• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

பாவை நோன்பு.

praveen

Life is a dream
Staff member
திருமாலே தனக்கு கணவராக அமைய வேண்டுதல் வைத்து, மார்கழி மாதத்தில் ஆண்டாள் மேற்கொண்ட விரதமே பாவை நோன்பு.


இதற்காக அவள், அதிகாலையில் துயிலெழுந்து தோழியரையும் அழைத்துக் கொண்டு நீராடச் சென்றாள்.


தான் பிறந்த ஸ்ரீவில்லிப்புத்தூரை ஆயர்பாடியாகவும், தன்னை கோபிகையாகவும் பாவனை செய்து, கண்ணனின் இல்லத்திற்குச் சென்று அவனை வணங்கி வந்தாள்.


மாதத்தின் ஆரம்பத்தில் நெய், பால் முதலிய உணவு வகைகளைத் தவிர்க்கும் வகையில் இந்த விரதம் அமைந்தது. இந்த விரதத்தை இப்போதும் கன்னிப்பெண்கள் அனுஷ்டிக்கலாம்.


காலை 4.30 மணிக்கே நீராடி, திருப்பாவை பாடலை மூன்று முறை படிக்க வேண்டும்.


உதாரணமாக, மார்கழி முதல்தேதியன்று மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் பாடலைத் துவங்க வேண்டும்.


மார்கழியில் 29 நாட்களே இருப்பதால், கடைசி நாளில் கடைசி இரண்டு பாடல்களை மூன்று முறை பாட வேண்டும்.


இத்துடன் தினமும்வாரணமாயிரம் பகுதியில் இருந்து வாரணமாயிரம் சூழ வலம் வந்து, மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத உள்ளிட்ட பிடித்தமான பாடல்களைப் பாட வேண்டும்.


விரத நாட்களில் நெய், பால் சேர்த்த உணவு வகைகளை உண்ணக்கூடாது. மற்ற எளிய வகை உணவுகளைச் சாப்பிடலாம்.


ஆண்டாள், பெருமாள் படம் வைத்து உதிரிப்பூ தூவி காலையும், மாலையும் வழிபட வேண்டும். இவ்வாறு செய்வதால் ஆண்டாள் மனம் மகிழ்ந்து, சிறந்த கணவனைத் தர அருள் செய்வாள். திருமணத்தடைகளும் நீங்கும்.


மார்கழி நைவேத்யம்:


மார்கழி மாதத்தில் எல்லா கோயில்களிலுமே அதிகாலையில் பூஜை நடக்கும்.


கோயில்களில் மட்டுமின்றி வீட்டையும் சுத்தம் செய்து, காலை 8.30 மணிக்குள் எளிய பூஜை ஒன்றை பெண்கள் செய்யலாம்.


திருமணமான பெண்கள் இதைச் செய்தால் மாங்கல்ய பலம் கூடும்.


திருவிளக்கேற்றி, நம் இஷ்ட தெய்வங்களுக்கு பூச்சரம் அணிவித்து அல்லது உதிரிப்பூக்கள் தூவி, அந்தத் தெய்வங்களைக் குறித்த பாடல்களை பாட வேண்டும்.


சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, தயிர் சாதம், சுண்டல் முதலானவை செய்வதற்கு எளியவையே. கற்கண்டு சாதம் அமுதம் போல் இருக்கும். குழந்தைகளும் விரும்பிச் சாப்பிடுவார்கள். கன்னிப்பெண்கள் மட்டும் நெய், பால் சேர்த்த உணவைச் சேர்க்கக்கூடாது. நெய் சேர்க்காத சர்க்கரைப் பொங்கல், கல்கண்டு சாதம் முதலானவற்றை நைவேத்யம் செய்யலாம்.


திருப்பாவை பிறந்த கதை:


கலியுகத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூரில் பிறந்த ஆண்டாள், மனிதர்கள் யாரையும் மணக்கமாட்டேன், பெருமாளையே மணப்பேன் என லட்சிய சபதம் கொண்டாள்.


கிருஷ்ணாவதார காலத்தில், ஆயர்பாடி கோபியர்கள் கண்ணனை அடைய மேற்கொண்ட பாவை நோன்பை மேற்கொண்டாள்.


ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருந்த பெருமாளின் சன்னதிக்குச் சென்று, அவருடைய முகத்தைப் பார்க்க வெட்கப்பட்டு, கையில் இருந்த பாஞ்சஜன்யம் என்னும் சங்கைப் பார்த்து மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் எனத் துவங்கி வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை என முடியும் முப்பது பாடல்கள் பாடினாள். அதுவே திருப்பாவை ஆயிற்று.


திரு என்றால் மரியாதைக்குரிய எனப் பொருள். பாவைஎன்றால் பெண். நமது வணக்கத்துக்குரிய பெண் தெய்வமாகிய ஆண்டாள் பாடியதால் இது திருப்பாவை ஆயிற்று.


முதல் பாடல் திருப்பாவையின் நோக்கத்தை சுருக்கமாக எடுத்துச் சொல்கிறது. இரண்டு முதல் ஐந்து பாடல்கள் பாற்கடலில் பள்ளிகொள்ளும் பரந்தாமனின் சிறப்புகளைச் சொல்கிறது.


ஆறு முதல் 15 பாடல்கள் ஆழ்வார்களுக்கு ஒப்பான அடியார்களை தோழிகளாகக் கற்பனை செய்து அவர்களை எழுப்பிக்கொண்டு கோயிலுக்குச் செல்வதை எடுத்துச் சொல்கிறது.


இந்தப் பாடல்களில் மார்கழி மாதத்தில் காலை நேரப் பணிகள் அக்காலத்தில் எப்படி இருந்தன என்பதையும் தெரிந்து கொள்ளலாம். கடைசி 15 பாடல்கள் தன்னை ஏற்றுக் கொள்ளுமாறு பெருமாளைக் கெஞ்சும் ஆண்டாளின் மனநிலை புரிகிறது.


வைகறை-மார்கழி:


மனிதர்களுக்கு ஒரு ஆண்டு என்பது தேவர்களுக்கு ஒருநாள் ஆகும்.


இந்த ஒருநாளின் வைகறைப் பொழுதாக மார்கழி அமைகிறது.


உடல் சுறுசுறுப்பும், உள்ளத் தெளிவும் நிறைந்த வைகறைக் காலை வழிபாடு எப்போதும் சிறந்தது. எனவே வைகறைப் பொழுதான மார்கழி, தேவர்களை வழிபடுவதற்கு மிகப்பொருத்தமான மாதம் என்பது இந்த மாதத்தின் சிறப்பு.


ஸ்ரீகிருஷ்ண பகவான் மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று பகவத்கீதையில் அருளினார். காலம் ஒரு கடவுள். காலமாக இருப்பவனும் கடவுள். இவர்களுக்கு இன்னது, இப்போது நடக்கும் என்று காலங்களை நிர்ணயித்து விதிப்பவனும் கடவுள்.


எல்லாக் காலங்களாகவும் விளங்குகின்ற ஸ்ரீகிருஷ்ணன், மாதங்களில் நான் மார்கழி என்றார். இவரது திருவாய் மொழி, மார்கழியின் சிறப்புகளை உயர்த்திப் பேசுகின்ற திருவாசகமாக அமைந்து விட்டது இந்த மாதத்தின் மற்றொரு சிறப்பு.


ஓசோன் வாயு:


மார்கழி வைகறைக் காலத்துப் பனியை அனுபவிப்பது ஒரு சுகம். பனி, படிப்படியே அதிகம் ஆகின்றபோது, அதை அனுபவிக்க தகுந்த உடல் உறுதியும், உள்ள உறுதியும் இருக்க வேண்டும். பனிப்படலத்தை ஊடுருவி வருகின்ற மெல்லிய காற்று தருகின்ற குளிர்ச்சி, சுகம் சுகமே.


இந்த இரட்டைச் சுகங்களுடன் மற்றொரு சுகம் மார்கழியில் மட்டும் அதிகமாக கிடைக்கின்றது.


வளிமண்டலத்தில் ஓசோன் என்ற வாயுப்படலம் நில உலகத்தில் இருந்து 19 கி.மீ. உயரத்தில் பரந்துள்ளது. இப்படலம் சூரியனிடம் இருந்து வருகின்ற, கேடு விளைவிக்கின்ற புற ஊதாக்கதிர்களை உறிஞ்சி, உயிரினங்கள் அழியாமல் பாதுகாக்கிறது.


விடியற்காலை 4 மணி முதல் 6 மணி வரை உள்ள காலம் பிரம்ம முகூர்த்தம் எனப்படுகிறது. வழிபாட்டுக்கு ஏற்ற காலமும் இதுவே.


இந்த நேரத்தில் ஓசோன் வாயு நில உலகத்தில் மென்மையாகப் படர்ந்து பரவுகிறது. இது உடலுக்கு நலம் தரும்; புத்துணர்ச்சி தரும். உள்ளத்துக்கு இதம் தரும்; புதுக் கிளர்ச்சி தரும். மார்கழி விடியற்காலையில், ஓசோன் வாயு நிலவுலகத்தில் சற்று அதிகமாகப் பரவுகிறது.


மார்கழி விடியற்காலையில், ஏதோ ஒரு ரம்மியமான சூழ்நிலை உருவாகின்றது என்பதைப் பழங்காலத் தமிழர்கள் உணர்ந்தனர். அந்த நேரத்தில் இறைப்பணிகளைச் செய்வதற்கும், அந்தப் பணிகளின் மூலமாகவே பக்திப் பரவசத்தைப் பெறுவதற்கும் முயன்றனர். பூஜை செய்தனர். நோன்பு நோற்றனர். இவ்வாறு மார்கழி விடியலுக்கு ஒரு தனிப்பெருமை கிடைத்தது.


கவுரி நோன்பு:


மகளிர் நோன்பு நோற்பதற்கு தகுந்த மாதம் மார்கழி, பாகவத புராணத்தில் இந்த நோன்பைப் பற்றிய ஒரு குறிப்புண்டு.


ஆயர்பாடிக் கன்னியர், மார்கழி மாத முப்பது நாள்களும் கவுரி நோன்பு நோற்று, காத்யாயனியை-பார்வதியை வழிபட்டனர்.


ஸ்ரீகிருஷ்ணனைக் கணவனாக அடைய விரும்பினர். கவுரி நோன்பும், தமிழகத்துப் பாவை நோன்பும் கன்னியர் நல்ல கணவனைப் பெற வேண்டும் என்ற குறிக்கோளால் ஒன்று என்றேக் கூறலாம்.


மார்க் சீர்ஷம் என்ற தொடர் மார்கழி என்று மாறியது. மார்க் சீர்ஷம் என்றால் தலையாய மார்க்கம். இதன் வேறு பெயர் தனுர் மாதம்.


பீடை மாதம்:


வைத்திய நூல்கள் மார்கழியைப் பீடை மாதம் என்று வழங்குகின்றன.


மார்கழியின் பனிக்குளிர்ச்சி சிலருக்கு நோய்த் துன்பங்களைத் தரலாம். எனவே, இது பீடை மாதமாகலாம். அகப்புறப் பீடைகளைப் பக்திப் பணிகளால் அறவே ஒழித்து, தூய்மையாக்கப் பொருத்தமான மாதமே மார்கழி. பீடு-பெருமை. பன்னிரு மாதங்களில் மிக்க பெருமையை உடையது பீடை மாதம் என்று மற்றொரு பொருளும் கூறலாம். பல காரணங்களால் மார்கழி பெருமையுடைய மாதம்.


சூரியனின் இயக்கம்:


சூரியனின் இயக்கம் அயனம். அவன் தெற்கு நோக்கி இயங்குவது தட்சிணாயனம். வடக்கு நோக்கி இயங்குவது உத்தராயனம். இவை இரண்டில் உத்தராயனம் உயர்ந்தது என்பர். தட்சிணாயனத்தின் கடைசி மாதம் மார்கழி.


மேலும், உத்தராயனத் தொடக்கப் புனித நாள் டிசம்பர் 21. இத்திருநாள் மார்கழியின் ஒருநாள். இந்த நாளில் சில கோயில்களில் சிறப்பு பூஜைகளை செய்கின்றனர்.


உத்தராயனத் தொடக்க நாளைத் தை மாதத்தில் கொண்டாடுகின்றனர் பலர். மார்கழி வந்தாலே எல்லா மகளிருக்கும் மகிழ்ச்சி பொங்குகிறது.


விடியற்காலையில் எழுகின்றனர். குளிரிலும் மன உறுதியுடன் நீராடுகின்றனர். பனி தலையில் படிய வீட்டையும், முற்றத்தையும் பெருக்கி தூய்மைப்படுத்துகின்றனர். சாணத்தால் முற்றத்தை மெழுகுகின்றனர். தெருவெங்கும் கோலமிடுகின்றனர். செம்மண்ணைப் பூசி அலங்கரிக்கின்றனர். கோலத்தின் நடுவே ஒருபிடி சாணத்தை வைத்து. அதில் பூசணிப் பூ அல்லது அருகம்புல்லைச் சூட்டுகின்றனர்.


விளக்கேற்றுகின்றனர். எல்லா முற்றங்களும், வீடுகளும் லட்சுமிகரமாகப் பொலிகின்றன. பூசணிப் பூவின் மஞ்சள் நிறம், மங்கலத்தின் சின்னம். சாணத்தில் பூசணிப்பூ... என்ன காரணம்? பூவுக்கு ஆதாரம் சாணமா? இல்லை.


ஒருபிடி சாணத்தில் பிள்ளையாரைப் பிடிக்கின்றனர். பூக்கின்றபோதே காய்க்கின்ற பூசணிப்பூவை, வழிபடுகின்றபோதே அருளுகின்ற பிள்ளையாரின் திருமுடிமேல் சூட்டுகின்றனர்.


பிள்ளையார் அனைவருக்கும் அருள்வதற்கு பிரசன்னமாகிறார். கோலத்தின் வெண்மை-பிரம்மன்; சாணத்தின் பசுமை-விஷ்ணு; செம்மண்ணின் செம்மை-சிவன்.


முற்றத்திலுள்ள வண்ணங்கள் மூன்றும் மும்மூர்த்திகளை நினைவுபடுத்துகின்றன.


எங்கும் பக்தி; எதிலும் தெய்வீகம்.


இவை அனைத்தும் மார்கழியின் சிறப்புகள்.
 

Latest ads

Back
Top