்டு,பல்லாயிரத்தாண்டு,பலகோடி நூறாயிரம்"என்று பாடி மங்களாசாசனம் செய்தார். மற்ற ஆழ்வார்களும் இந்த 'அஞ்சும்' நிலையில் பாசுரங்கள் பாடியுள்ளார்கள். அஞ்சு(ம்) குடியின் சந்ததியான கோதையும்,
"சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து... மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு" என்றெல்லாம் கண்ணனைப் பாடினாலும், கண்ணன் சீரிய சிங்காசனத்திலே எழுந்தருளிய பின்
"அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி"என்று தொடங்கி ஐந்து போற்றிகள் பாடி மங்களாசாசனம் செய்கிறார்.

2.ஆண்டாளுக்கு முன்னால் அவதரித்த ஆழ்வார்களை ஐந்து வகையாகப் பிரிக்கலாம்:
1,அயோனிஜர்களான (தாய் வயிற்றில் பிறக்காத) முதல் ஆழ்வார்கள் மூவர்.
2.திருமழிசை ஆழ்வார்.
3.நம்மாழ்வார்.
4.பெரியாழ்வார்.
5.குலசேகராழ்வார்.

இந்த அஞ்சு வகை ஆழ்வார்களின் சந்ததி ஆண்டாள் ( மதுரகவியாழ்வாரையும் நம்மாழ்வாரோடு சேர்த்துக் கொள்ளலாம்)

3.ஆழ்வார்கள்பதின்மர்களையும் எடுத்துக் கொண்டாலும் அவர்கள் அனைவருமே அஞ்சி மங்களாசாசனம் செய்த அஞ்சும் குடியைச் சேர்ந்தவர்களே.

மேலும் இவர்களை வேறொரு விதமாகவும் அஞ்சு வகையாகப் பார்க்கலாம்:
1.அயோனிஜர்கள் -முதலாழ்வார்கள்
2.பிறந்தவுடன் பெற்றோரை விட்டுச் சென்றிருந்த நம்மாழ்வார் &
திருமழிசை ஆழ்வார்.
3.பூமாலை சூட்டி,பாமாலையும் பாடிய ஆழ்வார்கள்: பெரியாழ்வார்,தொண்டர்
அடிப்பொடியாழ்வார்.
4.ராஜாவாக அரசாண்டு, ஆழ்வாராகமாறி,அருளிச்செயல்புரிந்தவர்கள்:
குலசேகராழ்வார்,திருமங்கையாழ்வார்.
5.திருப்பாணாழ்வார்.

இந்த அஞ்சுகுடிகளான ஆழ்வார்களின் ஒரே புதல்வியான ஆண்டாள் அவதாரத்தால்," ப்ரஜ்யா பித்ருப்ய:"என்று வேதத்தில் ஓதப்பட்ட கடனும், ஆழ்வார்களுக்கு ஆண்டாளால் தீர்ந்தது.

"பாண்டவர்கள் ஐவருக்கும் பரீக்ஷித் ஒருவனே சந்தான பீஜமானாற் போலே, ஆண்டாளும் ப்ரபந்ந குலரான ஆழ்வார்கள் பதின்மருக்கும், திருமகளாம் படியான ஒருமகளாயிருக்கை;
ஆண்டாள் ஞானஸந்தான ப்ரஸூதை யாகையாலே'குலமகள் கோதை'என்றே கூறி வைத்தார்கள்",
ஆழ்வார்கள் பதின்மரின் பக்தியையும் ஆண்டாள் ஸ்திரீதனமாகப் பெற்றார்!!

"ஆழ்வார்கள் தம் செயலை, விஞ்சிநிற்கும் தன்மையளாய்"

ஞானம்,பக்தி,வைராக்யத்தில் மற்ற ஆழ்வார்களை விட உயர்ந்து நின்றார் ஆண்டாள்.இப்பூவுலகில் உள்ளோரை உய்விக்க, ஆழ்வார்களை அனுப்பினார் பரமாத்மா. ஆனால் அவர்கள் எம்பெருமானின் கல்யாண குணங்களில் வியந்து உகந்து மயங்கி விட்டனர்.
பெருமான் அவர்களை மயக்க/உறக்கத்தி
லிருந்து எழுப்ப வேண்டியதாயிற்று. ஆனால் ஆண்டாளின் சொரூபத்தையும்/சொல்லையும் கண்டு எம்பெருமானே வியந்து மயங்கி நின்றார்.ஆண்டாள் அவரைத் தட்டி எழுப்ப வேண்டியதாயிற்று (துயிலெழாய்,அறிவுராய்,தத்துவமன்று தகவேல், பொருள் கேளாய்,இற்றைப் பறை கொள்வான்,அன்றுகாண்).

மற்ற ஆழ்வார்கள் எம்பெருமானை அடையும் பக்திப் பரவசத்தால் பெண் தன்மை ஏற்று (தலைவி,தோழி,தாய்) பாடினார்கள். ஆனால் ஆண்டாள் இயற்கையாகவே பெண்ணாக இருந்ததால் அவரால் பரமன் மேலிருந்த பக்தியை/அன்பை மிக இயற்கையாகப் பாட முடிந்தது

பிஞ்சாய்ப் பழுத்தாளாய்:

ஒரு கனி பழுத்துக் கனியாகும்முன் பூத்து,
இளம்பிஞ்சாகி,காயாகி பின்னரே கனியாகும். ஆழ்வார்களும் தங்கள் வழிபாட்டில் பரபக்தி,பரஞானம்
என்று பயணித்து இறுதியில் பரமபக்தி
யை அடைந்தனர். ஆனால் ஆண்டாள் மிகச் சிறு பிராயத்திலேயே-அறிவு நடையாடாத பருவத்திலேயே- ஞானம் கனிந்து, நலம் பெற்று, பரம பக்தியை வெளிக்காட்டினார்.

மற்ற ஆழ்வார்கள் திருமால் பக்தியையே பெரிதும் பாடினார்கள்.திருமால் அடியார்களை-பாகவதர்களைப் போற்றும் பாசுரங்கள் முதன்மையாக இடம் பெறவில்லை.நம்மாழ்வார்
திருவாய்மொழி 8 ஆம் பத்து,
10 ஆம் பதிகத்தில் தான்--நெடுமாற்கடிமை செய்வேன்--
திருமால் அடியார்களை,
"அடியார்,தம் அடியார்,அடியார், அடியார் எம் கோக்கள்" என்று பூசிக்கிறார். திருமங்கை ஆழ்வாரும் பெரிய திருமொழி 7ஆம்பத்து -4 ஆம் பதிகத்தில் தான்--கண்சோர வெங்குறுதி வந்திழிய--"எம்பெருமான் தாள் தொழுவாரை"ப் போற்றுகிறார். "தண்சேறை எம்பெருமான் தாளை, நாளும் சிந்திப்பார்க்கு என்னுள்ளம் தேனூறி எப்பொழுதும் தித்திக்குமே" என்கிறார்.
ஆனால் ஆண்டாள் அவரது முதல் பாசுரத்திலேயே-"நீராடப் போதுவீர், போதுமினோ" ,"எல்லாரும் போந்தாரோ"
என்று அடியார்களை(கோபிகைகள்) முன்னிட்டே நாராயணனைப் போற்றுகிறார்.திருப்பாவை 6 ஆம் பாசுரத்திலிருந்து 15 ஆம் பாசுரம் வரை ஒவ்வொரு அடியாரின்-பக்தை/கோபிகையின் புகழ்பாடியே கணணன் புகழ் பாடுகிறார்.

ஆண்டாளை பக்தியுடன் நாளும் வழுத்தாய் மனமே மகிழ்ந்து:

இப்படி பரிபக்குவமுடைய,உயர்ந்த குணங்கள் எல்லாம் ஒருங்கே கொண்டு திகழும் ஆண்டாள் பகவத் விஷ்யத்தில் கண்ணழிவற்ற பக்த்யாதிகளை உடையவராய் இருப்பது போலே,நீயும் பக்தியுடன் அநுதினமும்,
"கோதாதஸ்யை நம இதமிதம் பூயயேவாஸ்து பூய:" என்றும், "வலமார்பினில் வாழும் மங்கையும் பல்லாண்டு" என்றும் சேவித்திரு என்று
தம் மனதிடம் சொல்கிறார்.தம் மனதிடம் சொல்வதாக நம் அனைவருக்கும் சொல்கிறார்.

(-அடியேன் பார்த்தசாரதி ராமாநுஜ தாசன்)

படங்கள்:
1-3:ஆண்டாள் அவதார மண்டபம்,
ஸ்ரீவில்லிபுத்தூர்,(துளசி மாலை இருக்கும் வட்டமேடை தான் ஆண்டாள் அவதரித்த இடம்).
4.நமக்காக அவதரித்த ஆண்டாள்.
5,6:ஆடிப்பூரத்தன்று நடைபெறும் ஸ்ரீவில்லிபுத்தூர் திருத்தேர் உற்சவம்.
7:மணவாள மாமுனிகள்,
ஸ்ரீவில்லிபுத்தூர்.

1628745014059.png
 

Latest ads

Back
Top