• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

மல்லர் தனுர்தாசர் அடியார் பிள்ளை உறங்காவில்லி தாசர் ஆன வைபவம்

இன்று,(25/02/2021)மாசி ஆயில்யம்.
பிள்ளை உறங்காவில்லி தாசர் திருநட்சித்திரம்.சூத்திர வர்ணத்தில் பிறந்து,ரஜோ குணத்துடன் மல்/வில் யுத்தம் செய்து வாழ்ந்து வந்தவர், ராமானுஜருக்கு மிக உகந்த சீடராகி,
திவ்யபிரபந்த வியாக்யானங்களில்,
பாகவத லட்சணத்துக்கு உதாரணமாக உரைக்கப்படும் அளவுக்கு உயர்ந்தவர்.
அவருடன் இணைந்து,அவர் துணைவி யார் ஹேமாம்பாள்,ஆண்டாள் கோஷ்டிக்குத் திலகமாக மாறி
'பொன் நாச்சியார்'ஆனதும் சிறந்த வைபவம்.ஶ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் தம்பதிகள் இருவரும் சிறந்த திருமால் அடியார்களாக ஒளிர்ந்தது கூரத்தாழ்வான்
ஆண்டாளுக்கு அடுத்து,இவர்கள் இருவர் என்றால் அது மிகையாகாது.

1 கவர்ந்த கண்கள்

தனுர்தாசர் தம் துணைவியார் பொன் நாச்சியாரின் பேரழகைக், குறிப்பாக அவரது கண்ணழகைப் பெரிதும் போற்றி வந்தார்.அவர் பாதம் மண்/புழுதியில் படாதபடி,கீழே ஒரு துணியை விரித்து (எடுத்து மீண்டும் விரித்து) அதன் மேல் நடந்து வருமாறும்,அவர் கண்கள் வெயில் பட்டுக் கந்தி விடாமல் இருக்க கண்களுக்குக் குடை பிடித்துக் கொண்டும் வருவார்.ஒரு நாள் ஶ்ரீரங்கத்தில் நடந்த வசந்த உற்சவத்தில் பெருமாள் புறப்பாட்டின்போது,
அனைவரும்பெருமாளைச் சேவித்து பாடி/ஆடிக் கொண்டு வருகையில்,தனுர்தாசர் எதைப் பற்றியும் கவலைப்படாமல் தம் துணைவியின் கண்களுக்கு குடை பிடித்துக்கொண்டு வந்தார்.இதைச் சற்று தூரத்தில் இருந்து கவனித்த உடையவர் அவரை,அழைத்து வரும்படி ஒருவரை அனுப்பினார்.உடையவரிடம் வந்து
வணங்கியவரிடம்,அனைவருக்கும் எதிரில் இவ்வாறு நடந்து கொள்வது தகுமா என்றார். அதற்கு அவர் தம் துணைவியின் கண்களின் அழகைப் போல வேறு கண்களை தாம் பார்த்ததில்லை எனவும்,அவற்றைப்
பேணவே அவ்வாறு செய்வதாகக்
கூறினார்.

உடனே உடையவர்அவரிடம்,
இந்தக் கண்களை விட, பேரழகு வாய்ந்த கண்களை தாம் அவருக்குக் காட்டுவதாக க்கூறி,அரவணை மேல் பள்ளி கொண்டிருக்கும் பெரிய பெருமாளிடம் அழைத்துச் சென்றார்.உடையவரின் மனம் அறிந்த பெருமாள் திருப்பாணாழ்வாரைப் பேதமை செய்த "கரியவாகிப்புடைபரந்து,மிளிர்ந்து செவ்வரியோடி நீண்ட அப்பெரியவாய கண்களை"தாசருக்குக் காட்டினார்.
எந்த அமுதினைக் கண்ட பாணர், மற்றொன்றினைக் காண வில்லையோ, எந்தத் திருமுகத்தையும்,கண்களையும் கண்ட அரசர் ஆளவந்தார் மஹா ஆசார்யர் ஆனாரோ, அந்தக் கண்களைக் கண்ட தாசர் அங்கேயே மயங்கி விழுந்தார்.எழுந்த தாசர் உடையவர் திருவடிகளில் தண்டனிட்டுக் கதறினார்.
'கண்டு கொண்டேன்;கண்டு கொண்டேன் (சத்தியமான அழகை)' என்று.

'நயன் தாராவை மறந்தார்; நாராயணனைக் கண்டார்'
பேருண்மையை உணர்ந்த தாசரை உடையவரும் சீடராக ஏற்றுக் கொண்டார்.

2.கவர்ந்த கண்களும் உறங்காத கண்களும்:

பேரழகையும்,பேருண்மையையும்,அவற்றைக்காட்டிக் கொடுத்த பேரருளாளர் ராமானுஜர் மகிமையையும் முற்றும் உணர்ந்த தனுர்தாசர் அவர்களையே நெஞ்சிலும், கண்களிலும் நிறுத்தியதால், உறங்காமல் அவர்களுக்குக் கைங்கர்யம் செய்வதையே வாழ்க்கை என்றிருந்தார்.எம்பெருமானார் அதிகாலையில் விழித்தெழும் போது,
இவர் அங்கே தயாராக நின்று கொண்டிருப்பார்.அவருக்கு உதவியாக அவருடனேயே செல்வார்.இரவில் அவர் உறங்கியபின் மடத்தில் கைங்கர்யங் களைச் செய்து விட்டு தம் திருமாளிகை க்குச் செல்வார்(இதற்காகவே சொந்த வீடு,ஊரை(உறையூர்) விட்டு உடையவர் மடத்துக்குப் பக்கத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொண்டு வந்து விட்டார்கள்).

அழகிய மணவாளர் புறப்பாட்டின் போது பெருமாள் மீது /அவர்வரும் வழிமீது வைத்த கண் வாங்காமல் மிகக் கவனமாகப் பார்த்துக் கொண்டே வருவார். பெருமாளையும்,கூட்டம் முழுவதையும் பருந்துப் பார்வை பார்த்துக் கொண்டே இருப்பார்.(ஒரு காலத்தில் இதே பெருமாள் எதிரே வந்து "கண்ணுற நின்றபோது
,காணகில்லா தாசர்,அண்ணல் இராமானுசர் அருளால் நண்ணருஞானம் தலைக்கொண்டு "பெருமாளைத் தவிர வேறு எதையும் காண்பதில்லை இப்போது).அவர் இடுப்பு வேஷ்டியில் எப்போதும் ஒரு கத்தி/வாளைச் செருகி வைத்திருப்பார்.நம்பெருமாளுக்கு ஏதாவது ஆபத்து-அவர் வரும் வாகனம்/பல்லக்கு சற்று மாறாக அசைந்தாலும்-ஏற்பட்டால் உடனே கத்தியை எடுத்து தன்னைக் குத்திக் கொள்ள!! ஆனால் இவரின் கூரிய கவனத்தாலும், அளப்பரிய பக்தியாலும், எம்பெருமான்/எம்பெருமானார் கிருபையாலும் கத்தியை எடுப்பதற்கான வாய்ப்பு வரவே இல்லை!!

இரவு வீட்டுக்குச் சென்றாலும் அன்று நடந்தவை,மறுநாள் நடக்கப் போவது ஆகியவற்றை சிந்தித்துக் கொண்டே இருப்பாராம்.எப்போது உறங்குவார்,
எப்போது விழிப்பார் என்றுஆச்சர்ய
ப்படும் அளவுக்கு.எனவே
உறங்காவில்லி தாசர்.

3.கல்லெல்லாம் தங்கமாக்கும், ராமானுஜ பர்ஸவேதி

அவருடைய தூய்மையான,ஆழ்ந்த பக்திக்கு இணையே இல்லை.
உடையவர்,அதிகாலையில் காவிரிக்கு நீராடச் செல்லும் போது ஆண்டான்/ஆழ்வான் தோள்களில் கையை வைத்துச்செல்வார்.நீராடித் திரும்பும்
போது,உறங்காவில்லி தாசர் தோளில் கை வைத்து வருவார்.இதை அந்தக் காலத்து ஆசார அந்தணர்கள் சிலரால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.(நீராடும் முன் உயர்ந்த குலத்து அந்தணர்களைத் தொட்டுச் செல்லும் எதிராசர்,நீராடிய பின்சூத்திரரான உறங்கா வில்லியை எப்படித் தொட்டுக் கொண்டு வரலாம்?).
அவர்கள் உடையவரிடமே இது பற்றிக் கேட்டனர்.அவர்களுக்குத் தாசரின் தூய்மையையும், மேன்மையையும் உணர்த்த விழைந்து,அன்றிரவு அவர்கள் உறங்கியபின் தாசரிடம் மடத்தில் காயப்போட்டிருந்த அவர்களின் வேஷ்டிகள் சிலவற்றைக் கிழிக்குமாறு கூறினார்.ஆசார்யர் வாக்கே வேத வாக்கு என்றிருந்த தாசர் உடனே அவற்றைக் கிழித்து விட்டார்.மறுநாள் காலையில், தங்கள் வேஷ்டிகள் கிழிந்திருந்ததைப்
பார்த்த அவர்கள் கோபத்தில் ஒருவரை ஒருவர் கண்டபடி(வாய்கூசும்படி) ஏசிக் கொண்டார்கள்.

சில நாட்கள்கழித்து,ராமானுஜர் அவர்களில் சிலரைக் கூப்பிட்டு,மடத்தின் செலவுகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன; ஆனால் போதிய வருமானம்இல்லை;எனவே உறங்காவில்லி வீட்டுக்குச் சென்று சில நகைகளைத் திருடிக் கொண்டு வாருங்கள் என்றார்(மல்யுத்தப் போட்டிகளில் வென்று வந்த பரிசுத் தொகையில்,அழகு மனைவிக்கு அதிக நகைகள் செய்து போட்டிருந்தார் தாசர்).
உடையவர்,தாசரிடம் குறிப்புக் காட்டினாலே அத்தனையும் கொண்டுவந்து கொட்டி விடுவாரே,
என்பதைக் கூட உணர முடியாத அவர்கள் தாசர் வீட்டுக்கு திருடச் சென்றனர். அப்போது தாசர் அங்கில்லை.
பொன்னாச்சியார் ஒருக்களித்துப் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தார். இவர்கள் அவரது ஒரு பக்கத்து நகைகளை அவசரமாகக்கழட்டி விட்டனர்.இவர்கள் நகைகளக் கழட்ட ஆரம்பித்ததுமே தூக்கம் களைந்த நாச்சியார்,வந்திருப்பவர்கள் திருமால் அடியார்கள் என்று கண்டு,அவர்களுக்கு வேண்டியதை எடுத்துக் கொள்ளட்டும்
என்று,தூங்குவது போல இருந்துவிட்டார். அவர்கள் ஒருபக்கம் கழட்டியதும்,மறு பக்கம் கழட்டுவதற்கு ஏதுவாக திரும்பிப் படுத்தார். இதைப் பார்த்து வந்தவர்கள் அவர் விழித்துக் கொண்டார், என்று பயந்து ஓடிவிட்டனர்.
உடையவரிடம் சென்று நடந்ததைக் கூறினார்கள்.

சற்று நேரத்தில் வீட்டுக்கு வந்த தாசரிடம் நடந்ததைக்கூறினார் பொன்னாச்சியார்.
'நீ ஏன் திரும்பிப் படுத்தாய்?அதனால் தான் அவர்கள் பயந்து சென்று விட்டார்கள்.நீ அசையாமல் இருந்திருந்தால் அவர்களுக்கு வேண்டியதை எடுத்துக் கொண்டு போயிருப்பார்களே.இப்படி அடியார்களிடம் அபசாரப் பட்டு விட்டாயே' என்று கடிந்து கொண்டார் ! மற்ற நாட்களிலேயே அதிகம் உறங்காத தாசருக்கு அன்று உறக்கம் வருமா? இருவரும் வீட்டில் உள்ள நகைகள்/விலை உயர்ந்த பொருட்கள் எல்லா வற்றையும் மூட்டை கட்டிக்கொண்டு,
அதிகாலையில்ஓடோடிச் சென்று உடையவர் திருவடிகளில்
சமர்ப்பித்து,விழுந்து அழுதனர்,திருமால் அடியார்களுக்கு உதவ முடியாமல் அபசாரம் இழைத்து விட்டோமே என்று!! உடையவர் மடத்தில் இருந்தவர்களை
யெல்லாம்(இவர்களைப் பற்றி இழிந்து பேசியவர்கள்/வேஷ்டி கிழிந்ததற்கு சண்டை போட்டவர்கள்/திருடச் சென்றவர்கள எல்லாரும் இருந்தார்கள்) ஒரு பார்வை பார்த்தார்.அந்தக் கண்பார்வை சொல்லியது' உறங்காவில்லி,உத்தமதாசர்'என்று.
அனைவரும் தங்கள் தவறுக்கு மன்னிப்புக் கேட்டு,உடையவர் திருவடிகளில்விழுந்தனர்.
தாசரின் ஈடு,இணயற்ற பக்தியையும், தூய்மையான திருவுள்ளத்தையும் கொண்டாடினர்.அவருடைய உன்னதம் எப்படிப்பட்டது என்றால்,மற்ற உலோகங்க ளையும்/கல்லையும் உரசினால் தங்கமாக்கும் தன்மையுடைய பர்ஸவேதிக் கல் போன்றவர் அவர்.அவர் வைபவத்தைப் படித்தாலே/கேட்டாலே நமக்கும் அந்த உயர்ந்த குணங்கள் வர வைத்து விடும் தங்கப்பிள்ளை அவர்.எனவே அவர் "ராமானுஜபர்ஸவேதி" என்று போற்றப்படுகிறார்.அவருடைய தனியனிலும் இது ஒலிக்கிறது:
" ஜாகரூக தனுஷ்பாணிம் பாணெள கட்கஸமந்விதம்,
ராமனுஜஸ் பர்ஸவேதிம் ராத்தாந்தார்த்த ப்ரகாஸகம்.
பாகிநேயத்வயயுதம் பாஷ்யகார பரம்வஹம்
ரங்கேசமங்களகரம் தநுர்தாஸம் அஹம் பஜே "||

"எப்போதும் உறங்காத விழிப்புள்ள உறங்காவில்லி தாசர், ஒருகையில் வில்லும் மற்றொன்றில் கத்தியும் ஏந்தி நம்பெருமாளைக் காப்பவர், ராமாநுசர்க்கு ஸ்பர்சவேதி, ரஹஸ்ய புருஷார்த்தங்களைத் தம் வாழ்வில் வெளிப்படுத்தியவர், இரு மருமகன்களை உடையவர், எம்பெருமானார் மடத்தை நடத்தியவர், நித்தியமாகப் பெரிய பெருமாளை மங்களாசாசனம் செய்தவருடைய திருவடிகளை புகலாக அடைகிறேன்"

4.பெருமாள் மீது"பொங்கும் பரிவு".

பெரியாழ்வாரின் "பொங்கும் பரிவு" பற்றி நாம் நன்கு அறிவோம்.பொங்கும் பரிவா லே அவர் 'பெரியாழ்வார்' என்னும் பெயர் பெற்றார்.ஆனால் பொங்கும் பரிவுக்கு உறங்காவில்லி தாசரும் பேசப்படுகிறார்.
திருவாய்மொழி 8-4-1 "வார்கடா வருவியானை......திருச்சிற்றாறு எங்கள் செல் சார்வே"என்னும் பாசுரத்தில், "எங்கள்" என்னும் பதம் "மஹாராஜா சுக்ரீவர்,ஸ்ரீவிதுரர், பெரியாழ்வார்,
நம்மாழ்வார்,பிள்ளை உறங்காவில்லி தாசர்" ஆகிய "பரிவர்"களைக் குறிப்பதாக நம்பிள்ளை ஈட்டில் சாதிக்கிறார்.இத்தகைய பரிவர்கள் திருச்சிற்றாரில் வீற்றிருக்கும் எம்பெருமானுக்கு பிரதிகூலர்களால்
எந்த அபாய மும்/அபச்சாரமும் ஏற்படாது என்று நிர்பயஸ்தார்களாக அங்கு செல்லலாம் என்கிறார்.

அபச்சாரமும்,பரிஹாரமும் :

உறங்காவில்லி தாசரின், இருமருமக்களான,வண்டர் மற்றும் சொண்டர் இருவரும் ஒருமுறை மன்னனரோடு,அவரது பணியாட்களாக சென்று கொண்டிருந்த பொழுது, அந்த மன்னர் தூரத்திலிருந்த, ஓர் சமணக் கோயிலைக் காண்பித்து அது ஒரு விஷ்ணுவின் ஆலயம் என்றார்.அந்த கோயில் ஸ்ரீவைஷ்ணவக் கோயில் போல் இருந்ததால் அவ்விருவரும் உடனே அதே இடத்தில் சாஷ்டாங்கமாக தண்டம் சமர்ப்பித்து வணங்கினார்கள். மன்னர் அவர்களை கேலி செய்வதற்காக செய்வதற்காகவே அவ்வாறு செய்த தாகக் சொன்னார். ஆனால் வண்டரும் சொண்டரும் ஸ்ரீமந்நாராயணனைத் தவிர வேறு ஒரு தெய்வத்தை வழிபட்டு அபச்சாரம் இழைத்து விட்டோமே என்று வருந்தி மயக்கமுற்று விழுந்தார்கள்.

இச்சம்பவத்தைக் கேட்ட தாஸர் உடனே ஓடிச்சென்று தன்னுடைய திருவடிகளின் பொடி மண் (ராமாநுஜ தொண்டர் அடிப் பொடி) எடுத்து அவர்களிருவரின் மேலேயும் தடவ அவர்களும் உடனே தம் சுயநிலைமைக்கு மீண்டும் வந்தார்கள். இதிலிருந்து பாகவதர்களின் திருவடித் தாமரைகளின் தூசு கொண்டே தேவதாந்தர பஜனத்தால் (தெரியாமல் செய்தாலும் கூட) வந்த குறையைப் போக்க முடியும் என்பது தெளிவாகிறது.

இயல் சாற்றில்,ஏற்றம்:

ஸ்ரீ மணவாள மாமுனிகள் உற்சவகாலங்கள்/திவ்யப்பிரபந்த சேவை காலங்களில் இறுதியாக சாற்று மறை என்னும் "இயல் சாற்று" சாதிக்கும் முறையை ஏற்படுத்தினார். பல்வேறு ஆசார்யர்கள் இயற்றிய 8 பாசுரங்களில் தொகுப்பே இயல் சாற்று ! இதில்,
பிள்ளை உறங்கா வில்லி தாஸர் இயற்றிய பாசுரம்தான் முதலில் இடம்பெற்றுள்ளது. அதுவே நம் சம்பிரதாயத்தின் சாரமாக விளங்குகிறது.

"நன்றும் திருவுடையோம், நானிலத்தில் எவ்வுயிர்க்கும்,
ஒன்றும் குறை இல்லை ஓதினோம்.
குன்றம் எடுத்தான் அடிசேர் ராமனுசன் தாள்,
பிடித்தார் பிடித்தாரைப் பற்றி !!"

"கோவர்தன மலையை தூக்கிப் பிடித்துத் தனக்கு பிரியமான கோப கோபியர்களை ரக்ஷித்த கண்ணன் எம்பெருமானுக்கு அடியவரான ஸ்ரீ ராமானுஜரும், அவர்க்கு அடியவர்களான ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு நாங்கள் அடியவர்களாக (தொண்டர்கள்) இருப்பதால் எங்களுக்கு ஒரு குறையும் வருத்தமும் இல்லை, மிகுந்த செல்வம் உள்ளவர்கள் நாங்கள் என்று அறிவிக்கிறோம்."



1614263759557.png


1614263773578.png

1614263779729.png
 

Latest ads

Back
Top