• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

ஸ்ரீஹனுமத் ராமாயணம்

ஸ்ரீஹனுமத் ராமாயணம் என்பது ஹனுமானே அருளியதாகச் சொல்லப்படுகிறது.

இந்த ஹனுமத் ராமாயணம் தோன்றிய காவிய நிகழ்ச்சி ஒன்றை நினைவுகூர்வோம்.

ஸ்ரீராமனின் பட்டாபிஷேகம் நடந்து முடிந்த பின்னர், ஒருநாள் இமயமலைச் சாரலில் ஒரு சிகரத்தின் மீது ஏறி நடந்துகொண்டிருந்தார் வால்மீகி. சிகரத்தின் சரிவுகளில் இருந்த பாறைகளின் மீதும், கற்களின் மீதும் கல்வெட்டுக்களாகச் சில வாசகங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. அவற்றைப் படிக்க ஆரம்பித்தார் வால்மீகி. அவருக்கு மெய்சிலிர்த்தது. அந்த வாசகங்கள் எல்லாம் ஸ்ரீராமனின் வாழ்க்கைச் சம்பவங்களைச் சித்திரிப்பதாக அமைந்திருந்தன. அவை, தான் எழுதிய ராமாயண வரிகளைவிட, கவிதை நயமும் கருத்து நயமும் மிக்கவையாக இருப்பதை உணர்ந்து பிரமித்தார் வால்மீகி. இந்தக் கல்வெட்டுகளில் ஸ்ரீராமனின் கதையை யார் உருவாக்கியிருப்பார்கள் என்று எண்ணியபடியே, இமயத்தின் சிகரத்தை அவர் அடைந்தபோது, அங்கே மற்றோர் ஆச்சரியம் காத்திருந்தது.

அங்கே, அனுமன் யோகநிஷ்டையில் இருந்தபடி ஸ்ரீராம நாமத்தை ஜெபித்துக்கொண்டிருந்தார். அவரது யோக நிஷ்டையைக் கலைக்க விரும்பாத வால்மீகி மஹரிஷி, தானும் ராம நாமம் ஜெபிக்க ஆரம்பித்தார். அந்த நாம ஜெபத்தைக் கேட்ட அனுமன் நிஷ்டையிலிருந்து விழித்தெழுந்து, வால்மீகியை வணங்கி நின்றார். அவரிடம், ராம காவியம் கல்வெட்டுக்களாக அமைந்த வரலாற்றைப் பற்றிக் கேட்டார் மஹரிஷி.

அதற்கு அனுமன் மிகுந்த விநயத்துடன், ''ஸ்ரீராமனின் கல்யாண குணங்களையும் அவரது பெருமைகளையும் இங்கே காணும் கற்களில் நான்தான் எனது நகத்தால் செதுக்கி வைத்தேன். யுகம் யுகமாக ஸ்ரீராமனின் கதை பேசப்பட வேண்டும் என்பதற்காக இந்தக் காரியத்தைச் செய்தேன். ஸ்ரீராமனை ரிஷ்யமுக பர்வதத்தில் நான் சந்தித்தது முதல், பட்டாபிஷேகம் வரை எனக்குத் தெரிந்த ராம கதையை உருவாக்கினேன். ஆனாலும், தங்களின் ராமாயணத்துக்கு இது ஈடாகாது!'' என்றார்.

அப்போது வால்மீகி மஹரிஷியின் கண்களில் நீர் கசிந்ததை அனுமன் கவனித்தார். அதற்கான காரணத்தை மஹரிஷியிடம் பணிவோடு கேட்டார். மேலும், தான் கல்லில் செதுக்கிய ராமாயண காவிய வரிகளில் தவறேதும் இருந்தால், எடுத்துச் சொல்லும்படியும் வேண்டினார். வால்மீகியின் கண்களில் மேலும் நீர் பெருகியது. 'எத்தகைய சிறப்பான காரியத்தைச் செய்துவிட்டு, எவ்வளவு தன்னடக்கத்துடன் அனுமன் இருக்கிறார்’ என்பதை எண்ணிப் பெருமிதம் அடைந்தார்.

''ஹனுமான்! நீ ஸ்ரீராமனின் சிரேஷ்டமான பக்தன். உன்னால் கல்லில் பொறிக்கப்பட்ட ராமாயணத்தில் தவறு இருக்க முடியுமா? நீ எழுதிய காவிய வரிகளில் காணும் பக்திப் பரவசம் என்னை நெகிழ வைத்துவிட்டது. இது, என் ஆனந்தக் கண்ணீர்தான். நான் எழுதிய ராமாயணம் இதற்கு ஈடு இணையாகாது. உன்னுடைய ராமாயணத்தை உலகோர் படிக்கும்போது, என் ராமாயணம் காலப் போக்கில் மறைந்துவிடும்'' என்றார்.

அதைக் கேட்ட மாத்திரத்தில், அனுமனின் கண்களில் தாரை தாரையாக நீர் சுரந்தது. உணர்ச்சிவசப்பட்ட அனுமன், பாறைகளில் தான் செதுக்கியிருந்த ராமாயண காவிய வரிகளை எல்லாம் தனது வாலால் துப்புரவாக அழித்துவிட்டார். பின்னர் வால்மீகியை வணங்கி, ''தாங்கள் எழுதிய ஸ்ரீராம காவியமே மிகச் சிறப்பானது! காலத்தால் அழியாதது! நான் செதுக்கியது வெறுமே என் உணர்ச்சிகளின் பிரதிபலிப்புதான். தாங்கள் உருவாக்கியதுதான் ஸ்ரீராமனே பாராட்டிய காவியம். அதற்கு ஈடு இணை எதுவும் இருக்காது'' என்று அமைதியுடன் கூறினார்.

அனுமனின் பக்தியைப் பற்றி வால்மீகி ஏற்கெனவே தெரிந்துகொண்டிருந்தார். அவரது தியாகத்தை இப்போது புரிந்துகொண்டார். அனுமனை மனமார வாழ்த்தினார். ''ஹனுமான்! நீ எழுதிய ராமாயண எழுத்துக்களை அழித்து விட்டாய். ஆனால், அந்தக் கருத்துக்கள் என் மனதில் ஆழப் பதிந்துவிட்டன. எனது ராம காவியத்தில் நீ செதுக்கிய ராம கதையும் இடம் பெறும்'' என்று கூறி, வாழ்த்திச் சென்றார்.

அதன்படி, வால்மீகி ராமாயணத்தின் ஒரு பகுதியாக அமைந்தது ஹனுமத் ராமாயணம். அனுமன் கண்ட ராமனை இந்தக் காவிய வரிகளில் இன்றும் நாம் தரிசிக்கிறோம். அனுமன் வாயுபுத்திரன். சிவபெருமானின் அம்ஸாவதாரம். சூரியனைக் குருவாகக் கொண்டு நான்கு வேதங்களையும், சாஸ்திரங்களையும் கற்றவர். எளிமையே உருவானவர். அடக்கமானவர். அவரது திறமையும் வலிமையும் அவருக்கே தெரியாது. #ராமாயணகாவியத்தில் #எங்கேயும் #எப்போதும் #கோபப்படாதவர், #அனுமன்தான். இலங்கையை எரித்ததுகூட கோபத்தினால் அல்ல; ராவணனுக்கு புத்தி கற்பிக்கவேதான்.

சீதாபிராட்டியால் #சிரஞ்ஜீவி என்று ஆசிர்வதிக்கப்பட்ட அனுமன், இன்றைக்கும் சிரஞ்ஜீவியாக நம்மிடையேதான் உலவிக் கொண்டிருக்கிறார். அனுமன் இருப்பது, 60 அடி உயர சிலையிலோ, அல்லது அற்புதமாகக் கட்டப்பட்ட ஆலயத்திலோ மட்டுமல்ல; ஸ்ரீராம நாமம் ஒலிக்கும் இடமெல்லாம் அனுமன் இருக்கிறார்.

யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்
தத்ர தத்ர க்ருதமஸ்த காஞ்சலிம்
பாஷ்பவாரி பரிபூரண லோசனம்
மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம்

- என்று அனுமனைப் பற்றிய ஸ்லோகம் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. '#எங்கெல்லாம் #ஸ்ரீராம நாமம் #ஒலிக்கிறதோ, #அங்கெல்லாம் பக்திப் பரவசத்துடன் கண்களில் நீர் மல்கக் காட்சி தந்துகொண்டிருப்பவர் எவரோ, அவரே #அனுமன் என்று தெரிந்துகொள்’ என்பது இதன் பொருள்.

கடைசி வரியில் உள்ள 'ராக்ஷஸாந்தகம்’ என்பது, 'அவர் உன் உள்ளத்தில் தேங்கி நிற்கும் ஆணவம், அஹங்காரம், கோபம், த்வேஷம் போன்ற ராக்ஷஸ குணங்களை அழிப்பவர்’ என்பதைக் குறிக்கும்.

அனுமனை உபாஸித்து அருள் பெற, 'ஸ்ரீராம ஜெய ராம ஜெய ஜெய ராம’ என்று ராம நாமத்தின் பெருமையைச் சொன்னாலே போதும்; அனுமன் அந்த பக்தர்களுக்கும் சேவகனாகி அருள்புரிவார்.

அஞ்சனை மைந்தனாம் அனுமனை வழிபடுவதால் நமது உள்ளத்தில் நேர்மை, தூய்மை, தியாகம், பக்தி, எளிமை, அடக்கம் போன்ற உயர்ந்த குணங்கள் உருவாகி, நம்மை உயர்த்துகின்றன என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
 

Latest ads

Back
Top