திருவேங்கடப் பெருமாள் கோவில் - திருவேங்க

Status
Not open for further replies.
திருவேங்கடப் பெருமாள் கோவில் - திருவேங்க

திருவேங்கடப் பெருமாள் கோவில் - திருவேங்கடம்

சிறப்புக்கள்

  1. வேங்கடகிரி என்றும், சப்தகிரி என்றும் பல பெயர்களில்
    அழைக்கப்படும் இம்மலை 7 மலைகளால் ஆனது. சப்த
    என்பதற்கு 7 என்பது பொருள். கிரி என்னும் சொல் மலைகளைக்
    குறிக்கும். எனவே சப்தகிரி என்றும் ஸப்த பர்வதங்கள் என்றும்
    இந்த மலை குறிக்கப்படுகிறது.


    அந்த 7 மலைகள் எவையெனில்

    1. வேங்கடாத்ரி

      வேம் என்றால் பாவம். கட என்றால் நாசமாதல்.
      எனவே பாவங்கள் எல்லாம் நாசமாகும் இடம் என்று
      பொருள். வேங்கடம் என்ற சொல்லுக்கே பாவங்களைச்
      சுட்டெரித்தல் என்ற பொருள் உண்டு. வேங்கடாத்ரி
      ஆயிற்று.
    2. சேஷாத்ரி

      ஆதிசேடனே இங்கு எம்பெருமானின் அவதாரத்தின்
      பொருட்டு மலை உருவில் தோன்றியுள்ளான். எனவே
      சேஷாத்ரியாயிற்று.
    3. வேதாத்ரி

      வேதங்கள் எல்லாம் மலை உருவில்ஸ்ரீனிவாசனை
      வழிபடுவதால் வேதாத்ரி எனவும் வேதகிரி எனவும்
      வழங்கப்படுகிறது.
    4. கருடாத்ரி

      திருமாலின் வாகனமாகிய கருடன் இம்மலையை
      (எம்பெருமானின் அவதாரத்தின் பொருட்டு) எடுத்துவந்து
      இவ்விடத்தில் வைத்ததால் கருடாத்ரி ஆனது.
    5. விருஷபாத்தரி

      விருஷபாசுரன் என்னும் அரக்கனுக்கு இம்மலையில்
      திருமால்மோட்சம் அளித்தார். அவன் வேண்டுகோளுக்
      கிணங்க அவன்பெயராலேயே விருஷபாத்ரி எனமொழியப்
      படுவதாக ஐதீஹம்.
    6. அஞ்சனாத்ரி

      அனுமனின் தாய் அஞ்சனை. அவள் இந்த மலையிலே
      தவம் செய்தாள். மகப்பேறு வேண்டினாள். ஆதிவராஹ
      மூர்த்தியின் அருளால் ஆஞ்சநேயனைப் பெற்றாள்.
      அஞ்சனைதவமியற்றியதைக்கொண்டு அஞ்சனாத்ரி ஆயிற்று.
    7. ஆனந்தாத்ரி

      ஆதிசேடனும் வாயு தேவனும் தங்களில் யார் பலவான்
      என்பதைக்காண்பிக்க தங்களுக்குள் போட்டி போட்டுக்
      கொண்டுமேருமலையின் சிகரங்களை ஆளுக்கொன்றாகத்
      தகர்த்துக்கொண்டு இப்பெருமாள் முன்னிலையில் வீழ்த்த,
      பலத்தில்இருவரும் சமமானவர்களே என்று பெருமாளின்
      திருவாக்கும் திருவருளும் பெற்று ஆனந்தமுற்றார்கள்.
      ஆதலின் ஆனந்தாத்ரி ஆயிற்று.
  2. தொண்டரடி பொடியாழ்வார், மதுரகவியாழ்வார் ஆகிய இருவர்
    தவிரமற்ற 10 ஆழ்வார்களும் இம்மலையைப் பற்றியும்,
    வேங்கடவனைப் பற்றியும் பாசுரங்கள் சமர்ப்பித்துள்ளனர்.
    மொத்தம் 202 பாக்களுக்கு மேல் மங்களாசாசனம்
    செய்யப்பட்டுள்ளது. வேங்கடவனுக்கு ஆழ்வார்கள் அருளிய
    மங்களாசாசன பாக்களைத் தொகுத்து ஸ்ரீவேங்கட மங்களாசாசனம்.
    என்னும் தனிப்பெரும் நூலொன்றே செய்துவிடலாம் ஒவ்வொரு
    ஆழ்வாரும் ஒவ்வொரு வகையில் வேங்கடவனின் மகிமைகளைக்
    கூறி நிற்பதை எழுத்துக்களில் அடக்கிவிட முடியாது.
  3. குலசேகர ஆழ்வார் திருமலையில்வாழும் தாவரங்களிலோ,
    பிராணிகளிலோ, ஒன்றாகப் பிறக்க மாட்டேனா என்று
    மன்றாடுகிறார். திருமலையில் ஒரு படிக்கல்லாகக் கிடந்து
    வேங்கடவனைத் தரிசிக்கமாட்டேனா என்று படியாய்க் கிடந்து
    பவளவாய் காண்பேனா என்கிறார். இதனால்தான் திருவேங்கட
    முடையானின் முன் இருக்கும் பொற்படிக்கு குலசேகரப்படி
    என்றே பெரியோர் பெயரிட்டுள்ளனர்.
  4. தேனோங்கு நீழற் திருவேங்கடமென்றும்
    வானோங்கு சோலை மலையென்றும் தானோங்கு
    தென்னரங்க மென்றுந் திருவத்தியூர் என்றுஞ்
    சொன்னார்க்கு உண்டோ துயர்



    என்று பாரதம் பாடிய பெருந்தேவனார் பாடியிருக்கிறார்.
    பெருந்தேவனார் சங்க காலத்துப் புலவர். இவர் பாரதத்தை
    வெண்பாச் செய்யுட்களாகப் பாடியுள்ளார். இவர் இதே
    வெண்பாவில்திருமலை திருமாலிருஞ்சோலை, திருவரங்கம், காஞ்சி
    போன்ற ஸ்தலங்களையும் பாடியுள்ளார். மேற்படி ஸ்தலங்களின்
    பெயர்களைச் சொன்னவர்க்குத் துயர் உண்டோ, துயரில்லை
    என்பது பொருள். திருவேங்கடம் என்பது புஷ்ப மண்டபமாகும்.
    சிந்துபூமகிழ் திருவேங்கடம் என்பது நம்மாழ்வார் வாக்கு,
    திருவரங்கத்திற்கு போக மண்டபம் என்றும் காஞ்சிபுரத்திற்கு
    தியாக மண்டபம் என்பதும் பெயர்.
  5. கலியுகம் முடியும்வரை பெருமாள் தனது சானித்தியத்தை இங்கே
    இருந்து வழங்கி பக்தர்கட்கு அருள் பாலித்து பாவங்களைப்
    போக்கி நிற்கிறார் என்பது ஐதீஹம். இதற்கு ஆயிரக்கணக்கான
    உதாரணங்களை வேங்கடவன் அருள் புரிந்த நிகழ்ச்சிகளையும்
    எடுத்துக்காட்டலாம். விரிவஞ்சி ஒன்றை மட்டும் பகர்கிறோம்.
    குறும்பறுத்த நம்பி என்பவர் திருமலையில் மண்பாண்டங்கள்
    செய்து வாழ்ந்தவர்.

    மண்பாண்டம் செய்யும்போது கையில் ஒட்டிக்
    கொண்டுள்ள மண்ணினால் சிறுபுஷ்பங்கள் செய்து மானசீகமாய்
    வேங்கடவனுக்குச் சமர்ப்பித்து ஆராதனை செய்து வந்தார்.
    இவரது காலத்தில் வாழ்ந்திருந்த தொண்டை மன்னனும்
    வேங்கடவன்பால் மிக்க பக்தி பூண்டொழுகினான். இம்மன்னன்
    தங்கத்தால் புஷ்பங்கள் செய்து வேங்கடவனுக்கு சமர்ப்பித்து
    வந்தான். ஒரு நாள் காலையில் இம்மன்னன் வேங்கடவனைத்
    தரிசிக்க சன்னதிக்குச் செல்லும்போது தான் சமர்ப்பித்த தங்கப்
    புஷ்பங்கள் யாவும் சிதறுண்டு பூமியில் கிடப்பதையும் மண்
    புஷ்பங்கள் வேங்கடவனின் திருமேனியை அலங்கரிப்பதையும்
    கண்டு என்னவென்று விசாரிக்க குறும்பறுத்த நம்பிகள்
    சமர்ப்பிக்கும் புஷ்பங்கள் இவையென்று அறிந்து குறும்பறுத்த
    நம்பியின் பக்தி மேன்மையைக் கண்டு நம்பியைத் தொழுது
    சென்றான் தொண்டை மன்னன்.


    இவ்விதம் தன் மீது உண்மையான பக்தி கொண்டோரின்
    மேன்மையை வேங்கடவன் உலகறியச் செய்தான். பொய்யான
    பக்தியுடனும், ஆடம்பரமான பக்தி வேஷத்தையும்,
    சரணாகதித்துவம் இல்லாத நேரத்திற்கேற்றவாறு போடக் கூடிய
    பக்திவேஷத்தையும் உதாசீனப்படுத்தி தூயபக்தியில் நிறைந்த
    உள்ளம் கொண்ட பக்தர்களின் மேன்மையை உலகறியச் செய்து
    கொண்டே இருக்கிறான் வேங்கடவன்.
  6. திருமலை வரலாற்றை எழுதிய ஒரு நூலாசிரியர் கீழ்க்காணும்
    ஒரு சுவாரஸ்யமான விபரத்தை கூறுகிறார்.


    ஸ்ரீனிவாசன் திருக்கல்யாணத்தின் போது ஸ்வாமி
    புஷ்கரிணியில் சாதமும், பாப விநாசத்தில் சாம்பாரும் ஆகாச
    கங்கையில் பாயாசமும், தும்புரு தீர்த்தத்தில் சிதரா அன்னங்களும்,
    குமார தீர்த்தத்தில் அவியல் மற்றும் பொரியல்களும்
    செய்யப்பட்டதாம்.
  7. அகோபில மடத்தின் முதலாவது ஜீயர் சுவாமிகளான ஸ்ரீஆதிவன்
    சடகோப தீந்தரமகாதேசிகன் என்னும் ஜீயர் திருமலைக்கு படிக்
    கட்டுகளை முதன் முதலில் அமைத்தவர்.
  8. மகாஞானிகளும், கள்ளங்கபடமற்ற பக்தர்களும் வந்து குவிந்து
    கொண்டே இருக்கும் இந்ததிருமலையில் தீர்த்த கைங்கர்யம்
    செய்து கொண்டிருந்த திருமலை நம்பிகள் இராமானுஜருக்கு
    ராமாயண பாடம் கற்றுத் தந்தவர் ஆவார்.மணவாள மாமுனிகளும்
    இங்கு பலமுறை எழுந்தருளியுள்ளார்.
  9. இங்கு புரட்டாசி மாதம் நடைபெறும் பிரம்மோத்ஸவம்
    காணக்கிடைப்பதரிது. பிரம்மனே இங்கு வந்து இந்த உற்சவத்தை
    நடத்தி வைப்பதாக ஐதீஹம். இச்சமயத்தில் இங்கு வந்து
    வேங்கடவனைச் சேவிப்பவர்களின் சகல பாவங்களும்
    தொலைகின்றன என்று புராணங்கள் அறுதியிடுகின்றன. இந்த
    உற்சவத்தின் போது திருமலை வண்ண வண்ண விளக்குகளால்
    அலங்காரம் பூண,வண்ண வண்ண உடைகளில் பக்தர்கள் பஜனை
    செய்து ஆடியும் பாடியும் வருவது கண்கொள்ளாக் காட்சியாகும்.
  10. திருமலையானின் வலமார்பில் மகாலெட்சுமியும், இடமார்பில்
    பத்மாவதியும் உறைகின்றனர். பத்மாவதி தாயார்தான் திருச்சானூர்
    என்னும் அலமேலுமங்கா புரத்திலிருந்து அருள்பாலிக்கிறார்.
    திருமலைவந்தவர்கள் இங்கு பிராட்டியை வழிபட்டுச் சென்றால்
    தான் திருமலைப் பயணம் பூர்த்தியடைவதாக ஐதீஹம். கார்த்திகை
    மாதம் சுக்லபட்ச பஞ்சமியில் இங்கு பிரம்மோத்சவம். இந்த
    உற்சவத்தின் கடைசி நாளன்று வேங்கடவன் கூரைச் சேலை,
    ஆபரணங்கள் மலர்மாலைகள் ஆகியவற்றுடன் யானைமேல்
    மேளதாளத்துடன் வருவார். அவர் கொண்டு வந்த ஆடை
    அணிகலன்களை பிராட்டி அணிந்துதான் கடைசி நாள் உற்சவன்
    நடைபெறுகிறது. தொண்டைமான் கனவில் வந்து எம்பெருமான்
    கூறியதைப் போன்றே இக்கோவில் கட்டப்பட்டதென்பர்.

    இங்குள்ள பத்மஸரோவரத்ர்த்தம் மிகவும் பிரசித்தி வாய்ந்ததாகும்.
    உலகநன்மைக்காக பிரம்மா இங்கு இரண்டு தீபங்களை ஏற்றிவைத்
    ததாகவும் அவைகள் இன்றும் பிரகாசிப்பதாயும் வரலாறு.
  11. இங்கு செலுத்தப்படும் காணிக்கை அளவிட முடியாததாகும்.
    பக்தர்கள் கொஞ்சமும் லட்சியம் செய்யாமல். லட்சலட்சமாக
    இங்குகொண்டு வந்து குவிப்பர். இவருக்குத் தினசரி வருமானமே
    லட்சங்களைத் தாண்டும். அதேபோல் முடிக்காணிக்கையும் இங்கு
    நடைபெறுவது போல் உலகில் எங்கும் நடைபெறுவது இல்லை.
    இங்கு தங்குவதற்கு தர்ம சத்திரங்களும், வாடகைக் சத்திரங்களும்
    ஏராளம். தற்போது இலவச ததியாரதனமும் நடைபெறுகிறது.
    நினைத்தாலே இனிக்கும் திருப்பதி லட்டு இங்கு போல்
    வேறெங்கும் தெய்வச் சவை ததும்ப அமைந்ததில்லை.
  12. இம்மலையின் இயற்கைக் காட்சிகளில் நெஞ்சு பறிகொடுத்த
    ஆழ்வார்கள் காட்டியுள்ள காட்சிகளில் ஒன்றை மட்டும் இங்கு
    காட்டுவோம்.

    மதங்கொண்ட ஒருஆண்யானை செழித்து வளர்ந்தோங்கியுள்ள
    மூங்கில் கழைகளை கடிக்கிறது. அதை தனது துதிக்கையில்
    வைத்து அருகில் ஓடிக்கொண்டிருக்கும் தேன்போன்று இனிக்கும்
    ஓடையில்கலக்குகிறது. நன்றாகக் கலக்கி தனக்கு முன்னே நின்று
    கொண்டிருக்கும் பெண்யானைக்கு ஊட்டுகிறதாம். என்ன அன்பு
    கலந்த காட்சி கண்டீர்களா?


    பெருகு மதவேழம் மாப்பிடிக்கு முன்னின்று
    இருகணிழ மூங்கில் வாங்கி - அருகிருந்த
    தேன் கலந்து நீட்டும் திருவேங்கடம் கண்டீர்
    வான்கலந்த வண்ணன் வரை 2256
    என்கிறார் பூதத்தாழ்வார்.
  13. திருமலை வேங்கடவன் கோவில் திருச்சானூர் அலர்மேல் மங்கை
    கோவில் இரண்டினையும் தொண்டைமான் கட்டியதாகவரலாறு.
    இங்குள்ள சுற்று மண்டபங்கள் யாக சாலை, கோபுரங்கள்,தானியக்
    களஞ்சியம் கொடியேற்று மண்டபம் போன்றன தொண்டைமான்
    கட்டியதாகும். இங்கு காணப்படும் கல்வெட்டுகளில் தொண்டை
    மானின் கட்டிடப்பணி குறிக்கப்பட்டுள்ளது.

    இன்றும் இத்தலத்தின்
    உட்புறச் சுவர்களில் மூல ஸ்தானத்தைச் சுற்றிவரும்
    நடைபாதையிலும், மண்டபங்களைத் தாங்கி நிற்கும் தூண்களிலும்
    தமிழ்க் கல்வெட்டுகள் உள்ளன. பண்டைய நாகரி எழுத்துக்
    களினாலான கல்வெட்டுகளும், தமிழின் தற்போதைய எழுத்து
    முறை உருவாவதற்கு சமீப காலத்திற்கு முன் இருந்த தமிழ்
    எழுத்துக்களைக் கொண்ட கல்வெட்டுக்களும் உள்ளன.

    தொண்டைமான் இப்பெருமானிடம் மிக்க ஈடுபாட்டுடன்
    திகழ்ந்து சிறந்த பக்தி கொண்டிருந்தான். இவனைப் பகைவர்கள்
    சூழநின்று பொருதபோது போரில் தோல்வி ஏற்படக்கூடிய
    சூழ்நிலையில் வேங்கடவனை வேண்ட வேங்கடவன் தனது சங்கு
    சக்கரங்களைத் தொண்டைமானுக்கு அளிக்க போர்வென்ற
    தொண்டைமான் அதை பெருமாளுக்கு மீளச் சமர்ப்பித்து
    எனக்களித்த இவைகள் எனது கண்களுக்கு மட்டுமே
    தெரியவேண்டும் என்று வேண்ட அவ்வண்ணமே பெருமாள்
    அருள்புரிந்ததாகவும் கூறுவர். இதேபோல் தொண்டைமானின்
    வாழ்க்கையில் பலமுறைகள் அதிசயத்தக்க நிகழ்வுகளை
    வேங்கடவன் நிகழ்த்திக் காட்டினார். நூல்கள் பலவற்றிலும்
    தொண்டைமான் எனவும், தொண்டை மன்னன் எனவும்
    கூறப்பட்டுள்ளதேயன்றி மன்னனின் பெயர் குறிப்பிடப்பட
    வில்லை.
  14. இராமானுஜர் தனது இளம் வயதில் இம்மலையைச் சேவிக்க வந்த
    போது மலையடிவாரத்திலேயே நின்று கொண்டு மலையின் மேல்
    வேங்கடவன் இருப்பதால் தான் மிதித்து நடந்துவர
    விருப்பமில்லை என்று தெரிவித்ததாகவும், இவருக்காகவே இவரது
    தாய் மாமனாரான திருமலை நம்பிகள் மலைமேலிருந்து தினமும்
    இறங்கி வந்து இராமாயணம் கற்பித்ததாகவும் கூறுவர்.பிற்காலத்தே
    வேங்கடவன் இராமானுஜரைத் திருமலைக்கு வருமாறு
    தெரிவித்ததின் அடிப்படையிலே இராமானுஜர் மலைமீது ஏறினார்
    என்றும் கூறுவர்.


    இராமானுஜர் ஆதிசேடனாகையால் எம்பெருமான் திருவாசல்
    முன்பு நடந்து செல்வதற்கே மனம் ஒவ்வாதவராக இருந்தார்
    என்னும் கூற்று பல இடங்களில் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.

    இளம்வயதில் இராமானுஜர் இக்கொள்கையின்றும் மாறுபடாதவராய்
    இருந்தார். இராமானுஜர் திருக்கோட்டியூர் நம்பிகளிடம்
    திருமந்திரம் பயில வந்த காலை திருக்கோட்டியூரில் நம்பிகளின்
    திருமாளிகைக்கு வரும்பொழுது திருக்கோட்டியூர் தலத்தின்
    மதிலருகே வந்தவுட மண்டியிட்டு ஊர்ந்து சென்றே
    நம்பிகளின்வீட்டை அடைவார் என்றும் கூறப்படுவது. இங்கு
    ஓர்ந்து நோக்கத் தக்கதாகும்.


    இராமானுஜர் திருமலைக்கு வந்த போது இப்பெருமானின்
    கைகளில் சங்கு சக்கரங்கள் இல்லாததால் இத்தெய்வத்தைச்
    சிவன் என்றும், இந்து மதத்தின் வேறு பிரிவுகளின்
    தெய்வமென்றும் பலவாறு கூறி நிற்க இதையறிந்த ராமானுஜர்
    தொண்டைமானின் வேண்டுகோளுக்கிணங்க மற்றவர்கட்கு
    தெரியாமல் இருந்த சங்கு சக்கரங்களை யாவருங் காண அருள்
    வேண்டுமென்று வேங்கடவனை வேண்ட அவ்விதமே
    ஆயிற்றென்பர்.


    இராமானுஜர் திருவேங்கடத்தில் சங்கு சக்கரங்கள் தோன்றக்
    காரணமாயிருந்தார். திருக்கோட்டியூரில் திருமந்திரம் உலகுக்குத்
    தோன்றக் காரணமாயிருந்தார். திருவரங்கத்தில் கைங்கர்யம்
    உலகப் பிரசித்திபெறக் காரணமாயிருந்தார். மேலக்கோட்டை
    திருநாராயண புரத்தில் செல்லப்பிள்ளை தோன்றக்
    காரணமாயிருந்தார். செல்லும் இடங்களிலெல்லாம் வைணவம்
    தழைத்தோங்க காரணமாயிருந்தார்.


    திருமலையில் இருந்து ஒரு சமயம் இராமானுஜர் இறங்கி
    வரும்போது எதிர்ப்பட்ட ஒரு மூதாட்டி இராமானுஜரைத் தடுத்து
    எனக்கு மோட்சம் கொடு என்று கேட்க அது என்னால்
    முடியாதே என்று இராமானுஜர் கூற, உம்மால் முடியாதென்றால்
    பரவாயில்லை. இந்த மூதாட்டிக்கு மோட்சம் கொடுக்க கடவது
    என்று ஒரு முறியில் எழுதியாவது கொடுமெனக் கேட்க.

    ராமானுஜர் ஒரு சிறிய ஓலையில் அவ்விதமே எழுதிக்கொடுக்க
    அதைப்பெற்ற மூதாட்டி, ராமானுஜரை வழிபட்டு சென்று
    கொண்டிருக்கும் போது திடீரென்று திருமலையில் மழை கொட்டி
    வெள்ளப் பெருக்கெடுக்க கைகளில் இராமானுஜர்
    எழுதிக்கொடுத்த ஓலையை இறுகப் பிடித்தவாறு சென்ற மூதாட்டி
    வெள்ளச் சூழலில் சிக்கி கைகளில் ஓலை பிடித்தவாறே திருநாடு
    புக்காள்.
  15. அகத்தியர், வாயு, கபிலர் (இவர் சங்ககாலப் புலவர் அல்ல)
    சுகமுனிவர் என்னும் பல முனிவர்கள் தவமியற்றிய மலையாகும்.
    இது.
  16. தீர்த்த மகிமை மிக்க திருவேங்கடம்

    திருமலை ஒரு பக்தி சேத்ரம். ஒரு முக்தி சேத்ரம்,
    இதையெல்லாம் விட இது ஒரு மிகப்பெரிய தீர்த்த சேத்ரம்
    இங்கு 108 தீர்த்தங்கள் உண்டு என புராண நூல்களில்
    விவரிக்கப்பட்டுள்ளன. அரூபமாக, பிரதயட்ச மாகாமல் இருக்கக்
    கூடிய தீர்த்தங்களும் ஆண்டுக்கொரு முறை இங்குவந்து
    கூடுகின்றன. சில முக்கியமான தீர்த்தங்களை இங்கு
    வகைப்படுத்துகிறோம்.
    1. குமார தாரிகை அல்லது குமார தீர்த்தம்

      மாசி மாதம் மகம் நட்சத்திரம் வரும் தினத்தன்று
      (மாசிப்பௌர்ணமி) சகல தீர்த்தங்களும் வந்து இந்த
      தீர்த்தத்தில் தீர்த்தமாடுகின்றன. மனதிற்கு உற்சாகமும்,
      உடலுக்கு இளமையும் தரும் இத்தீர்த்தத்தில் மூழ்குவோர்
      ராஜசூய யாகம் செய்த பலனைப் பெறுகின்றனர்.
    1. தும்புரு தீர்த்தம்

      பகவானை நாம சங்கீர்த்தனத்தால் பாடும் தும்புரு
      முனிவர் வேங்கடத்தவனைக் குறித்து தவமியற்றிய
      இடத்திற்கருகில் இருப்பதால் தும்புரு தீர்த்தம். பங்குனி
      மாதம் உத்திர நட்சத்திரத்தன்று (பங்குனி பௌர்ணமி)
      இதில் நீராடுவோருக்கு பரமபதம் உண்டு.
    2. இராமகிருஷ்ண தீர்த்தம்
      தை மாதம் வரும் பௌர்ணமியில் இதில் நீராடினால்
      இகபரசுகம் இரண்டும் சித்திக்கும்.
    3. ஆகாச கங்கை
      தினந்தோறும் அதிகாலையில் இந்த தீர்த்தத்தாலேயே
      வேங்கடவனுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. சகல
      பாபங்களையும் போக்கும் இத்தீர்த்தத்தின் அருகில்
      எண்ணற்ற ரிஷிகள் தவமிருந்தனர். அந்தக் காலத்திலேயே
      திருமலை நம்பிகள் தினமும் இந்த தீர்த்தத்தில் இருந்து ஒரு
      பெரிய குடத்தில் வேங்கடவனுக்கு அபிஷேக தீர்த்தம்
      எடுத்துக்கொண்டு நடந்தே வருவாராம்.

      கோவிலிலிருந்து
      சுமார் 2 மைல் தூரம். எம்பெருமான் இவரது தீர்த்த
      கைங்கர்யத்தை மெச்சி காட்சி கொடுத்தார். சகல
      சித்திகளையும் அளிக்கும் இத்தீர்த்தத்தில் சித்திரை
      மாதம் பௌர்ணமியன்று நீராடுவது மிக விசேடம்.
    4. பாண்டு தீர்த்தம்
      வைகாசி மாதம் சுக்கிலபட்ச துவாதசியுடன் கூடிய
      செவ்வாய் கிழமையில் பல தீர்த்தங்கள் இதில் கூடுவதால்
      அதுபோழ்து இதில் நீராடுவோர் சகல பாவங்களிலிருந்தும்
      விடுபடுகின்றனர்.
    5. பாபவிநாசன தீர்த்தம்
      இத்தீர்த்தம் இயற்கை எழில் கொஞ்சும்சூழ்நிலையில்
      அமைந்துள்ளது. மிக்க சுவையுடன் விளங்கும் தீர்த்தங்களில்
      இதுவும் ஒன்று. ஐப்பசி மாதம் வளர்பிறை சப்தமி திதியும்
      உத்திராட நட்சத்திரமும் கூடிய ஞாயிற்றுக்கிழமையில் இதில்
      சில தீர்த்தங்கள் கூடுகின்றன. அன்றைய தினத்தில் இதில்
      நீராடுவோர் பெறற்கரிய ஞானம் பெறுகின்றனர்.
      பாவங்களினின்றும் விடுபடுகின்றனர்.


      ஸ்வாமி புஷ்கரிணி
      தீர்த்தங்களின் அரசி என்று அழைக்கப்படுவதும்
      சரஸ்வதிதேவி தவமியற்றியதுமான ஸ்வாமி புஷ்கரிணிக்கு
      அருகாமையில்தான் ஆதிவராஹமூர்த்தி எழுந்தருளியுள்ளார்.
      மிக விசேஷமான தீர்த்தமிது. மார்கழி மாதம் வளர்பிறையில்
      துவாதசி நாளில் சூர்யோதயத்திற்கு 6 நாழிகை முன்பிருந்து
      சூர்யோதயத்திற்கு பிறகு 6 நாழிகை வரை இம்மலையில்
      உள்ள தீர்த்தங்கள் யாவும் இதில் கூடுகின்றன. அப்போது
      இதில் நீராடுவோர் பூவுலகில் சிறப்புடன் வாழ்ந்து இறுதியில்
      இறைவன் திருவடியிலும் எப்போதும் வீற்றிருக்கும்
      பேறுபெறுவர்.


      தீர்த்த மகிமை மிக்க திருவேங்கடத்தில் சுமார் 40
      நாட்கள் தங்கி அனைத்து தீர்த்தங்களிலும் நீராடி
      அங்கப்பிரதட்சணம் செய்தும், சுப்ரபாதத்தின் போது
      வேங்கடவனைச் சேவிப்பவர்கள் தெளிவு பெற்ற
      மதியினராகவும், பெரும் பொலிவு பெற்ற தோற்றத்தையும்
      பெற்றவராகின்றனர் என்பதில் ஐயமில்லை. தீர்த்தாடனம்
      செய்யும் முறை பற்றியும் ஈண்டு சற்றுச் சொல்ல
      விரும்புகிறோம். தீர்த்தாடனம் செய்வதற்கு நித்தியம்,
      நைமித்தியம், காமியம் என்ற மூன்று முறைகள் உள்ளன.
      நாள்தோறும் அதிகாலையில் நீராடுவது நித்தியம், சூரியனும்
      சந்திரனும் சேரும் அமாவாசையிலும், சூரியனும் சந்திரனும்
      சரிவிகித கோணத்தில் இருக்கும் பௌர்ணமி தினங்களிலும்,
      கிரஹண காலங்களிலும், சூரியன் ராசிகளில் பிரவேசிக்கும்
      மாதப்பிறப்பு நாள்களிலும், புண்ணிய தீர்த்தங்களில்
      நீராடுவது நைமித்தியம். இன்ன தீர்த்தத்தில் மூழ்கினால்
      இன்ன பலன் கிடைக்குமென்று எண்ணி அந்தத்
      தீர்த்தத்தில் மூழ்குவது காமியம். தீர்த்த யாத்திரையை
      நைமித்தியமாகச் செய்வது சிறப்பு.

      பலன் கருதாது புண்ய
      தீர்த்தத்தில் நீராடும்போது பகவான் நாமத்தை உச்சரிக்க
      வேண்டும். அவ்வாறு செய்யாதவர்கள் தீர்த்தத்திலேயே
      கிடப்பினும் தவளையைப் போன்றவர்கள்தான்.
  17. இத்தகைய சிறப்பு பெற்ற இந்த வேங்கடவனை


    “ஆடு தாமரையோனும் ஈசனும்”
    அமரர் கோனும் நின்றேத்தும் வேங்கடத்து
    பொன்னை மாமணியை அணியார்ந்த தோர்
    மின்னை வேங்கடத்துச் சியிற் கண்டு போய்”

    என்று சொல்லப்பட்ட இந்த வேங்கடவன் சகல பிணிகளையும்
    தீர்க்கும் மருத்துவன் என்றும் ஆழ்வார்கள் பாடியுள்ளனர்.
    வேங்கடவனின் பெருமையை ஆழ்வாராலே உணர்த்த
    முடியாதென்று தலைக்கட்டும்போதும் பாவியேன் எங்ஙனம் கூற
    இயலும்.


    இதோ பொய்கையாழ்வார் கூறுகிறார்
    உணர்வா ராறுண் பெருமை? ஊமிதோறூழி
    உணர்வாராறுன் னுருவந்தன்னை - உணர்வாரார்
    விண்ணகத்தாய் மண்ணகத்தாய்,வேங்கடத்தாய் நால்வேத
    பண்ணகத்தாய் நீ கிடந்த பால் - 2149

  18. திருவேங்கடத்தைப் பற்றி சிலம்பு செப்புகிறது.
    உயர்ந்த மலை உச்சியிலிருந்து அருவி நீர் கொட்டிக்
    கொண்டிருக்க சூரியனும் சந்திரனும் எதிரெதிரே எழுந்து நிற்க
    இடைப்பட்ட இம்மலையில் மின்னலை ஆடையாக உடுத்திக்
    கொண்டு ஓடி நீலமேகம் நிற்பது போல் எழுந்தருளி
    பகைவெல்லும் ஆழியும், பால் நிறம் போன்று சங்கும் இருபுறமும்
    திகழ தாமரையைக் கரத்தில் ஏந்தி கிளர்ந்தெழும் ஆரத்தை
    மார்பில் பூண்டு தூய பட்டாடை உடுத்தி செங்கண் நெடியோன்
    நிற்கிறான் என்கிறார் இளங்கோவடிகள்.

    வீங்கு நீர் அருவி வேங்கட மென்னும்
    ஓங்குயர் மலயத்துச்சி மீமிசை
    விரிகதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி
    இருமருங் கோங்கிய இடைநிலை தானத்து
    மின்னுக் கோடியுடுத்து விளங்குவிற்பூண்டு
    நன்னிற மேகம் நின்றது போலப்
    பகையணங் காழியும் பால் வெண்சங்கமும்
    தகைபெறு தாமரைக் கையில் ஏந்தி
    நலங்கிளர் ஆரம் மார்பிற் பூண்டு
    பொலம்பூ ஆடையின் பொலிந்து தோன்றிய
    செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்
    என்கிறார் இளங்கோவடிகள்.


    Cultural Gallery - Tamil Virtual Academy
 
Status
Not open for further replies.
Back
Top