ஸ்ரீஹயக்ரீவர் ஜெயந்தி திருநாள் (Hayagrivar Jayanthi)

praveen

Life is a dream
Staff member
ஸ்ரீஹயக்ரீவர் ஜெயந்தி திருநாள் (Hayagrivar Jayanthi)

கல்விக்கு எப்போதுமே தனிச் சிறப்பு உண்டு. அந்தக் கல்விக்கு அதிபதியாக நாம் அனைவரும் வணங்குவது சரஸ்வதி தேவியை. ஆனால் அந்த சரஸ்வதிக்கு ஒரு குரு உண்டு என எத்தனை பேருக்குத் தெரியும். அவரே ஞானகுருவான ஹயக்ரீவர். அம்பிகையின் நாமங்களை உலகுக்கு அகத்தியர் வாயிலாக லலிதா சஹஸ்ரநாமம் ஆக வெளிப்படுத்தியவர் ஹயக்ரீவரே.


ஹயக்ரீவர் தோன்றியது எப்படி தெரியுமா? நான்கு வேதங்களின் துணை கொண்டு, அந்த வேதங்கள் பின் தொடர்ந்து வர பிரம்மா தனது சிருஷ்டி தொழிலை நடத்திக் கொண்டிருந்தார்.
அப்போது மது, கைடபர் என்னும் இரு அரக்கர்கள் தங்களைப் பிரம்மனைவிடவும் பெரியவர்களாய் நினைக்க வேண்டும் என்ற எண்ணத்தால் அந்த வேதங்களைக் குதிரை வடிவில் வந்து பிரம்மாவிடம் இருந்து பறித்துச் சென்றனர். வேதங்கள் இல்லாமல் சிருஷ்டியின் அர்த்தமே இல்லையே? உலகை இருள் சூழ்ந்தது.
பிரம்மா செய்வதறியாது திகைத்தார். மகா விஷ்ணுவிடம் சென்று முறையிட்டார் பிரம்மா.


மஹாவிஷ்ணு இவ்வுலகைக் காக்கவும், வேதங்களை மீட்டு வரவும், அசுரர்கள் எந்தக் குதிரை வடிவில் வந்தனரோ, அந்தக் குதிரை வடிவிலேயே தாமும் செல்லத் தீர்மானித்தார். குதிரை முகம், மனித உடல், ஆயிரம் கோடி சூரியர்களையும் மிஞ்சும் ஒளி, சாட்சாத் அந்த சூரிய, சந்திரர்களே இரு கண்கள், கங்கையும், சரஸ்வதியும் அந்தக் கண்களின் இமைகள் சங்கு, சக்கரதாரியாக இந்த திவ்ய சொரூபத்துடனேயே விஷ்ணு வேதங்களை மீட்டு எடுத்தார்.அன்று முதல் விஷ்ணு எடுத்த இந்த அவதாரம் ஹயக்ரீவராக உலகில் நிலை பெற்றது. இந்த அவதார தினம் ஒவ்வொரு ஆண்டும் ஸ்ரீஹயக்ரீவர் ஜெயந்தி தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது


தேவர்களால் மீட்க இயலாத வேதத்தை மகாவிஷ்ணு, ஹயக்ரீவ குதிரை முகத்துடன் மனித உருவம் தாங்கி, அசுரர்களுடன் போரிட்டு மீட்டார்.அவரது உக்கிரகத்தைத் தணிக்க, அன்னை லஷ்மி அருகில் வர ஆனந்தமடைந்தார் ஹயக்ரீவர். தனது மடியில் மகாலஷ்மியை அமர்த்திக் கொண்டதால், லஷ்மி ஹயக்ரீவர் என்று அழைக்கப்பட்டார். வேதத்தை மீட்ட பெருமாள் ஆனதால் இவரைத் துதித்தால் கல்வி கேள்விகளில் சிறக்கலாம் என்பது ஐதீகம்..


ஏலக்காய் மாலை


பெருமாள் கோயில்களில் காணப்படும் ஹயக்ரீவருக்கு ஏலக்காய் மாலை அணிவித்து வேண்டிக்கொண்டால் கல்வி அறிவு ஏற்படும். நூற்றியெட்டு மணி ஏலக்காய்களைக் கொண்ட மாலையைக் கோத்து, நாற்பத்து எட்டு வாரங்கள் லஷ்மி ஹயக்ரீவருக்குச் சாற்றி வர, கல்வி கேள்விகளில் மிகச் சிறந்த முறையில் வெற்றி பெறலாம் என்பது நம்பிக்கை. ஏலக்காய் மாலையை வீட்டிலேயே தயாரிக்கலாம். ஏலக்காய்கள் மூழ்கும் வண்ணம் தூய்மையான தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பத்து நிமிடம் ஊறினாலே போதுமானது.


நீரை நீக்கிவிட்டு, அந்த மாலையை சிறிய டப்பாவில் போட்டு இறுக மூடி எடுத்துச் செல்ல வேண்டும். கோயிலில் அந்த டப்பாவைத் திறந்தவுடன் வரும் ஏலக்காய் வாசனையே லஷ்மி ஹயக்கிரீவருக்கான வாசனை திரவிய நிவேதனம். நல்ல கல்வி, ஞானம், உயரிய வருவாய், திருமணம், குழந்தை பாக்கியம் ஆகிய அனைத்தும் உரிய காலத்தில் கிடைக்கும் என்பது நம்பிக்கை.


ஸ்ரீ ராமானுஜர் பூஜித்த ஹயக்ரீவர்


பகவத் ராமானுஜர் ஸ்ரீ பாஷ்யம் என்ற கிரந்தத்தை விசிஷ்டாத்வைத கொள்கையின்படி எழுதுவதற்காக காஷ்மீரம் சென்றார். அங்கு சரஸ்வதி பண்டாரம் என்ற ஸ்தாபனத்தில் இருக்கும் விருத்தி கிரந்தத்தைக் கொண்டு ஸ்ரீ பாஷ்யம் எழுத முற்பட்டார். அதற்கு தமது சீடரான கூரத்தாழ்வானுடன் சென்றார்.


எனினும் பிற சமயவாதிகளின் எதிர்ப்பால் அவரால் விருத்தி கிரந்தத்தை சில நாட்கள் கூட, தன் பொறுப்பில் வைத்திருக்க முடியவில்லை உடனடியாக திரும்பப் பெற்றுக் கொண்டுவிட்டார்கள். இதனால் மிக வருத்தமடைந்த ராமானுஜர், கூரத்தாழ்வாரிடம் அது பற்றி தமது கவலையை தெரிவித்தார்.


ஆனால் அந்தக் கிரந்தத்தை தாம் இரவு முழுவதும் கண் விழித்து படித்துவிட்டதாகவும் அதை இப்போழுதே தெரிவிக்கவா அல்லது இரண்டு ஆறுகளின் கரைகளின் நடுவில் சொல்லவா என்று பதில் அளித்தாராம். இரண்டாற்றுக்கு நடுவில் என்பது காவிரி கொள்ளிடம் நதிகளுக்கிடையே அமைந்துள்ள ஸ்ரீ ரங்கம். ராமானுஜருக்கு மட்டற்ற மகிழ்ச்சி. உடன் ஆழ்வாரின் உதவியுடன் ஸ்ரீ பாஷ்யத்தை எழுதி முடித்தார். இதையறிந்த சரஸ்வதி மாதா ராமானுஜரை மிகவும் பாராட்டி அவருக்கு “ஸ்ரீ பாஷ்யகாரர்” என்று திருநாமமிட்டு தனது ஆராதனைத் தெய்வமான லஷ்மி ஹயக்ரிவரின் விக்ரஹ மூர்த்தியையும் அவருக்குப் பரிசளித்தாராம்.


அதே ஹயக்ரிவ மூர்த்தி தான் வழிவழியாக ஆராதிக்கப்பட்டு ஸ்வாமி தேசிகனை அடைந்து பின்னர் மைசூர் பரகால மடத்தைச் சேர்ந்ததாகக் கூறுவார்கள். அந்த லஷ்மி ஹயக்ரிவ மூர்த்தியை மைசூர் பரகால மடத்தில் இன்றும் தரிசிக்கலாம்.


ஹயக்ரீவர் சுலோகம்


ஞானானந்தமயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம்


ஆதாரம் ஸர்வவித்யானாம் ஹயக்ரீவ முபாஸ்மஹே


அர்த்தம்:


‘ஞானமுள்ள ஆனந்தமயமான தேவர், தூய்மையானவர், ஸ்படிகம் போன்ற தேகத்தை உடையவர். சகல கல்வி கலைகளுக்கு ஆதாரமானவர். இவற்றை எல்லாம் கொண்ட ஸ்ரீஹயக்ரீவரை உபாசிக்கிறேன்’ என்பது பொருள்.


கேட்டவற்றை உடனே அளிக்கக்கூடியவர் ஸ்ரீ ஹயக்ரீவர். ஸ்ரீஹயக்ரீவரை விரதமிருந்து மனத்தில் தியானித்து, ஹயக்ரீவ பஞ்ஜர ஸ்தோத்திரத்தைக் கூறுபவர்களுக்கு எல்லாக் கஷ்டங்களும் நீங்கி விரும்பியது யாவும் கிடைக்கும். குழந்தைகளைப் படிப்பில் மேன்மை அடையச் செய்யும்.


ஹயக்ரீவரை திருமால் திருக்கோயில்களில் தனி சந்நிதியில் தரிசிக்கலாம்
 
Back
Top