திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தஸாரதியும், திருக்கச்சி நம்பிகளும் !

திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தஸாரதியும், திருக்கச்சி நம்பிகளும் !

கஜேந்திர தாஸரே திருக்கச்சி நம்பி என்றறியப்படுகிறார்..இறைவனோ திருக்கட்சி நம்பி என்றே நிற்கிறார்.. ஆம்..எப்போதும் திருவாம் ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் கட்சியே அன்றோ அவர் !

இருவருமே பூர்ணாசார்யர்கள்.. ( ஸ்ரீ காஞ்சீ பூர்ணர் ஆறு வார்த்தைகளை உடையவருக்கு அருளினார்.. அதனையே மும்மடங்காக ( மூவாறு = 18 ) முன்னமேயே கீதோபதேசம் செய்து பூர்ணாசார்யனாய்; ஜகத்குரு ( க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ) என்றே நிற்பவன் ஸ்ரீ பார்த்தஸாரதி..

சஞ்சலம் ஹி மந: க்ருஷ்ண ப்ரமாதி² ப³லவத் த்³ருட⁴ம் என்கிற ஒற்றுமை அர்ஜுநனுக்கும் இராமானுசனுக்கும் உண்டிறே.. ( மனக்கலக்கம் இருவருக்குமே இருந்தது ) இருவருடைய மனக்கலக்கத்தையும் முறையே பார்த்தஸாரதியும் திருக்கச்சி நம்பிகளும் தீர்த்து வைத்தனர்.

இருவருமே தூதர்கள்.. கண்ணன் பாண்டவர்களுக்காகத் தூதனானான்.. திருக்கச்சி நம்பிகள் இராமானுசனுக்காகப் பேரருளாளனிடம் தூது போனார்..

ரோஹிணீ & மிருகசீரிடம் நட்சத்திரங்களின் அன்னியோன்யம்; நட்சத்திரங்களை வரிசையாகச் சொல்லத் தெரிந்தவர்கள் அறிந்ததே !!

இருவருமே மத்ராசிகள் !!! ஆம் ! சென்னைக் காரர்கள்.. ( பூந்தமல்லி & திருவல்லிக்கேணி ) !

இன்னொன்று..பரஸ்பரம் ஒருவரையொருவர் 'மத் ராசி' ( என்னுடைய ராசி இவர் ) என்றே குலாவி மகிழ்வர்கள்.. ( ரோஹிணீ & மிருகசீரீடத்தின் இரண்டு பாதங்கள் ரிஷப ராசியில் உள்ள ஒற்றுமை கொண்டு இங்ஙனம் உரைத்தனம் )

ஆக மத்ராசிகள் மற்றும் மத் ராசி என்னும் இயல்வினர்கள்..

வருணப் பிறப்பினால் வரு ஒற்றுமையும் உண்டென்ப !

அர்ஜுநனை யுத்தம் செய்யத் தயார் செய்தவன் பார்த்தஸாரதி.. பார்த்த ஸாரதியையே தயார் செய்தவர் திருக்கச்சி நம்பிகள் ! ( இராமானுசர் பார்த்தஸாரதியின் அவதாரமென்ப )

இருவருமே அவமானங்களைச் சந்தித்தனர்.. ஆனால் ஒரு நாளும் அது குறித்து அலட்டிக் கொண்டதில்லை.. காயங்களைக் கணக்கில் கொள்ளாதவர்கள்.

குசேலனுக்குப் பொருள் ஈந்தான் பார்த்தஸாரதி.. கூரேசராம் ஆழ்வானுக்கு; நம் சேம வைப்பாம் இராமானுசனைப் பெற்றுத் தந்ததில் பெரும்பங்கு வகிப்பவர் திருக்கச்சி நம்பிகளேயாம்.

வீரராகவர் 'பிள்ளை' திருக்கச்சி நம்பிகள் ( அவர் தந்தையார் திருநாமம் வீரராகவர் ( கமலாபதி ) என்பதனையும் எண்ணிடுக..

வீரராகவர் 'பின்னை' பார்த்தஸாரதியிறே..

( பெரிய திருமொழியில் காசையாடை பதிகம் திருவள்ளூர் விஷயம்.. அடுத்ததான விற்பெருவிழவும் பதிகம் திருவல்லிக்கேணி விஷயம் )..

பொய்ப்புகாரினால் இருவரும் பாதிப்புக்குள்ளாகினர்..ஶ்யமந்தக மணி விஷயமான வீண் அபவாதத்திற்குக் கண்ணன் ஆளானான்..
நம்பிகளும் பேரருளாளன் திருவாபரண விஷயமான ஒரு வீண் அபவாதத்திற்கு ஆளானார் என்பர்.

வட்டவாய் நேமி அவனைக் காட்டும்.. திரு ஆலவட்டம் இவரைக் காட்டிடும்..

முக்கியமான ஒற்றுமை கேளீர்.. இருவருமே கோபாலர்கள்..

ஆம். மாடு மேய்த்தவர்கள் !

ஸ்ரீ உ.வே KB தேவராஜன் ஸ்வாமி சாதித்த இன்பொருள் ஒன்று கேளீர்..

கண்ணன் அர்ஜுநனிடத்தே பேசினான்.. அதனால் தெளிவுற்றவனாய்; கௌரவர்களை நோக்கி அம்புகளை அவன் வீசத்தொடங்கினான்..

இங்கே நம்பிகள் தேவப்பெருமாளுக்கு திருவாலவட்டம் வீசினார்.. உடனே பகவான் பேசினான்..

பேசிய பிற்பாடு ( அம்புகளை ) வீசுதல் அங்கே..

( விசிறி ) வீசிய பிற்பாடு பேசுதல் இங்கே என்கிற நயம் இன்புறத்தக்கதாம்.
 
Back
Top