• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

ஸ்ரீ நரசிம்மமும், ஸ்ரீஎதிராஜ சிம்மமும்

ஸ்ரீ நரசிம்மமும், ஸ்ரீஎதிராஜ சிம்மமும்:

நாளை(25/05/2021ஸ்ரீநரசிம்ம ஜயந்தி:
--வைகாசி மாதம் வளர்பிறை சதுர்த்தசி தினத்தில்.

"அங்கண்ஞாலம் அஞ்ச, அங்கு ஓராள் அரியாய்,அவுணன்
பொங்க, ஆகம் வள்ளுகிரால் போழ்ந்த புனிதனிடம்,
பைங்கணானைக் கொம்புகொண்டு பத்திமையால்,அடிக்கீழ்ச்
செங்கணாளி இட்டிறைஞ்சும்,
சிங்க வேள் குன்றமே"
பெரியதிருமொழி(1-7-1)

நரசிம்மருக்கும்,வலிமிக்க சீயம் ராமாநுஜருக்குமான சில அற்புதமான வைபவங்களை அனுபவிப்போம்.

1.நரசிம்மரின் 'கீர்த்திப் பயிரெழுந்து விளைந்திடும் சிந்தை இராமானுசன்'

"வளர்ந்த வெங்கோபம்
மடங்கல்ஒன்றாய் அன்று வாள் அவுணன்,
கிளர்ந்த பொன்னாகம்
கீண்டவன்,கீர்த்திப் பயிரெழுந்து,
விளைந்திடும் சிந்தை இராமானுசன் என்தன் மெய்வினை நோய்,
களைந்து நல்ஞானம அளித்தனன் கையிற் கனியென்னவே"(இரா.நூற்.103)

"அன்று எல்லை கடந்த கொடிய
கோபம் கொண்ட ஒப்பற்ற நரசிங்கமாய்த் தோன்றி, வாளேந்திய இரணியனின் பருத்த உடலைக் கிழித்தவனின் கீர்த்தி என்னும் பயிர்,செழித்து விளையும் சிந்தையைக் கொண்ட இராமானுசன், என் சரீரத்தைப் பீடித்திருக்கும்,
கர்மவினையாகிய துன்பங்களைக் களைந்து, சிறந்த ஞானத்தை அளித்திரு க்கிறார் என்பது, உள்ளங் கையிலுள்ள கனிபோல் அனைவர்க்கும் விளங்கும்"

'பருத்த உடலைக் கிழித்தவன்'--
சுத்தசத்வ மயமான சிங்கப்பிரான்,தாமஸ குணத்தைத் தலைமடியப் பண்ணி,
ராஜஸ குணத்தை ஆஸனபலத்தாலே
கீழ்ப்படுத்தி சாத்வீக,ப்ரஹலாதனுக்கு,
வந்த இடர் களைந்தான்.

'கீர்த்திப் பயிர் எழுந்து'--
-பரத்துவம்,ஆபத்திலே அப்போதே தோன்றிப் பக்தனுக்கு உதவுதல்,எல்லாப் பொருட்களுக்குள்ளும் புகுந்து,
அந்தராத்மாவுயள்ள தன்மை,
ஆச்ரித(அடியார்கள்) விரோதிகள் மேல் சீற்றம்,அந்நிலையிலேயே அருளுதல்
(சீரிய சிங்கமாகவும், பூவைப் பூவண்ணனாகவும்) மற்றும் பலப்பல கீர்த்திகள்.

2.ஆராதனைப் பெருமாள் அழகியசிங்கர்(லக்ஷ்மிநரசிம்மர்)

ராமாநுஜர், தாம் நியமித்த 74 சிம்மாசனாதிபதிகளுக்கும்,
'அழகியான் தானே,அரியுருவம் தானே'
என்னும் லக்ஷ்மிநரசிம்மப்பெருமாள் திருவிக்ரகத்தையே நித்ய
திருவாராதனைப்பெருமாளாக அளித்தார்.சுத்த சத்வ மயமான திவ்யமங்கள விக்ரகத்தில் எழுந்தருளியிருக்கும்,அழகியசிங்கர், ராஜஸ,தாமஸ குணங்கள் நிறைந்த இந்தப் பூவுலகில்,அவற்றை நிஷ்கரித்து சாத்வீகம் தழைக்க அருள்புரிவார் என்றும்,ஆச்ரித விரோதி ஸமர்த்தநம் (அடியார் பகை அழிக்கும் குணம்) பண்ணுவர் ஆகையாலும், கூப்பிட்ட குரலுக்கு எங்கும், எப்பொழுதும், எதிலும்,எவ்வடிவிலும் எழுந்தருள்பவர் ஆகையாலும்,இந்த குணங்களையே சிந்தையில் வைத்த இராமானுசர், அவரையே அனைத்து ஆசார்ய புருஷர்களுக்கும் அளித்தார்.

3)திருமலையில், யோக நரசிம்மருக்கும்,
லக்ஷ்மி நரசிம்மருக்கும் சந்நிதிகள்.

யோக நரசிம்மர்:
திருவேங்கடவருக்கும்,பத்மாவதித் தாயாருக்கும் நடந்த திருக்கல்யாணத் துக்கான பத்திரிகையில்,திருவேங்கட
வரின் குலதெய்வமாக ஶ்ரீ நரசிம்மப் பெருமாள் குறிப்பிடப்பட்டுள்ளார்.
திருமணத்துக்கு சமைக்கப்பட்ட அன்ன/பலகாரப் பிரசாதங்கள் ஶ்ரீ நரசிம்மரு
க்கே முதலில் அமுது செய்விக்கப் பட்டது.ஸ்வாமி புஷ்கரணியின் மேற்கரையில் ஶ்ரீ நரசிம்மர் இருந்தார்.

ஶ்ரீபரமசிவன்,உக்கிரமாக இருந்த,இந்த நரசிம்மரை இங்கு தவம் செய்து வழிபட்டார்.சிவன்,பார்வதியுடன் சில காலம் திருமலையில் இருந்தாராம் (வராஹபுராணம்).எனவே சிவனடியார்கள், அங்கு ஒரு சிவன் கோவில் அமைக்க வேண்டும் என்று பெருமுயற்சி செய்தனர். திருமால் அடியார்கள் இதற்குஒப்பவிலலை. விவகாரம் மன்னரிடம் எடுத்துச்செல்லப்
பட்டது.திருவேங்கடவர் நியமனப்படி திருமலையை ஶ்ரீவைகுண்டத்திலிருந்து, கருடாழ்வார் எடுத்து வந்ததால், திருமலையும் ஶ்ரீவைகுண்டத்தின் ஒரு பகுதியென்பதால் மலையில் வேறு எந்த தெய்வத்துக்கும் கோவில் கட்ட முடியாது என்று வைணவர்கள் மன்னரிடம் முறையிட்டு சிவன்கோவிலைத் தடுத்து நிறுத்தினர்.

ஶ்ரீ நரசிம்மர் உக்கிரமாக இருப்பதாலும்,
ஶ்ரீ மஹா லட்சுமிப் பிராட்டியுடன் இல்லாததாலும்,மேலும் தொடர்ந்து சைவர்கள் சிவன் கோவில் கட்ட முயற்சிப்பார்கள் என்ற எண்ணத்திலும்,
நரசிம்மருக்குப் பூஜை செய்வதையும் படிப்படியாகக் நிறுத்தி விட்டனர்.

இந்த நிகழ்வுகளைச் செவியுற்ற ராமாநுஜர்,திருமலையில் புராண காலத்தில் இருந்து வழிபட்டு வந்த நரசிம்மருக்குத், தொடர்ந்து திருவாராதனை செய்ய வேண்டும் என்று
நியமித்தார்.திருமங்கைஆழ்வார்,பெரிய திருமொழியில் "வேங்கடத்துஅரியை"
(7-3-5).என்று பாடியதையும்,ஶ்ரீ வேங்கடேஸ்வர 108 நாமாவளியில் வரும்"சத்பக்த நீலகண்ட அர்ச்சய நரசிம்ஹய ஶ்ரீ வேங்கடேசாய நம:"
என்னும் நாமத்தையும் கருத்தில் கொள்ளுமாறு சொன்னார். நரசிம்மரின் உக்கிரத்தைக் குறைக்க சிறப்பு பூஜைகள் செய்ய ஏற்பாடு செய்தார்.
மேலும் நரசிம்மரை திருவேங்கடவர் கோயிலுக்குள் வேங்கடவரை
நோக்கி (உண்டியலுக்கு வடகிழக்கில்)
பிரதிஷ்டை செய்தார். உக்கிர நரசிம்மர்,சாந்த சொரூபியாக, யோக நரசிம்மராக சேவை சாதித்துக் கொண்டிருக்கிறார்.

லக்ஷ்மி நரசிம்மர்:
ஶ்ரீ மார்கண்டேயர் திருமலை மீது நடந்து செல்லும் போது ஒரு குகையில் ஶ்ரீ லக்ஷ்மி நரசிம்மப் பெருமாளைச் சேவித்தார்.(மார்கண்டேய புராணம்). இந்த வைபவத்தை நினைவுறுத்தும் வகையில் அந்த இடத்தில், லக்ஷ்மி நரசிம்மர் சந்நிதியை ஏற்படுத்தி,நித்ய திருவாராதனை செய்யுமாறு
நியமித்தார்.(2850வது படிக்குப் பக்கத்தில் பிரசன்ன ஆஞ்சநேயர் சிலையைத் தாண்டி சற்று தூரத்தில்).

4.தொண்டனூர் நரசிம்மர் சந்நிதியில்,
ஆதிசேஷ அவதாரமாக ராமாநுஜர்:

கர்நாடக மாநிலம்,மைசூருக்கு அருகில் உள்ள தொண்டனூர் (அன்றைய 'பக்தநகரி') என்னுமிடத்தில் சமணர்கள் அதிக மக்கள் தொகையில் இருந்தனர்.
மிகப்பலர் திறமையான சமண சமய வல்லுனர்களாகவும் திகழ்ந்தனர்.
அவர்கள் சமய தத்துவத்தில், ராமாநுஜரோடு தர்க்கம் செய்து,தங்கள் மதத்தை நிலைநாட்ட விளைந்தனர்.
அவர்கள் ஆயிரக்கணக்கில் இருந்ததால், ஒவ்வொருவருடனும் தனித்தனியாக தர்க்கம் செய்ய அவகாசம் இல்லாததால் ராமாநுஜர் அங்குள்ள நரசிம்மர் சந்நிதியில், ஒரு திரைக்குப் பின்னால் அமர்ந்து கொண்டார்.அவர்களை விவாதிக்க/கேள்வி கேட்கச் சொன்னார்.அவர்கள் அத்தனை பேரும் எழுப்பிய வாதங்களுக்கு/கேள்விக ளுக்கும் ஆதிசேஷ அம்சம் எடுத்து 'ஆயிரம் 'நா' மூலம் அப்போதைக்கு அப்போதே( simultaneously)அதிரடியாக விடையளித்து, அவர்கள் அனைவரையும் வென்று ஸ்ரீமந்நாராயணின்-நரசிம்மனின் விசிஷ்டாத் வைதத்தின் மேன்மைக்குப் பெருமை சேர்த்தார்.

5.மேல்கோட்டையிலிருந்து ஸ்ரீரங்கம் திரும்புமுன்,மலை நரசிம்மரைச் சேவித்து விடைகொண்ட எதிராஜர்:

சோழமன்னனின் கொடுமையிலிருந்து,
உடையவரைக் காப்பாற்றுவதற்காகக் கூரத்தாழ்வான் அவரை வெள்ளாடை தரிக்கவைத்து, மேல்கோட்டைக்கு அனுப்பி வைத்தார்.12 ஆண்டுகளுக்குப் பின் சோழமன்னன் கழுத்தில் புண்ணாகிப் புழுத்து -கிருமிகண்ட சோழன்- மாண்டான்.இந்தச் செய்தியை உடையவரிடம் உரைத்து, அவரை மீண்டும், ஸ்ரீரங்கம் அழைத்து வருவதற்காக, மாருதிச்சிறியாண்டானும்,
அம்மங்கிஅம்மாளும்,மேல்கோட்டை சென்றனர்.அவர்களிடம் விவரம் அறிந்த உடையவர் மிகவும் மகிழ்ந்தவராய், அவர்களையும் அழைத்துக் கொண்டு,
மலை மேல் உள்ள நரசிம்மர் சந்நிதிக்கு எழுந்தருளினார்."அழகிய சிங்கரைத் திருவடி வணங்கி,பகவத்,பாகவத விஷ்யமென்றால், அஸஹமாநனாய்ப் போந்த ஹிரண்யனை முன்பு நிரஸித்து அருளினாற்போலே, இப்போது பரதத்வமான தேவரீரை,'இல்லை'என்று ஸாதுநாமுனபமாந பூதரான ப்ரஹ்லாத ஆழ்வானுக்கு ஒப்பான, கூரத்தாழ்வானுக்கும்,பெரியநம்பிக்கும்,
அபராதம் பண்ணின இவனையும் கிருமி கண்டனாக்கி,நசிப்பித்தருளிற்றே !"என்று விண்ணப்பஞ் செய்து தீர்த்த ப்ரஸாத ஸ்வீகாரம் பெற்று விடை கொண்டார்.

6 காட்டழகிய சிங்கர் சந்நிதியும்,
இராமாநுச நூற்றந்தாதியும்:

பொதுவாக எல்லாத் திவ்யப் பிரபந்தங்களிலும்,கடைசி இரண்டு பாசுரங்கள் சாற்று மறைப் பாசுரங்களாக இருக்கும்.ஆனால் இராமாநுச நூற்றந்தாதியில் மட்டும் அபூர்வமாக, கடைசி மூன்று பாசுரங்கள் --
"இருப்பிடம் வைகுந்தம்"(106),
இன்புற்ற சீலத்து இராமாநுச"(107)
,"அங்கயல் பாய்வயல் தென்னரங்கன்"
(108) -சாற்றுமறைப் பாசுரங்களாக உள்ளன. நூற்றந்தாதியை இயற்றிய திருவரங்கத்து அமுதனாரும்,அவர் சீடர்களும், ஒரு நாள் ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கப்பெருமாள் சந்நிதியில் அமர்ந்து,அந்தப் பிரபந்தத்தின் இறுதிப்பாசுரங்களை இயற்றி/எழுதிக் கொண்டிருந்தனர்.105 ஆவது பாசுரம் முடிந்து 106 ஆவது பாசுரம் தொடங்கும் முன், ஸ்ரீராமாநுஜர் அங்கு வந்து விட்டார்.
உடையவர் வந்ததும் அனைவரும் எழுந்து நின்றனர்.எழுந்த நின்ற நிலையிலேயே கடைசி மூன்று பாசுரங்களையும் பாடினார் அமுதனார்.ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் சாற்றுமறைப் பாசுரங்களை எழுந்து நின்று பாடுவார்கள்.இந்த மூன்று பாசுரங்களை யும் இயற்றும் போதே,எழுந்து நின்று பாடியதால்,மூன்றுமே சாற்றுமறைப் பாசுரங்கள் ஆயின.



(--அடியேன் பார்த்தசாரதி ராமாநுஜ தாசன்)
 

Latest ads

Back
Top