• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

பாட்டினால் கண்டு வாழும் பாணர் தாள் பரவினோமே!!

பாட்டினால் கண்டு வாழும் பாணர் தாள் பரவினோமே!!
🙏👣🙏👣🙏👣🙏👣🙏👣🙏
இன்று(30/11/2020),கார்த்திகை ரோஹிணி திருப்பாணாழ்வார் திருநட்சித்திரம்.பன்னிரு ஆழ்வார்களுள் மிகக் குறைவான பாசுரங்களைப் (10) பாடியவர்,நிறைவான பேறு பெற்றவர், கார்த்திகை ரோஹிணியில் அவதரித்த திருப்பாணாழ்வார்.

ஆழ்வார் தனியன் :
💐🌻🌼🌺🌹🌷💐
"ஆபாத சூடம் அனுபூய ஹரிம் சயாநம்
மத்யே கவேர ஹிதுர் முதிதாந்தராத்மா |
அத்ரஷ்ட்ருதாம் நயநயோர் விஷயாந்தராணாம்
யோ நிச்சிகாய மனவை முநிவாஹநம் தம் ||"

"இரண்டு ஆறுகளின் நடுவே, அறிதுயில் கொண்ட அரங்கநாதனைத், திருவடி முதல் திருமுடி வரை அனுபவித்தப் பாடிய, லோகஸாரங்க முனிவரால் தோள் மேல் சுமந்து அவனைக் கண்டு களித்து, அவனைக் கண்டு களித்த கண்களால் இனி வேறொன்றும் காணேன் என்று அவன் திருவடி சேர்ந்த திருப்பாணாழ்வாரை த்யானிக்கிறோம்"

அ ம ல னா தி பி ரா ன்:
🥁🎻🎺🎷🎸📯📣🎶🎼🔔
இவர் பாடிய "அமலனாதிபிரான்" பாசுரங்கள் பத்தும் முத்தானவை; நிறைவானவை.
இவை வேதங்களின் சாரம் என்கிறார் திருவரங்கத்து அமுதனார்
--"சீரிய நான்மறைச் செம்பொருள் செந்தமிழால் அளித்த பாரியலும் புகழும் பாண்பெருமாள்"(இரா.நூற்.11)
வேதாந்த தேசிகர்
"வேதியர் தாம் விரித்துரைக்கும் விளைவுக்கெல்லாம் விதை ஆகுமிது" என்றும்,
"பாண்பெருமாள் அருள்செய்த பாடல் பத்தும் பழமறையின் பொருள்"
என்றும் கொண்டாடுகிறார்.

வியாக்யானச் சக்ரவர்த்தி பெரியவாச்சான் பிள்ளை அமலனாதிபிரான் அவதாரிகையில் இந்த பத்துப் பாசுரங்களும் எவ்வாறு ஸ்ரீராமாயணம்,மகாபாரதம், மற்ற ஆழ்வார்களின் திவ்யப் பிரபந்தங்களை விட உயர்வானவை என்று விவரிக்கிறார்.

1.'ப்ரணவம்' எனப்படும் ஓங்காரம் போலே மிகச் சுருக்கமாகவும் இராமல், வேதமும்,வேதத்தை விளக்கும் உப ப்ருமஹணங்களான ஸ்ரீராமாயண,
மகாபாரதங்களும் போலே மிக விரிவானதாய், உட்கருத்தை அறிய முடியாததாயும் இராமல், எளிதில் அறியக்கூடியதாய் அனைவராலும் பயிலத்தக்கதாய் உள்ளது.

2.மகாபாரதம் நாராயண கதையைச் சொல்வதாகத் தொடங்கி,-"நாராயண கதாமிமாம்"-பகவத்கதை அல்லாத கங்கையின்வரலாறு,கங்காபுத்திரர் களான பீஷ்மர், முருகன் முதலானோரின் வரலாற்றையும் சொல்லி வைத்தன.

3.ஆழ்வார்களின் தலைவரான நம்மாழ்வார் பாடிய திருவாய் மொழியும்,
'அமர்சுவையாயிரம்'(1-3-11),'பாலோடமுதன்னவாயிரம்'(8-6-11),'உரைகொளின் மொழி'(6-5-3) என்று குற்றமற்ற தாய் ஆயிரம் பாசுரங்கள் கொண்ட போதிலும்,
பரமாத்வையும்,சேதநாசேதநங்களையும் ஒரே வேற்றுமையில் படிக்கும் வாக்யங்களையும்,
'மும்மூர்த்திகள் சமர்',' அவர்களிலும் மேற்பட்டதொன்று உண்டு' என்னும் வாதங்களைத் தள்ளுவது முதலான இடர்ப்பாடுகளை உடையதாயிருக்கும்

4.திருமங்கையாழ்வாரின் திருநெடுந்தாண்டகமும் மிக விரிவாக இல்லாமல் முப்பதே பாட்டுக்கள் கொண்டதாய் இருந்தாலும், அதற்கும் மேற்கூறிய இடர்ப்பாடுகள் உண்டு.

5.தொண்டரடிப் பெரியாழ்வாரின் 'திருமாலை'க்கு முற்கூறிய இடர்ப்பாடுகள் இல்லாமல் இருந்த போதும்,தம்முடைய பேற்றை எண்ணி இனியராவதும்,இழவைக் குறித்து வருந்துவதும் அதில் உண்டு.

6.பெரியாழ்வாரின் 'திருப்பல்லாண்டு'க்கு,இக்குற்றங்கள் எதுவுமில்லையானாலும்,ஐஸ்வர்யார்த்தி,கைவல்யார்த்தி,பகவச்சரணார்த்தி ஆகிய மூன்று விதமான அதிகாரிகளையும் அது சொல்கிறது.

7.எவ்வாறு,மகாபாரதத்தில் தர்ம,அர்த்த,காம,மோஷங்களாகிற நாலு புருஷார்த்தங்களைப் பற்றியும் சொல்லப் பட்டவையே மற்ற நூல்களிலும் உள்ளனவோ, பாரதத்தில் இல்லாதது எங்கும் இல்லையோ,அது போலவும் ஆயிரத்தில்(1000),ஒன்று(1) அடங்கியிருப்பது போலவும்,கடலில் சிறிய நீர் நிலைகள் அடங்கி இருப்பது போலவும்,பிற நூல்களில் இல்லாதவை எல்லாம் இதில்-'அமலனாதிபிரானில்'-
உண்டாய்,இதில் இல்லாதது எதுவும் வேறுநூல்களில் இல்லாததாய் இருக்கும்.

8.மற்ற நூல்களைப்போல நம்மால் காணமுடியாத பர,வ்யூஹ,விபவ நிலைகளைச் சொல்லாமல் "திருவரங்கப் பெருநகருள் தெண்ணீர்ப்பொன்னி,
திரைக்கையால் அடிவருடப் பள்ளி கொள்ளும் கருமணியைக் கோமளத்தைக் கண்டு கொண்டு, மணத்தூணே பற்றி நின்று வாயார வாழ்த்துகிற" ப்ரபந்தமாகையிலே இப்பிரபந்தத்துக்கு, வைலக்ஷண்யமுண்டு.

9.மற்ற ஆழ்வார்களைக் காட்டிலும் இவருக்கு நெடுவாசியுண்டு.அவர்கள்
உயர்ந்த/சிறந்த குலத்தில் பிறந்தவர்களாகையிலே,
'பல்லாண்டு',என்றும், ' போற்றி' என்றும் நைச்சியத்தை(தாழ்வை) ஏறிட்டுக் கொண்டு பேச வேண்டி இருந்தது.
ஆனால் இவர் நான்கு வர்ணங்களுக்கும் கீழான பஞ்சம குலத்தில் பிறந்ததால் நைச்சியத் தன்மை இயற்கையாகவே அமைந்துள்ளது.பெரிய பெருமாளும் இவரை நாலு வர்ணத்திலும் வெளிப்பட்ட வராய்,நித்யசூரிகளைப் போல சிறப்புற்றவராய் நினைத்திருப்பார்.

10.மற்ற ஆழ்வார்கள் ஆற்றில்ஒரு கால்,
சேற்றில் ஒரு கால் என்று சொல்வது போலே பல அர்ச்சாவதாரங்களைப் பாடியவர்கள்.தொண்டரடிப்
பொடி ஆழ்வார் பெரிய பெருமாள் ஒருவரையே பாடினாலும் சிலருக்கு உபதேசித்தார்;மற்ற மதங்களைக் கண்டித்தார். இவை அனுபவத்துக்குத் தடை என்று கருதிய பாணர், பெரிய பெருமாளையே, அடி தொடங்கி முடியளவாக அழகாக அனுபவிக்கிறார்.

11ஸ்ரீராமபிரான்,அயோத்தி வாழ் ஜீவாத்மாக்கள் அனைவரையும் பரமபதம் அழைத்துச் செல்ல விழைந்த போது,
இளைய திருவடி அநுமன் அவருடைய உள்ளம் ஸ்ரீராமரின் திருமேனி அழகில் லயித்திருப்பதால், அவர் மனம் பரமபத நாதன் திருமேனியில் ஈடுபட முடியாததால், பரமபதம் செல்ல மறுத்து விட்டார்.பரமபதம் என்று எம்பெருமான் அழைத்துச் செல்ல நினைத்த தேசத்தின் பெயரைச் சொல்வதற்குக் கூட விரும்பாமல்"அந்யத்ர"(வேறிடத்தை) என்று கூறுகிறார். இப்படி ராமரை அல்லது அறியாத அநுமனைப் போலே அரங்கரை அல்லாது அறியாத பாணர் "என் அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே" என்று இறுதியாகப் பாடுகிறார்.
"மற்றொன்று" என்றது பரமபத நாதன் மட்டுமல்ல; வ்யூஹ பாற்கடல் நாதனையும்,விபவ ராம/கிருஷ்ணாதிகளையும் சேர்த்து என்னும்படியாக.

12.திருப்பாணாழ்வாருக்கு ஸ்ரீவைகுண்டம்,திருப்பாற்கடல்,அயோத்தி,வடமதுரை போன்ற திருஅவதார ஸ்தலங்கள் எல்லாம் பெரியபெருமாளே. அந்தந்த இடங்களிலுள்ள அழகு முதலான குணங்கள், செயல்கள் முதலானவற்றை பெரியபெருமாளிடம் காண்கிறார்.பெரிய பெருமாளுடைய அழகு,செல்வம் எல்லாம் பரமபதத்தில் மொட்டு விட்டிருக்கும்!அவதாரங்களால் இரண்டு இலைகளாத் துளிர்த்திருக்கும்!! இங்கே வந்த பின்னரே செழிப்புடன் தழைத்திருக்கும்!!!பர,வ்யூஹம் போலல்லாமல் இவ்விடத்தில் தன்னிடம் ஈடுபாடு இல்லாதவர்களும் கண்டு அனுபவிக்கலாம்படி இருக்கையாலே நீர்மைக் குணத்தால் வந்த ஏற்றமும் உண்டு.குணத்தால் சிறந்து விளங்கும் பெரிய பெருமாளிடம் ஈடுபட்டவர்கள் பெரிய பெருமாளை அல்லாது அறியார்கள் அன்றோ?

13.வேதங்களுக்கு எட்டாத ஸர்வேஸ்வரனை,ஆற்றில் பெருகும் தண்ணீரைப் போலே,இரண்டு காவேரி ஆற்றுக்கு நடுவே எளிதில் கண்டு அனுபவிக்கலாம்படி இருக்கும் இடமன்றோ?ஆழ்வார் தமக்கு அடையத்தக்க ப்ராப்யமாய் இருப்பவரும்,
அடைவிக்கும் வழியான ப்ராபகமாய் இருப்பவரும்,தம்மிடத்தில் ருசியை விளைவிப்பவரும்,விரோதிகளைப் போக்குவிப்பரும்,பெரிய பெருமாளே என்று எண்ணியிருக்கிறார்.

14.எம்பெருமான் ஒருவனை ஆட்கொள்ள வரும்போது, அதை விலக்காமல் இருக்கையும், இவனிடம் உண்டானால், அதனை மட்டுமே கொண்டு, பெரிய பெருமாள் தம்முடைய ஸ்வரூபம்,ரூபம்,குணம்,செல்வங்கள் ஆகியவற்றைக் காட்டுகிறார்.பாணர் அவற்றைக் கண்டு அனுபவித்து உகக்கிறார்.

15.ஸ்ரீராமர் மகாராஜா ஸுக்ரீவனை விட்டு, விபீஷணாழ்வானை அழைத்தது போலே,மற்ற விஷயங்களில் ஈடுபாடில்லாதவராய்,'கடைத்தலை இருந்து வாழும் சோம்பர்' என்கிறபடியே கோயில் கைங்கர்யத்திலேயே ஈடுபட்டிருக்கும் லோகஸாரங்க முனிவரை அழைத்து," நம் பாடுவானான திருப்பாணனை அழைத்துக் கொண்டு வாரும்" என்று நியமித்தார்.

(--அடியேன் பார்த்தசாரதி ராமாநுஜ தாசன்)
 

Latest ads

Back
Top