• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

திருவயிந்திரபுரம்

praveen

Life is a dream
Staff member
திருவயிந்திரபுரம்

நடுநாட்டுத் திருப்பதிகளில் முதல் தலமாக திருவயிந்திரபுரம் திகழ்கின்றது. இத்தலம் கடலூர் நகரத்திலிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது. இத்தலத்தை அயிந்தை என்றும் அழைப்பார்கள்.
இத்தலத்தைப் பற்றி பிரம்மாண்ட,ஸ்காந்த மற்றும் ப்ரஹன் நாரதீய புராணங்களில் பல செய்திகள் கூறப்பட்டுள்ளன.
ஸ்காந்த புராணத்தின்படி ஒரு காலத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் கடும்போர் மூண்டு அதில் அசுரர்கள் வெற்றி பெற்றனர். தோற்ற தேவர்கள் திருமாலைத் துதித்து உதவி புரிய வேண்டுமென்று விண்ணப்பிக்க, அவர்களுக்கு உதவ வந்த ஸ்ரீமந் நாராயணன் கருட வாகனத்தின் மேலிருந்து போரிட அசுரர்கள் நாராயணனையும் எதிர்த்து கடும்போர் புரிந்தனர். இறுதியில் ஸ்ரீமந் நாராயணன் சக்ராயுதத்தை ஏவ, அது சகல அசுரர்களையும் அழித்தது.
இந்நிலையில் அசுரர்களின் உதவிக்கு வந்த சிவன் சக்ராயுதத்திற்கு எதிராக தனது சூலாயுதத்தை ஏவ அதுவும் சக்கரத்தில் பட்டு அணிகலனாக அச்சக்கரத்தையே சுற்றி நிற்க, இது கண்ட சிவன் தன் ஞான திருஷ்டியால் நோக்க, ஸ்ரீமந் நாராயணன் அங்கு தனது மும்மூர்த்தி வடிவத்தை சிவனுக்கு காண்பித்தார். அவ்வடிவில் ஸ்ரீமந் நாராயணனுடன் பிரம்மா, சிவன், தேவர்களும் தெரிய, சிவன் துதித்து நிற்க, எம்பெருமான் சாந்தமுற்று சக்ராயுதத்தை ஏற்றுக் கொண்டு, சூலாயுதத்தையும் சிவனிடமே சேர்ப்பித்து ரிஷிகள், தேவர்களின் வேண்டுகோளின்படி அவ்விடத்திலேயே கோயில் கொண்டார். தேவர்களுக்காக யுத்தம் செய்ததால் தேவநாதன் என்று அழைக்கப் பட்டார்.
பெருமானுக்கு தாகம் ஏற்பட தாக சாந்திக்கு நீர் கேட்க, நீர் கொண்டுவர கருடன் ஆகாயத்தின் மீது பறக்க, ஆதிசேடன் தரையிலிறங்கி தனது வாலால் பூமியை அடித்துப் பிளந்து தீர்த்தம் உண்டு பண்ணி பகவானுக்கு அளித்தார். இவ்வாறு ஆதிசேடனால் பூமியைத் தோணடி நீர் கொண்டு வரப்பட்டதால் திரு+வகிண்ட+நீர் (திருஹிந்தபுரம்) என்ற பெயர் உண்டாயிற்று. எனவே இங்குள்ள தீர்த்தமும் சேஷதீர்த்தம் என்றே அழைக்கப்படுகிறது.
இத்தலத்தின் எல்லைகளை பூலோகத்தில் திருக்குடந்தைக்கு வடக்கில் 6 யோசனை தூரத்திலும், காஞ்சிக்குத் தெற்கிலும், சமுத்திரத்திற்கு மேற்கே அரையோசனை தூரத்திலும் அமைந்துள்ளது என்று புராணம் வர்ணிக்கிறது.


மூலவர் - தெய்வநாயகன், கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம். தேவர்கட்கு நாதனாக இருந்து எம்பெருமான் யுத்தம் செய்தமையால் தேவ நாதன் என்றும் திருநாமம் உண்டு.
உற்சவர் - மூவராகிய ஒருவன் (தேவன்)
தாயார் - வைகுண்ட நாயகி, ஹேமாம்புஜ வல்லித்தாயார். தேவர்களைக் காப்பதால் ஹேமாம்புஜ வல்லி என்றும், பார் எல்லாம் காக்கும் தன்மையால் பார்க்கவி என்றும் திருநாமமும் உண்டு.
விமானம் - சந்திர விமானம், சுத்தஸ்தவ விமானம்


இப்பெருமான் தாஸ ஸத்யன், அச்சுதன், ஸ்த்ரஜ்யோதிஷ், அனகஞ்யோதிஷ், த்ரிமூர்த்தி என்று ஐந்து பெயர்களால் அழைக்கப் படுகிறார். இவற்றில் தாஸ ஸத்யன் என்பதை அடியார்க்கு மெய்யன் என்றும் ஸ்தரஜ்யோதிஷ் என்பதை மேவு சோதியன் என்றும் த்ரிமூர்த்தி என்பதை மூவராகிய ஒருவன் என்றும் திருமங்கை ஆழ்வார் தமது பாசுரங்களில் எடுத்தாண்டுள்ளார்.
ஆதிசேடன் பூமியைப் பிளந்து உடனே நீர் கொண்டு வந்தான். ஆகாயத்தில் பறந்து சென்ற கருடனனோ சற்று தாமதித்து வைகுண்டத்திலிருந்து விரஜா தீர்த்தத்தைக் கொண்டு வந்தான். இவ்விதம் பரமனின் இரண்டு வாகனங்களால் தீர்த்தம் கொண்டு வரப்பட்ட சிறப்பு வேறெந்த திவ்ய தேசத்திற்கும் இல்லை. கருடனால் கொண்டுவரப்பட்ட தீர்த்தமே இங்கு நதியாக மாறி கருடாழ்வார் தீர்த்தமாகி காலப்போக்கில் கெடில நதியாகப் பெயர் மாறி தற்போதும் கெடிலமாகவே ஓடிக்கொண்டிருக்கிறது.
தான் வருவதற்குள் ஆதிசேடனால் எம்பெருமான் தாகவிடாய் தீர்த்ததைக் கண்ட கருடன் எம்பெருமானை நோக்கி நான் கொணர்ந்த தீர்த்தத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டுமென விண்ணப்பிக்க கருடா நீ கொணர்ந்த தீர்த்தத்தையும் நாம் ஏற்றுக் கொள்கிறோம். என் ரதோற்சவ தினத்தில் அந்த நதிக்கரையில் பூசைகளை ஏற்று நின் தீர்த்தத்தையும் ஏற்றுக்கொள்கிறோம் என்று சொல்ல அவ்விதமே இன்றளவும் ரதோற்சவம் இந்த கெடில நதிக்கரையிலேயே நடைபெறுகிறது.


தன்னிடமிருந்தே பிரம்மனும், சிவனும் தோன்றினர் என்பதை இப்பெருமான் உணர்த்துகிறார். பிரம்மனுக்கு அடையாளமான தாமரைப் பூவினை கையிலும், விஷ்ணுவுக்கு அடையாளமான சங்கு சக்கரங்களையும், சிவனுக்கு அடையாளமான நெற்றிக்கண்ணும், சடையும் கொண்டு இப்பெருமான் திகழ்கிறார் என்பர். அதனால் தான் மூவராகிய ஒருவனை என்று மங்களாசாசனத்தை மொழிந்தார்.
இங்குள்ள சோழ மன்னன் ஒருவன் விஷ்ணு கோவில்களைஇடித்துவிடும் நோக்குடன் இங்கு வந்ததாகவும் ஆடு மேய்க்கும் சிறுவர்கள் இது சிவன் கோயில் என்று கூற மன்னன் உற்று நோக்க சிவனைப் போல் அம்மன்னனுக்கு இப்பெருமான் காட்சியளித்தார் எனவும் கூறுவர்.
இங்குள்ள விமானத்தில் வைகுண்டத்தில் அமர்ந்திருப்பதைப் போலவே சுத்த ஸ்த்வ விமானத்தின் கீழ், கிழக்குத் திசையில் பெருமாளும், தெற்கில் தட்சிணமூர்த்தியாகிய சிவனும், மேற்கு திக்கில் நரசிம்மரும், வடக்கில் பிரம்மாவும் அமைந்துள்ளனர் என்பது சிறப்பாகும்.
இத்தலம் பற்றிய புராணத்தை பிரம்மா என்றும் பாராயணம் செய்து வழிபட்டு வருவதாக பூ மறையோன் பாராயணத்தில் பணியும் அயிந்தை நகர் நாராயணனார் என்று மும்மணிக் கோவையில் சுவாமி தேசிகன் அருளியுள்ளார்.
11-ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுக்கள் இப்பெருமாளை நின்றருளிய மகாவிஷ்ணு என்றும் ஏழிசை நாதப் பெருமான் என்றும் குறிக்கின்றன.
வைகானஸ முறைப்படி பூஜைகள் நடத்தப்படும் இத்தலத்து எம்பெருமான் திருப்பதி ஸ்ரீனிவாசனுக்கு தமையன் என்பதோர் ஐதீஹமும் உண்டு.
வெகு காலத்திற்கு முன் கோவில் பிரகாரத்திலிருந்த ஒரு பழைய புன்னை மரத்தின் வேரிலிருந்து சக்ரவர்த்தி திருமகனுடன் நம்மாழ்வாரும் தோன்றினாரென்றும் அதனாலே இங்கு இரண்டு நம்மாழ்வார்கள் சேவை சாதிக்கின்றனர் என்பதும் வரலாறு.
திருமங்கையாழ்வாரால் மட்டும் பத்துப் பாசுரங்களில் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம். இப்பெருமான் மீது வேதாந்த தேசிகன் மும்மணிக் கோவையருளிச் செய்தார். மணவாள மாமுனிகள் பன்முறை எழுந்தருளி மங்களாசாசனம் செய்த தலம். வடமொழியில் தேவநாயக பஞ்சாசத்து என்னும் தோத்திரப் பாடலும், பிராக்ருத மொழியில் அச்யுத சதகம் என்ற தோத்திரப் பாடல்கள் அடங்கிய நூலும் இத்தலத்தைப் பற்றி விரிவாகப் பேசுகின்றன.
திருமாலின் அமிசா அவதாரங்களில் ஒன்றான ஹயக்ரீவ அவதாரத்திற்கு இச்சன்னதியின் அருகிலுள்ள மலையில் ஒரு திருக்கோவில் அமைந்துள்ளது. தெய்வநாயகன் சன்னதிக்கு எதிரே உயரமான மேடிட்ட பகுதியில் அமைந்து ஒளஷதகிரி என்று அழைக்கப்படும் இத்தலம் மிகவும் தொன்மையும் பெரும் சக்தியும் கொண்டதாகப் போற்றப்படுகிறது. ஞானத்தையும் கல்வியையும் தரும் ஹயக்ரீவப் பெருமாள் இங்கு எழுந்தருளியுள்ளார். மது, கைடபன் என்னும் அரக்கர்கள் பிரம்மனிடமிருந்த படைப்புத் தொழில் நடத்தும் ரகசிய வேதத்தை எடுத்து மறைத்துக் கொள்ள பிரம்மன் மேற்படி வேதத்தை தமக்கு மீட்டுத்தர திருமாலைக் குறித்து வேண்டினார். திருமால் ஹயக்ரீவ வடிவம் கொண்டு அரக்கர்களைத் அழித்து படைப்புத் தொழிலுக்கான ரஹ்ஸய வேதத்தை மீண்டும் பிரம்மனிடமே ஒப்படைத்தார். இதனால்தான் ஹயக்ரீவ பெருமாளை ‘நால்வேதப் பொருளைப் பரிமுகமாய் அருளிய பரமன்’ என்று போற்றுவர். இப்பெருமாளை வழிபடுவர்கட்குத் தங்கு தடையற்ற கல்வியும், தெளிவான ஞானமும் உண்டாகும். ஹயக்ரீவ பெருமாள் ஆதித்திருமேனிகள் இந்தியாவில் இரண்டு இடங்களில் உண்டு. ஒன்று இங்கு மற்றொன்று மைசூரில் உள்ள பரகால மடம்.
குதிரை முகம் கொண்ட இந்த ஹயக்ரீவம் சகல வித்தைகட்கும் ஆதாரமாக விளங்கக்கூடிய அவதார நிலையாகும். வித்தைகளின் இருப்பிடம் அதாவது இவர் கல்விக் கடவுள்.
இந்த ஹயக்ரீவ மலைக்கு 74 படிகள் உண்டென்றும் அவைகள் இராமானுஜர் ஏற்படுத்திய 74 சிம்மாசனாதிபர்களைக் குறிக்கும் என்றும் ஒரு செய்தி உள்ளது.
கலியுகத்தில் இவ்விடத்தில் திருமால் அணிந்துள்ள மணியின் அம்சமாக ஒரு மகான் அவதரிக்கப் போகிறாரென்று புராணங்களில் கூறியதற்கொப்ப ஸ்ரீமாந் நிகாமந்த தேசிகர் இங்கே 40 ஆண்டுகாலம் எழுந்தருளியிருந்து வடகலை சம்பிரதாயத்திற்கு அருந்தொண்டாற்றி வளர்த்தார். வடகலை சம்பிரதாயத்திற்கு இத்தலம் ஒரு பாசறை போல் விளங்கிற்று எனலாம்.
நாற்பதாண்டுகள் இந்த திவ்ய தேசத்தில் ஜீவித்திருந்த தேசிகர் இவ்விடத்தில் ஒரு திருமாளிகை கட்டித் தமது திருக்கரத்தால் ஒரு கிணறும் வெட்டினார். இவர் வாழ்ந்திருந்த திருமாளிகை இன்றும் உள்ளது. இங்கு ஸ்ரீதேசிகர் தம்மைப் போல ஒரு திருமேனி செய்தார். உமது திருமேனிக்கும் உம்மைப்போல் உயிரோட்டம் தரமுடியுமா என்று ஒரு சிற்ப சாஸ்திரி கேட்க, ஸ்ரீராமானுஜர் பெரும்புதூரில் வடித்ததைப் போன்று இங்கு தேசிகரும் தம்மைப் போல் ஒரு திருமேனி செய்தார். திருமேனி செய்து முடிக்கப்பட்டவுடன் சிற்ப சாஸ்திரி அத்திருமேனியைத் தொட்டபோது அதில் விரல் கீறல் பட்டு ரத்தம் கசிந்ததாகவும், ஸ்ரீதேசிகரின் மகிமை அறியாது அவரிடம் ஆணவத்துடன் நடந்து கொண்ட முறைக்கு அச்சிற்ப வல்லுனர் தேசிகரின் பாதங்களில் வீழ்ந்து மன்னிப்புக் கேட்டான் என்றும் சொல்வர்.
ஸ்ரீதேசிகர் ஹயக்ரீவ மந்திரத்தை ஜெபித்து ஹயக்ரீவரை இங்கு நேரில் தரிசித்துவிட்டு மலையிலிருந்து இறங்கி வரும்போது தெய்வநாயகனை வழிபடாது பெண்ணை ஆற்றங்கரையை கடந்து செல்ல அடியார்க்கு மெய்யனான தெய்வநாயகன் வழிமறித்து இவருக்கு காட்சி கொடுத்ததாகவும் ஒரு செய்தி உள்ளது.
தேவநாதனுடைய திருமேனியொளியும், ஆபரண ஒளியும் கலந்து ஒரு தெய்விக ஒளி தோன்றுவதாகவும் அந்த ஒளி, பக்தர்களின் சகல விதமான நோய்களையும் தீர்ப்பதோடு அல்லாமல் பக்தர்கள் சங்கல்பித்த பலனைத் தவறாது அருள்வதாக சுவாமி வேதாந்த தேசிகர் அச்சுத ஸதகத்தில் அருளியுள்ளார்.
சித்திரை மாதத்தில் பத்து நாட்கள் உற்சவம் இங்கு சிறப்பாக நடக்கும். வழக்கம் போல் பெருமாள் கோவில் உற்சவங்கள் அனைத்தும் இங்கு நடைபெறும். தேசிகர் திருநட்சத்திரம் இங்கு விசேஷமாக கொண்டாடப்படும்.
இத்தகைய சிறப்புமிக்க தலத்திற்கு அன்பர்கள் வருகைபுரிந்து தாஸசத்தியனின் திருவருளைப் பெறுமாறு வேண்டுகிறேன்.
 

Latest ads

Back
Top