• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

பெற்றோர்களே, எப்போது சன்யாசம் பெறப்பே&

Status
Not open for further replies.
பெற்றோர்களே, எப்போது சன்யாசம் பெறப்பே&

நெருப்பு சுடும்னு தொட்டு உணர்வது ஒரு ரகம். அடுத்தவர் தொட்டு, அவர் படும் பாட்டை அறிந்து நெருப்பு சுடும்னு தெரிந்துக்கொள்வது மற்றொரு ரகம். முன்னதில் உணர்வது அனுபவம், மற்றதில் அறிந்துக்கொள்வது கேள்வி ஞானம். ஒருவர் அனைத்து விஷயங்களிலும் அனுபவம் பெறுவது சாத்தியமாகாது. ஒவ்வொரு மனிதனும் கேள்வி ஞானத்தை மட்டுமே கொண்டு பெரும்பாலான சமயங்களில் வாழ்க்கையை வழிநடத்திச் செல்கின்றான். ஒரு விஷயத்தின் முக்கியத்துவம், அது நம் வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கம் ஆகியவற்றைப் பொறுத்து, சில சமயங்களில் கேள்வி ஞானம் உதவாமல் போகக்கூடும். அனைத்து விஷயங்களிலும் அனுபவம் சாத்தியமில்லையென்றபோதிலும், சில விஷயங்களில், சில நேரங்களில் "அனுபவம்" சமரசம் செய்துகொள்ள முடியாததாகிவிடுகின்றது.

வாழ்க்கையில் ஏற்படும் சந்தர்ப்ப சூழ்நிலைகளே அனுபவங்களை அளிக்கும் என்றபோதிலும், முதலில் குறிப்பிட்ட சில அடிப்படை அனுபவங்களை ஒருவனுக்கு அளிக்கவேண்டியது பெற்றோரின் கடமை. உகந்த சூழ்நிலைகளை உருவாக்கி, சரியான வழிகாட்டுதலோடு தன் குழந்தையை வாழ்க்கை அனுபவங்களுக்கு உட்படுத்துவது, அவன் எதிர்காலத்திற்கு இன்றியமையாத ஒன்று. பெற்றோர் ஒருவனுக்கு அளிக்கும் இந்த வழிகாட்டுதல் ஓரளவிற்கு மட்டுமே சாத்தியம். அவன் சார்ந்த சமூகம், அவன் உறவு, நட்பு வட்டாரங்கள், அவன் வாழ்வில் பெறும் வெற்றி, அதனையும்விட அவன் சந்திக்கும் தோல்விகள் அந்த அனுபவத்தை மெறுகேற்றும். ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் பெறும் அனுபவம், வாழ்வில் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் பல சவால்களை சந்திக்க வேண்டிய தன்னம்பிக்கையையும், திறமையையும் ஒருவனுக்கு அளிக்கும்.

எந்த சூழ்நிலையில், எந்நிலையில் வழிகாட்டுதலை நிறுத்த வேண்டும் என்பது மிக முக்கியம். தன் மகனுக்கு சைக்கிள் ஓட்டுவதற்கு பழக்கும் ஒருவர், மகனை சைக்கிளில் அமர்த்தி, பெடலை மிதிப்பதற்கு கற்றுத்தருவார். மகன் சைக்கிள் மிதிக்கும்போது அவர் சீட்டின் பின்பக்கத்தை பிடித்துக்கொண்டே பின்னால் ஓடிக்கொண்டிருப்பார். சிறிது நாட்களுக்கு பிறகு, அவன் சிறிது சைக்கிள் ஓட்ட பழகியவுடன் அவ்வப்போது தன் பிடியை தளர்த்தியும் பின்னால் ஓடிக்கொண்டிருப்பார். அவன் இன்னும் நன்கு சைக்கிள் பழகியவுடன் அவர் பின்னால் சிறிது தூரம் சென்று ஒரு கட்டத்தில் தன் ஓட்டத்தை நிறுத்திவிடுவார். ஆனாலும் அவன் போகும் பாதையில், அவன் சைக்கிளை செலுத்தும் முறையில், அவனுடைய நடவடிக்கைகளில் அவர் கண்கானிப்பு இருக்கும். இதைப் போன்றுதான், வாழ்க்கையிலும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை மகனை மடியில் வைத்துக்காக்க வேண்டும். பின் சிறிது காலம் தன் கைப்பிடியில் மகனை வைத்திருக்க வேண்டும். அதன் பிறகு தன் கண்பார்வையில் வைத்து மகன் வாழ்க்கை நடத்தும் முறையைப் பார்க்க வேண்டும். மடியில் வைத்திருக்கும் போது முழுக்கவனமும் மகன் மீது செலுத்தியும், கைப்பிடியிலிருக்கும் போது அவ்வப்போது கவனித்தும், ஒரு காலகட்டத்தில் சற்று விலகி நின்று, தேவைப்படும் நேரத்தில் மட்டும் அறிவுரைகள் வழங்கியும் வழிகாட்டுதல் தந்தையின் பொறுப்பு. எப்பொழுது தன் மகனை தோளில் சுமக்க வேண்டும், எப்பொழுது கையணைப்பில் வைத்திருக்க வேண்டும், எப்பொழுது விலகி நின்று கவனிக்க வேண்டும் என்பது அந்த மகனின் அறிவு வளர்ச்சி, அவன் மனமுதிர்ச்சி, அவன் சுற்றம், அவன் நடத்தை ஆகியவற்றைக் கொண்டு தந்தை தீர்மானிக்க வேண்டியது.இந்த வழிகாட்டுதலானது, இல்லாமல் இருந்தாலோ, அல்லது குறைவாக இருந்தாலோ, தந்தையின் வளர்ப்பு சரியில்லை என சமூகம் பழிக்கும். அளவுக்கதிகமாக, மகன் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு வளர்ச்சி அடைந்தும் தந்தை வழிகாட்டிக்கொண்டிருப்பதோ மிகவும் பிரச்சினைக்குரியது.

தந்தை மகன் மீது கொண்ட அன்பினால் தான் வயது முதிர்ந்த வேளையிலும், மகனுக்கு வழிகாட்டும் எண்ணத்தில் எல்லா வேளைகளையும் இழுத்துப்போட்டுக் கொண்டு செய்வதினால் மகனுக்கு தேவையான அனுபவம் கிடைப்பதில்லை. வயது முதிர்ச்சியினால், இயலாமை தோன்றும். இது மனதளவிலும் த்ந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். தந்தை எப்போதும் மகனுடன் இருக்கப்போவதில்லை - அவர் மரணத்திற்குப்பிறகு அவன் ஆதரவின்றி நிற்கும் வேளையில் அவனுக்கு தான் கற்றுணர்ந்த அனுபவமே கைக்கொடுக்கும். மற்றொரு ரகம் - நான் என்னும் எண்ணம் கொண்ட சிலர் - இவர்கள் கல்யாண வீடாக இருந்தால் தான் மாப்பிள்ளையாகவும், சாவு வீடாக இருந்தால் தானே பிணமாகவும் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள். இவர்கள் தன் மகன் பொறுப்புகளை ஏற்க முன்வந்தாலும், பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு ஒதுங்காமல் தானே அனைத்தையும் செய்ய முனைவர். வயதான காலத்திலும் இவர் பணியாற்றுவதை பார்த்து, சுற்றத்தார் போற்ற வேண்டும் என்பதற்காக தன் மகனின் வளர்ச்சியை தானறியாமலே தடை செய்துகொண்டிருப்பவர்கள் இவர்கள்.

நம் இந்து மதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நான்காம் (வர்ணா) ஆஸ்ரம தர்மம் இதுபற்றியதுதான். மேற்கத்திய நாடுகள் இன்று அதிகம் பேசும் "தலைமுறை இடைவெளி" என்ற கோட்பாடும் இதுபற்றியதுதான். மகனாய் இருக்கும் நாம் பின்னாளில் தந்தையாகவும் பரிணாம வளர்ச்சியடையப் போகின்றோம். சிந்தியுங்கள், எப்போது நீங்கள் சன்னியாசம் பெறப்போகிறீர்கள் ? இது மாமியார் மருமகள் பிரச்சினை உட்பட அனைத்து குடும்ப பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமையும். சன்னியாசம் என்பது காவியுடை தரிப்பதோ, அல்லது ஆசிரமத்தில் வாழ்வதைப்பற்றியதோ மட்டும் அல்ல. அது மனதளவில் நாம் அனைத்திலிருந்தும் விடுபட்டு இறுதி பயணத்திற்கு தயாராகயிருக்கிறோமா என்பதைப்பற்றியது.





 
Status
Not open for further replies.
Back
Top