• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

ஸ்ரீரங்கம் நம் பெருமாள் பெயர் வர காரணம்

சலவைத் தொழிலாளி அரங்கனுக்கு சூட்டிய பெயர்! நெகிழ வைக்கும் வரலாறு!
வைகாசி 17, நம் வாழ்வில் மிக முக்கியமான ஒரு நாள். ஆம் அவர்கள் அரங்கன் வனவாசம் சென்று திரும்பி வந்த நாள்!
என்ன அரங்கன் வனவாசம் சென்றாரா?

ஆம்… ராமன் 14 ஆண்டுகள் வனவாசம் சென்றான். ஆனால் திருவரங்கத்தில் எழுந்தருளியிருக்கும் அழகிய மணவாளனோ 48 ஆண்டுகள் வனவாசம் சென்றான். இதன் பின் உள்ள சம்பவங்கள் கல்நெஞ்சையும் கரையவைக்கும் என்றால் மிகையாகாது.
“கண்ணீர் விட்டா வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை கண்ணீராற் காத்தோம். கருகத் திருவுளமோ?” என்றான் பாரதி. பாரதி பாடிய இந்த வரிகள் தேச சுதந்திரத்துக்கு மட்டுமல்ல… மத சுதந்திரத்துக்கும் பொருந்தும்.
ஆம், இன்று நீங்கள் சர்வ சாதாரணமாக தரிசிக்கும் (அல்லது தரிசிக்க மறந்துவிட்ட) திவ்ய தேசங்களுக்கு பின்னால் உள்ள தியாகத்தின் வரலாறு உங்களுக்கு தெரியுமா? எத்தனை எத்தனை பேர் இதற்காக தங்கள் வாழ்க்கையை அர்பணித்திருக்கிறார்கள் தெரியுமா??

108 வைஷ்ணவ திவ்ய தேசங்களில் முதன்மையானது, கோயில் என்று அழைக்கப்படும் திருவரங்கம்.
முகலாயர்களின் ஆட்சி இந்தியாவில் ஏற்பட்ட போது, 12 ஆம் நூற்றாண்டு வாக்கில் இந்துக்களின் கோவில்களும், கோவில் சொத்துக்களும் மாலிக் கபூர் தலைமையில் வந்த படையினரால் பெருமளவு சூறையாடப்பட்டன. மதுரை, ஸ்ரீரங்கம் என பிரசித்தி பெற்ற பல கோவில்கள் தாக்கப்பட்டு அங்கிருந்த விக்ரகங்கள் மற்றும் பெருஞ்செல்வங்கள் கொள்ளையடிக்கப்பட்டன.

1310 ஆம் ஆண்டு மாலிக் கபூர் படையெடுப்பின் போது, திருவரங்கத்தின் உற்சவர் அழகிய மணவாளன் கவர்ந்து செல்லப்பட்டார். உள்ளூர் பெருமக்கள், கரம்பனூர் பின்சென்றவல்லி மற்றும் அரையர்கள் ஆகியோர் 8 ஆண்டுகள் முயற்சிகள் பல செய்து டெல்லி வரை சென்று அழகிய மணவாளனை மீட்டு வந்தனர் ஆனால், 1323 ஆம் ஆண்டு முகம்மது பின் துக்ளக்கின் படையெடுப்பின் போது, பிள்ளை லோகாச்சாரியார் என்கிற வைணவப் பெரியவர் மூலவர் ரங்கநாதரையும், ரங்கநாயகியையும் சுவர் எழுப்பி மறைத்துவிட்டு, உற்சவர் அழகிய மணவாளனை பாதுகாக்க வேண்டி தம்முடன் எடுத்துக்கொண்டு தெற்கு நோக்கி நீண்டதொரு பயணத்தை மேற்கொண்டு திருமாலிருஞ்சோலை, கோழிக்கோடு, முந்திரி மலை பள்ளத்தாக்கு, திருக்கணாம்பி, திருநாராயணபுரம், திருமலை, செஞ்சி, அழகியமணவாளம் கிராமம் ஆகிய ஊர்களில் எழுந்தருளிய பிறகு கி.பி. 1371ஆம் ஆண்டு (பரீதாபி ஆண்டு-வைகாசி மாதம் 17ஆம்நாள்) திருவரங்கத்திற்கு 48 ஆண்டுகள் கழிந்து மீண்டும் எழுந்தருளினார். இதுவே அரங்கனின் வனவாசம் என்று வர்ணிக்கப்படுகிறது.

அழகிய மணவாளனுக்கு நம்பெருமாள் என்று பெயர் ஏற்பட்டதன் பின்னணியில் ஒரு நெகிழ வைக்கும் வரலாறு உண்டு. பிள்ளை லோகாச்சாரியார் அழகிய மணவாளனை எடுத்துச் சென்றபோது அவருக்கு வயது என்ன தெரியுமா? 118. ஆம்.. தள்ளாடும் தேகம். தள்ளாடாத நோக்கம். பலவித கஷ்டங்களுக்கு இடையே மதுரை அருகே உள்ள ஜோதிஷ்குடி (தற்போது கொடிக்குளம் என்று வழங்கப்படுகிறது) சென்ற பிள்ளை லோகாச்சாரியார் அங்கு எழுந்தருளியிருக்கும் வேதநாராயணரை தஞ்சமடைந்து கோவிலுக்கு பின்புறம் இருந்த ஒரு மலைக்குகையில் பாதுகாப்பாக அரங்கனை வைத்து வழிபட்டு வந்தார். இதை ஒற்றர்கள் மூலம் அறிந்த துக்ளக்கின் படையினர் இந்த இடத்தை முற்றுகையிட, அரங்கனை மட்டும் தன்னுடன் எடுத்துக்கொண்டு எப்படியோ மலையுச்சிக்கு சென்றார் பிள்ளை லோகாச்சாரியார். படையினர் எங்கும் தேடியும் அரங்கனின் விக்ரகத்தை கண்டுபிடிக்க முடியாமல் திரும்பிப் போக, அவர்கள் சென்ற பின்னர், மலையிலிருந்து இலை தழை செடி கொடிகளை பிடித்து கொண்டு இறங்கினார் பிள்ளை லோகாச்சாரியார்.

அப்படி இறங்கும்போது அவர் தவறி விழுந்துவிட, படையெடுப்பில் கூட தப்பிய அரங்கனின் விக்ரகத்துக்கு இந்த விபத்தில் எந்த சேதமும் ஏற்பட்டுவிடக்கூடாது என்று பதறிய ஆச்சாரியார் கீழே அரங்கனை தனது மார்பு பகுதியில் பிடித்துக்கொண்டு, முதுகு பக்கம் கீழே படுமாறு விழுந்தார்.
இதனால் முதுகெலும்பில் படுகாயமுற்ற அவர், அதற்கு பிறகு சொற்ப நாட்களே உயிரோடு இருந்தார். தனது சீடர்களை அழைத்த அவர், எப்படியாவது அழகிய மணவாளனை திருவரங்கத்தில் மீண்டும் சேர்ப்பிக்கும்படி கூறிவிட்டு, ஆனி மாதம் ஜேஷ்டசுத்த துவாதசி வளர்பிறையில் வைகுந்த பதவி அடைந்தார்.

அவரது சீடர்கள் அரங்கனுக்கு சாத்தப்பட்டிருந்த மாலை பரிவட்டம் முதலியவற்றை அவருக்கு சாத்தி அவரை நல்லடக்கம் செய்தனர். அந்த இடத்தில ஒரு பிருந்தாவனம் எழுப்பப்பட்டது. அவருக்கு செய்ய வேண்டிய அனைத்து சடங்குகளையும் அங்கேயே சில நாட்கள் தங்கியிருந்து செய்த அவரது சீடர்கள் மீண்டும் அரங்கனை திருவரங்கம் கொண்டுவந்தனர். (அரங்கன் இவ்வாறு மீண்டும் திருவரங்கம் வந்து இந்த ஆண்டோடு 644 ஆண்டுகள் ஆகின்றன.)
1323 ஆம் ஆண்டு சென்ற அழகிய மணவாளன், 48 ஆண்டுகள் கழித்து மீண்டும் திருவரங்கம் வந்தபோது கிட்டத்தட்ட அனைவரும் அவரை மறந்தே விட்டனர் (அதாவது வரலாறு மறந்துவிட்டது). ஏற்கனவே படையெடுப்பின் போது பலர் கொல்லப்பட்டதால், வந்தவர் திருவரங்கத்தில் இருந்த அசல் அழகிய மணவாளன் தான என்கிற சந்தேகம் அனைவருக்கும் ஏற்பட்டது.

தங்கள் சந்தேகத்தை எப்படி தீர்த்துக்கொள்வது என்று வழி தெரியாது தவித்தனர். அப்போது அவர்களுக்கு ஒரு தகவல் கிடைத்தது. பல ஆண்டுகளுக்கு முன்பு அழகிய மணவாளனின் வஸ்திரங்களை துவைத்த ஈரங்கொல்லி (சலவைத் தொழிலாளி) ஒருவர் இருப்பதாகவும், அவரிடம் சென்றால் இதற்கு ஏதேனும் விடைக்கிடைக்கலாம் என்றும் தெரிந்தது. அவரை தேடிச் சென்றபோது அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. காரணம் அந்த சலவைத் தொழிலாளிக்கு வயது 90 என்பது மட்டுமல்ல அவருக்கு இரண்டு கண்களிலும் பார்வை வேறு கிடையாது. பார்வை இல்லாத நிலையில் எப்படி இவர் தான் அசல் அரங்கன் என்று அடையாளம் கூற முடியும்?
இவர்கள் வந்த நோக்கத்தை தெரிந்த கொண்ட அந்த தொழிலாளி, “கவலைப்படாதீர்கள்… எனக்கு புறக்கண் தான் இல்லையே தவிர அரங்கன் தந்த அகக்கண் இன்னமும் உள்ளது” என்று கூறியவர், “அரங்கனின் மேனியில் கஸ்தூரி அதிகளவு , பயன்படுத்தப்பட்டிருக்கும்.

அவரது ஆடையை நான் துவைப்பதற்கு முன், அந்த ஆடையை நனைத்து அதை பிழிந்து அந்த நீரை பருகிவிட்டே தான் ஒவ்வொரு முறையும் சலவை செய்வது வழக்கம், எனவே அரங்கனுக்கு திருமஞ்சனம் (அபிஷேகம்) செய்துவிட்டு அந்த ஈர ஆடையை என்னிடம் கொடுங்கள் போதும்!” என்றும் கூறினார்.
அவர்களும் அதே போன்று அரங்கனுக்கு திருமஞ்சனம் செய்து ஈர ஆடையை தர, அதை கண்களில் ஒற்றிக்கொண்டு பிழிந்து பருகிய அந்த சலவைத் தொழிலாளி, “இவரே நம் பெருமாள்!” என்று உற்சாகத்துடன் கூக்குரலிட்டார். அன்று முதல் தான் திருவரங்கத்தில் உற்சவருக்கு ‘நம்பெருமாள்’ என்று பெயர் ஏற்பட்டது.

ஒரு ஏழை சலவைத் தொழிலாளி சூட்டிய பெயரையே இன்றளவும் வைத்துக்கொண்டு நம்பெருமாள் அருள்பாலித்து வருவதில் வியப்பேதும் இருக்க முடியாது. ஏனெனில்… அவர் தான் ‘நம்’ பெருமாளாயிற்றே!
 

Latest ads

Back
Top