• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

விதுரர் வில்லுடைத்த காரணம்

விதுரர் வில்லுடைத்த காரணம்

ஸ்ரீ கிருஷ்ணா், விதுரரை கெளரவர்களிடம் இருந்து விலக்கிவைக்கப் போட்ட திட்டம்,ரொம்ப ரொம்ப சிம்பிள்.


மனிதர்களின் மனோதத்துவத்தை புரிந்து நன்கு பயன்படுத்தி செயல்பட்டார்.
எல்லோருக்கும் தெரிந்த கதை ஸ்ரீ கிருஷ்ணன் தூது.


பாண்டவர் வனவாசத்திலிருந்து திரும்பிய பிறகும் அவர்களுக்குரிய பங்கான நாட்டைத் தர கௌரவர்கள் மறுத்தனர். எங்கும் பகைமைக் காற்று வீசியது. அதனால் கிருஷ்ணர், கடவுள் அவதாரமாக இருந்த போதிலும் சமாதானம் நிலவ இறுதி முயற்சியாக ஒரு முறை முயன்று பார்க்க, தாமே, பாண்டவர்களின் தனிப்பட்ட தூதுவனாக, திருதராஷ்டிரனது சபைக்குச் சென்றார்.


அஸ்தினாபுரத்திற்குச் செல்லும் முன்பு, பாண்டவரிடம் அவர் நீண்ட நேரம் கலந்து பேசினார். அவர்களும் அவரிடம் தங்களது இறுதியான கருத்தைத் தெரிவித்தனர். பின்னர் சாத்யகி தொடர கிருஷ்ணர் அஸ்தினாபுரத்தை அடைந்தார். கௌரவர்கள் அவரது வரவை முன் கூட்டி அறிந்து, அவரை வரவேற்க ஆடம்பரமாக ஏற்பாடுகள் செய்தனர். தங்களது பகட்டான, வரவேற்பினால் அவரை மகிழ்வுறுத்த விரும்பினர்.


துரியோதனனே, தனது தம்பியரும், கர்ணனும் புடை சூழ நகர வாயிலுக்கே சென்று அவரை வரவேற்றான். தன்னுடைய அரண்மனையில், அரச போகத்துடன் தங்கியிருக்கவும், தங்கள் விருந்தினராகத் தங்களுடன் அமர்ந்து உணவருந்தவும் அவரை வேண்டினான். ஆனால் கிருஷ்ணன் அமைதியாக “என் அன்பின் உறவினர்களே! உங்கள் பகைவரது தனிப்பட்ட தூதுவனாக நான் வந்துள்ளேன். ஒரு தூதுவன் தான் ஏற்று வந்த தூது, வெற்றிகரமாக முற்றுப்பெறும் வரை அவர்கள் விருந்தினனாக உணவருந்தக் கூடாது,” என்று தடுத்து மறுத்து விட்டார்.


அங்ஙனம் கூறிவிட்டு கிருஷ்ணர் அருகிலிருந்த விதுரரது மாளிகைக்குச் சென்றார். எதிர்பாராத வகையில் தம் வீட்டில் ஐயனைக் கண்டவுடன் விதுரர் பெற்ற மகிழ்ச்சிக்கும், வியப்புக்கும் அளவேயில்லை. கிருஷ்ணரைப் பணிந்து வணங்கி, தம் பக்தியை பலவிதமாக வெளியிட்டு, அவரை மதித்துப் போற்றினார். பக்தனது வீட்டில் தங்கியதைக் கிருஷ்ணரும் பெரிதும் அனுபவித்து மகிழ்ந்தார்.


விதுரர், “ ஐயனே! இந்த சமாதான தூதுப்பணியை ஏற்று மதிப்பற்ற கௌரவர்களிடம் ஏன் வந்து துன்புறுகிறீர்கள்! அவர்கள் போருக்குத் தினவு எடுத்துத் திரிவதைத் தாங்களே அறிவீர்களே,” என்று கேட்டார். அதற்குக் கிருஷ்ணர் புன்சிரிப்புடன், “ என் அன்பின் விதுரா! எனக்கு எல்லோருடைய மன நிலையும் தெரியும். துரியோதனனும் அவனுடைய சகோதரர்களும், என்னுடைய ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்வார்கள் என்று நான் ஒருகாலும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் இரத்தம் சிந்த விடாமல் தடுப்பது என் கடமை என்றே எண்ணினேன். இறுதி முயற்சி ஒன்று செய்து பார்த்து விடுகிறேன்” என்று விடையளித்தார்.


பிறகு கிருஷ்ணர் திருதராஷ்டிரனுடைய அரச சபையை அடைந்தார். திருதராஷ்டிரன், துரியோதனன், பீஷ்மர், துரோணர், கர்ணன் எல்லோரும் அவரை வரவேற்று தக்க ஆசனம் தந்து உபசரித்தனர். அமரும் முன் கிருஷ்ணர் தம்மைச் சுற்றிலும் பார்த்தார். சிறப்பு வாய்ந்த முனிவர்களும், சாதுக்களும், அவரவர்களுக்கேற்ற தரத்தில் ஆசனம் தரப்பெறாததைக் கவனித்தார். அதனால் ”பெருமை மிக்க அவர்கள் அனைவரும் தக்கபடி அமர்ந்த பிறகே நானும் அமர்வேன்,” என்று கூறியவாறு அமராமல் நின்றார்.


சில நொடிகளில் அவரது மனம் மகிழ அங்ஙனமே அனைவரும் மதிக்கப் பெற்று அமர்ந்தனர். பிறகு கிருஷ்ணர் தாம் மேற்கொண்டு வந்த தூதின் கருத்தை விளக்கினார். “மாட்சிமை மிக்க பெரியோர்களின் முன்னிலையில் தம்மிடம் ஒப்படைக்கப்பெற்ற பணியைச் சீர்தூக்கிப் பார்த்து பாண்டவருக்கு அவர்களுடைய பங்கு அரசைத் தரும்படி திருதராஷ்டிரனிடம் நான் ஒரு தாழ்மையான விண்ணப்பம் இடுகிறேன். இது வீணாக இரத்தம் சிந்துவதைத் தடுத்து, நிலையான அமைதியை உறுதியாக அளிக்கும்.” என்று சுருக்கமாகக் கூறி முடித்தார்.


பீஷ்மர், துரோணர் போன்ற பெரியோர்கள் கிருஷ்ணரது கருத்துக்களை முழுமையாக ஆதரித்தனர். ஆனால் துரியோதனன் நாட்டைக் கூறு போட்டுத் தருவது என்பது இயலாத செயல் என்று மூர்க்கத்தனமாக எதிர்த்தான். சற்றும் சிந்திக்காமல், “ கிருஷ்ணா! என்ன நேர்ந்தாலும் ஓர் அங்குல அளவு நாடு கூட அவர்களுக்குத் தர முடியாது என்று பாண்டவர்களிடம் போய்ச் சொல்லுங்கள்! போருக்கு நாங்கள் ஆயத்தமாக இருக்கிறோம்,” என்று வெடித்துக் கூறினான்.


திருதராஷ்டிரனுக்கு உள்ளூர தன் மகனின் பிடிவாதமான் செயல் மகிழ்ச்சியையே தந்தது. எனினும், மகனது கருத்தை மாற்றுவது போல, மெல்லிய குரலில் ஏதோதோ கூற முயற்சி செய்தான். காந்தாரி கூட பகைமையான சூழ்நிலையை மாற்ற மகனிடம் வேண்டி முயன்றாள். ஆனால், துரியோதனன், நம்பிக்கையுள்ள தன் தோழனான கர்ணனும் மற்றும் சிலரும் தன் கூற்றை ஆதரிக்கவே, தன் பிடிவாதத்தினின்றும் இறங்கவில்லை.


கிருஷ்ணர் இறுதியாக ஒருமுறை “பாண்டவர் வலிமை குன்றியவர்கள் என்று நினைக்க வேண்டாம். பீமன் அர்ஜுனனுடைய உறுதியார்ந்த வலிமையும், தர்மஜாவின் நேர்மையான கோபமும், உலகம் முழுவதையுமே அடியோடு அழித்து விடக் கூடிய ஆற்றல் பெற்றவை. அனைத்து மனித குலத்திற்காக அவர்கள் அமைதி நிலவுவதையே விரும்புகிறார்கள். அதனால் மறுபடியும் ஒருமுறை இனிய இயல்போடு தீர சிந்தித்து, விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கு பெறுங்கள்” என்று அவர்களை கேட்டுக் கொண்டார். ஆனால் அதிகாரப் பித்தும், அகங்காரமும் கொண்ட கெளரவருக்கு, செவிடன் காதில் ஊதிய சங்காகவே அவரது சொற்கள் இருந்தன.


கிருஷ்ணரைச் சிறை பிடிக்கவும் அவர்கள் கள்ளத்தனமாக முயன்றனர். ஆனால் பரமாத்மா கிருஷ்ணர், ஒரு நொடி நேரம், தமது உண்மை ஸ்வரூபத்தை (விஸ்வரூபத்தை) வெளிக் காட்டினார். குருடனான திருதராஷ்டிரனுக்கும் ஒரு நொடி நேரம் பார்வை தந்து, தம்மைக் காண வைத்தார். அவரது தெய்வீக உருவத்தைக் கண்டு கௌரவர்கள் கண் கூச மலைத்து நின்றனர்.


மற்றவர்கள் பயபட்டாலும் துரியோதனன் எதற்கும் பயப்படவில்லை .துரியோதனன் ஒரு ஊசிமுனை நிலத்தைக்கூடப் பாண்டவர்களுக்குக் கொடுக்க முடியாது என்று சொல்லி கிருஷ்ணனையும்
அவமதித்துப் பேசினான்.கிருஷ்ணனும் "யுத்தம் நிச்சயம்" என்று சொல்லிவிட்டு பாண்டவர் முகாமுக்குத் திரும்பினார்.


திரும்பும்முன்,கிருஷ்ணருடைய சாரதி கேட்டார்.


சுவாமி, எந்த நோக்கத்தில் நீங்கள் விதுரர் மாளிகையில் தங்க நிச்சயத்தீர்கள்.?” என்றார் .


கிருஷ்ணா் சொன்னார், " என் மனதில் ஒரு திட்டம் இருக்கிறது. அது நடக்குமா.?
என்பது இன்னும் கொஞ்ச நேரத்தில் தெரியும்” என்று சிரித்தார். மாய கண்ணன் அல்லவா .உலகை இயக்குபவனே அவன் தானே .அவன் அறியாதது என்று உலகில் உண்டா ?


கிருஷ்ணன் சென்ற பின் துரியோதனன் சபையில் எல்லோரும் அவனிடம் கெஞ்சி, கிருஷ்ணா் பேச்சைக் கேட்டு யுத்தத்தை தவிர்க்க வேண்டும் என்று வாதாடினார்கள்.


அதில் விதுரர் குரல் ஓங்கி ஒலித்தது.
ஏற்கனவே துரியோதனனுக்கு விதுரர்மேல் ஒரு கடுப்பு.அவர் பாண்டவர்கள் கட்சி என்று ஒரு நினைப்பு.போதாக்குறைக்கு விதுரர் பாண்டவ தூதரான கிருஷ்ணனை தன் வீட்டில் உபசாரம் செய்தது.கோவத்தை உண்டு பண்ணியது .


விதுரர் பேச்சைக் கேட்டவுடன், துரியோதனனுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. என்ன பேசுகிறோம் என்ற நினைப்பில்லாமல் நாக்கில் நரம்பின்றி விதுரரை அவமானப்படுத்திப் பேசினான்.
குறிப்பாக, அவரை ‘தாசி புத்திரன்’ என்று திட்டித்தீர்த்தான்.
(ஏற்கனவே இருந்த மாண்டவ்யர் சாபம் முற்றிலும் பலித்து விட்டது)


விதுரருக்கு கோபம், வருத்தம். சபையோர்கள் நடுங்க சபதமிட்டார்.எனக்கு இங்கே இனிமேல் வேலையில்லை.அழிவு காலம் நெருங்கி கொண்டிருக்கிறது. என்னை அவமானப்படுத்திய இந்த
துரியோதனனுக்காக நான் என் வில்லை எடுத்துப் போராட மாட்டேன்.அதே சமயம் நான் பாண்டவர்கள் பக்கமும் செல்ல மாட்டேன்” என்று சொல்லித் தன்னுடைய வில்லை இரண்டாக உடைத்துவிட்டுச் சபையிலிருந்து வெளியேறினார்.


யுத்தம் முடியும்வரை அவர் தீர்த்த யாத்திரையிலிருந்து திரும்பவில்லை என்பது வேறு கதை. இப்பொழுது உங்களுக்கு புரிந்து இருக்கும் ஸ்ரீ கிருஷ்ணன், விதுரர் வீட்டில் தங்காமல் இருந்தால், விதுரர் வில்லை உடைத்து வெளியேறியிருப்பாரா.?


துரியோதனனுக்காகப் போராட வேண்டிய ஒரு கட்டாயம் அவருக்கு வந்திருக்கும் அல்லவா.?


விதுரர் வைத்திருந்த வில். மஹாவிஷ்ணுவின் வில். கோதண்டம் எனப்படும் அந்த வில்லை எவராகவும் வெல்ல முடியாது.அர்ஜுனன் கையில் உள்ள வில் பிரம்மாவுடையது. காண்டீபம் என்பது அதன் பெயர்.


போர் என்று வந்து விதுரர் கோதண்டத்துடன் வந்து நின்று விட்டால் ஆனானப்பட்ட அர்ஜுனனால் கூட தன் வில்லான காண்டீபம் கொண்டு அவரை வெல்ல முடியாது.!


இதனை அறிந்திருந்த ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா, தான் விதுரர் மாளிகையில் தங்கி,
துரியோதனனுக்கு சினமூட்டி அவனை அப்படிப் பேச வைத்து.,விதுரர்
வில்லை முறிக்க வைத்து விட்டார்.
தான் இல்லாத சூழ்நிலையிலும் , தர்மம் பாண்டவர்கள் பக்கத்தில் இருந்ததாலும் , தர்மத்திற்கு எதிராக தர்மத்தின் தலைவனே போரிட வேண்டிய சூழலை தவிர்க்கவும் கிருஷ்ணர் விதுரர் வேண்டுகோளுக்கு மனம் இறங்கி அவரை பாண்டவர்களுக்கு எதிராக போரிட முடியாமல் செய்தார் ,


இன்னொரு முக்கியமான விஷயம் என்ன என்றால் ஒரு எளியவனுக்கு அநியாயம் நிகழும் பொது அதிலிருந்து தப்பிக்க அவன் செய்த புண்ணியம் எல்லா வழிகளையும் காட்டும்.ஆயிரம் வழிகள் இருந்தாலும் அவன் செய்த பாவம் கண்ணிருந்தும் குருடனாய் மாற்றி விடும் . பாண்டவர்கள் செய்த நற்செயல்களே அவர்களை எல்லா சூழ்நிலைகளிலிருந்தும் விதுரர் மற்றும் கிருஷ்ணர் உதவியால் தப்பித்து தர்மத்தின் வழியில் நடக்க முடிந்தது . பீஷ்மர்,துரோணர்,கர்ணன் ,அஸ்வத்தாமன் என தன்னிகரில்லாத வீரர்களை பெற்ற போதும் கௌரவர்கள் செய்த பாவம் யுத்த களத்தில் கொடூர மரணத்தை தந்தது .

விதுர நீதியில் விதுரர் சொன்னதுதான் , “ அரசன் அன்று கொல்வான் , தெய்வம் நின்று கொல்லும் “ .

விதுரர் போரிட முடியாத சூழ்நிலையிலும் போரை தவிர்க்க அவர் எடுத்த இறுதி முயற்சிதான் போரின் முதல் நாள் திருதராஸ்டிரனுக்கு அவர் கூறிய அறிவுரை. அவரது மதிப்பு மிக்க அறிவுரைகளே அவரது பெயரில் விதுர நீதியாக தொகுக்கப்பட்டன. அது எப்போது நிகழ்ந்தது ? .
 

Latest ads

Back
Top