• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

நம்மாழ்வார் மோட்சம்

நம்மாழ்வார் மோட்சம்

நம்மாழ்வார் மோட்சம்


108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்ற சிறப்புக்குரியதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி விழா கோலாகலமாக நடைபெறும். மார்கழி மாத சுக்ல பட்ச ஏகாதசியை வைகுண்ட ஏகாதசி என்று போற்றுவர். இந்நாளில் வைணவத் திருத்தலங்களில் பரமபதவாசல் (சொர்க்க வாசல்) திறப்பு வைபவம் மிகச் சிறப்பாக நடைபெறும். பெருமாள், பரமபத வாசல் சன்னிதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்புரிவார்
.
பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி விழா, பகல் பத்து, இராபத்து உற்சவமாக வெகு சிறப்பாக நடைபெறும். இராப்பத்தின் முதல் நாள் பரமபத வாசல் சந்நதி திறப்பு விழா நடைபெறும். கலியுகத்தில் நம்மாழ்வாருக்கு முன்பு வைகுண்டத்திற்கு சென்றோர் யாரும் இல்லாததால் வைகுண்டத்தின் வாசல் மூடப்பட்டு இருந்தது.


நம்மாழ்வார் முக்தி அடைந்த அன்று, அது திறக்கப்பட்டது. இதனை அறிந்த நம்மாழ்வார், பெருமாளிடம் ‘எனக்கு மட்டும் வைகுண்ட வாசலைத் திறந்தால் போதாது. என்னைத் தொடர்ந்து தங்கள் மீது பக்தி செலுத்தும் அனைத்து பக்தர்களுக்காகவும் வைகுண்டவாசல் திறக்கப்பட வேண்டும்’ என்று வேண்டவே, பெருமாள், நம்மாழ்வாரின் வேண்டுகோளை ஏற்று மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசியில் சொர்க்க வாசல் திறக்க வழி செய்தார். அந்த நாள்தான் வைகுண்ட ஏகாதசியாக, சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியாக அனுசரிக்கப்படுகிறது.


ஸ்ரீரங்கத்தில் கொண்டாடப்படும் வைகுண்ட ஏகாதசி பற்றி ஒரு வரலாறு உண்டு. திருமங்கையாழ்வாரின் பக்தியிலும் திருப்பணியிலும், மகிழ்ச்சியடைந்த ரங்கநாதர் அவர் முன்தோன்றி, “என்ன வரம் வேண்டும்?’’ என்று கேட்டாராம். அதற்கு திருமங்கையாழ்வார் நம்மாழ்வார் பரமபதம் அடைந்த நாளான மார்கழி வளர்பிறை ஏகாதசியைப் பெருவிழாவாகக் கொண்டாட வேண்டும். நம்மாழ்வாரின் திருவாய் மொழிக்காகத் திருவிழா நடைபெற அருள வேண்டும் என்று வரம் கேட்டார். அதை ரங்கநாதரும் அருளினார். அதன்படி ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறுகிறது.


கலியுகம் பிறந்ததும், வைகுண்டத்தின் காவலர்களான ஜய, விஜயர்கள் வைகுண்டத்தின் வாசலை மூடினார்கள். இதனைக் கண்ட பெருமாள் காவலர்களிடம் ‘‘வைகுண்ட வாசலின் கதவை ஏன் மூடினீர்கள்?’’ என்று கேட்டார். அதற்கு காவலர்கள், ‘‘கலி பிறந்துவிட்டது. இனிமேல் அதர்மம் தலை தூக்கும்; தர்மம் நிலை குலையும்; பாவங்கள் பலவிதங்களில் பெருகும். அந்தச் சூழலிலிருந்து மானிடர்கள் யாரும் தப்ப முடியாது. அதனால் வைகுண்டத்திற்கு யாரும் வரமாட்டார்கள்,’’ என்றார்கள்.
உடனே பெருமாள் சொன்னார்: ‘‘கலியுகத்தில் பக்தி பெருகும். தர்மம் செய்பவர்கள் பெருகுவார்கள். அப்படி சுயநலமின்றி புண்ணிய காரியங்கள் செய்பவர்களுக்காக பரமபத வாசல் திறந்தே இருக்கட்டும்,’’ என்று அருளினார். இப்படி பெருமாள் அருளியது, மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசி தினத்தில். இப்படி பல புராண வரலாறுகள் இருந்தாலும், வைணவ ஏகாதசி அன்று சாஸ்திர சம்பிரதாயப்படி விரதம் கடைப்பிடித்து பெருமாளை வழிபடும் பக்தர்களுக்கு நிச்சயம் வைகுண்டத்தில் இருக்கும் இடம் கிடைக்கும் என்பது ஐதீகம்.


பெரும்பாலான வைணவக் கோயில்களில் பரமபதவாசல் என்று ஒரு சந்நதி இருக்கும். இந்த வாசல், வடக்கு நோக்கி இருப்பதைக் காணலாம். இது மூடப்பட்டே இருக்கும். ஆண்டுக்கு ஒருமுறை வைகுண்ட ஏகாதசி திதி அன்று மட்டும் இந்தக் கதவுகள் திறக்கப்படும். இந்த வாசல் வழியாக அன்று பெருமாள் பிரவேசிக்கும்போது, பக்தர்கள் பின்தொடர்ந்து செல்வார்கள். இதனால் சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என்பது நம்பிக்கை
.
இராப்பத்தின் நிறை நாள் பத்தாம் நாள் நம்மாழ்வார் மோட்சம். பத்து நாட்களாக சொர்க்க வாசலில் நின்று இறைவன் தாளடி அடைய வேண்டும் என்றுகெடுமிடராயவெல்லாம் கேசவாவென்று ஒன்றுமோராயிரம் உள்ளுவார்ர்க்கு உம்பரூரே என்று இன் தமிழ் ஆயிரம் பாடிய நம்மாழ்வாருக்கு அந்த வைகுந்தப் பேற்றை எம்பெருமான் வழங்குகின்றார். இராப்பத்தின் ஒவ்வொருநாளும் பரமபத வாசல் வழியாக எழுந்தருளும் நம்மாழ்வார் சரணாகதியின் மூலம் எம்பெருமான் திருவடி அடைகின்றார். பின் உலகில் உள்ளோர் எல்லோரும் தாங்கள் உய்ய ஆழ்வாரை இந்த நானிலத்திற்கு தந்தருள வேண்டும் என்று விண்ணப்பம் செய்ய அவ்வாறே பெருமாள் அனுகிரகிக்க ஆழ்வாரை திருப்பி தருவதாக ஐதீகம்.


இன்றைய தினம் மையார்கருங்கண்ணி கமலமலர்மேல் செய்யாள் திருமார்வினில்சேர் திருமாலே வெய்யார்சுடராழி சுரிசங்கமேந்தும் கையர் திருமுன் நிறை பத்தான பத்தாம் பத்து சேவிக்கப்படுகின்றது. இப்பத்தால் எம்பெருமானின் களைகண் களைதல்( ஆர்த்திஹரத்வம்) தன்மை கூறப்படுகின்றது என்பது பெரியோர்களின் அருளிச் செயல்.


இராப்பத்தில் தினமும் நடைபெறுவது போல எம்பெருமான் புறப்பாடு கண்டருளி, சொர்க்க வாசல் சேவை தந்தருளி இராஜ நடை, சிம்ம நடை, நாக நடை, காவடி சிந்து கண்டருளி ஆஸ்தானத்திற்கு எழுந்தருளுகின்றார். ஆழ்வார் ஆச்சாரியார்களுக்கு அருளப்பாடு ஆகி, சாற்று முறை துவங்குகின்றது.


அடைந்தார்க்குத் தானே துணையாகின்ற திருமோகூர்க் காளமேகப் பெருமாளைச் சரணமடைந்து ஆழ்வார் தாம் பிறவித்துயரொழிந்து வீடுபெறக் கருதியதை அருளிச் செய்த
தாள் தாமரைத் தடமணிவயல்திருமோகூர்
நாளும்மேவிநன்கமர்ந்துநின்று அசுரரைத்தகர்க்கும்
தோளும்நான்குடைச் சுரிகுழல்கமலக்கண்கனிவாய்
காளமேகத்தையன்றி மற்றின்றிலம் கதியே என்னும் பாசுரத்துடன் சாற்று முறை துவங்குகின்றது. பணி நெஞ்சே! நாளும் பயமபரம்பரனை
பிணியொன்றும் சாரா பிறவி கொடுத்தருளும்
மணிநின்றசோதி மதுசூதனன் என்னம்மான்
அணிநின்ற செம்பொன் அடலாழியானே
கண்ணன் கழலிணை
நண்ணும் மனமுடையீர்
எண்ணும் திருநாமம்
திண்ணம் நாரணமே என்று எம்பெருமானிடம் பக்தியுடையவர்கள் செய்ய வேண்டிய செயல்களை கூறிய பாசுரங்கள் சேவித்து எட்டாம் திருவாய் மொழி வரை சேவித்து நிறுத்துகின்றனர்,


நம்மாழ்வாரை ஆட்கொள்ள எம்பருமான் திருவுள்ளம் கொண்டபடியால் சொர்க்கத்தின் வாசல் கதவுகள் திறக்கின்றன, அதை உணர்த்தும் வகையில் இதுவரை ஆஸ்தானத்தில் எழுந்தருளி இருந்த ஆழ்வாரை எம்பெருமானின் திருமுன்னே ஏழப்பண்ணுகின்றனர். பத்தாம் திருவாய்மொழி துவங்குகின்றது
.
முனியே! நான்முகனே! முக்கண்ணப்பா! என் பொல்லாக்
கனிவாய்த் தாமரைக்கண்கருமாணிக்கமே என் கள்வா!
த்னியேனாரியிரே! என்தலைமிசையாய் வந்திட்டு
இனிநான் போகலொட்டேன் ஒன்றும்மாயஞ்செய்யேலென்னையே என்று மூவருள் முதல்வராகிய மூர்த்தியாகிய கருமாணிக்கத்தின் பொற் பாத்ங்களை பற்றிக் கொண்டு ஒன்றும் மாயம் செய்யாதே மணிவண்ணா என்று சேவிக்கின்றார். இத்திருவாய்மொழியின் எட்டு பாசுரங்கள் சேவித்த பின் நம்மாழ்வார் திருவடி தொழல் மற்றும் நம்மாழ்வார் மோட்சம் துவங்குகின்றது. பட்டர்கள் ஆழ்வாரை பெருமாளை கையில் தாங்கிச் சென்று பெருமாளை சுற்றி வந்து ஆழ்வாரை பெருமாளின் திருப்பாத கமலங்களிலே சேர்ப்பித்து சிறிது சிறிதாக திருத்துழாயினால் ஆழ்வார் முழுதும் மறையும் வண்ணம் சூடுகிறனர். சாம்பிராணி புகையால் பெருமாளும் ஆழ்வாரும் மறைக்கப்படுகின்றார். ஆனால் இப்பூவுலகில் மானிடர்களை நல் வழிப்படுத்த ஆழ்வாரை திருப்பித்தர பட்டர் பெருமான் விண்ணப்பம் செய்கின்றார். பட்டரின் விண்ணப்பத்தை ஏற்று பெருமாளும் நீங்கள் உய்ய ஆழ்வாரைத் திருப்பித் தந்தோம் ! தந்தோம்! தந்தோம்! என்று திருவாய் மலர்ந்தருளுகின்றார். பின் திருத்துழாய் நீக்கப்பட்டு நம்மாழ்வார் மீண்டும் ஆஸ்தானத்தில் எழுந்தருளுகின்றார். பின் பெருமாளுக்கும் ஆழ்வார் ஆச்சாரியர்களுக்கும் தீபாராதணை, பின் தீர்த்த பிரசாத விநியோகம், திருத்துழாய் பிரசாதம் வினியோகிக்கப் படுகின்றது. எல்லா வைணவத்தலங்களிலும் இன்று ஆழ்வார் திருவடி தொழல் உற்சவம் நடைபெறுகின்றது.
 

Latest ads

Back
Top