தேய்பிறை சஷ்டி : விரதம் இருப்பது எப்படி?

அமாவாசையை அடுத்து வரும் சஷ்டியை சுக்லபட்ச சஷ்டி (அ) வளர்பிறை சஷ்டி என்றும், பௌர்ணமியை அடுத்து வரும் சஷ்டி கிருஷ்ணபட்ச சஷ்டி (அ) தேய்பிறை சஷ்டி என்றும் அழைக்கப்படுகிறது.

திதிகளின் வரிசையில் சஷ்டி ஆறாவதாக வருவதால் அதற்கு மிகப்பெரிய வலிமை உண்டு. ஐஸ்வர்யத்தை தரக்கூடியது 6 என்ற வழக்கு ஜோதிடத்தில் உள்ளது. ஜோதிடத்தில் 6ஆம் எண்ணுக்கு உரிய கிரகம் சுக்கிரன். இவர் லட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறார்.

திருமணம், வாகனம், வீடு ஆகியவற்றை தரக்கூடியவரும் சுக்கிரன்தான். எனவே சஷ்டி திதியில் விரதம் இருந்தால் வேண்டிய அனைத்தையும் பெறலாம். 16 பேறுகளில் ஒன்றாகவே குழந்தைப்பேறு கருதப்படுகிறது. எனவே குழந்தைப்பேறுடன் மீதமுள்ள 15 பேறுகளையும் அளிக்கும் வல்லமை சஷ்டி விரதத்திற்கு உண்டு.

முருகன் அருள் வேண்டி பக்தர்கள் இருக்கும் விரதங்களுள் மிகச்சிறப்புடையது சஷ்டி விரதம். இந்த விரதத்தை மனதில் கொண்டே 'சஷ்டியிலிருந்தால் அகப்பையில் வரும்' என்ற பழமொழி எழுந்தது.

திருமணம் இல்லாமல் ஒருவருக்கு வாழ்க்கை முழுமையடையாது என்பது போல, குழந்தை இல்லாமல் திருமண வாழ்க்கை நிறைவு பெறாது. சஷ்டி விரதம் இருந்தால் நல்ல குழந்தைப்பேறு கிடைக்கும். நம் உள்ளத்தில் இறைவன் குடி கொள்வான் என்ற பொருளும் உண்டு.


விரதம் இருக்கும் முறை :

இந்த தேய்பிறை சஷ்டியில் முருகன் கோவிலுக்கு சென்று அபிஷேகத்திற்கு தேவையான பொருட்களில் உங்களால் முடிந்த பொருட்களை வாங்கி கொடுக்கலாம். குறிப்பாக இளநீர் மற்றும் தேன் போன்றவற்றை வாங்கி கொடுப்பதன் மூலம் சுபிட்சம் பெருகும்.

வீட்டிலேயே சஷ்டி விரதத்தை கடைபிடிப்பவர்கள் அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, முருகனுக்கு உகந்த வாசம் மிகுந்த மலர்களை சாற்றி, ஆறு விளக்குகளை கிழக்கு நோக்கி இருக்குமாறு ஏற்றி, பூஜை செய்து விரதத்தை தொடங்கலாம்.

இவ்வாறு ஆறுமுகனுக்கு ஆறு விளக்குகளை ஏற்றி வழிபடுவது மிகவும் சிறப்பு.

பின்னர் முருகனுக்கு உகந்த ஏதாவது ஒரு நைவேத்திய பொருளை படைக்கலாம். அதாவது சுண்டல் அல்லது சர்க்கரைப் பொங்கல் போன்று செய்யலாம்.

இது எதுவும் செய்ய முடியாவிட்டால் நாவல் பழத்தை வைத்து வழிபடலாம். முருகனுக்கு நாவல் பழமானது மிகவும் இஷ்டமான ஒரு பழம் ஆகும்.

இவ்விரதத்தை முழு நேரமும் இருக்க முடியாதவர்கள் பால் மற்றும் பழம் போன்றவற்றை சாப்பிடலாம்.

மீண்டும் மாலையில் இதேபோல் பூஜை செய்து விரதத்தை முடித்துக் கொள்ளலாம். வீட்டிலேயே இருப்பவர்கள் விரதம் முடியும் வரை முருகனுக்கு விளக்கு ஏற்றி வைப்பது மிகவும் நல்லது.

வீட்டிலேயே முருகனின் பாமாலைகளைப் பாடலாம். குறிப்பாக கந்த சஷ்டி, திருப்புகழ் உள்ளிட்ட முருகனின் சிறப்புகளை உணர்த்தும் பாடலை படிக்கலாம்.

தேய்பிறை சஷ்டி விரதத்தின் பலன்கள் :

திருமணம் ஆகாமல் இருப்பவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.

ஈடுபடும் காரியங்கள் அனைத்திலும் சிறப்பான வெற்றிகள் உண்டாகும்.

பொருளாதாரத்தில் இருந்துவந்த தேக்க நிலை நீங்கும்.

தொழில், வியாபாரங்களில் லாபம் பெருகும்.

நேரடி, மறைமுக எதிரிகள் விலகுவார்கள்.

உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும்.
 
Back
Top