• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

பாசுரப்படி ஸ்ரீ ராமாயணம்

திருமாலைப் போற்றிப் பரவி ஆழ்வார்கள் பாடிய திவ்ய பிரபந்தத்தில், அவரின் அவதாரமான ஸ்ரீராமர் பற்றிய சேதிகள் இல்லாமல் இருக்குமா?

அங்கங்கே ராமாயணச் செய்திகள், அற்புதச் சொற்பதங்களில் அரங்கேறியுள்ளன.

எங்கெங்கே ஸ்ரீராமன் கதை இடம் பெற்றுள்ளது என்பதை அறிந்து அடிக்கோடிட்டார் ஒரு வைணவப் பெரியவர். அடிக்கோடிட்ட ஆழ்வார் பாசுர வரிகளைத் தொகுத்தால், ராம காவியம் முழுவதுமே திவ்ய பிரபந்த பாசுரங்களில் உள்ளது என்பதை அறியலாம்.

'பாசுரப்படி ராமாயணம்’ எனத் தலைப்பிட்டு, அதை உலகுக்குத் தந்தவர் ஸ்ரீபெரியவாச்சான்பிள்ளை. 13-ஆம் நூற்றாண்டில், கண்ணன் பிறந்த நன்னாளில்தான் இவரும் கண் மலர்ந்தார். ஆம்... ஆவணி மாதம், ரோகிணி நட்சத்திரம், தேய்பிறை அஷ்டமியில் அவதரித்தார் ஸ்ரீகிருஷ்ணபரமாத்மா. ஸ்ரீபெரியவாச்சான்பிள்ளையும் தேகம் எடுத்து பூமிக்கு வந்தது, அதே நாளில்தான்!

வால்மீகி பாடிய ராமாயணம், வனத்தில் தொங்கும் பலாப்பழம் என்றால், கம்பன் பாடிய காவியமோ தோட்டத்தில் தொங்கும் மாதுளம்பழம்! ஆனால், இந்த பாசுரப்படி ராமாயணமோ வாயில் விழுந்த வாழைப்பழம்.

ஆம்! இதை மிக எளிதாக எல்லோருமே தினசரி படிக்கலாம். அப்படிப் படிப்போருக்கு, ராமாயணத்தைப் பூரணமாகப் பாராயணம் செய்த நிறைவும், ஆழ்வார் பாசுரங்களை அனுபவித்த ஆனந்தமும் ஒரு சேரக் கிட்டும் என்பது உறுதி!

பாசுரப்படி ஸ்ரீ ராமாயணம்

பால காண்டம்


திருமடந்தை மண்மடந்தை இருபாலும் திகழ
நலம் அந்தம் இல்லது ஓர் நாட்டில்
அந்தம் இல் பேரின்பத்து அடியரோடு
ஏழ் உலகும் தனிக் கோல் செல்ல வீற்றிருக்கும்
அயர்வு அறும் அமரர்கள் அதிபதியான
அணி ஆர் பொழில்சூழ் அரங்க நகர் அப்பன்
அலை நீர்க் கடலுள் அழுந்தும் நாவாய்போல்
ஆவார் ஆர் துணை என்று துளங்கும்
நல் அமரர் துயர் தீர
வல் அரக்கர் வாழ் இலங்கை பாழ்படுக்க எண்ணி
மண் உலகத்தோர் உய்ய
அயோத்தி என்னும் அணி நகரத்து
வெங்கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்கு ஆய்
கௌசலைதன் குல மதலை ஆய்
தயரதன் தன் மகன் ஆய்த் தோன்றிக்
குணம் திகழ் கொண்டல் ஆய்
மந்திரம் கொள் மறை முனிவன்
வேள்வி காக்க நடந்து வந்து
தனை எதிர்த்த தாடகைதன் உரம் கீண்டு
வல் அரக்கர் உயிர் உண்டு
கல்லைப் பெண் ஆக்கி
கார் ஆர் திண் சிலை இறுத்து
மைதிலியை மணம் புணர்ந்து
இரு பத்து ஒருகால் அரசு களைகட்ட
மழுவாளி வெவ் வரி நல்சிலை வாங்கி வென்றி கொண்டு
அவன் தவத்தை முற்றும் செற்று
அம் பொன் நெடு மணி மாட அயோத்தி எய்தி
அரியணைமேல் மன்னன் ஆவான் நிற்க.

அயோத்தியா காண்டம்

கொங்கை வன் கூனி சொல் கொண்ட
கொடிய கைகேயி வரம் வேண்ட
அக் கடிய சொல் கேட்டு
மலக்கிய மா மனத்தனன் ஆய்
மன்னவனும் மறாது ஓழிய
'குலக் குமரா! காடு உறையப் போ
என்று விடை கொடுப்ப
இந் நிலத்தை வேண்டாது
ஈன்று எடுத்த தாயரையும், இராச்சியமும் ஆங்கு ஒழிந்து
மைவாய களிறு ஒழிந்து
மா ஒழிந்து தேர் ஒழிந்து
கலன் அணியாதே
காமர் எழில் விழல் உடுத்து
அங்கங்கள் அழகு மாறி
மான் அமரும் மென் நோக்கி வைதேவி இன் துணையா
இளங்கோவும் வாளும் வில்லும் கொன்டு பின் செல்ல
கலையும் கரியும் பரிமாவும் திரியும்
கானம் கடந்து போய்
பத்தி உடைக் குகன் கடத்த
கங்கை தன்னைக் கடந்து
வனம் போய்ப் புக்கு; காயோடு நீடு கனி உண்டு
வியன் கான மரத்தின் நீழல்
கல் அணைமேல் கண் துயின்று
சித்திரகூடத்து இருப்ப
தயரதன் - தான், 'நின் மகன் மேல் பழி விளைத்திட்டு
என்னையும் நீள் வானில் போக்க
என் பெற்றாய்? கைகேசி!
நானும் வானமே போகின்றேன்’ என்று வான்ஏற
தேன் அமரும் பொழில் சாரல் சித்திரக்கூடத்து
ஆனை, புரவி, தேரொடு
கால்- ஆள் அணி கொண்ட சேனை
சுமந்திரன், வசிட்டருடன் பரத நம்பி பணிய
தம்பிக்கு மரவடியை வான் பணையம் வைத்து
குவலயத் துங்கக் கரியும், பரியும், இராச்சியமும்
எங்கும் பரதற்கு அருளி; விடை கொடுத்து
திரு உடைய திசைக் கருமம் திருத்தப் போய்
தண்டகாரணியம் புகுந்து;

ஆரண்ய காண்டம்

மறை முனிவர்க்கு 'அஞ்சேல்மின்’
என்று அருள் கொடுத்து
வெங் கண்விறல் விராதன் உக, வில் குனித்து
வண் தமிழ் மா முனி கொடுத்த வரி வில் வாங்கி
புலர்ந்து எழுந்த காமத்தால்
'சீதைக்கு நேர் ஆவன்’ என்ன
பொன் நிறம் கொண்ட சுடு சினத்த சூர்ப்பணகி
கொடி மூக்கும் காது இரண்டும்
கூர் ஆர்ந்த வாளால் ஈரா விடுத்து
கரனோடு தூடணன் தன் உயிரை வாங்கி
அவள் கதறி, தலையில் அம் கை வைத்து
மலை இலங்கை ஓடிப் புக
கொடுமையின் கடு விசை அரக்கன்
அலைமலி வேல்கணாளை அகல்விப்பான்
ஓர் உரு ஆய மானை அமைத்து
செங்கல் பொடிக் கூறை, சிற்றெயிற்று
முற்றல் மூங்கில் மூன்று தண்டத்தன் ஆய், வஞ்சித்து
இலைக் குரம்பில் தனி இருப்பில்
கனி வாய்த் திருவினைப் பிரித்து
நீள் கடல் சூழ் இலங்கையில்
அரக்கர் குடிக்கு நஞ்சு ஆகக் கொண்டு போய்
வம்பு உலாம்கடி காவில் சிறையா வைக்க
அயோத்தியர் கோன் மாய மான் மாயச் செற்று
அலை மலி வேல் கண்ணாளை அகன்று, தளர்வு எய்தி
சடாயுவை வைகுந்தத்து ஏற்றி
கங்குலும் பகலும் கண்துயில் இல்லாக்
கானகம் படி உலாவி உலாவி
கணை ஒன்றினால் கவந்தனை மடித்து
சவரி தந்த கனி உவந்து;

கிஷ்கிந்தா காண்டம்

வன மருவு கவி அரசன் காதல் கொண்டு
மரா மரம் ஏழ் எய்து
உருத்து எழு வாலி மார்பில்
ஒரு கணை உருவ ஓட்டி
கருத்துடைத் தம்பிக்கு இன்பக் கதிர் முடி அரசு அளித்து
வானரக் கோனுடன் இருந்து
வைதேகிதனைத் தேட விடுத்த திசைக் கருமம் திருத்த
திறல் விளங்கு மாருதியும்
மாயோன் தூது உரைத்தல் செப்ப;

சுந்தர காண்டம்

சீர் ஆரும் திறம் அனுமன்
மா கடலைக் கடந்து ஏறி
மும் மதில் நீள் இலங்கை புக்கு
கடி காவில் வார் ஆரும்
முலை மடவாள் வைதேகி தனைக் கண்டு
நின் அடியேன் விண்ணப்பம் கேட்டருளாய்
அயோத்தி தனில் ஓர் இடவகையில்
எல்லியம் போது இனிது இருத்தல்
மல்லிகைமா மாலை கொண்டு அங்கு ஆர்த்ததும்
கலக்கிய மா மனத்தனள் ஆய்க் கைகேசி வரம் வேண்ட
மலக்கிய மா மனத்தனன் ஆய்
மன்னவனும் மறாது ஒழிய
''குலக் குமரா! காடு உறையப்போ'' என்று விடை கொடுப்ப
இலக்குமணன் தன்னோடும் அங்கு ஏகியதும்
கங்கை தன்னில் கூர் அணிந்த
வேல் வலவன் குகனோடு சீர் அணிந்த
தோழமை கொண்டதுவும்
சித்திரகூடத்து இருப்பப் பரதநம்பி பணிந்ததுவும்
சிறு காக்கை முலை தீண்டி
மூவுலகும் திரிந்து ஓடி
''வித்தகனே இராமா! ஓ! நின் அபயம்'' என்ன
அத் திரமே அதன் கண்ணை அறுத்ததுவும்
பொன் ஒத்த மான் ஒன்று புகுந்து, இனிது விளையாட
நின் அன்பின் வழிநின்று
சிலை பிடித்து எம்பிரான் ஏக
பின்னே அங்கு இலக்குமணன் பிரிந்ததுவும்
அயோத்தியர் கோன் உரைத்த அடையாளம்
'ஈது அவன் கை மோதிரமே’
என்று அடையாளம் தெரிந்து உரைக்க
மலர்க்குழலாள் சீதையும்
வில் இறுத்தான் மோதிரம் கண்டு
''அனுமான்! அடையாளம் ஒக்கும்'' என்று
உச்சிமேல் வைத்து உகக்கத்
திறல் விளங்கு மாருதியும்
இலங்கையர் கோன் மாக் கடிகாவை இறுத்து
காதல் மக்களும் சுற்றமும் கொன்று
கடி இலங்கை மலங்க எரித்து
அரக்கர் கோன் சினம் அழித்து
மீண்டு அன்பினால் அயோத்தியர் கோன்
தளிர் புரையும் அடி இணை பணிய.

யுத்த காண்டம்

கான எண்கும் குரங்கும் முசுவும் படையா
கொடியோன் இலங்கை புகல் உற்று
அலை ஆர் கடற்கரை வீற்றிருந்து
செல்வ விபீடணற்கு நல்லன் ஆய்
விரிநீர் இலங்கை அருளி
சரண் புக்க குரை கடலை
அடல் அம்பால் மறுக எய்து
கொல்லை விலங்கு பணி செய்ய
மலையால் அணை கட்டி; மறு கரை ஏறி
இலங்கை பொடி ஆகச்
சிலை மலி செஞ்சரங்கள் செல உய்த்துக்
கும்பனோடு நிகும்பனும் பட
இந்திரசித்து அழிய, கும்பகர்ணன் பட
அரக்கர் ஆவி மாள
அரக்கர் கூத்தர் போலக்
குழமணிதூரம் ஆட
இலங்கை மன்னன் முடி ஒருபதும்
தோள் இருபதும் போய் உதிர
சிலை வளைத்துச் சர மழை பொழிந்து
கரம் துணித்து; வென்றி கொண்ட செருக்களத்துக்
கடிக்கமல நான்முகனும் கண்மூன்றத்தானும்
எண்மர், பதினொருவர், ஈர் அறுவர், ஓர் இருவர்
மற்றும் உள்ள வானவர் மலர் மழை பொழிந்து
மணி முடி பணிதர அடி இணை வணங்க
கோலத் திரு மாமகளோடு
செல்வ விபீடணன், வானரக் கோனுடன்
இலங்கு மணி நெடுந் தேர் ஏறி
சீர் அணிந்த குகனோடு கூடி
அங்கண் நெடு மதி புடைசூழ் அயோத்தி எய்தி
நல் நீர் ஆடி
பொங்கு இள ஆடை அரையில் சாத்தித்
திருச் செய்ய முடியும் ஆரமும் குழையும்
முதலா மேதகு பல்கலன் அணிந்து
சூட்டு நன் மாலைகள் அணிந்து
பரதனும் தம்பி சத்துருக்கனனும்
இலக்குமனும் இரவும் நன் பகலும் ஆட்செய்ய
வடிவு இணை இல்லாச்
சங்கு தங்கு முன்கை நங்கை
மலர்க் குழலாள் சீதையும் தானும்
கோப்புடைய சீரிய சிங்காசனத்து இருந்து
ஏழ் உலகும் தனிக்கோல் செல்ல
வாழ்வித்தருளினார்.
 

Latest ads

Back
Top