• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

தொண்டரடிப் பொடி ஆழ்வார் அடியொற்றிய தொண்டர் சூழ் ஆசார்யர்!!

1610260739554.png
தொண்டரடிப் பொடி ஆழ்வார்
அடியொற்றிய
தொண்டர் சூழ் ஆசார்யர்!!
🙏🌹🌻🌼🌷🌺🏵🙏
நாளை(10/01/2021)மார்கழி கேட்டை.ஸ்ரீதொண்டரடிப் பொடி ஆழ்வார் திருநட்சித்திரம்.திருமண்டங்குடி என்னும் ஊரில் அவதரித்த இவர் ஸ்ரீரங்கமே இருப்பாகக் கொண்டு அரங்கருக்கு பூமாலை/பாமாலை கைங்கர்யம் செய்து வந்தார்.

ஆழ்வாரின் தனியன்:
"தமேவ மத்வா பரவாஸுதேவம், ரங்கேசயம் ராஜவதர்ஹணியம்,
ப்ராபோதிகீம் யோக்ருத ஸூக்திமாலாம் பக்தாங்க்ரிரேணும் பகவந்தமீடே ||

"ஸ்ரீ ரங்கநாதனைப் பரவாசு தேவனாகவே பாவித்து அவனை ஓர் அரசனைப்போல் மிகவும் நளினமாகத் துயிலெழுப்பிய தொண்டரடிப் பொடி ஆழ்வாரைப் போற்றி வணங்குகிறேன்"

தொண்டரடிப் பொடி ஆழ்வார் அடியொற்றி,தொண்டர்கள் பரவும் எம்பெருமானார் காட்டிய தர்சனத்தை அனுபவிப்போம்.
🙏🙏🙏
1.எம்பெருமான் திருத்திப் பணிகொண்ட மஹான்கள் !
🤚🤚🤚🤚🤚🤚🤚🤚
விப்ரநாராயணர்(ஆழ்வாரின் இயற்பெயர்) அரங்கர் மீது பரிபூரண பக்தியுடன் பூமாலைக் கைங்கர்யம் செய்து கொண்டிருந்த வேளையில், தேவதேவி என்னும் பெண்ணிடம் மயங்கி எம்பெருமான் கைங்கர்யத்தை மறந்தார்/இழந்தார்.தம் பிரியமான அடியாரை இழக்க விரும்பாத அரங்கர் ஒரு திருவிளையாடல் நடத்தி,அவரைத் திருத்திப் பணி கொண்டார்.தன் தவறை உணர்ந்து வருந்திய விப்ரநாராயணர் அரங்கர் மேல் தீவிரபக்தி கொண்டு பூமாலைக் கைங்கர்யத்தோடு,பாமாலை கள் இரண்டும் "திருப்பள்ளிஎழுச்சி",
"திருமாலை"அருளிச்செய்தார். தொண்டரடிப் பொடி ஆழ்வாராக உயர்ந்தார்.

இளையாழ்வார்(ராமாநுஜர்) இளமையில்,யாதவப்பிரகாசர் என்னும் அத்வைத வேதாந்தியிடம் வேதம்/சாஸ்திரங்களை க் கற்று வந்தார்.அவர் சொன்ன பல விளக்கங்கள் உடையவருக்கு ஏற்புடையதாக இல்லை. இருவருக்கும் கருத்து வேற்பாடுகள் ஏற்பட்டு யாதவப் பிரகாசர் ராமாநுஜரை கங்கையில் மூழ்கடித்துக் கொல்லத் துணிந்து விட்டார்.அப்போது தேவப்பெருமாளும்,பெருந்தேவித்தாயாரும் வேடன்/வேடுவச்சி வேடத்தில் சென்று ராமாநுஜரைக் காப்பாற்றி காஞ்சிக்கு அழைத்து வந்து விட்டனர்.பெரும் குழப்பத்தில் இருந்த ராமாநுஜருக்கு திருக்கச்சி நம்பிகள் மூலம் 'ஆறுவார்த்தைகள்' அருளியும், 'தீர்த்தக்கைங்கர்யம்'தந்தருளியும் திருத்திப் பணிகொண்டார் பேரருளாளப் பெருமாள்.

2.அரங்கனிடமே ஈடுபட்ட அருளாளர்கள்:
🙏👌👏🙏👏👌🙏
ஆழ்வார்களில் அரங்கரை மட்டுமே பாடிய ஆழ்வார், தொண்டரடிப்பொடியாழ்வார் ஒருவர் மட்டுமே.மற்ற ஆழ்வார்கள் மற்ற திவ்யதேசப் பெருமான்களையும் பாடியுள்ளார்கள்.எனவே அரங்கர் "பதின்மர் பாடிய பெருமாள்" என்று கொண்டாடப்படுகிறார்.பரமபத(வைகுண்டம்)நாதனைக் கூடப் பாடவில்லை. பூலோக வைகுண்டமாகிய ஸ்ரீரங்கத்தை விட,அந்த வைகுண்டமே கிடைத்தாலும் வேண்டாம் என்று திண்ணம் செய்தார்.

"பச்சைமா மலைபோல்மேனி பவளவாய் கமலச் செங்கண்,
அச்சுதா அமரரேறே ஆயர்தம் கொழுந்தே என்னும்,
இச்சுவை தவிர யான்போய் இந்திர லோக மாளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகரு ளானே"(திருமாலை-2)

ஸ்ரீபெரும்புதூரில் அவதரித்து காஞ்சியில் வளர்ந்த ராமாநுஜரை,
ஸ்ரீரங்கநாதர்,வரதரிடம் கேட்டுப்பெற்று, ஸ்ரீரங்கம் அழைத்து வந்து விட்டார்.அவர் இப்பூவுலகில் வாழ்ந்த 120 ஆண்டுகளில், சுமார் 60 ஆண்டுகள் ஸ்ரீரங்கம் வாசம் தான்.(இடையில் சில ஆண்டுகள் அரங்கரை வேண்டி,அனுமதி பெற்று மற்ற சிலதிவ்யதேசங்களுக்கும்,
மேல்கோட்டைக்கும் சென்று வந்தார்.). பெரியபெருமாள்-பெரிய பிராட்டியார் சேர்த்தி கண்டருளும் ஒரு பங்குனி உத்திர நாளில் அவர்களிடம் 'கத்யதிரயம்'பாடி சரணாகதி செய்த உடையவரிடம், பெருமாள்"இனிமேல் ஸ்ரீரங்கத்தையே இருப்பாகக் கொண்டிரும்;த்வய மந்திரம் அநுசந்தானம் செய்து கொண்டிரும்" என்று அருளினார்.உடையவரும்,
பெருமாள் நியமனத்தை பெரும்பேறாகக் கொண்டு, அவ்வாறே எழுந்தருளி இருந்தார். ஸ்ரீரங்கத்தில் பல கைங்கர்ய ங்கள் செய்து,
"தென்னரங்கர் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே" என்று கொண்டாடப் பட்டார்.

3.ஆழ்வார் பாடிய 'த்வயமும்' !! ஆசார்யர் பாடிய 'த்ரயமும்' !!!
🌱🌱🌱🌱
ஆழ்வார் அரங்கர் மீது திருப்பள்ளியெழுச்சி(10பாசுரங்கள்),திருமாலை(45பாசுரங்கள்)என்னும் இரண்டு திவ்யப் பிரபந்தங்களைப் பாடினார்.
உடையவர் 'சரணாகதி கத்யம்' 'ஸ்ரீரங்ககத்யம்', 'ஸ்ரீவைகுண்ட கத்யம்' என்னும் மூன்று கத்யங்களை அரங்கர்- ரங்கநாயகித் தாயார் சேர்த்தித் திருநாளில் பாடினார். இவை மூன்றும் சேர்ந்து "கத்யத்ரயம்"
என்று அறியப்படுகின்றன.

4.கடையனுக்கும்,கடைத்தேற்றம் அளித்த கருணை வள்ளல்கள்!!
🙏🤝🤝🤝🤝🤝🙏
ஆழ்வார் திருமாலையில்,

"பழுதிலா வொழுகலாற்றுப் பலசதுப் பேதிமார்கள்!
இழிகுலத் தவர்களேனும் எம்மடியார்களாகில்,
தொழுமின் ! கொடுமின்!! கொள்மின்!! என்று நின்னோடுமொக்க
வழிபட அருளினாய் போல் மதிள் திருவரங்கத்தானே!"(42) என்கிறார்.

"பிரம்மா முதல் தங்களின் காலம் வரை வளர்ந்தோங்கி நிற்கும் பரம்பரையில், ஒழுக்கக் குறைபாடு இன்றி நான்கு வேதங்களையும் ஓதுவோரே! 'என் உறவைப் புரிந்து நடப்பதாக இருந்தால்தான், என் அடியார்கள்' என பெரிய பெருமாளே கருதுவான்! அப்படிப் பட்டவர்கள் எந்தத் தாழ்ந்த குலத்தைச் சேர்ந்தாலும் அவர்களை நீங்கள் வணங்குங்கள்; உங்களுக்குத் தெரிந்தவற்றை அவர்களுக்கும் உபதேசி யுங்கள்;அவர்களுக்குத் தெரிந்தவற்றை தயங்காமல் அவர்களிடம் இருந்து உபதேசமாகப் பெறுங்கள்".

("அடிமையிற் குடிமையில்லா அயல் சதுப்பேதிமாரில், குடிமையில் கடமைப்பட்ட குக்கரில் பிறப்பரேலும்...
மொய்கழற்கு அன்பு செய்யும் அடியரை உகத்தி போலும்..."(39)}

ராமாநுஜர் அந்தணர்; திருக்கச்சி நம்பிகள் வைசியர். குலம் எதுவானால் என்ன? திருக்கச்சிநம்பிகளை ஆசார்யராக வரித்த எதிராஜர் அவர் உண்ட உணவின் உச்சிஷ்டத்தை (மீதத்தை) பிரசாதமாக ஸ்வீகரிக்க விரும்பினார் ராமாநுஜர்!

{" 'வானுளா ரறிய லாகா
வானவா!'என்பராகில்,
'தேனுலாந் துளப மாலைச்
சென்னியாய்' என்ப ராகில்,
ஊனமாயினகள் செய்யும்
ஊனகா ரகர்களேலும்,
போனகம் செய்த சேடம்
தருவரேல் புனித மன்றே?"(41)}

ஒருமுறை அப்படியொரு தருணம் கிடைத்த போது, ராமாநுஜரின் துணைவியார் செய்த செயலால் அது இயலாமல் போனது. பிறகு ராமாநுஜர் காவி உடுத்தி, சந்நியாசம் ஏற்றார். இதன் பிறகு, ராமாநுஜரின் எண்ணம் நிறைவேறாமலே போனது! ஆனால், உடையவரின் விருப்பத்தை அரங்கர் அர்ச்சாவதார நிலையில் இப்போதும் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.

ஸ்ரீரங்கம் கோயிலில் அத்யயன உற்சவத்தின் போது தளிகை நிவேதனம் செய்வர். அப்போது, ஆழ்வார்களுக்கும் அடுத்து ஆச்சார்யர்களுக்கும் நிவேதனம் செய்வர். இந்த வேளையில், திருக்கச்சி நம்பிகளுக்கு முதலில் நிவேதனம் செய்து, அதே பிரசாதத்தை அப்படியே ராமாநுஜருக்கு நிவேதனம் செய்கின்றனர்!

உடையவர் காவிரிக்கு நீராடச் செல்லும்போது உயர்ந்த பிராமண குலத்தவரான முதலியாண்டான் என்னும் ஆசார்யர் தோள் பிடித்துச்செல்வார். நீராடி முடித்துத் திரும்பும் போது மல்லர் குலத்தில் பிறந்த பிள்ளை உறங்காவில்லி தாசர் தோள் பிடித்து வருவார்!!.ஒரு முறை சில ஸ்ரீவைஷ்ணவர்கள் சில சம்பிரதாய விஷ்யங்களைக் கேட்ட போது, அவர்களை, உறங்காவில்லி தாசர் மனைவி,பொன்னாச்சியாரி டம் கேட்டுத் தெரிந்து கொள்ளுமாறு சொன்னார்.!!!

தாழ்ந்த குலத்தில் பிறந்த மாறனேர் நம்பிக்கு, பெரியநம்பிகள் செய்த சிசுருக்ஷை, சரமகைங்கர்யம் உன்னதமானது என்று மற்ற ஸ்ரீவைஷ்ணவர்களிடம் உணர்த்தினார்.

எல்லாவற்றுக்கும் மேலாக,
"ஓராண் வழியாய் உபதேசித்தார் முன்னோர்,
ஏரார் எதிராசர் இன்னருளால் - பாருலகில்
ஆசை உடையோர்க்கு எல்லாம் ஆரியர்காள்! கூறுமென்று
பேசி வரம்பறுத்தார் பின்" (உப.ரத்.37)
என்று மணவாள மாமுனிகள் கொண்டாடியபடி சாதி,குலம்,செல்வம், கல்வி என்னும் அடிப்படையில் எந்த பேதமும் உயர்வு தாழ்வுமும் இன்றி, ஆசையைடையோரெல்லாம் உயர்ந்த மோட்சத்தை அடையும் வழி வகுத்தருளினார்.

5."ஆதலால் பிறவி வேண்டேன் அரங்கமாநகருளானே"(3) என்பதற்கேற்ப ஆசையுடை யோர்க்கெல்லாம் "மீண்டும் பிறவா நிலை" என்னும் மோட்சம்"சித்திக்கச் செய்தார் எம்பெருமானார்.

6 "கலிதன்னைக் கடக்கப் பாய்ந்து....நின் நாமம் கற்ற ஆவலிப் புடமை கண்டார் அரங்கமாநகருளானே"(1)என்றார் தொண்டரடிப்பொடியார்.
ராமாநுஜர் என்னும் பவிஷ்யதாசார்யர் அவதரிக்க ப்போகிறார்; அவரால்,

"பொலிக! பொலிக! பொலிக!!! போயிற்று வல்லுயிர்ச் சாபம்,
நலியும் நரகமும் நைந்த நமனுக்கிங் கியாதொன்று மில்லை,
கலியும் கெடும்கண்டு கொள்மின் கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்,
மலியப் புகுந்திசை பாடி யாடி யுழிதரக் கண்டோம்."
(திருவாய்மொழி 5-2-1)
என்று கொண்டாடினார் நம்மாழ்வார்.

7.'தலை' அறுக்கச் சபதமிட்ட ஆழ்வாரும், 'கலை' அறுத்த உடையவரும்!
💪🤜✊✊🤚🤚🌹🌺🏵
"புலையறமாகி நின்ற புத்தொடு,சமணமெல்லாம்,
கலையறக் கற்ற மாந்தர்,காண்பரோ கேட்பரோ தாம்?"(7)

"வெறுப்பொடு சமணர் முண்டர் விதியில் சாக்கியர்கள் நின்பால்
பொறுப்பரி யனகள் பேசில் போவதே நோய தாகி
குறிப்பெனக் கடையு மாகில் கூடுமேல் தலையை ஆங்கே
அறுப்பதே கருமங் கண்டாய் அரங்கமாநகருளானே"(8)
என்று எம்பெருமானுக்கு/சத்யத்துக்குப் புறம்பாகப் பேசும் பிற மத்தாரைத் தலை யறுப்பேன் என்று கருவுகிறார் ஆழ்வார்.

எம்பெருமானாரும் இதே திண்ணம் கொண்டு பிற மதவாதிகளின் 'கலை'
அறுத்தார்.காரேய் கருணை இராமாநுசர் அவர்கள் தலை அறுக்காமல்,'கலை'யை மட்டுமே அறுத்து அவர்களைக் கடாட்சித்து தம் சிஷ்யர்களா க்கிக்கொண்டார்--யக்ஞமூர்த்தி யாதவப்பிரகாசர்,தொண்டனூர்/எண்ணாயிரம் சமணர்கள், காஷ்மீர் பண்டிதர்கள்; சர்வக்ஞயர்....

"நாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன, நாரணனைக்
காட்டிய வேதம் களிப்புற்றது,தென் குருகைவள்ளல்
வாட்டமிலாவண் டமிழ்மறை வாழ்ந்தது மண்ணுலகில்
ஈட்டிய சீலத்து இராமா னுசன்றன் இயல்வு கண்டே"
(இரா.நூற்.54)

"செய்யும் பசுந்துளவத் தொழில் மாலையும், செந்தமிழில்
பெய்யும் மறைத்தமிழ் மாலையும், பேராத சீரரங்கத்து
ஐயன் கழற்கணியும் பரன் தாளன்றி, ஆதரியா
மெய்யன், இராமானுசன் சரணே கதி வேறு எனக்கே!!!"
(இரா.நூற்.13)

(--அடியேன் பார்த்தசாரதி ராமாநுஜ தாசன்)
 

Latest ads

Back
Top