• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

வாக்கு வன்மை தரும் வியாழ பகவான்

Status
Not open for further replies.
வாக்கு வன்மை தரும் வியாழ பகவான்

வாக்கு வன்மை தரும் வியாழ பகவான்

Astro-articles-38.jpg




நவகிரகங்களிலேயே, இதிகாச-புராணங்களில் அதிக அளவில் இடம் பெற்றவர்கள் என்றால், அவர்கள் தேவகுருவான வியாழ பகவானும்-அசுர குருவான சுக்கிராச்சார்யாரும்தான் என்றே சொல்லலாம். அவர்கள் இருவரைப் பற்றியும் தனி நூலே எழுதி விடலாம். அந்த அளவிற்கு, அவர்களைப் பற்றிய தகவல்கள் ஏராளமாகக் கொட்டிக் கிடக்கின்றன. குரு அருள் இன்றேல், திருவருள் இல்லை, குரு பார்க்க கோடி நன்மை உண்டாகும் என்றெல்லாம் வாக்குகளே உண்டு. தேவகுருவின் உபதேசங்களும் அசுர குருவின் உபதேசங்களும் மிகவும் புகழ் பெற்றவை, அவசியமானவையும் கூட!

ஆகையால், வியாழ பகவான் உபதேசம் ஒன்றைப் பார்த்து விட்டு, பிறகு அவரைப் பற்றிய தகவல்களைப் பார்க்கலாம்.

ஒரு சமயம், இந்திரன் துர்வாசரின் சாபத்தால் அனைத்துச் செல்வங்களையும் இழந்தான். துயர வசப்பட்ட அவன், தேவ குருவான வியாழ பகவானைத் தேடி ஓடினான். அப்போது வியாழ பகவான் கங்கைக் கரையில், கிழக்கு நோக்கி சூரியனைப் பார்த்து நின்றபடி, ஜபம் செய்து கொண்டிருந்தார். மெய்சிலிர்த்துப் போய்ப் பரமானந்த நிலையில் முகத்தில் ஒரு பெருமிதம் ததும்பத் தவம் செய்து கொண்டிருந்த அந்த உத்தமசீலரின் திருவடிகளில் போய் இந்திரன் விழுந்து வணங்கினான். தன் துயரையெல்லாம் சொல்லி அழுதான்.

அதைக்கேட்ட வியாழ பகவான் அவனுக்கு ஆறுதல் சொல்லி உபதேசமும் செய்தார். ‘‘தேவேந்திரா! ஏன் அழுகிறாய்? விவரம் அறிந்தவன், நீதி அறிந்தவன் இப்படிப்பட்ட பிரச்னைகள் ஏற்பட்ட காலத்திலும் பயப்பட மாட்டான். ஏனென்றால், செல்வங்களும் இப்போது உனக்கு நேர்ந்ததைப் போன்ற பிரச்னைகளும் நிரந்தரமானவை அல்ல! அனைத்தும் முற்பிறப்புகளில் செய்யப்பட்ட செயல்களின் விளைவாகவே உண்டாகின்றன. வாழ்வில் மேடும் பள்ளமும் வரத்தான் செய்யும். வண்டிச் சக்கரம் உருளும்போது, கீழே இருந்த பகுதி மேலே போவதும் மேலே இருந்த பகுதி கீழே வருவதுமாக இருக்கிறது அல்லவா?

அதைப்போல, நன்மைகளால் உயர்வு அடைவதும் தீமைகளால் கீழ்நிலை அடைவதும் மாறி மாறி வரத்தான் செய்யும். அப்படி இருக்கும்போது, நீ ஏன் அழுகிறாய்? நல்லதோ, கெட்டதோ எவ்வளவு காலமானாலும் சரி! அவற்றை அனுபவிக்காமல் தப்ப முடியாது. யாராக இருந்தாலும், தாங்கள் செய்த செயல்களின் பலனை அனுபவித்தே தீர வேண்டும் என்று சாமவேதத்தில் பரமாத்மா பிரம்மனுக்கு உபதேசித்திருக்கிறார்’’ என்று வியாழ பகவான் இந்திரனுக்குக் கூறினார்.

அத்துடன் தானம் செய்வதின் மகிமை, அவற்றின் பலன்கள் அதிகரிக்கும் விதம், இடத்திற்குத் தகுந்தபடி தானப் பலன்கள் அதிகரிப்பது எனப் பல வகைகளிலும் இந்திரனுக்கு உபதேசம் செய்த வியாழ பகவான், இந்திரன் துயரத்தில் இருந்து விடுபட்டுப் பழைய நிலையை அடைய வழியும் காட்டினார். இந்திரனும் அப்படியே செய்து, பழையபடியே சொர்க்கலோக வாழ்வைப் பெற்றான். இப்படிப்பட்ட குருபகவான், நவகிரகங்களில் ஐந்தாவதாக இடம் வகிக்கிறார்.

இவருக்கு வியாழ பகவான், பிரகஸ்பதி என்ற வேறு பெயர்களும் உண்டு. தேவ குருவாக இந்திர சபையில் வீற்றிருக்கும் இவர் கல்வியில் சிறந்தவர், நுண்ணறிவு மிகுந்தவர், சாத்வீக குணம் மிகுந்தவர். மங்கலமே வடிவானவர்.

பிரம்மதேவரின் மானச புத்திரர்களில் ஒருவரான ஆங்கிரச முனிவருக்கும் சிரத்தா தேவிக்கும் புதல்வராக உதித்தவர் வியாழ பகவான். (தாயார் பெயர் வசுதா என்றும் சொல்லப்படுவதுண்டு). பரீட்சித்தின் பிள்ளையான ஜனமே ஜயன் என்பவன் பாம்புகளை எல்லாம் அழிப்பதற்காக ஒரு யாகத்தைச் செய்தான். அந்த யாகத்தை நிறுத்தச் செய்து, பாம்புகளையெல்லாம் காப்பாற்றியவர் வியாழ பகவான். ஒருசமயம், இந்திரன் தெய்வத்தின் திருவருளைச் சிந்தித்து, பக்தியில் ஆழ்ந்து, தான் செய்ய வேண்டிய காரியங்களைச் செய்யாதிருந்தான். தேவர்களுக்கு அரசனாக இருந்து தேவேந்திரன் அவ்வாறு கடமைகளைச் செய்யத் தவறியதால், தேவர்களின் வாழ்க்கையில் ஏராளமான இடையூறுகள் உண்டாகின.



அந்த நேரத்தில் தேவர்கள் எல்லோரும் தங்கள் குருவான பிரகஸ்பதி பகவானிடம் போய் முறையிட்டார்கள். அவர்களின் குறையைக் கேட்ட வியாழ பகவான், இந்திரனின் மனதை மாற்ற, அவனை மறுபடியும் செயல்பாடுகளில் இறங்க வைக்க, வேறு வழியில்லாமல், உலகாயத வாழ்க்கை முறையை இந்திரனுக்கு உபதேசித்தார். ‘‘நன்றாக சுவைமிகுந்த உணவை உண்டு, விலை உயர்ந்த அலங்காரமான ஆடைகளை அணிந்து, பெண்களுடன் மகிழ்ச்சியாக சுகங்களை அனுபவிப்பதே வாழ்க்கையின் லட்சியம்’’ என்று பல விதங்களிலும் எடுத்துச் சொல்லி, இறைவழிபாட்டிலிருந்து இயல்பான வாழ்க்கைக்கு இந்திரனை இழுத்தார் வியாழ பகவான்.

இந்திரனும் வியாழ பகவானின் வார்த்தைகளால் மனம் மாறி, தெய்வ சிந்தனையைவிட்டு விலகினான். அதன்பிறகு தன்னுடைய சொர்க்க லோக வாழ்க்கையில் முன்னிலும் ஆர்வமாக ஈடுபட்டான். அவனை அப்படியே விட்டுவிட்டால் இழுக்கு உண்டாகும் என்பதால், சில காலம் சென்றதும் வியாழபகவான் மெல்ல மெல்ல இந்திரனுக்குக் கடவுள் உணர்வை ஏற்றினார். இவருக்குத் தெரியாத, இறந்தவர்களைப் பிழைக்க வைக்கும் ‘சஞ்ஜீவினி’ என்ற வித்தையை, இவர் பிள்ளையான கசன், சுக்கிராச்சார்யாரிடம் சீடனாக இருந்து கற்றான்.

வியாழ பகவான் காசிக்குச் சென்று, ஒரு லிங்கத்தை நிறுவி வழிபட்டார். அந்த வழிபாடு, பதினாயிரம் தேவ வருடங்கள் நடந்தது. முடிவில் சிவபெருமான் அங்கே தரிசனம் தந்து வியாழ பகவானிடம், ‘‘அரும்பெரும் தவத்தைச் செய்து, உன் மனதை இந்த லிங்கத் தியானத்திலேயே நிறுத்தியதால் உன்னை ‘ஜீவன்’ என்று உலகத்தவர் வழங்குவார்கள். உன்னுடைய குணங்களாலும் நம்முடைய திருவருளாலும் நீ இந்திரனுக்கு குருவாக விளங்குவாயாக!’’ என்று சொல்லி வரமளித்தார் எனக் காசிகாண்டம் எனும் நூல் கூறுகிறது.

வியாழ பகவான் தங்க நிறம் கொண்ட திருமேனி படைத்தவர். நான்கு திருக்கரங்களைக் கொண்டவர். அவற்றில் கமண்டலம், அட்சமாலை, யோக தண்டம், அபயம் என ஏந்தி இருப்பார். சாந்தமான வடிவத்தோடு, சதுரமான பீடத்தில் இருப்பார். கிழக்கு நோக்கி, தலையில் மகுடம் தாங்கி வீற்றிருப்பார். பொன்னிறத் திருமேனி கொண்ட இவர் பொன்னிறச் சந்தனம் பூசி, பொன்னிற மலர், பொன்மாலை, பொன்னாடை, பொற்குடை, பொன்னிறக்கொடி, பொன் தேர் ஆகியவற்றைக் கொண்டவர்.

தனுர் ராசிக்கும் மீன ராசிக்கும் தலைவரான வியாழ பகவானுக்கு உரியவை:

தானியம் - கடலை,
ரத்தினம்-புஷ்பராகம்,
மலர்-முல்லை,
சமித்து-அரசு,
சுவை-இனிப்பு,
உலோகம்-தங்கம்,
மிருகம்-மான்,
பட்சி-கௌதாரி,
அன்னம்-தயிர்சாதம்,
திசை-வடக்கு,
தேவதை-பிரம்மா,
பிரத்யதி தேவதை-இந்திரன்.

இவருக்கு சுராசார்யார், வாகீசர், பீதாம்பரர், யுவர், திரிலோகேசர், லோகபூஜ்யர், கிரகாதீசர், தயாகரர், நீதிகாரகர், தாராபதி, கிரஹபீடாபஹாரகர், சௌம்யமூர்த்தி என பல்வேறு திருநாமங்கள் உண்டு. வியாழ பகவான் தன் மனைவி தாரையோடும் பரத்துவாசர்-யமகண்டன்-கசன் என்னும் பிள்ளைகளோடும் எழுந்தருளி இருப்பார். இவருக்கு வாகனம் யானை; அன்ன வாகனம் என்றும் ஒரு நூல் கூறுகிறது. சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீமுத்து ஸ்வாமி தீட்சிதர், வியாழ பகவானைத் துதித்து கீர்த்தனை எழுதியிருக்கிறார். வியாழ பகவான் மிகுந்த வலிமை உடையவர்.

சர்வ வியாபகர். வாக்குக்கு அதிபதி, இந்திரன் முதலானவர்களின் வழிபாட்டிற்கு உரியவர். திருமால் முதலானவர்களால் புகழ் பெறுபவர், வஜ்ராயுதம் கொண்டவர், கற்பகம் போல வேண்டியவற்றை அருள்பவர். ஏழைக்கு இரங்குபவர், பரா, பஸ்யந்தி, மத்யமா, வைகரி என்னும் நான்கு வகையான வாக்குகளாக விளங்குபவர், கருணைக்கடல், தூயவர், நீதி சாஸ்திர ஆசிரியர், களங்கமற்றவர் என்றெல்லாம் ஸ்ரீதீட்சிதரின் கீர்த்தனை வியாழ பகவானைப் புகழ்கிறது. வியாழ பகவான் நமக்கு நல்ல வாக்கு வன்மையையும் ஞானத்தையும் அருள வேண்டுவோம்!

பி.என்.பரசுராமன்



?????? ????? ????? ????? ?????? - Kungumam Tamil Weekly Magazine
 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top