• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

தை அமாவாசை ஸ்பெஷல் !

சுமார் 300 ஆண்டகளுக்கு முன்
தை அமாவாசை தினம் பகலவனும் மறைந்தார், சந்திரன் இன்றி களிறு போல் நிறமுள்ள காரிருள் விண்ணை பற்றத் தொடங்கியது...

1611282466475.png


உரியின் மீது அமர்ந்துக் கொண்டு அன்னை அபிராமியின் வரவை எதிர்நோக்கி அபிராமி பட்டர் சொற்குற்றம், பொருள்குற்றம் இன்றி அந்தாதியின் 78வது பாடலை பாடி முடித்தார்.

நம்பிக்கை நிறைந்த பக்தி

பட்டருக்கு சற்று இக்கட்டானச் சூழல்நிலை தான், கிட்டதட்ட 80 பாடல் நெருங்கி விட்டார், இன்னும் 20 பாடல்களே மீதம் உள்ளன. நிலவு இன்றி வானும்; காலனை சுமந்து வரும் கருப்பு எருது போல் கருப்பாக இருந்தது.

பட்டரை பித்தர் என்று தூற்றி பேசியவர்கள் எல்லாம் திருக்கடையூர் ஆலய வாயிலில் அவரை பார்த்து கை தட்டி சிரித்துக் கொண்டு இருந்தனர்.

ஆனால் பட்டர் அவற்றை பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை…

#அம்பாள்வந்தேதீர_வேண்டும் என்ற நிலையில் முழு நம்பிக்கையுடன் மனமுருகி அன்னை அபிராமியே வேண்டிக் கொண்டு 79வது பாடலைப் பாடத் தொடங்கினார்…

"விழிக்கே அருள் உண்டு அபிராம வல்லிக்கு வேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சு உண்டு
எமக்கு அவ்வழி கிடக்க
பழிக்கே சுழன்று, வெம் பாவங்களே
செய்து, பாழ் நரகக் குழிக்கே
அழுந்தும் கயவர் தம்மோடு
என்ன கூட்டு இனியே? "

உரியின் 79வது கயிற்றை அறுத்து பாடி முடித்தார் பட்டர்…

அன்னையின் திருக்காட்சி

100 நிலவுகள் ஒன்று சேர்ந்தார் போல் ஒளி வீசும் முகத்தை உடைய, பவளக்கொடி போல் சிவந்த நிறமுடைய, குளிர்ச்சி தரும் முத்துப்பல் சிரிப்பழகில், திருநீறும் குங்குமமும் நெற்றியில் நர்த்தனம் ஆட…

மாணிக்கம், வைரம் பதித்த கிரிடம், அட்டிகை, ஆரம், வளையல், தோடு, நெற்றிச்சுட்டி ஆபரணங்கள் அணிந்து, சிவப்பு பட்டு உடுத்தி, வண்ணமலர் மாலைகள் தரித்து அங்குசம், பாசம், கரும்பு, மலர்கள் ஏந்திய திருக்கரங்களுடன்…

அன்னை அபிராமவல்லி வானில் ஆதி அந்தமில்லா விஸ்வருப திருக்காட்சி தந்தருளினாள். அன்னையே கண்டவர்கள் "ஓம் சக்தி ஆதி சக்தி பரா சக்தி" என்று பக்தி பரவசத்தில் அழைத்து விழுந்து வணங்கினார்…

உரியின் மீது அமர்ந்திருந்த பட்டர் எழுந்து நின்று விழிகளில் ஆனந்தக் கண்ணீர் பெருக இருகரம் குவித்து வணங்கினர். பட்டரின் மீது அன்னை திருபுரசுந்தரியின் கடைக்கண் பார்வை பட்டது…

தோடு நிலவானது

இடது காதில் இருந்த தாடங்கத்தை பொற்கரங்களால் கழற்றி வானவீதியில் தவழ விட்டாள்.

அத்தாடங்கம் அன்னம் போல் நகர்ந்து சென்று நிலவாக மாறியது.

வானில் இருள் மறைந்தது, ஒளி வெள்ளம் நிறைந்தது…

தேவரும் மூவரும், சப்த ரிஷிகளும் அகத்தியர் முதலான முனிவர்களும் வானில் இருந்து அன்னை அபிராமி மீதும் மலர் மாரி பொழிந்தனர், அச்சமயம் நெற்கதிர் தழைத்து வளரும் தஞ்சை தரணி எங்கும் மலர்கதிராக காட்சி அளித்தன.

"திருத்தாடங்கத் திகழொளி விண்ணும் மண்ணும் எண்திசையும் படர்ந்திட அவ்வற்புதங்கண்ட அற்புதம்! அற்புதம் என முழக்கமிட்டார் பட்டர்.

அன்னை சரணாலய பாதங்களை வணங்க, உரியிலிருந்து இறங்க முயற்சித்தார், அப்போது அன்னை பட்டரை தடுத்து „

"வாய் சோர்ந்து அரசரிடம் கூறிய சொல்லையும் மெய் என நிறுவினோம்! உரியிலிருந்து தொடங்கிய 100 அந்தாதியை தொடர்ந்து பாடியருள்க! யாம் உனக்கு ஆலய கருவறையில் திருக்காட்சி தருவோம்!" என்று ஆணையிட்டு மறைந்தாள்.

ஆத்தாளை அபிராமவல்லியே

உள்ளம் பூரித்து பேருவகை
அடைந்த பட்டர் …

"#கூட்டிய_வா! என்னைத் தன்
அடியாரில், கொடிய வினை
#ஓட்டிய_வா! என்கண் ஓடியவா, தன்னை உள்ளவண்ணம்
#காட்டிய_வா! கண்ட கண்ணும்
மனமும் களிக்கின்றவா,
#ஆட்டிய_வா! நடம் ஆடகத்
தாமரை ஆரணங்கே"

எனத் தம் அனுபவ நிலையைத் தெளிவுற கட்டளைக் கலி வெண்பாவாகப் 80வது பாடலை பாடினார் பட்டர். 100 பாடல்களையும் முடித்து உரியிலிருந்து இறங்கி அன்னை #அருளாட்சி செய்யும் கருவறையில் தரிசிக்க ஓடினார்.

கருணைக் கடலான அன்னை பராசக்தி பட்டருடைய கண்களுக்கு மட்டும் புன்னகைத் தவளும் முகத்துடன் அங்குசம் பாசம் கரும்பு ஏந்திய பொற்கரங்களுடன் திருக்காட்சி தந்தருளினாள்; கண்குளிர தரிசித்த பட்டர்……

"ஆத்தாளை, எங்கள் அபிராம
வல்லியை, அண்டம் எல்லாம்
பூத்தாளை, மாதுளம் பூ நிறத்தாளை,
புவிஅடங்கக் காத்தாளை, ஐங்கணை
பாசங்குசமும் கரும்பும் சேர்த்தாளை, முக்கண்ணியைத் தொழுவார்க்கு
ஒரு தீங்கு இல்லையே !"

என்று அபிராமி அந்தாதிக்கு நூற்பயன் பாடி முடித்தார் பட்டர். நம்பிக்கை நிறைந்த பக்தர்களுக்கு கடவுள் எதையும் நிகழ்த்துவார் என்பதற்கு சிறந்த உதாரணம் நமது அபிராமி பட்டர் ! நாமும் அபிராமி அந்ததி பாடுவோம்! அன்னையின் திருவருள் பெறுவோம்!

ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ



1611282412784.png
 

Latest ads

Back
Top