• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

வையம் புகழும் வைகாசிப் பெருநாள் காஞ்சி வரதராஜப் பெருமாள் கருட சேவை

வையம் புகழும் வைகாசிப் பெருநாள்--காஞ்சி வரதராஜப் பெருமாள்
கருட சேவை !!

இன்று காலை 4 மணிக்கு காஞ்சிபுரத்தில் கருட சேவை கோயில் வளாகத்துக்குள் பக்தர்களின்றி நடைபெற்று இருக்கும்.ஒவ்வோர் ஆண்டும் கருட சேவை சேவிக்க,
அதிகாலையிலேயே கடல் அலையென மக்கள் கூட்டம் திரண்டிருக்கும்.ஆனால்
கடந்த ஆண்டும்,இந்த ஆண்டும் பக்தர்களின்றி நடைபெற்றது என்பது வரதரின் திருவுள்ளத்துக்கே உகப்பாக இருந்திருக்காது.இந்த கொடிய தொற்றுகிருமி அதிவிரைவில் முற்றிலும் அழிந்து மக்கள் அனைவரும் தேக நலத்துடனும்,மன நலத்துடனும் இன்புற்று இருக்க தேவப்பெருமாளை வேண்டிக் கொள்வோம்.

அத்தியூரான் புள்ளை ஊர்வான் !

அத்தியூரான்-காஞ்சியில் வரதராஜப் பெருமாள் ஒரு சிறுகுன்றின் மேல் நிற்கும் வரதர்(24+6 படிகள் ஏற வேண்டும்).அந்தக் குன்றுக்கு ஹஸ்திகிரி-யானை உருவத்தில் இருக்கும் குன்று என்று பெயர்.அந்தக் குன்றின் மேல் நிற்பவர் ஹஸ்தி(யானை
ஊரார்;மருவிஅத்தியூரார்.இன்னும் ஒரு முக்கியமான பிரமாணம்-வரதர் முதலில் அவதரித்தபோது,அத்திமரத்தில் ஆன விக்ரமாக அவதரித்தார்.வெப்பம் பொறுக்க முடியாமல் அவர் தம்மை கோவில்புஷ்கரணியான அமிர்தசரஸில்
மூழ்கடித்து 48 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியில் கொணர்ந்து 48 நாட்கள் வைத்திருந்து-திருவாராதனம்
செய்து,மீண்டும் குளத்தில் கிடத்துமாறுகூறினார்.இதனாலும் அத்தியூரார்.

புள்ளை ஊர்வான்:

கருடன் என்னும் புள்ளின்-பறவையின் மீது செல்பவர்.
பூதத்தாழ்வார் ஊர்வான் என்று பாநயத்தில் பாடியிருந்தாலும்,
கருடன் பறப்பார்.பெருமாளுக்கு இருக்கும் பல வாகனங்களில் கருட வாகனமே அதிவேகமானது.
அடியார்கள் துயர்தீர்க்க பெருமாளை சுமந்து கொண்டு ஓடி/பறந்து செல்வார்.(கஜேந்திரனைமுதலையிடமிருந்து ரட்சிக்கச் செல்லும் போது,வேகம் போதவில்லைஎன்று ,வாகனத்திலிருந்து, இறங்கியபெருமாள்,தன்னையும்தூக்கிக் கொண்டு ஓடிய அனுபவம் கருடனுக்கு
மறக்காது!).

நிகரற்ற காஞ்சி கருடசேவை:

சரி;எல்லாப் பெருமாள் கோவில்களிலும் கருடசேவை சிறப்பாக நடைபெறுகிறது.
காஞ்சிபுரம் கருட சேவைக்கு ஏன் ஏற்றம்?எப்படி உலகப்புகழ் பெற்றது?பல கோவில்களில், இதர வரதராஜப் பெருமாள் கோவில்களிலும் கூட பெருமாள் வரம் தரும் வரத ஹஸ்தத்தில் (வலது கீழ்க்கை) சேவை சாதிப்பார் (திருமலை வேங்கடவர்).ஆனால் வரம் தரும் காஞ்சிவரதர் வரத ஹஸ்தத்தில் இல்லாமல் ஏன் அபயஹஸ்தத்தில் சேவை சாதிக்கிறார்?அவர் திருக்கண்கள்,திருவடிகள்,மற்ற திருஅவயவங்கள்,திருமேனி முழுதும் வரம்தரும் அம்சங்களே.
பெயரே வரதராஜர்,பேரருளாளர்,தேவப்
பெருமாள்.எனவே அவருக்குத் தனியாக வரதஹஸ்தம் இல்லை போலும்!!.
அடியார்கள் துயர்தீர்க்கும் அபயஹஸ்தத்துடன் நின்றருள்கிறார்.
இத்தகைய வரம்தருவதே, இயல்பாக உள்ள பெருமாள், கருடவாகனத்தில் பக்தர்கள் இருக்கும் இடம்தேடிச் சென்றால் வரமழை அல்லவா பொழியும்?எனவே காஞ்சிவரதர் கருடசேவை பிரசித்தி பெற்றிருப்பதில் வியப்பேதும் இல்லை.அதுவும் வரதர் புறப்பாடு என்றால் சென்றுவர 12 கி.மீ.தூரம் !!கருட சேவையன்று 16கி.மீ. தூரம்.!ஊரில்உள்ளோருக்கும்,ஊருக்கு வந்துள்ளோருக்கும்,,வெளியூரில் உள்ளவருக்கும் தேடித்,தேடிச் சென்று கடாட்சிப்பார்;வரம் பொழிவார்.
விரைவாகச் சென்றாலும்,யாரையும் விடாது விசாரிப்பார்.

இந்தக் கடாட்சம்/வரம் பெறுவதற்க்காக உலகின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் காஞ்சியில் குவிந்துவிடுவார்கள்.
இன்று காலை 2.30க்கு கண்ணாடி அறையில் இருந்து புறப்படும் வரதர் 3 மணிக்கு கருடவாகனத்தில் எழுந்தருளிப்
பிரகாரமாகச் சென்று நம்மாழ்வார், மதுரகவிகள் ,நாதமுனிகள் மணவாள
மாமுனிகள்.இராமாநுஜர்ஆகியோரைக் கடாட்சித்து,அவர்கள் மங்களாசாசனம் பெற்று,கொடி மண்டபத்தில் நின்று ராஜகோபுர வாசல் வருகிறார்(சுமார் 4.45க்கு).

(இந்த ஆண்டு) எல்லாப் பக்தர்களுக்கும்
தொட்டையாசார்யர் சேவை!!

கோபுரத்துக்குள் நுழைந்ததும்,அவர் திருமுடி மேலிருந்த திருக்குடையை சற்றே சாய்த்து,திருமுகத்தை,சில விநாடிகள் மறைத்து விடுகிறார்கள்அந்த சில நொடிகளில் அவர் திருக்கடிகையில் (சோளிங்கர்) உள்ள அவர் அடியார் தொட்டையாசார்ய ஸ்வாமிக்கு கருடசேவை சாதிக்க அங்கு சென்று விட்டு வந்துவிடுவார்.(அந்த தொட்டையாசார்யர் பல நூற்றாண்டு களுக்குமுன், ஒவ்வோராண்டும் கருடசேவை சேவிக்க காஞ்சிபுரம் வந்துவிடுவார்.ஓராண்டு அவருக்குத் திருமேனி பாங்கில்லாதலால் செல்ல முடியவில்லை.கருடசேவையன்று,அந்த சோகத்தில் மனம் புழுங்கியபடி,வரதரை நினைத்துக் கொண்டிருந்தார்.
அப்போது வரதர் அவர் கண்முன்னால் கருட வாகனத்தில் வந்து சேவை சாதித்தார்.அந்த வைபவத்தைக் கொண்டாட ஒவ்வோர் ஆண்டும் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.)

இந்த ஆண்டு பக்தர்கள் யாரும் கருட சேவைக்கும் செல்ல முடியாததால்,வரதர் தொட்டையாசார்யருக்கு அளித்த சேவையை நமக்கும் அளித்து நம்மை ஆட்கொள்ள வேண்டிப் பிரார்த்திப்போம்.

கோபுரத்தை விட்டு வெளியே வந்ததும் இரண்டு புதுக்குடைகள் அவருக்கு விதானம்ஆகின்றன.
கருடாழ்வார்(பறவை) வந்து புள்ளையூர்வானை பிரதட்சிணம் செய்து இன்புறுகிறார்

வேதாந்த தேசிகன் சந்நிதியில் மாலைமாற்றல்:

அங்கிருந்து ஆங்காங்கே நின்று,நின்று சேவை சாதிக்கிறார்.பக்தர்கள் தாங்கள் நிற்கும் இடங்களில் இருந்தே அவருக்கு நைவேத்யம்--கல்கண்டு, முந்திரி/திராட்சை/நாட்டு சர்க்கரை,மிட்டாய், பல்வேறு இனிப்புப் பலகாரங்கள்,
சர்க்கரை/வெண்பொங்கல்/பழ
வகைகள்ஆகியவை.அவற்றை அனைவருக்கும் பிரசாதமாக விநியோகிக்கின்றனர்.விளக்கொளிப் பெருமாள் கோவிலுக்குச் சென்று
,அங்குள்ள வேதாந்த தேசிகன் சந்நிதியில்,தாம் உடுத்துக்களைந்த மாலையை தேசிகனுக்குச் சூட்டுகிறார்.
அங்கு வரதருக்கு,புதுமாலை,
புதுக்குடைகள் சமர்ப்பிக்க
ப்படுகின்றன.

முடவருக்கும்,முக்திதரும் சேவை:

அங்கிருந்து வழிஉபயங்கள் கணடருளி,பிள்ளையார்பாளையம் என்னும் இடத்துக்குச் சென்று,
அங்குள்ளோருக்கு,கருடசேவை சாதிக்கிறார். ஒரு காலத்தில் இந்த ஊரில் உள்ள முடவர் ஒருவர் கருடசேவை சேவிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.
ஆனால் அவரால் நடந்துவரமுடியாது.
தம் அடியாரின் திருவுள்ளத்தை அறிந்த வரதர்,அவர் இருப்பிடம் செனறு கருடசேவை அருளினார்.அந்த வைபவமாக,ஒவ்வோராண்டும்அங்கு செல்கிறார்.கருடசேவை தவிர, மற்ற புறப்பாடுகளில் அங்கு செல்வதில்லை) திரும்பும் வழியெங்கும் உபயமரியாதைகள் கண்டருளி,மதியம் 1.30க்குக் கோவிலுக்கு வருவார்.

ஸ்ரீமணவாள மாமுனிகள் கொண்டாடிய வரதன் கருட சேவை:

"தாள முத்து மணி,தவள அருணரத்ன வகை சாத்தியே!

சங்கு சக்கரமும் அங்கையில் திகழ மங்கை பாகன் அரனேத்தவே!

நரமுமொத்தமரர் திரளுமேத்தும் நரவாகனன் வருணனிந்திரன்,

நடுவு நான்மறைகொள் முனிவர் வானவர் குணாலமிட்டு நடமாடவே!

வரைகளிற் பெரிய வடகிரிக்குமிசை மரதகக்குவடு போலவே!

வரதர் கச்சிநகர் வருதனித் தெருவில் தென்கலைக் கழகு பொழியவே!

அரவுதித்தமணிமகுடமுற்றவொரு வணி பிணக்குடன் மிழற்றவே!

கனகமொத்த தொரு வடிவமொத்தவரு கருடனின் பவனி வருவரே"
(யதீந்தர ப்ரணவ ப்ரபாவம்)

பூதத்தாழ்வார் பாடிய இரண்டாம் திருவந்தாதி(96):

"அத்தியூரான்,புள்ளை யூர்வான்,அணிமணியின்
,துத்திசேர் நாகத்தின் மேல்துயில்வான்
முத்தீ மறையாவான் மாகடல்நஞ் சுண்டான்தனக்கும்
இறையாவான் எங்கள்பிரான்."
(இரண்டாம் திருவந்தாதி-96
பூதத்தாழ்வார்).

"கருடவாகனத்தைக் கொண்டவன்!
அழகிய மாணிக்கங்களையும்
படத்திலிருந்து பொறிகளையும்
வெளிப்படுத்தும்,அனந்தனின் மேல்சயனம் கொள்பவன்!!மூன்றுஅக்கினிகளால்ஆராதிக்கப்படும்வேதம் ஆவான்! நஞ்சுண்ட சிவனுக்கும்
இறையாவான்,எங்கள் அத்தியூரான்!!
நம் தேவாதிராஜன்!!"

(--அடியேன் பார்த்தசாரதி ராமாநுஜ தாசன்)


1621917121848.png
 

Latest ads

Back
Top