ஸ்ரீ கோதை நாச்சியார்

ஸ்ரீ கோதை நாச்சியார்

ஆடி மாதத்தின் பூர நட்சத்திரத்தில், ஸ்ரீவில்லிபுத்தூரில் துளசிவனத்தில் பெரியாழ்வாரின் திருமகளாய் அவதரித்தாள், கோதா எனும் திருநாமத்துடன்! கோதா என்பதற்கு பல அர்த்தங்கள். அதில் முக்கியமானவை இரண்டு.


" காம் ததாதி இதி கோதா
காம் தததே இதி கோதா "


காம் என்றால் நல்ல வாக்கு. அவள் நல்ல வாக்கைக் கொடுப்பவள். அவளைத் தியானித்தால், அவளின் திவ்ய மங்கல விக்கிரகத்தை தியானித்தால் நல்ல வாக்கைக் கொடுப்பாள். உத்தமமான வாக்கு உடையவள் ஆகவே, நல்ல வாக்கை நமக்கும் கொடுக்கிறாள். அப்படிப்பட்ட கோதா, திருமாலை கட்ட இரு மாலை கட்டினாள். ஒரு மாலை பாமாலை; மற்றொன்று பூமாலை. பாமாலையைப் பாடி சமர்ப்பித்தாள். பூமாலையைச் சூடி அவன் திருவடியில் சமர்ப்பித்தாள். அதனால் சூடிக்கொடுத்த நாச்சியார் ஆனாள்.


ஆண்டாளை 'பிஞ்சாய் பழுத்தாளை ஆண்டாளை’ என்கிறார் வரவரமுனிகள். சின்னப் பெண்ணான ஆண்டாளுக்கு பகவானை கல்யாணம் பண்ணிக்கொள்ள வேண்டும் என்று ஆசை. அதை எப்படித் தெரிவிப்பது என்று தெரியவில்லை.


திருமாலை (எம்பெருமானை) தன்னிடத்தில் ஈடுபடச் செய்ய திருமாலைகளை (பூமாலைகளை) தூதாக அனுப்பினாள். ''என் ஆசையை எம்பெருமானிடத்தில் தெரிவித்து, அவன் அனுக்ரஹத்தைப் பெற்றுத் தா’ என்று ஆண்டாள் பிரார்த்தனை செய்த அழகே அழகு! பகவானையும் ஆண்டாள்; நம்மையும் ஆள்கிறாள் என்பதால் ஆண்டாள் என்ற திருநாமம். 'அஞ்சுகுடிக்கொரு சந்ததியாய்’ (மணவாள மாமுனிகள் அருளிச் செய்த உபதேச ரத்னமாலை) தோன்றியவள் ஆண்டாள். ஆழ்வார் கோஷ்டிக்கே கல்பலதிகையாக (கொடியாக) இருப்பதாலேயே இவள் அவதாரம் உயர்ந்தது.


திருப்பாவையின் முதல் பத்து பாசுரங்கள் 'அவன் பெயர் (திருநாமம்) பாடு’ என வலியுறுத்துகிறது. 2-வது பத்து பாசுரங்கள் 'அவன் திருவடிகளில் புஷ்பங்களை இட்டு அர்ச்சனை செய்’ என்கிறது. 3-வது பத்து பாசுரங்கள் 'அவன் திருவடியில் ஆத்ம சமர்ப்பணம் செய்’ என்கிறது. வராஹ மூர்த்தியிடம் கேட்ட மூன்று விஷயங்களை மூன்று, பத்து பாசுரங்களில் வெளியிட்டாள் ஆண்டாள்.


திருப்பாவை என்பது தமிழ்ப் பாசுரம் மட்டுமல்ல. இது ஒரு மஹா யக்ஞம். திருப்பாவை என்ற யக்ஞத்தால் எல்லோரும் கட்டப்பட்டுள்ளோம். இது ஒரு வைஷ்ணவாத்மகமான வேத விகிதமான யக்ஞம். நாராயணனிடத்தில் ஆத்மாவை சமர்ப்பிக்கச் சிறந்தது யக்ஞம்!


அதில், ஹவிஸை நெய்யினால் சுத்தி பண்ணி அக்னியில் சேர்க்கிறோம். ஆண்டாளும், திருப்பாவை எனும் யக்ஞத்தில், தன் உடல், பொருள், ஆவி என்கிற ஹவிஸை ஆச்சார்ய அனுக்ரஹம் (பெரியாழ்வாரின் அனுக்ரஹம்) என்ற நெய் தடவி, எம்பெருமான் வடபத்ரசாயியின் திருவடியில் சமர்ப்பிக்கிறாள்.


நாமும், நம்மை இறைப்பாதத்தில் சமர்ப்பிப்போம். மார்கழியில் திருப்பாவை பாடி, திருவருளைப் பெறுவோம்.


ஸ்ரீ கோதை நாச்சியார் திருவடிகளே சரணம்.
 
Back
Top