• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

வேளுக்குடி கிருஷ்ண ஸ்வாமிகள் திருமாலின் அவதாரங்கள்

1. கௌமார அவதாரம் : பகவானே பிரஹ்மாவின் மைந்தனாக, குமாரனாகப் பிறந்து சிறந்த நடவடிக்கைகளை, ஆசார அனுஷ்டானங்களைக் கடைப்பிடித்தார். இது ஒரு பொதுவான அவதாரம்.

2. வராஹ அவதாரம் : ஹிரண்யாட்சன் என்ற அசுரனை அழித்து, பூமா தேவியைக் கடலிலிருந்து மீட்டுக் கொடுத்த பன்றி வடிவிலான அவதாரம். உலகத்தையே ஏந்திக் காக்கக் கூடிய பலம் பொருந்தியவன் பெருமான், அவனே ரக்ஷகன் என்பதைக் காட்டும் அவதாரம்.

3. தேவ ரிஷியான நாரதரின் அவதாரம் : எங்கும் போய் பகவானுடைய நாமத்தைச் சொல்ல வேண்டும். அதுவே நம் வாழ்க்கையின் உஜ்ஜீவனம் என்று நமக்குச் சொல்லவே பகவான் நாரதராகப் பிறந்தார். நாரதர் கலகம் பண்ணுபவர் என்ற தவறான அபிப்ராயம் நிலவுகிறது. நாரதர் என்ற சொல்லுக்குப் பொருள் கூறுகிறேன்: ‘நர – நாரத’ நர - மனிதர். நார - மனிதனோடு தொடர்புடைய அறிவு. த - ததாதி; கொடுக்கிறார். மனிதனுக்கு இறை அறிவைக் கொடுப்பவர் நாரதர். மற்றொரு பொருள் உண்டு: நர - மனிதன். நார - அறிவின்மை. த - தய்தி; கெடுக்கிறார். மனிதனுடைய அறிவின்மையைக் கெடுக்கிறார். ஆகையால், நாரதர் என்னும் பெயருண்டு. இவ்வளவு உயர்ந்த பொருளுடைய நாரதர் என்னும் பெயரை நாம் தவறாக உபயோகிக்கலாமா? இனியாவது திருத்திக் கொள்வோம்.

நான்காவது அவதாரம் : பதரிகாச்ரமத்திலே நாராயணனாகவும், நரனாகவும் பிறந்தான். ஆசாரியனும் தானே; சிஷ்யனான நரனும் தானே! இந்த அவதாரத்தில்தான் திரு எட்டு எழுத்தாம் மூல மந்திரத்தை பகவான் உபதேசித்தான். எட்டு எழுத்து மந்திரத்தில்தான் அனைத்து வேதங்களும், ஏனைய மந்திரங்களும் சார்ந்து இருக்கும். எட்டு எழுத்து மந்திரத்திலிருந்துதான் வேதங்கள் அனைத்துமே பிறந்தன.

ஐந்தாவது அவதாரம் : சாங்க்ய மதத்தை நிறுவி வளர்த்த கபிலராக அவதரித்தான். ஜடப் பொருட்களைவிட, ஜீவன் வேறுபட்டவன். அறிவுடன் கூடிய அவன் இந்த ஜடப்பொருளான உடலுக்குள்ளே சிக்கி இருக்கிறான். இதை உலகத்தாருக்குப் புரிய வைப்பதே கபில அவதாரத்தின் பயன்.

ஆறாவது அவதாரம் : அத்ரி முனிவருடைய பிள்ளையாய் தத்தாத்ரேயர் பிறந்தார். நாம் உலகில் என்னென்னவோ கல்வி கற்கிறோம். அவற்றை எல்லாம் விட, ஆத்ம வித்யைதான் நமக்கு நல்ல பயன் கொடுக்கும். மோட்சம் அடைவதற்கு ஆத்மாவைப் பற்றியும், பரமாத்மாவைப் பற்றியும் தெரிந்து கொள்ளாமல் லாபம் இல்லை. இதையே உணர்த்திப் போந்தார் தத்தாத்ரேயர்.

ஏழாவது அவதாரம் : ருசி என்பவருக்கும், ஆஹுதி என்பவருக்கும் யக்ஞர் என்ற திரு நாமத்தோடு பிறந்தார். இவரே இந்திரனாக இருந்து, தேவர்கள் அனைவரையும் காத்திருக்கிறார். பகவான்தானே யக்ஞம்! யக்ஞமோ, யாகமோ, ஹோமமோ எந்தக் கர்மமும் அவனைக் குறித்தே செய்யப்படுகிறது என்று விளக்கப் பிறந்தவர் இவர்.

எட்டாவது அவதாரம் : ரிஷப தேவராக அவதரித்தார். பிருஹ்மாவினுடைய திருக்குமாரர் ஸ்வயம்புவ மனு. மனுவினுடைய பிள்ளை ப்ரிய வ்ரதன். ப்ரிய வ்ரதனுடைய குமாரர் நாபி. நாபியினுடைய பிள்ளை ரிஷப தேவர். ஸன்யாஸ ஆசிரமத்தின் சீர்மையை - எப்படி உலகியல் பற்றற்று வாழ வேண்டும் என்பதை இவர் உலகத்தாருக்கு உபதேசித்தார்.

ஒன்பதாவது அவதாரம் : ம்ருது என்னும் மன்னனாகப் பிறந்தார். பூமா தேவியினிடத்திலிருந்து எல்லாச் செல்வங்களையும் பெற்று, உலகத்தாருக்கு ஆனந்தமாகக் கொடுத்தார். ஒரு அரசன் மக்களை எப்படி இன்பமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை, இந்த அவதாரத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

பத்தாவது அவதாரம் : மீன் வடிவத்தில் வேதங்களையும், ஸப்த ரிஷிகளையும், எல்லா மூலிகைகளையும் காப்பதற்காகப் பிறந்தார் மத்ஸ்ய மூர்த்தி. ஒரு மீன் தன்னுடைய கண்ணால் பார்த்துப் பார்த்தே தனது இள மீன்களை வளர்த்து வருமாம். ஜீவர்களை, பகவான் தன் திருக் கண்களால் கடாக்ஷித்துதான் வளர்க்கிறான் என்பதை இந்த அவதாரத்திலிருந்து புரிந்து கொள்ளலாம்.

பதினோராவது அவதாரம் : கரடு முரடான ஓடு படைத்த ஆமையாகப் பிறந்தார். தேவர்கள் அமுதத்தை கடைந்த பொழுது, மந்திர மலை தாழ்ந்து போகாமல் இருப்பதற்காக, அதன் கீழே ஆமையாகச் சென்று தன்னுடைய முதுகில் மந்திர பர்வதத்தை ஏந்திக் காத்தார். உலகனைத்துக்கும் பகவானே ஆதாரம். அவர்தான் தாங்குகிறார் - என்பதே இந்த அவதாரம் நமக்குத் தரும் முக்கியச் செய்தி.

பன்னிரண்டாவது அவதாரம் : பாற்கடலில் அமுதம் தோன்றியபோது, தன்வந்திரியாகப் பெருமாள் தோன்றி மூலிகைகளைக் கொண்டு, சிகிச்சை செய்யும் மருத்துவத்தை வெளிப்படுத்தினான். ஜீவர்கள் அனைவருக்கும் பெருமானே உண்மையான மருத்துவன் என்பதை இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

பதிமூன்றாவது அவதாரம் : அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் மோகினி அவதாரம். அமுதம் பிறந்தது. அதைத் தேவர்களுக்குத்தான் கொடுக்க வேண்டும். இதற்காகப் பெருமான் பேரழகு வாய்ந்த மோகினியாக உருவெடுத்து அசுரர்களை மயக்கி, தேவர்களுக்கே அமுதத்தைக் கொடுத்தார். பக்தர்களாகிய நமக்கும், தன்னையே பகவான் அமுதமாகக் கொடுக்கிறார் என்பதற்கு இந்த அவதாரம் சாட்சி.

பதினான்காவது அவதாரம் : மனிதனாகவும் இல்லாமல், மிருகமாகவும் இல்லாமல் ஒரு சிறுவனான பிரகலாதன் கூப்பிட்டதற்காக, தூணுக்கு நடுவிலே நரஸிம்ஹப் பெருமானாகத் தோன்றினார். அந்தியப் போதில் அரியுருவில் (சிங்கமுகத்துடன்) தோன்றினார். ஒரு சிறுவன் கூட பக்தியோடு அழைத்தால், பெருமான் வருவான் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தவே ஸ்ரீநரஸிம்ஹ அவதாரம்.

பதினைந்தாவது அவதாரம் : குள்ளமான வடிவில், மஹாபலியினிடத்தில் மூன்றடி மண் கேட்ட வாமன அவதாரம். பெருமானுடையதுதான் இவ்வுலகம் அனைத்தும். தன்னுடைய சொத்தை யாராவது எடுத்துப் போனால், பிச்சை எடுத்துக் கூட மீட்பதற்கு பகவான் தயங்க மாட்டான் என்பதை விளக்கவே இந்த அவதாரம். நாம் அனைவரும் அவன் சொத்து. இதை ஒரு நாளும் பெருமான் விட்டுக் கொடுக்க மாட்டான் என்பதை இந்த அவதாரத்தால் உணர்த்தினான்.

பதினாறாவது அவதாரம் : கோபமே உருவானவர் பரசுராமர். ஜமதக்கனி முனிவரிடத்திலே கார்த்தவீரியன் அபசாரப்பட, ப்ரஹ்ம தேஜஸ் உடையவரிடத்திலே அபசாரப்பட்டால் என்ன நடக்கும்? - என்பதை உலகத்துக்கு உணர்த்தவே பரசுராமர் பிறந்தார்.

பதினேழாவது அவதாரம் : வேத வ்யாஸர் அவதாரம். இவர் பராசர முனிவருக்கும், சத்தியவதிக்கும் மகனாகப் பிறந்து, ஒன்றாகக் கலந்திருந்த வேதங்களை எல்லாம் பிரித்தும், இதிஹாச புராணங்களை நமக்காகக் கொடுத்தும் போந்தவர்.

பதினெட்டாவது அவதாரம் : ஸ்ரீ ராமாவதாரம். தசரதனுக்கும், கௌஸல்யா தேவிக்கும் பிறந்து, நேர்மை, சத்தியம், தந்தை சொற்படி நடத்தல், பேரன்பு - ஆகியவற்றின் உருவமாகவே விளங்கியவன் ராமன். மூத்தோர் சொன்னால், இளையோர் கேட்க வேண்டும்; அவர்தம் சொற்படி நடக்க வேண்டும்; முறையோடு இருக்க வேண்டும் - இதை நமக்கு உணர்த்தவே ராமாவதாரம்.

பத்தொன்பது, இருபதாவது அவதாரங்கள் : பலராமனும், கிருஷ்ணனுமாகப் பிறந்தார்கள். பகவத் கீதையையே உபதேசித்து, உலகத்துக்கே நன்னெறி காட்டிய அவதாரம். பெருமான், தன் மேன்மையைப் பார்க்காமல் அடியார்களோடு கலந்து பழகி, ரக்ஷிக்கிறான் என்பதே இந்த அவதாரத்தின் சீர்மை.

இருபத்தி ஒன்றாவது அவதாரம் : புத்த அவதாரம். தேவர்களுடைய விரோதியான அசுரர்களுக்கு வேதத்தில் மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டு, அதை தவறான வழிகளில் பின்பற்றத் தொடங்கினார்கள். ஆகையால், திருமால் புத்தராகப் பிறந்து, அவர்களுக்கு இருந்த வேத நம்பிக்கையைத் தகர்த்து, அவர்களை திசை திருப்பி அழித்தான். அதுவே இந்த அவதாரத்தின் பயன். இறுதியாய், கலி முற்ற முற்ற, தீமை வளர, அதர்மம் தலை எடுக்க, அதைத் தொலைக்க விஷ்ணுயசஸ் என்பவருடைய திருக்குமாரராய், சம்பலா எனும் கிராமத்தில் கல்கியாக பெருமான் அவதரிக்கப் போகிறார்.

இன்னும் இப்படியாக, அவர் அவதாரங்கள் எண்ணிறந்தவை. இந்த முக்கியமான அவதாரங்களை எல்லாம் ஸூதபௌராணிகர், சௌனகர் முதலான ரிஷிகளுக்காக உபதேசிக்கிறார். பெருமானுடைய திரு அவதாரங்களை நாம் நினைக்க, நினைக்க அதுவே நமக்குக் கடைசிப் பிறவியாக ஆகி, நம் கர்மங்கள் அனைத்தும் தொலையும். கர்மங்களைத் தொலைத்து, உயர்ந்த கதியைக் கொடுக்கும் அவதாரங்களை - இருபத்தி இரண்டு அவதாரங்களை இன்று நாம் பார்த்தோம்.
 

Latest ads

Back
Top