• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

பத்ராச்சலம் ஸ்ரீராமன்

திருமணக்கோலத்தில் அருளும் சக்கரவர்த்தித் திருமகன்.....!!!
(பத்ராச்சலம் ஸ்ரீராமன்)

சிறுவயது முதலே, ராம பக்தியில் ஆழ்ந்தவர் கோபன்னா. அதன் விளைவாக தான தருமங்கள் செய்வதிலும் தாராளமானவராக விளங்கினார் இவர். ஒருசமயம் பத்ராசலம் என்ற இவர் வாழ்ந்த தலத்தில் பாகால டாமக்கா என்ற பெண்மணி வாழ்ந்து வந்தாள். அவளும் ராமனிடம் மிகுந்த பக்தி பூண்டவள். ஒரு சமயம் காட்டினுள் சென்ற டாமக்கா, ஒரு பாம்பு புற்றிலிருந்து ஒளி வெளிப்படுவதை கண்டு திகைத்தாள். உள்ளே தைரியமாகக் கைவிட்டுப் பார்த்தபோது, அவளுக்கு ராமர், சீதை, லட்சுமணர் சிலைகள் கிடைத்தன. அவற்றை வைத்து அவளே ஒரு சிறிய கோயில் கட்டி வழிபட்டு வந்தாள். கோபன்னா நேர்மையில் சிகரமானவர். அதனால் எதிரிகளும் அவருக்கு அதிகம். அந்த எதிரிகளில் சிலர் இவரைத் தாக்கி இந்த காட்டில் போட்டுவிட்டுச் சென்றனர்.

அச்சமயம் பாகால டாமக்கா அங்கு வந்து கோபன்னாவிற்குத் தேவையான சிகிச்சைகள் அளித்துக் காப்பாற்றினார். அப்போது அவள் உருவாக்கிய சிறிய ராமர் கோயிலைக் கண்ட கோபன்னா மிகவும் பரவசமடைந்தார். ராமபக்தி மிகவே, தன் மனைவி, மகனுடன் காட்டிற்கு வந்து இந்த ராமரை பூஜித்து வந்தார். பத்ராசலம் அந்நாளில் ஹைதராபாத் நிஜாமின் ஆதிக்கத்தில் இருந்தது. அவரிடம் மந்திரியாகப் பணியாற்றிய அக்கன்னாவின் மருமகன்தான் கோபன்னா. இவர் அதே அரசாங்கத்தில் தாசில்தாராக வேலை பார்த்து வந்தார். பதவிதான் தாசில்தார், ஆனால் அவரது கவனம் முழுவதும் ராம சேவையில்தான்! இதனாலேயே அவர் ராமதாஸ் என்றும் அழைக்கப்பட்டார்.

மகேசனுக்கு சேவை செய்தால் அது மக்களுக்குப் போய்ச் சேரும் என்று நினைத்தாரோ என்னவோ, ராமபிரானுக்கு விழாக்கள் நடத்துவதும், வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்வதுமாக இருந்த அவர், பக்தி மயக்கத்தில், இதற்காக அரசாங்கப் பணத்தை செலவு செய்ததை ஒரு குற்றமாகவே கருதவில்லை. ஆனால், ஹைதராபாத் நிஜாம் அப்படித்தான் கருதினார்.

ஆதாரத்துடன் கோபன்னா இழைத்த குற்றங்களுக்கு தண்டனை தரும் வகையில் அவரை ஹைதராபாத்துக்கு வரவழைத்து, சிறையில் அடைத்துத் துன்புறுத்தினார். இதற்கும் வருத்தப்படவில்லை ராமதாஸர். சிறையில் பலவகையாக துன்பங்களைத் தான் அனுபவித்தாலும், ராம நாம ஜபத்தை மட்டும் அவர் கைவிடவேயில்லை. சிறையிலேயே ராம கீர்த்தனைகள் பலவற்றை இயற்றி, பாடியும் வந்தார்.

துன்பத்தால் துவண்டாலும், ராம ஜபத்தால் புத்துணர்வு பெற்றவராகவே திகழ்ந்தார் அவர். அவருடைய துன்பத்தைத் துடைப்பதற்காக ராம-லட்சுமணர் புனைவேடம் பூண்டு நிஜாமை வந்து சந்தித்தார்கள். தாங்கள் பெரிய பணக்காரர்கள் என்றும், கோபன்னா ‘கையாடல்’ செய்த அரசாங்கப் பணத்தைத் தாங்கள் அவர் சார்பில் திரும்ப செலுத்திவிடுவதாகவும், ஆகவே அவரை விடுவிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்கள்.

உடனே கோபன்னாவை விடுவித்தார் நிஜாம். அப்போது பளிச்சென்ற ஒளியுடன் பணம் கட்டியவர்கள் மறைந்துவிட, அப்போதுதான் நிஜாமுக்கு கோபன்னாவின் ராமபக்தி புரிந்தது. தன் வாயால் கோபன்னாவை ‘ராமதாஸ்’ என்று அன்புடன் அழைத்த நிஜாம், அந்தக் கோயிலில் ராமதாஸ் தொடர்ந்து பணியாற்ற அனுமதித்தார்; தேவைப்பட்ட உதவிகளையும் செய்தார்.

அந்த ஆதரவுடனும், மக்களின் ஒத்துழைப்புடனும் (தற்போது கோதாவரி நதிக்கரையில் உள்ள) ராமர் ஆலயத்தை பாகால டாமக்கா விருப்பப்படி, 17ம் நூற்றாண்டில் நிர்மாணித்து, எல்லா விழாக் களையும், பூஜைகளையும் நடத்தினார், ராமதாஸர். அவ்வாறு கோயில் கட்டிவரும் சமயம், மூலவரின் சந்நதிக்கு மேல் கோபுரத்தில் சுதர்சன சக்கரம் அமைப்பதில் கொஞ்சம் சிக்கல் ஏற்பட்டது.

அதனால் சற்றே மனம் தளர்ந்தார் ராமதாஸர். அன்றிரவே அவர் கனவில் ராமர் தோன்றி, அதிகாலையில் கோதாவரியில் குளிக்குமாறும், அப்போது அதில் கிடைக்கும் சுதர்சன சக்கரத்தை கருவறை கோபுரத்தில் நிறுவுமாறும் உத்தரவிட்டார். அதன்படியே எல்லாமும் வெகு நேர்த்தியாக நடந்தேறின. ராமதாஸர் பேருவகை கொண்டார். சிறு குன்றின் மேல் அமைந்துள்ளது இக்கோயில். கோதாவரி நதிக்கரையில் பசுமையான இயற்கை சூழல் நிறைந்த பேரழகுத் தலம் இது. தெலங்கானா மாநிலத்தில் உள்ள கம்மம் என்ற ஊருக்கு சுமார் 200 கி.மீ. தொலைவில் உள்ள இத்தலத்திற்குச் செல்ல பேருந்து வசதிகள் உள்ளன.

மேலும், ஹைதராபாத், விஜயவாடா போன்ற இடங்களிலிருந்தும் பேருந்துகள் உண்டு. இத்தலத்தில் ராமபிரான், தான் திருமால் அவதாரம்தான் என்பதை விளக்கும்வகையில் சங்கு, சக்கரம் ஏந்தி ஒரு கையில் அம்பு, மற்றொரு கையில் வில்லுடன் சீதாதேவியை தனது மடியில் இருத்தி, அமர்ந்த திருக்கோலத்தில் தரிசனமளிக்கிறார். அருகில் இளையவன் நின்ற நிலையில் சேவை சாதிக்கிறார். திருமணக் கோலத்தில் இத்தல ராமர் அருள்வதால் இத்தலம் திருமணவரம் அருள்வதில் நிகரற்றதாக பக்தர்களால் கருதப்படுகிறது. இந்த மலைப்பகுதியில் பத்ரா என்ற முனிவரின் ஆஸ்ரமம் இருந்ததால், இத்தலம் பத்ராசலம் என்றாயிற்று. இத்தலத்தில் ஸ்ரீராமநவமி மிகவும் முக்கியமான விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

பல இடங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கே கூடி ராமபிரானின் திருவருளைப் பெறுகிறார்கள். நிஜாம் காலத்தில், பெருமாளுக்கு நிஜாமே ஆபரணங்கள், வஸ்திரங்கள் கொண்டு வந்து சமர்ப்பித்து விழாவைச் சிறப்பாக நடத்த உதவி வந்தார். இன்றும் இத்தலத்தில் தினமும் இரவு ஏழரை மணிக்கு நடக்கும் தர்பார் சேவை பிரசித்தி பெற்றது.

ராமச்சந்திர மூர்த்திக்கு ராஜ உடைகள் அணிவிக்கப்பட்டு, தர்பாரில் எழுந்தருளச் செய்து அன்றைய கோயில் வருமானம் முறைப்படி எண்ணப்படும். அப்போது ராமதாஸரின் கீர்த்தனைகள் இசைக்கப்படும். இந்தியாவிலேயே மிகப் பெரிய அளவில் செல்வம் கொழித்த இடமாக ஹைதராபாத் நிஜாமின் அரண்மனை விளங்கியதற்குக் காரணம், ராமபிரானே நேரில் வந்து பொற்காசுகளை நிஜாமுக்கு அளித்ததுதான் என்பார்கள்.

பத்ராசலம் சென்று திருமணக் கோலத்தில் காட்சிதரும் ராமபிரானை தரிசிக்கும்வரை கீழ்காணும் ஸ்லோகத்தைச் சொல்லியபடி அவரை தியானிக்கலாம்:

மஹாரத்னபீடே சுபே கல்பமூலே
ஸுகாஸீன மாதித்ய கோடி ப்ரகாசம்
ஸதாஜானகீ லக்ஷ்மணோபேத மேகம்
ஸதா ராமசந்த்ரம் பஜேஹம் பஜேஹம்

‘‘கல்பக மரத்தடியில் நல்ல ரத்ன பீடத்தில் ஆனந்தமாக அமர்ந்திருப்பவரும் பல சூரியர்கள் ஒன்றானாற்போல பிரகாசிக்கிறவரும், எப்பொழுதும் சீதா-லட்சுமணரோடு சேர்ந்திருப்பவருமான ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியை எப்பொழுதும் நெஞ்சாற நமஸ்கரிக்கிறேன்.’’
 

Latest ads

Back
Top