• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள்

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாளுக்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது பிறந்த வீட்டில் சொந்தப் பெண்ணுக்கு அளிப்பதுபோல!

ஆண்டாள், சிறுமியாக இருந்தபோது அவள் பார்த்து வளர்ந்த திருமாளிகையே தற்போது ஆண்டாள் கோயிலாக இருக்கிறது. இதனை ஆண்டாளுக்கு, பெரியாழ்வார், திருமணச் சீராகக் கொடுத்தாராம். எனவே, இக்கோயிலை நாச்சியார் திருமாளிகை என்றழைக்கிறார்கள். சூடிக்கொடுத்த இந்த சுடர்க்கொடி இப்போதும் சூடிக்கொடுக்கும் மாலை, திருப்பதியில், பிரம்மோற்சவ விழாவின்போது அங்கே எடுத்துச் செல்லப்பட்டு திருப்பதி பெருமாளுக்கு அணிவிக்கப்படுகின்றது. அதேபோல, ஆண்டாள் திருக்கல்யாண உற்சவத்தின் போது திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலிலிருந்து திருமணப் பட்டுப் புடவை வரும்.

கண்ணனை கணவனாக அடைய இவ்விரு பெருமாள்களிடமும் ஆண்டாள் வேண்டிக்கொண்டாளாம். எனவே, அதற்கு நன்றி செய்யும் விதமாக உற்சவ ஆண்டாள் அணிந்த மாலை சித்ராபௌர்ணமியின் போது, கள்ளழகருக்கும் (மதுரையில் சித்திரைத் திருவிழாவில், அழகர் எதிர் சேவையின் போது ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையைத்தான் கள்ளழகர் அணிகிறார்), புரட்டாசி 5ம் திருநாளன்று திருப்பதிக்கும் செல்கின்றன. அவள் கொடுத்தனுப்பும் மாலையுடன், ஆண்டாளின் பட்டுப் புடவையும் கிளியும் உடன் செல்கின்றன. ஆண்டாளுக்குப் பெரியாழ்வார் சூட்டிய பெயர், கோதை. அதாவது பூமாலை என்று பொருள். தான் சூடிக்கொடுத்த பூமாலையை வடபத்ரசாயி ஏற்றுக் கொண்டாரென்றால், பூமாலையாகிய இவளை அப்படியே ஸ்ரீரங்கம் அரங்கன் ஏற்றுக்கொண்டான்!

பட்டர்பிரான் புதல்வி, திருப்பாவை பாடிய செல்வி, வேயர்குல விளக்கு எனவும் ஆண்டாளுக்குப் பல பெயர்கள் உண்டு. இங்கே ஆண்டாள் கிழக்கு நோக்கி தனிச்சநதியில் அருளுகிறாள். பொதுவாக கிழக்கு நோக்கியிருக்கும் பெண் தெய்வங்களை வழிபட்டால் கீர்த்தி உண்டாகும் என்பார்கள். எனவே, இந்தத் தாயாரிடம் வேண்டிக்கொள்பவை அனைத்தும் நடக்கும் திருமணமாகாத பெண்கள் துளசி மாலை வாங்கி வந்து ஆண்டாளுக்கு சாத்தி, பின் அதனை வாங்கித் தம் கழுத்தில் அணிந்து கொண்டு, அருகிலி ருக்கும் கண்ணாடி கிணற்றை சுற்றி வந்து, பிறகு கிணற்றினுள்ளே பார்த்துவிட்டு, மீண்டும் ஆண்டாளிடம் வந்து வழிபடுகிறார்கள். இவ்வாறு வழிபடுப வர்களுக்கு வளையல், மஞ்சள் கயிறு பிரசாதமாக கொடுக்கப்படுகின்றன.

இதனால், தடைபட்ட திருமணங்கள் உடனே நடக்கின்றன. ஆண்டாள் சந்நதி அமைந்திருக்கும் அர்த்தமண்டபத்தில் வெள்ளிக்குறடு எனும் ஒரு மண்டபம் உள்ளது. இம்மண்டபத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழ மையிலும் மாலை 6 மணிக்கு ஆண்டாள், ரங்கமன்னாருடன் ஊஞ்சலில் எழுந்தருள்கிறாள். இந்நேரத்தில் ஆண்டாளை தரிசனம் செய்தாலும் திருமண பாக்கியம் உண்டாகும் என்பது நம்பிக்கை. ஆண்டாள், 108 திவ்யதேசங்களிலும் அருளும் பெருமாள்களையே மாலையாக அணிந்திருப்பதாக ஐதீகம். இதனை விளக்கும் விதமாக, ஆண்டாள் கருவறையைச் சுற்றி முதல் பிரகார சுவர்களில் 108 திவ்யதேச பெருமாளின் உருவங்கள் ஓவியமாக வரையப்பட்டுள்ளன. இவற்றில், திருப்பாற்கடல், வைகுண்டம் பெருமாள்களையும் தரிசிக்கலாம்.

ஆண்டாள் கோயிலில், அதிகாலையில் நடை திறக்கும் அர்ச்சகர்கள் முதலில், ஆண்டாளை பார்ப்பதில்லை. கதவை திறந்ததும் ஆண்டாளுக்கு வலப் புறத்தில் இருக்கும் கண்ணாடியைப் பார்க்கின்றனர். ஆண்டாள் முதலில் இந்த கண்ணாடியைத்தான் பார்த்துக்கொண்டாள் என்ற ஐதீகத்தின் இப்போ தைய நடைமுறை இது. பிறகு ஆண்டாளுக்கு தீபம் ஏற்றப்படுகிறது. பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திரை விலக்கப்பட்ட பிறகுதான் அர்ச்சகர்கள் ஆண்டாளை பார்க்கின்றனர். ஆண்டாளுக்கு திருஷ்டி பட்டுவிடக்கூடாது என்பதற்காக இவ்வாறு செய்யப்படுவதாக சொல்கிறார்கள். ஒரு கிளியைத் தன் இடக் கையில் ஏந்தியிருக்கிறாள் ஆண்டாள். இதற்காக தினமும் ஒரு கிளி தயாரித்து சமர்ப்பிக்கப்படுகிறது.

மாதுளம்பூ, கிளியின் மூக்காகவும் ஏழு இலை என்று சொல்லப்படும் மரவள்ளி இலை, கிளியின் உடலாகவும், நந்தியாவட்டை இலைகள் இறக்கைகளாகவும் வெள்ளை அரளி மற்றும் செவ்வரளி மொட்டுகள் வால் பகுதியாகவும் காக்காய் பொன் கண்களாகவும் சேர்ந்து உருவாகின்றன. குறிப்பிட்ட ஒரு குடும்பத்தார் பரம்பரை பரம்பரையாக இவ்வாறு தினமும் மாலையில் சமர்ப்பிக்கும் இந்தக் கிளி, மறுநாள் யாரேனும் ஒரு பக்தருக்குப் பிரசாதமாக வழங்கப்பட்டுவி டுமாம். ஆண்டாள், ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு சுகபிரம்மரிஷியை கிளி ரூபத்தில் தூது அனுப்பியதாகவும் அவ்வாறு அவர் தூது சென்று வந்ததற்கு எ ன்ன பிரதி உபகாரம் வேண்டும் என்று ஆண்டாள் கேட்க, சுகப்பிரம்மம், ‘இதே கிளி ரூபத்தில் அவள் கையில் தினமும் தான் இருக்க அருளுமாறு’ கேட்டுக் கொண்டாராம். அவர்தான் இப்படி தினம் தினம் புதுப் புதுக் கிளியாக உருவெடுத்து, ஆண்டாளை மேலும் அலங்கரிக்கிறார்.

மகள் மீது மிகுந்த பாசம் கொண்ட தந்தையாகத் திகழ்ந்தவர் பெரியாழ்வார். ஆண்டாளை ரங்கன் விருப்பப்படி திருமணம் செய்து கொடுக்க சென்ற போது, ஆண்டாள் சுவாமியுடன் சேர்ந்துவிட்டாள். அப்போது தன் மகளைக் காணாத அவர், பிரிவுத் துயரம் தாளாமல், ‘‘ஒருமகள் தன்னையுடையேன் உலகம் நிறைந்த புகழால் திருமகள் போலவளர்த்தேன் செங்கண்மால்தான் கொண்டுபோனான்’’ என்று வருந்திப் பாடினார். தனது இல்லத்தில் மகாரா ணியாக வாழ்ந்தவள், தற்போது பெருமாளை மணம் முடிக்கின்றாளே! அவள் இங்கே இருந்தது போல சிறப்புடன் அங்கே வாழ்வாளா, என்று ஒரு தந் தையின் பதைபதைப்புடன் கேட்டார் அவர்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர், ஆண்டாளின் மடியில் சயனித்திருப்பார். அதுபோல, ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலின் ஆடித்திருவிழாவின் 7ம் நாளன்று ரங்கமன்னார் சுவாமி, ஆண்டாளின் மடியில் சயனித்திருப்பார். இவ்வூர் கிருஷ்ணன் கோயிலில் இந்த நிகழ்ச்சி நடைபெறும். இந்த தரிசனம் மிகவும் விசேஷமானது. தம்பதியரிடையே ஒற்றுமையை வலுப்படுத்தக் கூடியது. இக்கோயிலில், ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாத பகல்பத்து வைபவத்தின் முதல்நாள், ஆண்டாள் தம் பிறந்தகமான வேதபிரான்பட்டர் வீட்டிற்குச் செல்வாள். அந்த வீட்டு முன்பு காய்கறிகளை பரப்பி வைத்து ஆண்டாளுக்கு வரவேற்பு கொடுப்பார்கள். இதனை, ‘பச்சைப் பரத்தல்’ என்பார்கள். சுண்டக் காய்ச்சிய பாலும் வெல்லமும் சேர்த்த திரட்டுப்பால், மணிப்பருப்பு மற்றும் கொண்டைக்கடலை நைவேத்யத்தை ஆண்டாளுக்குப் படைப்பார்கள்.

பொதுவாகவே, திருமணம் ஆகப்போகும் பெண்கள் இந்த உணவுப் பொருட்களை சாப்பிட்டால் நேர்த்தியான உடல்நலம் பெறுவாள் என்பது ஒரு மருத்துவ நம்பிக்கை. பெருமாளுடன் திருமணம் நடக்கும் முன் ஆண்டாளுக்கும் இவ்வாறே கொடுத்தார்கள், அக்காலத்தில். அதன் நினைவாக இன் றும் இவ்வழக்கம் தொடர்கிறது. அதேபோல, வைகாசி பௌர்ணமியன்று, ஆண்டாளுக்கு தயிர் சாதமும் பால் மாங்காயும் நிவேதனம் செய்யபடுகின்றன. அது என்ன பால் மாங்காய்? சுண்ட காய்ச்சிய பாலில் நறுக்கிய மாங்காய் துண்டுகள், மிளகு, சீரகம், சர்க்கரை சேர்த்துத் தயாரிக்கப்படும் ஓர் உணவுப் பொருள். பெரியாழ்வார் தலைமுறையினர் இதனைப் படைப்பார்கள். இந்நேரத்தில் ஆண்டாள் வெண்ணிற ஆடை அலங்காரத்தோடு, சந்தனம், மல்லிகை மலர் சூடி காட்சி தருவாள். ஆண்டாள் 30 பாடல்கள் கொண்ட திருப்பாவையையும் 143 பாசுரங்கள் கொண்ட நாச்சியார் திருமொழியையும் பாடிய பெருமை கொண்டது ஸ்ரீவில்லி புத்தூர்.

அனைத்து பெருமாள் கோயிலிலும் அதிகாலையில் நடை திறப்பின்போது, திருப்பல்லாண்டும் திருப்பாவையும் பாடப்படுகின்றன. இவ்விரண்டு பிரபந்தங்களையும் பாடிய தந்தை, மகள் இருவரும் பிறந்த ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர் என்பது கூடுதல் பெருமை. ஆண்டாள் அவதரித்தது, நளவருடம், ஆடி மாதம், பூர நட்சத்திரம், செவ்வாய்க்கிழமையன்று. இப்போதும் ஒவ்வொரு வருடமும் ஆடி பூரத்தன்று, ஆண்டாள் தனியே தான் உதித்த நந்தவனத்திற்கு எழுந்தருள்கிறாள். அப்போது, திருப்பாவை, நாச்சியார்திருமொழி, திருப்பல்லாண்டு பாசுரங்கள் பாடப்படுகின்றன. கணவன் வீட்டில் எவ்வளவுதான் ஒரு பெண் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தாலும் பிறந்த வீட்டிற்கு அவள் செல்லும்போது அந்த மகிழ்ச்சி மேலும் கூடும். அதேபோல, ஆண்டாள் நந்தவனத்துக்குச் செல்லும் அந்த நாளில் அவளை வழிபட அனைத்து நியாயமான பிரார்த்தனைகளும் நிறை வேறும் என்பர்.

தினமும் ஆண்டாளுக்கு சாத்தப்பட, செவ்வந்தி (மஞ்சள்), விருட்சி (சிவப்பு), சம்பங்கி (வெள்ளை), மருள் (பச்சை), கதிர்பச்சைப்பூ (பச்சை) ஆகிய மலர்களும் துளசியும் பிரதானமாக சேர்க்கப்பட்டு மாலை தயாரிக்கப்படுகிறது. இப்பூக்களை வழங்கும் செடிகள் அனைத்தும் பெரியாழ்வார் உருவாக் கிய நந்தவனத்திலேயே வளர்க்கப்படுகிறது. திருவிழாக்காலங்களில் மட்டும் ஸ்ரீரங்கத்தில் இருந்து மலர்மாலை கொடுத்தனுப்புகின்றனர். ஆண்டாளை, ரங்கமன்னாருக்கு திருமணம் செய்து கொடுப்பதற்காக அவளை ஸ்ரீரங்கத்திற்கு அழைத்துச் சென்றார் பெரியாழ்வார். அவர்கள் காவிரிக்க ரையை அடைந்ததும் தான் மணக்கவிருப்பவன் குடியிருக்கும் பகுதியில் தான் பல்லக்கில் செல்வது அவருக்கு மரியாதை தருவதாக இருக்காது என எண்ணினாள் ஆண்டாள். எனவே, தன்னை உடனே ஆட்கொள்ளும்படி ரங்கமன்னாரிடம் வேண்டினாள். ரங்கமன்னாரும் அவளை தன்னுடன் சேர்த்துக் கொண்டார்.

இதனிடையே, தன் மகள் பாதுகாப்பாக இருக்கிறாளா என்றறிய பல்லக்கிற்குள் பார்த்தார் பெரியாழ்வார். ஆண்டாள் அங்கில்லாததைக் கண்டு திகைத்தார். உடனே ரங்கமன்னார், தன் மகளை அழைத்துக் கொண்டதை அறிந்த அவர், தன் ஊரிலேயே அவர்கள் திருமணம் நடைபெற வேண்டும் என்று ரங்கமன்னாரை வருந்திக் கேட்டுக்கொண்டார். (இப்போதுதான் பாச ஏக்கத்துடன், செங்கண்மால் கொண்டுபோனான் என்று பாடினார் பெரியாழ்வார்) ரெங்கமன்னாரும் ஒப்புக்கொண்டார். அதன்படி பங்குனி உத்திரத்தன்று ஆண்டாளை, ரெங்கமன்னார் ஸ்ரீவில்லிபுத்தூரில் திருமணம் செய்து கொண்டார்.

இந்நாளில் திருக்கல்யாணமும் தேர்த்திருவிழாவும் நடக்கிறது. மிகச் சிறந்த தொழில் நுட்பத்துடன் உருவாக்கப்பட்டிருக்கும் தேர் இது. ‘சாலி வாகன சகாப்தம் கொல்லம் 1025 வருஷம் சௌமிய வருடம் ஆவணி 13 குருவாரம்’ என்று அந்தத் தேரில் செதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து அந்தத் தேர் எவ்வளவு தொன்மையானது என்பது புரிகிறது. பங்குனி மாதம் உத்திர நட்சத்திர நாளில் ஆண்டாள் திருக்கல்யாணம் நடக்கிறது. அப்போது, பெரியாழ்வார், உற்சவர் சிலாரூபமாகத் தன் இருப்பிடத் திற்கு செல்வார். அவருடன் பெரியாழ்வாரின் வம்சாவழியினர் உடன்வர, 2 கலசத்தில் தீர்த்தம் எடுத்துக் கொண்டு ரங்கமன்னாருக்கு பூரணகும்ப மரி யாதை கொடுத்து வரவேற்பார்கள். தங்கள் பெண்ணை அவருக்கு மனப்பூர்வமாக கன்னிகாதானம் செய்து கொடுப்பதாக சொல்லி உத்தரவாதம் அளிப் பார்கள். பின் ரெங்கமன்னார், ஆண்டாளுக்கு மாலையிட்டு, அவளைத் தன் மனைவியாக்கிக்கொள்வார்.

தன் தந்தை பெரியாழ்வார் மூலமாக கண்ணனின் லீலைகளைப் பற்றி அறிந்து கொண்டாள் ஆண்டாள். அதன்பிறகு, கண்ணன் மீது தீராத அன்பு கொண்டாள். ஸ்ரீவில்லிபுத்தூரை கோகுலமாகவும் தன்னை கோபிகைப் பெண்ணாகவும் பாவித்துக்கொண்டு, கண்ணனை வேண்டிப் பாசுரங்கள் பாடி னாள். பெருமாளும் அவளைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால், ஆண்டாள் விரும்பியது கண்ணனைத்தானே! எனவே, மனைவி ஆண்டாளின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக, இத்தலத்தில் பெருமாள், ஆண்டாளுக்கு கிருஷ்ணராகக் காட்சி தந்து அருள்புரிந்தாராம். எனவே, இங்குள்ள ரங்க மன்னார் கிருஷ்ணராகவும் ஆண்டாள் ருக்குமணியாகவும் கருடாழ்வார் சத்தியபாமாவுமாகவும் அருளுவதாக ஐதீகம்.

கண்ணன் ‘வாழ்ந்த’ கோகுலமல்லவா ஸ்ரீவில்லிபுத்தூர்! அதோடு, ‘வாங்கக் குடம் நிறைக்கும் பசுக்கள்’ என்று ஆண்டாளும் பாடி மகிழ்ந்திருக்கி றாளே! அதனாலேயே இப்பகுதி, பசுமாடுகள் நிறைந்து வாழ்ந்திருந்த, வாழ்ந்திருக்கும் ‘ஆயர்பாடி’ தலமாகும். அதனால் இங்கே அதிக அளவில் பால் உற்பத்தியாகி, கோயில் தேவைகளுக்குப் போக எஞ்சிய பால், பால்கோவாவாகத் தயாரிக்கப்படுகிறது; வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது! ஸ்ரீவில்லிபுத்தூர் என்றாலே ஆண்டாளுக்கு அடுத்தபடியாக பால்கோவா நினைவுக்கு வருவதற்குக் காரணமும் இதுதான்.
 

Latest ads

Back
Top