• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

ஸ்ரீ மகாலட்சுமி அஷ்டோத்திர நாமாவளி – தமிழ் அர்த்தமுடன்

praveen

Life is a dream
Staff member
ஸ்ரீ மகாலட்சுமி அஷ்டோத்திர நாமாவளி – தமிழ் அர்த்தமுடன் இன்று 6/2/2019 புதன்கிழமை அன்று பதிவு செய்துள்ளோம். அஷ்ட ஐஸ்வர்யங்களையும் அள்ளி வழங்குபவள் அன்னை மகாலட்சுமி நமக்கு சகல ஐஸ்வரியங்களும் க்ஷேம லாபங்களையும் தர வேண்டுமென்று பிரார்த்தித்து பதிவு செய்கின்றோம்.

ஓம் ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயார் திருவடிகள் சரணம்

குபேரனுடன் தொடர்புகொண்ட எட்டு செல்வக் கருவூலங்களுக்கும் தலைமைத் தெய்வமாகத் திகழ்பவள் அன்னை மகாலட்சுமி. இதனை மார்க்கண்டேய புராணம் தெளிவுற விளக்குகிறது.

லட்சுமிகள் எட்டு, அதனையே ‘அஷ்ட லட்சுமிகள்’ எனறு அழைக்கின்றோம். செல்வம், ஞானம், உணவு, மனவுறுதி, புகழ், வீரம், நல்ல புதல்வர்கள், விரும்பியதை விரைவாக முடிக்கும் ஆற்றல் இவையே அந்த அஷ்ட ஐஸ்வரியங்களாகும். இந்த அஷ்ட ஐஸ்வரியங்களையும் ஒருவனால் பெற முடியும். அதற்கு அந்தத் திருமகளின் அருட்கடாட்சம் இருக்க வேண்டும். அன்னை மகாலட்சுமியின் கடைக்கண் பார்வை ஒன்று மட்டுமே இதற்கு போதுமானது.

ஆலய வழிபாடும் அப்பழுக்கில்லாத அழகிய (உருவம் அல்ல) உள்ளம் கொண்ட எவரும் திருமகளின் திருவருளை எளிதில் பெற்றுவிடலாம்.
ஆலயங்களில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் அன்னை மகா லட்சுமியை ஆலயங்களுக்கு சென்று வணங்கி வழிபடலாம். ஸ்ரீசூக்தம், கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி அஷ்டோத்திரம் என துதிப்பாடல்களை பாடியும் தியானித்து அன்னை மகாலட்சுமியை வணங்கி வழிபடலாம்.

தேவியின் துதிப்பாடல்களுள் ஆதிசங்கரர் பாடிய கனகதாரா தோத்திரமும் பராசரப்பட்டர் இயற்றிய ஸ்ரீ குணரத்ன கோசமும் மகிமை பெற்றவை. இயலாதவர்கள் வீடுகளில் திருக்கேற்றி வைத்து தீபச் சுடரையே மகாலட்சுமியாகக் கருதி வழிபடலாம்.
லட்சுமி விரதங்கள் மகாலட்சுமிக்கு உரிய விரதங்களுள் மிகவும் முக்கியமான விரதம் வரலட்சுமி நோன்பு விரதமாகும். இது போன்றே ஆவணி மாத வளர்பிறை அஷ்டமியும் லட்சுமிக்கு உரிய நன்னாளாகும். ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை பஞ்சமியை ‘மகாலட்சுமி பஞ்சமி’ என்று அழைப்பர். அன்று முதல் நான்கு நாட்களுக்கு விரதம் இருப்பது சாலச் சிறந்தது.

இதேபோன்று கார்த்திகை மாதத்தில் வரும் பஞ்சமியை ‘ஸ்ரீ பஞ்சமி’ என்று அழைப்பார்கள். அன்றும் மகாலட்சுமியை மனமுருகி வணங்கி அம்பாளின் அருட்கடாட்சத்தைப் பெறலாம்.

வாசலில் மாக்கோலமிடுவது ஏன்?

மகாலட்சுமி என்றென்றும் நம்மோடு இருந்து நல்லருள் புரியவும் நம்மை விட்டு நீங்காதிருக்கவுமே ஆகும். தினமும் அதிகாலையில் எழுந்து நீராடி வாசலில் மாக்கோலமிட்டு மகாலட்சுமியை நம் இல்லங்களுக்கு வரவேற்க வேண்டும். அதேபோன்று வீட்டின் தலைவாயிலைத் துடைத்து படியில் கோலமிட்டு இரண்டு புறமும் பூக்களை வைத்து மகாலட்சுமியை நினைத்து போற்றி பூஜிக்க வேண்டும்.
மகாலட்சுமி வீட்டு வாயில்களில் ஐந்து வடிவங்களில் வீற்றிருந்து அருள் பாலிக்கின்றாள். ஆகவே தினமும் வீட்டு வாயிலைத் துப்புரவு செய்து கோலமிடுவதாலும் மாவிலைத் தோரணம், மாலைகள், வாழைகள் கட்டுவதால் லட்சுமி தேவி மிகவும் மகிழ்ச்சியுறுவாள்.
சந்தனம், பன்னீர் மங்கள நிகழ்வுகளில் கலந்துகொள்ள வருகை தரும் அனைவரையும் பன்னீர் தெளித்து சந்தனத் திலகமிட்டு மலர்களை மனதார கொடுத்து முகத்தில் புன்னகை ததும்ப வரவேற்க வேண்டும். சந்தனம் திருமகளோடு அவதரித்து ஐந்து மரங்களில் ஒன்றாகும். அவரை யானை துதிக்கையால் நீராட்டுவதை பன்னீர் தெளிக்கும் நியதி குறிக்கிறது. இதனால் லட்சுமி தேவி அந்த சுப கைங்கரியத்தை வாழ்த்துவதாக ஐதீகம்.

குலத்தைக் காப்பது குல தெய்வங்களேயாகும். ஆண்டுக்கு ஒருமுறையாவது குலதெய்வங்களை வழிபட வேண்டும். இவ்வாறு வழிபட்டு வருவதால் வீட்டில் லட்சுமி கடாட்சம் மேலோங்கும்.

பூஜிக்கத் தகுந்த மகா பாக்கியம் உள்ளவர்களாகவும் தூய்மை உள்ளவர்களாகவும் விளங்குபவர்கள் நம் இல்லப் பெண்மணிகள். இவர்கள் கிரக லட்சுமியாகத் திகழ்பவர்கள்.

ஆகவே இல்லப் பெண்மணிகளை தீயச் சொல் கூறி திட்டுவதோ அல்லது அப்பெண்கள் பிறரை திட்டுவதோ கூடாது. பக்தியுடன் தெய்வீகமாக பெண்கள் திகழும் இல்லத்தில் திருமகள் நிரந்தரமாக குடிகொண்டு வசிப்பாள். தினமும் காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் விளக்கேற்றி வழிபடுவதால் நம் உள்ளங்களில் மகிழ்ச்சி பொங்கும். இல்லங்களில் செல்வம் பெருகும்.

குங்குமம் குங்குமம் லட்சுமி கடாட்சம் மிக்கது. பெண்கள் குங்குமம் இடுவதால் மகாலட்சுமியின் நீங்காத அருளைப் பெறுகிறார்கள்.
குங்குமத்தை மோதிர விரலால் தான் இடவேண்டும். சிவப்பு நிற குங்குமமே புனிதமானது. பிற வண்ணங்களில் குங்குமம் இடலாகாது.
மாங்கல்யம், நெற்றி, தலைவகிடின் ஆரம்பம் ஆகிய மூன்று இடங்களிலும் ஸ்ரீ லக்ஷ்மிதேவி உறைகின்றாள். இந்த மூன்று இடங்களிலும் குங்குமத்தை இடுவதே உத்தமமானது.

கோயிலில் குங்குமத்தைப் பெறுகையில் வலக்கையில் வாங்கி இடக்கைக்கு மாற்றலாகாது. வலது உள்ளங்கையில் குங்குமத்தைப் பெற்று அந்நிலையிலேயே வலது மோதிர விரலை வளைத்து, குங்குமத்தைத் தொட்டு நெற்றிக்கு இடும் புனிதமான முறையினால் தான் குங்குமத்தின் பரிபூரண தெய்வீக சக்தியைப் பெற்றிடலாம்.

ஸ்ரீ மகாலட்சுமி அஷ்டோத்திர நாமாவளி – தமிழ் அர்த்தமுடன்

வ எண் சமஸ்கிருதம் தமிழ்
  1. ஓம் ப்ரக்ருத்யை நம: ஓம் இயற்கையே போற்றி!
  2. விக்ருத்யை ஓம் பலவடிவானவளே போற்றி!
  3. வித்யாயை ஓம் கல்வியே போற்றி!
  4. ஸர்வபூத-ஹிதப்ரதாயை ஓம் அனைத்துயிர்க்கும் அருள்பவளே போற்றி!
  5. ச்ரத்தாயை ஓம் இசைக்கப்படுபவளே போற்றி!
  6. விபூத்யை ஓம் செல்வமே போற்றி!
  7. ஸுரப்யை ஓம் விண்ணவளே போற்றி!
  8. பரமாத்மிகாயை ஓம் உள்ளுறைபவளே போற்றி!
  9. வாசே ஓம் சொல்லே போற்றி!
  10. பத்மாலயாயை ஓம் தாமரைக் கோவிலே போற்றி!
  11. பத்மாயை ஓம் தாமரையே போற்றி!
  12. சுசயே ஓம் தூய்மையே போற்றி!
  13. ஸ்வாஹாயை ஓம் மங்கலமே போற்றி!
  14. ஸ்வதாயை ஓம் அமங்கலத்தைத் தீர்ப்பவளே போற்றி!
  15. ஸுதாயை ஓம் அமுத ஊற்றே போற்றி!
  16. தன்யாயை ஓம் நன்றியே போற்றி!
  17. ஹிரண்மய்யை ஓம் பொன்வடிவானவளே போற்றி!
  18. லக்ஷ்ம்யை ஓம் இலக்குமியே போற்றி!
  19. நித்யபுஷ்டாயை ஓம் என்றும் வலிமை அருள்பவளே போற்றி!
  20. விபாவர்யை ஓம் ஒளியே போற்றி!
  21. அதித்யை ஓம் அளவில்லாதவளே போற்றி!
  22. தித்யை ஓம் வேண்டுதல் அருள்பவளே போற்றி!
  23. தீப்தாயை ஓம் கனலே போற்றி!
  24. வஸுதாயை ஓம் உலகமே போற்றி!
  25. வஸுதாரிண்யை ஓம் உலகைக் காப்பவளே போற்றி!
  26. கமலாயை ஓம் தாமரையே போற்றி!
  27. காந்தாயை ஓம் கவர்பவளே போற்றி!
  28. காமாக்ஷ்யை ஓம் காதற்கண்ணியே போற்றி!
  29. க்ஷீரோதஸம்பவாயை ஓம் பாற்கடலில் உதித்தவளே போற்றி!
  30. அனுக்ரஹ ப்ரதாயை ஓம் அருளை அள்ளித் தருபவளே போற்றி!
  31. புத்தயே ஓம் அறிவே போற்றி!
  32. அநகாயை ஓம் குற்றமில்லாதவளே போற்றி!
  33. ஹரிவல்லபாயை ஓம் விண்ணவன் துணைவியே போற்றி!
  34. அசோகாயை ஓம் சோகமற்றவளே போற்றி!
  35. அம்ருதாயை ஓம் அழிவற்றவளே போற்றி!
  36. தீப்தாயை ஓம் சுடரே போற்றி!
  37. லோகசோக-விநாசின்யை ஓம் உலகக் கவலைகள் தீர்ப்பவளே போற்றி!
  38. தர்மநிலயாயை ஓம் அறத்தில் நிலைத்தவளே போற்றி!
  39. கருணாயை ஓம் அருளே போற்றி!
  40. லோகமாத்ரே ஓம் உலக அன்னையே போற்றி!
  41. பத்மப்ரியாயை ஓம் தாமரையை விரும்புபவளே போற்றி!
  42. பத்மஹஸ்தாயை ஓம் தாமரை ஏந்தியவளே போற்றி!
  43. பத்மாக்ஷ்யை ஓம் தாமரைக்கண்ணியே போற்றி!
  44. பத்மஸுந்தர்யை ஓம் தாமரை அழகியே போற்றி!
  45. பத்மோத்பவாயை ஓம் தாமரையில் தோன்றுபவளே போற்றி!
  46. பத்மமுக்யை ஓம் தாமரை முகத்தவளே போற்றி!
  47. பத்மநாபப்ரியாயை ஓம் பத்மநாபன் துணைவியே போற்றி!
  48. ரமாயை ஓம் மகிழ்ச்சியே போற்றி!
  49. பத்மமாலாதராயை ஓம் தாமரை மாலை அணிந்தவளே போற்றி!
  50. தேவ்யை ஓம் தேவியே போற்றி!
  51. பத்மின்யை ஓம் தாமரைத் திருவே போற்றி!
  52. பத்மகந்தின்யை ஓம் தாமரை மணமே போற்றி!
  53. புண்யகந்தாயை ஓம் புனித மணமே போற்றி!
  54. ஸுப்ரஸன்னாயை ஓம் எளிதில் மகிழ்பவளே போற்றி!
  55. ப்ரஸாதாபிமுக்யை ஓம் அருள்வதில் மகிழ்பவளே போற்றி!
  56. ப்ரபாயை ஓம் ஒளிவட்டமே போற்றி!
  57. சந்த்ரவதனாயை ஓம் மதி முகமே போற்றி!
  58. சந்த்ராயை ஓம் மதியே போற்றி!
  59. சந்த்ரஸஹோதர்யை ஓம் மதியின் உடன்பிறப்பே போற்றி!
  60. சதுர்ப்புஜாயை ஓம் நான்கு கரத்தாளே போற்றி!
  61. சந்த்ரரூபாயை ஓம் மதிவடிவானவளே போற்றி!
  62. இந்திராயை ஓம் நீலத்தாமரையே போற்றி!
  63. இந்து-சீதலாயை ஓம் மதியின் குளிர்ச்சியே போற்றி!
  64. ஆஹ்லாத ஜனன்யை ஓம் பேரின்பப் பெருக்கே போற்றி!
  65. புஷ்ட்யை ஓம் உடல் நலமே போற்றி!
  66. சிவாயை ஓம் மங்கலமே போற்றி!
  67. சிவகர்யை ஓம் மங்கலம் அருள்பவளே போற்றி!
  68. ஸத்யை ஓம் உண்மையே போற்றி!
  69. விமலாயை ஓம் குறையில்லாதவளே போற்றி!
  70. விச்வ ஜனன்யை ஓம் அனைத்திற்கும் அன்னையே போற்றி!
  71. துஷ்ட்யை ஓம் நல வடிவே போற்றி!
  72. தாரித்ர்ய-நாசின்யை ஓம் வறுமையைப் போக்குபவளே போற்றி!
  73. ப்ரீதிபுஷ்கரிண்யை ஓம் உயிர் காக்கும் நீர் நிலையே போற்றி!
  74. சாந்தாயை ஓம் அமைதியே போற்றி!
  75. சுக்லமால்யாம்பராயை ஓம் வெண்ணிற மாலையும் ஆடையும் உடுத்தியவளே போற்றி!
  76. ச்ரியை ஓம் அதிர்ஷ்டம் தருபவளே போற்றி!
  77. பாஸ்கர்யை ஓம் ஒளியைத் தருபவளே போற்றி!
  78. பில்வநிலயாயை ஓம் வில்வத்தில் உறைபவளே போற்றி!
  79. வராரோஹாயை ஓம் வரங்களை அருள்பவளே போற்றி!
  80. யசஸ்வின்யை ஓம் புகழே போற்றி!
  81. வஸுந்த்ராயை ஓம் இயற்கைச் செல்வங்களைத் தாங்குபவளே போற்றி!
  82. உதாராங்காயை ஓம் ஒப்பற்ற அழகே போற்றி!
  83. ஹரிண்யை ஓம் மான் ஒத்தவளே போற்றி!
  84. ஹேமமாலின்யை ஓம் பொன்னணியாளே போற்றி!
  85. தனதான்யகர்யை ஓம் பொன்னையும் உணவையும் தருபவளே போற்றி!
  86. ஸித்தயே ஓம் பயனே போற்றி!
  87. ஸ்த்ரைணஸெளம்யாயை ஓம் பெண்களுக்கு அருள்பவளே போற்றி!
  88. சுபப்ரதாயை ஓம் சுபம் அருள்பவளே போற்றி!
  89. ந்ருபமேச்மகதானந்தாயை ஓம் அரண்மனைகளில் நிலைத்தவளே போற்றி!
  90. வரலக்ஷ்ம்யை ஓம் வரலட்சுமியே போற்றி!
  91. வஸுப்ரதாயை ஓம் செல்வங்கள் தருபவளே போற்றி!
  92. சுபாயை ஓம் சுபமே போற்றி!
  93. ஹிரண்யப்ராகாராயை ஓம் பொன்னால் சூழப்பட்டவளே போற்றி!
  94. ஸமுத்ரதனயாயை ஓம் அலைமகளே போற்றி!
  95. ஜயாயை ஓம் வெற்றியே போற்றி!
  96. மங்கள தேவ்யை ஓம் மங்களதேவியே போற்றி!
  97. விஷ்ணுவக்ஷஸ்தல-ஸ்திதாயை ஓம் மாலவன் மார்பில் நிலைத்தவளே போற்றி!
  98. விஷ்ணுபத்ன்யை ஓம் மாதவன் துணையே போற்றி!
  99. ப்ரஸன்னாக்ஷ்யை ஓம் மகிழ்ச்சி பொங்கும் கண்களை உடையவளே போற்றி!
  100. நாராயணஸமாச்ரிதாயை ஓம் நாரணனுடன் அடைக்கலமாக அடையப்படுபவளே போற்றி!
  101. தாரித்ர்யத்வம்ஸின்யை ஓம் வறுமையை துவைப்பவளே போற்றி!
  102. தேவ்யை ஓம் தேவியே போற்றி!
  103. ஸர்வோபத்ரவவாரிண்யை ஓம் அனைத்து இடைஞ்சல்களையும் நீக்குபவளே போற்றி!
  104. நவதுர்க்காயை ஓம் நவதுர்க்கையே போற்றி!
  105. மஹாகாள்யை ஓம் மகாகாளியே போற்றி!
  106. ப்ரஹ்மவிஷ்ணு - சிவாத்மிகாயை ஓம் பிரமன் விண்ணவன் சிவன் வடிவானவளே போற்றி!
  107. த்ரிகாலஜ்ஞானஸம்பன்னாயை ஓம் முக்காலமும் அறிந்தவளே போற்றி!
  108. புவனேச்வர்யை ஓம் உலகை ஆளும் அன்னையே போற்றி!
ஓம் ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயார் திருவடிகள் சரணம்
 

Latest ads

Back
Top