• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

வியாச பூஜை (குரு பூர்ணிமா) 31-7-2015

Status
Not open for further replies.
வியாச பூஜை (குரு பூர்ணிமா) 31-7-2015

வியாச பூஜை (குரு பூர்ணிமா) 31-7-2015

தேஹிமே குரு ஸ்மரணம்

தேஹிமே குரு கீர்த்தனம்

தேஹிமே குரு தர்ஷணம்

தேஹிமே குரு ஸாமீப்யம்

தேஹிமே குரு பதஸேவனம்

தேஹிமே குரூபதேசம்

தேஹிமே குரு ஸாயுஜ்யம்

குரு பூர்ணிமா, ஒவ்வொரு வருடமும் ஆஷாட (ஆடி) மாத பௌர்ணமி அன்று கொண்டாடப்படுகிறது. நமக்கு கல்விக் கண் திறந்து, நாம் வாழ்வில் உயர வழி வகுத்த குருமார்களை, ஆசிரியர்களை இந்த நன்னாளில் வணங்குதல் சிறந்தது.

இந்த வருடம் (31.7.2015) அன்று குரு பூர்ணிமா கொண்டாடப்படுகிறது.

வேதவியாசரை . பூர்ணிமா தினத்தில், துறவிகள் பூஜித்து, 'சாதுர்மாஸ்ய விரதம்' துவங்குகின்றனர். ஆகவே, இது 'வியாச பூஜை' தினமாக சிறப்பு பெறுகிறது.

'வேத வியாசர்' எனப் போற்றப்பட்ட, ஸ்ரீ வியாச மஹரிஷி, பராசர முனிவரின் புதல்வர். இவரது இயற்பெயர், கிருஷ்ணதுவைபாயனர் என்பதாகும். வேதங்களை நான்காகப் பிரித்து, வகைப்படுத்தித் தொகுத்ததால், இவர் 'வேதவியாசர்' என்றழைக்க‌ப்பட்டார்.

வேதத்தின் சாரமாக, 18 புராணங்களை இயற்றித் தந்தவரும் இவர்தான். எல்லாவற்றிற்கும் மேலாக, பிரம்மசூத்திரத்தை நமக்களித்தவரும் இவரே. மஹாபாரதத்தை, வியாசமஹரிஷி தம் திருவாக்கினால் அருள, விநாயகப் பெருமான் அதை எழுதியருளினார்.

வியாச மஹரிஷி, ஸ்ரீமத் பாகவதம், உள்ளிட்ட எண்ணற்ற நூல்களை மனிதசமுதாய மேம்பாட்டுக்காக இயற்றியருளியிருக்கிறார்.

'முனிவர்களில் நான் வியாசர்' என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், பகவத் கீதையில் அருளியிருக்கிறார்.

வ்ருஷ்ணீநாம் வாஸுதே³வோऽஸ்மி பாண்ட³வாநாம் த⁴நஞ்ஜய: |

முநீநாமப்யஹம் வ்யாஸ: கவீநாமுஸ²நா கவி: ||

(கீதை – பத்தாவது அத்தியாயம், விபூதி யோகம்)

வியாச பூஜையை முதன் முதலில், செய்தவர் வேத வியாச மஹரிஷியின் புதல்வரும், ஸ்ரீமத் பாகவதத்தை பரீக்ஷித் மஹாராஜாவுக்கு உபதேசித்தவருமான, ஸ்ரீ சுகப்பிரம்மரிஷியாவார்.

அவரை அடுத்து, ஸ்ரீ சூதமுனிவர், ஸ்ரீசுகப்பிரம்மரிஷிக்கு 'வியாச பூஜை' யை, த‌ம் குருவை ஆராதிக்கும் முகமாகச் செய்தார். இது இரண்டாவது வியாச பூஜையாகச் சொல்லப்படுகிறது

அதற்குப் பிறகு, வியாச பூஜை, குருவை ஆராதிக்கும் முகமாக, வழிவழியாகச் செய்யப்படதொடங்குகின்றனர்

ஆஷாட பௌர்ணமி, ஆஷாட சுத்த பௌர்ணமி' என்றும் அழைக்கப்படுகிறது. ஆஷாட பௌர்ணமி தினத்தன்றே, ஸ்ரீவியாச மஹரிஷியின் திருஅவதாரம் நிகழ்ந்ததால், குரு பூர்ணிமை தினத்தன்று, சன்யாசிகள் வியாச பூஜை செய்து சாதுர் மாஸ்ய விரதம் தொடங்குகின்றனர்

சன்யாசிகள் ஓரிடத்தில் மூன்று நாட்களுக்கு மேல் தங்கியிருக்கக் கூடாது என்பது விதி. ஆனால், மழைக்காலத்தில், புழு, பூச்சிகள் இவற்றின் நடமாட்டம் அதிகரிப்பதால், சன்யாசிகள், இக்காலத்தில் சஞ்சாரம் செய்யும் போது, அவர்களின் கால்களில் பட்டு அவை மடிய நேரிடும். எனவே, அதைத் தவிர்ப்பதற்காக, அவர்கள் ஒரே இடத்தில் தங்குவார்கள். இதையே, 'சாதுர்மாஸ்ய விரதமாக' அனுஷ்டிப்பது சன்யாசிகளின் வழக்கம்.
வியாச பூஜை தினத்தன்று, ஆதிகுருவான ஸ்ரீமந் நாராயணருக்கும், ஸ்ரீ வேத வியாசருக்கும், பூஜை செய்து விரதம் துவங்கப்படும். இவ்விரதத்தை நான்கு மாதங்கள் அல்லது நான்கு பட்சங்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்பது சாஸ்திரம். ஆகவே, அம்மாதிரி ஒரே இடத்தில் தங்கி இருப்பதாகச் சங்கல்பம் செய்து கொள்வார்கள்.

இவ்வாறு அவர்கள் ஒரே இடத்தில் தங்கியிருக்கும் போது, புராணத் தத்துவங்களையும், வேதாந்த ரஹஸ்யங்களையும் அவர்கள் உபதேசிப்பார்கள். அவர்கள் விரதத்தால் அவர்கள் இருக்கும் இடமே புனிதப்பட்டு, நன்மை விளையும். அந்த இடத்தில் வசிக்கும் கிருஹஸ்தர்கள், சன்யாசிகளுக்கு பூஜைக்குத் தேவையான பொருட்களை அளித்தல், பிக்ஷாவந்தனம் செய்தல் போன்ற புண்ணியச் செயல்களைச் செய்வதால், அவர்கள் தலைமுறையே நலமடையும்.

இவ்வாறு சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்ட சன்யாசிகளுக்குச் சேவை செய்த சிறுவன், அதன் பலனாக, மறு பிறவியில் நாரத மஹரிஷியாகப் பிறந்தார். ஆகவே,இவ்வாறு விரதம் இருக்கும் சன்யாசிகளுக்கு உதவுவதும், அவர்களது உபதேச மொழிகளைக் கேட்பதும் மிக்க நலம் பயக்கும்.
சாதுர் மாஸ்ய விரதம் தனிப்பட்ட உணவு நியமங்களைக் கொண்டது. முதல் மாதம், காய், கிழங்கு வகைகள் தவிர்க்கப்பட வேண்டும். இரண்டாவது மாதம், தயிர், மூன்றாவது மாதம் பால், நான்காவது மாதம் பருப்பு வகைகள் தவிர்க்கப்படுவது வழக்கம்.

சன்யாசிகள் மட்டுமல்லது, சில வயது முதிர்ந்த பெரியோர்களும் இவ்விரதத்தை கடைபிடிக்கின்றனர்.

இந்த நன்னாளில், ஆசாரியப் பெருமக்களுக்கு, இயன்ற பொருட்களை சமர்ப்பித்து ஆசி பெறுதல் சிறந்தது. பொருட்களோடு, 'தான்' எனும் ஆணவம் இல்லாமல், பணிவு, குருபக்தி எனும் மிகவுயர்ந்த பொருட்களை குருவுக்குச் சமர்ப்பித்தலே உண்மையான சமர்ப்பணமாகும். வியாச பூஜையின் தத்துவம் இதுவே.

குருவும் தெய்வமும் ஒருவரே ஆவர். ஆகவே, நமது குல ஆசாரியர்களை, நமக்குக் கல்வி கற்பித்த குருமார்களை, நேரில் செல்ல முடியாவிட்டாலும், மனதால் வணங்கி வழிபடுவது சிறந்தது.

மாணவர்கள் இந்த நாளில் தமது ஆசிரியப் பெருமக்களை வணங்குதல் அவர்கள் கல்வியில் மேன்மேலும் சிறக்க வழி செய்யும். மேலும், தக்ஷிணாமூர்த்தி வழிபாடு, ஆசாரியர்களின் பிருந்தாவனங்களுக்குச் சென்று வழிபாடு செய்தல் ஆகியவை மிகச் சிறந்தது.

குருவை வணங்கி வாழ்வில் உயர்ந்தோர் பலர். தன் அவையில் நுழைந்த வியாழ பகவானை வணங்கி, ஆசனமளிக்காமல் நிந்தனை செய்ததன் பலனாக, தேவேந்திரன் தன் செல்வம் முழுவதையும் இழந்து துன்புற்று, பின் அவர் கருணையை மீண்டும் பெற்று, தன் செல்வம் முழுவதையும் அடைந்து மகிழ்ந்தான்.

ஆகவே, வியாச பூஜை தினத்தன்று, குருமார்களை வணங்கி நலம் பல பெற்று,

வெற்றி பெறுவோம்!!!!!

http://jaghamani.blogspot.com/2012/07/blog-post_02.html

http://temple.dinamalar.com/news_detail.php?id=11890
Sage of Kanchi
 
Status
Not open for further replies.
Back
Top