• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

ஸ்ரீராமானுஜ சஹஸ்ராப்தி

இன்று(06/05/2019) சித்திரையில் கார்த்திகை.
'உய்யக்கொண்டார்'என்று நாதமுனிகளால் போற்ற
ப்பட்ட,ஸ்ரீவைஷ்ணவ குருபரம்பரையில் ஆறாவது குருவான,ஸ்ரீபுண்டரீகாக்ஷரின் திருநட்சித்திரம்(1134 ஆவது).இவர் தனியன்:
"நம:பங்கஜ நேத்ராய நாத:ஸ்ரீபாத பங்கஜே!
ந்யஸ்த ஸர்வபராய அஸ்மத்
குலநாதாய தீமதே!!"

"ஸ்ரீமந் நாதமுனிகளின திருவடிகளில்,தம் சர்வபாரமும் விட்டுச் சரணடைந்த நம் குலநாதரான,புண்டரீகாக்ஷரை வணங்குகிறேன்"

உய்யக்கொண்டாருக்கும்,
உடையவருக்கும் உள்ள
சம்பந்தம் பற்றி
அனுபவிப்போம்:

1.நாதமுனிகள் சம்பந்தம்:

நாதமுனிகள்,நம்மாழ்வாரிடம் இருந்து நாலாயிரத் திவ்யப் பிரபந்தங்களைப் பெற்ற போது,எதிர்வரும் காலத்தில் ஜகதாசார்யராக அவதரிக்கப் போகும், ராமானுஜர் விக்ரகத்தையும்(பவிஷ்யதாசார்யர்) உடன் பெற்றார்.அந்த விக்ரகத்துக்கு நாதமுனிகள் திருவாராதனம் செய்து வந்தார்.தம் அந்திமக் காலத்தில் அந்த விக்ரகத்தை தம் பிரதமசீடர் உய்யக் கொண்டாரிடம் கொடுத்து, தமக்குப் பேரனாகத் தோன்றப்
போகும் யமுனைத்து
றைவரிடம் ஒப்படைக்குமாறு கூறினார்.உய்யக்கொண்டாரும் தம் காலத்தில், அந்த ராமானுஜருக்குதிருவாராதனைசெய்தார். பின்னர் மணக்கால் நம்பி மூலம்,ஆளவந்தாரை அடைந்து,அவரிடமிருந்து திருக்கோஷ்டியூர் நம்பிகளுக்குச் சென்றது. இன்றும் அந்த பவிஷ்யதா சார்யர் ராமானுஜரை திருக்கோஷ்டியூரில் சேவிக்கலாம்.

2 திருவெள்ளறை சம்பந்தம்:

உய்யக்கொண்டார் அவதார ஸ்தலம்;பல காலம் வாழ்ந்த ஸ்தலம் திருவெள்ளறை.
திருவெள்ளறை
புண்டரீகாக்ஷப்பெருமாள் திருநாமம் தான்,இவருடைய இயற்பெயர்.இவருக்கு திருவெள்ளறை தாயார் சந்நிதி வளாகத்துள்,சந்நிதி உள்ளது. அங்கு நித்ய திருவாராதனை செய்யப் படுகிறது.

ஸ்ரீரங்கம் பெரிய கோவிலில், ராமானுஜருடைய சீர்திருத்த
ங்களைப் பிடிக்காத சிலர் அவர் உணவில் விஷம் கலந்து
விட்டார்கள்.இந்த நிகழ்ச்சி க்குப்பின் ராமானுஜர் ஸ்ரீரங்கத்தை விட்டுச் சென்று திருவெள்ளறையில் இரண்டு ஆண்டுகள் இருந்தார். அங்கிருந்த காலத்தில் தான் ஸ்ரீபாஷ்யத்தின் ஒரு பகுதி எழுதப்பட்டது.உடையவரைப் பிரிந்திருக்க முடியாத நம்பெருமாள், திருவரங்கப் பெருமாள் அரையரை, திருவெள்ளறை சென்று அவரை அழைத்து வருமாறு பணித்தார்.(நம்பெருமாள் இவரையே தான் காஞ்சி தேவப்பெருமாளிடம் அனுப்பி
ராமானுஜரை ஸ்ரீரங்கத்துக்கு நிரந்தரமாக அழைத்து வரச் செய்தார்).அங்கு சென்ற அரையர்,திருவாய்மொழி(9-5)-

"இன்னுயிர்ச் சேவலும்,நீரும்,
கூவிக்கொண்டு இங்கு
எத்தனை,
என்னுயிர் நோவமிழற்றேன்
மின் குயிற்பேடைகாள்!
என்னுயிர்க் கண்ணபிரானை
நீர் வரக்கூவுகிலீர்;
என்னுயிர் கூவிக் கொடுப்பார்
க்கும், இத்தனை வேண்டுமோ"
என்று தொடங்கி 11 பாசுரங்களையும் அற்புதமான இசையோடுபாடி,ராமானுஜரை ஸ்ரீரங்கத்துக்கு அழைத்து
வந்தார்.

3. திருப்பாவை சம்பந்தம்:

நாம் நாளும் சேவிக்கும் திருப்பாவைத்தனியன்களான,
'அன்னவயல் புதுவை
ஆண்டாள்',&'சூடிக்கொடுத்த சுடர் கொடியே'பாடியவர் உய்யக்கொண்டார் தான்.(இவர் வேறு கிரந்தங்களோ, தனியன்களோஇயற்றியதாகத் தெரியவில்லை)

ராமானுஜரின் திருப்பாவை சம்பந்தம்மிகப்பிரசித்தமானது.அவர்'திருப்பாவை ஜீயர்'
என்றேஅழைக்கப்பட்டார்.அவர் எந்நேரமும் திருப்பாவையை அநுசந்தானம் செய்து கொண்டே இருப்பார்.'உந்து மத களிற்றன்'பாசுரம் சேவித்துவரும்போது,பெரியநம்பிகளின் திருக்குமாரத்தி, அத்துழாய் திருமாளிகை கதவைத் திறக்க, உடையவர் நப்பின்னையே வந்து திறந்ததாகப் பாவித்து மூர்ச்சையான வைபவம், ஆண்டாள் ஆசைப்பட்டபடி திருமாலிருஞ்சோலை அழகருக்கு, நூறுதடா அக்கார அடிசலும்,நூறுதடா வெண்ணெயும் சமர்ப்பித்து ஆண்டாளுக்கு (கோவில்) 'அண்ணன்'ஆன வைபவம் ஆகியவை அற்புதமானவை.

4.கைங்கர்யம் செய்து, பெயர் பெற்ற சம்பந்தம்:

ஒரு சமயம்,உய்யக்
கொண்டாரின் ஆசார்யர் நாதமுனிகள், தம் தேவியரை (அரவிந்தப்பாவையார்) அவர்தம் தாய்வீட்டுக்கு கொண்டு விட்டு வருமாறு,சீடர் உய்யக்கொண்டாரைப் பணித்தார்.அவ்வாறு சென்ற உய்யக்கொண்டாரின் மேன்மையை அறியாத அங்குள்ளோர் அவரை முற்றத்தில் ஓர் ஓரத்தில் உட்கார வைத்து பழைய சோறும்,நீர்மோரும் கொடுத்தார்களாம்.ஆனால் அவர் அதை ஆசார்ய சம்பந்தமுடையோர்(பரிஜனம்)
வழங்கிய உன்னத பிரசாதம் என்று மிகப் பரவசத்துடன் ஸ்வீகரித்தாராம்."தத் உச்சிஷ்டம் சுகாவஹம்"என்று.
இதை அறிந்த நாதமுனிகள், உய்யக்கொண்டாரின் நிஷ்டையை மெச்சி"என்னை உய்யக் கொண்டீரோ!!"என்று வியந்து பாராட்டினார். இவரது இந்த நிஷ்டையை ஸ்ரீதேசிகன் ஸ்வாமியும் தமது 'எதிராஜ ஸப்ததி'ல் கொண்டாடுகிறார்.

"நம:ஸ்யாம் அரவிண்டாக்ஷம் (புண்டரீகாக்ஷர்),
நாதபாவே வியவஸ்திதம்,
"சுத்த சத்வ மயம்"செளரே,
அவதாரம் இவ அபாரம்!"
இவ்வாறாக புண்டரீகாக்ஷர் உய்யக்கொண்டார் ஆனார்.

ராமானுஜர், தம் பஞ்ச ஆசார்யர்களுள் ஒருவரான, திருவரங்கப்பெருமாள் அரையருக்கு, ஆறு மாதம் தொடர்ந்து கைங்கர்யம் செய்தார்.நாள் முழுதும் நம்பெருமாள் முன் நின்று கொண்டு, இசைகூட்டிப் பாடும் அரையர் களைப்பாக வருவார்.அவருக்கு இதமாக இருக்க, பால் இதமாகக் காய்ச்சி அதில் வேண்டிய பச்சைக் கற்பூரம்/ஏலக்காய் போன்ற திரவியங்கள் சேர்த்துக்கொடுப்பார்.திருமேனிநோகாமல் இருக்க மஞ்சள் அரைத்துத் தேய்த்து,சுடு நீரில் இதமாகக் குளிப்பாட்டி விடுவாராம்.ஒரு நாள் தேய்த்த மஞ்சள் சரியான பதத்தில் இல்லை, என்பதை அரையரின்
முகக்குறிப்பில் இருந்து உணர்ந்து,அதை எடுத்துவிட்டு, மீண்டும் மஞ்சளைப் பதமாக அரைத்து,அரையர் திருமேனியில் இதமாகத் தடவினாராம்.இதனால் பெரிதும் உகப்படைந்த அரையர்," என்னுடைய சர்வஸ்வத்தையும் கொள்ளை கொள்ளவோ நீர் இப்படிச் செய்தது!"என்று வியந்து பஞ்சமோபாய நிஷ்டை/சரம பர்வார்த்த விசேஷத்தை விளக்கிஅருளினார்.ராமருக்கு, லட்சுமணர் கைங்கர்யங்கள் செய்தது போல,இந்த லட்சுமண அம்சமாக வந்த, ராமானுஜரின்கைங்கர்யமும் இருந்ததால் அரையர் இவரை"லட்சுமண முனி"
என்றழைத்தார்.

5 உய்விக்கச் செய்து,பெயர் பெற்ற சம்பந்தம்:

இவருக்கு உய்யக்கொண்டார் என்னும் பெயர் வர,வேறொரு வைபவமும்சொல்லப்படுகிறது.நாதமுனிகள் அஷ்டாங்க யோகத்தில் வல்லவர். அஷ்டாங்க யோகம் மூலம் ஒருவர் உடல் உபாதைகள் பற்றி யோசிக்காமல்,எந்தத் தடையும் இல்லாமல், எம்பெருமானை அனுபவிக்க முடியும்.நாதமுனிகள் இவரிடம் அஷ்டாங்க யோகம் கற்றுக் கொள்கிறீரா என்று கேட்க,
இவர்"பிணம் கிடக்க மணம் புணரலாமா?"(இழவு வீட்டில் திருமணம் நடக்கலாமா) என்றார்.இதற்கு உள்ளுறைப் பொருள் என்னவென்றால்,
"அறியாமையால்,பலரும் இந்த ஸம்சாரத்தில் இருந்து கஷ்டப்பட,அடியேன் மட்டும் தனியாக, எப்படி பகவத் அனுபவம் பண்ண முடியும்?எனவே,அனைவரும் உய்யும் வழிவகை சொல்லுங்கள்"
என்று வேண்டினார்.
நாதமுனிகள் அவருடைய பரந்த உள்ளத்தை வியந்த
"நீரே உலகையும்,உலகை யுடைய ஸ்ரீமந்நாராயணனை
யும்,அவனைச் சொல்லும் அருளிச் செயல்களையும், அவற்றைப் பெற்ற
அடியேனையும்
# உய்யக் கொண்டவர்# !!"
என்று பாராட்டி,அருளிச் செயல்களையும் அவற்றின் திவ்ய அர்த்தத்தையும், ரஹஸ்யார்த்தங்களையும் முழுவதும் கொடுத்தார். இவ்வாறாக இடைக்காலத்தில் காணாமல் போன நாலாயிரத் திவ்யப் பிரபந்தங்களை நம்மாழ்வார் நாதமுனிகளுக்கு அருளித்தர,அவர் அவற்றை உய்யக்கொண்டாருக்கு அருளித்தந்தார்.உய்யக்கொண்டார் திருவெள்ளறையில் எழுந்தருளியிருந்த காலத்தில் கோவிலுக்குப் பின்னால் உள்ள பாறையில் அமர்ந்து தம் சீடர்களுக்கு இவற்றை உபதேசித்து வந்தார். அந்தப்பாறை,உய்யக்கொண்டார் பாறை என்று அழைக்கப் படுகிறது.

திருக்கோஷ்டியூர் நம்பிகள், ராமானுஜரையே, 18 முறை நடக்கவைத்து,சோதனைகளுக்கு உட்படுத்தியபின் தான் திருமந்திர அர்த்தத்தை, ராமானுஜருக்குஉபதேசித்தார். மேலும் இது பரம ரஹஸ்யம்; யாருக்கும் சொல்ல வேண்டாம் என்றார்.உயர்ந்தஅர்த்தத்தைத் தெரிந்து,உகந்த உடையவர், அந்த அர்த்தத்தை/உகப்பை மற்றவர்களிடமும் பகிர விழைந்தார்.தெற்காழ்வான் சந்நிதிக்குச் சென்று, அங்கிருந்த ஸ்ரீவைஷ்ணவர் களை எல்லாம் அழைத்து, அந்தப் பரம ரஹஸ்ய அர்த்தத்தை உபதேசித்தார். இதை அறிந்த நம்பி உடையவரிடம்"நீர் எப்படி ஆசார்ய நியமனத்தை மீறி அநேகம் பேருக்குச் சொன்னீர்?"என்று கோபித்துக் கொண்டார்.உடையவர் "ஆசார்ய நியமனம் மீறிய அடியேனுக்கு நரகமே புகல்;ஆயினும் அடியேன் ஒருவனே அன்றோ நரகம் புகுவது?தேவரீர் திருவடிகளை முன்னிட்டுக் கொண்டு சொல்வதால், இந்த ஆத்ம கோடிகள் எல்லாம்,தேவரீர் திருவடி சம்பந்தத்தாலே உஜ்ஜீவித்து மோட்சம் (வைகுண்டம்) பெறுவார்கள், என்று சொன்னேன்" என்றார்.இது கேட்டுப் பேருவகை அடைந்த நம்பிகள்,
"இந்த பர ஸம்ருத்தி நமக்குக் கூடிற்றில்லேயே"என்றருளி,
"எம்பெருமானாரே!!" வாரும்,என்று எடுத்து அணைத்துக் கொண்டார்.

"அவரோ(அந்தத் ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டிருப்பவரோ) நீர்?!"என்று போற்றி,"இது வரையில் இத்தர்சனம் பரம வைதிக சித்தாந்தம் என்று இருந்தது.இன்று முதல் 'எம்பெருமானார் தர்சனம்'
என்று சொல்லுங்கள்" என்று எல்லாருக்கும் அருளிச்
செய்தார்.

6.ஆழ்வார் திருநகரி சம்பந்தம்!

ஆழ்வார் திருநகரியில் மட்டுமே உய்யக்கொண்டாருக்கு
என்று தனிக் கோவில் இருக்கிறது. பவிஷ்யத ஆசார்யர் -ராமானுஜர் சந்நிதிக்குச் செல்லும் வழியில்.

அதேபோல் ஆழ்வார் திருநகரி திவ்ய தேசத்தில் மட்டுமே, ராமானுஜருக்கு என்று பழமையான தனிக் கோவில் உள்ளது(மற்ற திவ்ய தேசங்களில் பெருமாள் கோவிலுக்குள்ராமானுஜருக்கு தனி சந்நிதி உள்ளது.
திருக்கண்ணமங்கையில் அண்மையில் நவீனமாக ஒரு ராமானுஜர் கோவில் அமைத்துள்ளார்கள்).இந்தக் கோவிலும்,கோவில் அமைந்துள்ள 'ராமானுஜ சதுர்வேதி மங்கலம்'என்னும் சிற்றூரும் திருவாய்மொழிப் பிள்ளையால்(மணவாள மாமுனிகளின் ஆசார்யர்), சுமார் 700 ஆண்டுகளுக்கு முன் நிர்மாணிக்கப்பட்டவை.
 

Latest ads

Back
Top