திருவெம்பாவை பாடல் 20

போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்

போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்

போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரிகம்

போற்றி யாம் உய்ய ஆட்கொண்டு அருளும் பொன்மலர்கள்
போற்றி யாம் மார்கழி நீராட ஏலோர் எம்பாவாய்!

பொருள்:

எல்லா உயிர்களாலும் போற்றப்படும் இறைவனே!

உன் துவக்கமான மலர் போன்ற திருவடிகளை வணங்குகிறோம்!

உன் முடிவான செந்தளிர்கள் போன்ற திருவடிகளை வணங்குகிறோம்!

எல்லா உயிர்களையும் படைக்கும் உன் பொற்பாதங்களை வணங்குகிறோம்!

எல்லா உயிர்களையும் காக்கும் உன் மலர் போன்ற மென்மையான திருவடிகளை வணங்குகிறோம்!

எல்லா உயிர்களும் இறுதியில் வந்து அடையும் இலக்கான உன் இரண்டு திருவடிகளையும் வணங்குகிறோம்!

திருமால், நான்முகன் இருவரும் தேடியும் கண்டடைய இயலாத உன் தாமரை போன்ற திருவடிகளை வணங்குகிறோம்!

எங்களைக் கடைத்தேற்றுவதற்காக ஆட்கொண்டு அருளும் பொன் மலர்ப் பாதங்களை வணங்குகிறோம்!

மார்கழி நீராடி வந்த எங்களுக்கு [இத்தகைய உயர்வான பாதங்களை வந்து அடையும் பேறை] அருள்வாயாக!

தத்துவ விளக்கம்:

இந்தப் பிறவிப் பெருங்கடலைக் கடக்கும் வழிகளை இவ்வாறு 20 பாடல்களின் மூலம் உணர்த்தும் மாணிக்கவாசகர், முத்தாய்ப்பாக, ‘தான்’ என்னும் ஆணவம் ஒழித்து, ஈசனுடைய திருவடிகளை முழுமையாகச் சரணடைந்து விடுவதே எல்லா வழிகளிலும் ஏற்ற வழியென்பதைக் குறிப்பாக உணர்த்துகிறார்.

இத்துடன் திருவெம்பாவை முடிவுற்றது.
 
Back
Top