திருமழிசையாழ்வார் (Thirumalisai Alvar)

Status
Not open for further replies.

praveen

Life is a dream
Staff member
திருமழிசையாழ்வார் (Thirumalisai Alvar)

முதலாழ்வார்கள் வாழ்ந்த காலத்தே, உடன் வாழ்ந்த ஆழ்வார் திருமழிசையாழ்வார். இவரது பிறப்பும் கண்ணனின் அவதாரத்தை ஒத்தது. தேவகியின் மகனாகப் பிறந்து, யசோதையின் அரவணைப்பில் வளர்க்கப் பெற்றது போல திருமழிசை ஆழ்வார் வளர்ந்தார்.


திருமாலின் அடியவராய்த் திகழ்ந்த பார்க்கவ முனிவருக்கும் கனகாங்கி என்னும் தேவமங்கைக்கும் திருமழிசை என்ற ஊரில் பெருமாளின் சுதர்சன சக்கரத்தின் அம்சமாய் அவதரித்தவர் திருமழிசையாழ்வார்.


கை, கால்கள் இன்றிப் பிறந்ததால் பெற்றோர் இக்குழந்தையை ஒரு பிரம்புப்புதரின் கீழ் போட்டுவிட்டுச் செல்ல. பிறகு பெருமாளின் அருளால் உருப்புகள் வளர்ந்து, பசி மிகுதியால் அழுத போது திருமகளே பாலமுது தந்தார் என்கிறது குருபரம்பரை.


எந்தையே வினையேன், தந்த இந்தத்
தொள்ளமுதினை அமுது செய்க என்று,
சிந்தையோடு அவன் பரவிட, அவன் அருள் செய்தே
அந்த நற்சுவை அழிழ்தினை அமுது செய்தனனால்


என்று திவ்வியசூரி சரிதம் ( பாடல் 57 ) சொல்கிறது.


திருவாளன் என்பவன் பிரம்பு அறுக்கப் போன இடத்தில் குழந்தையின் குரல் கேட்டுக் குழந்தையை கண்டெடுத்து மகிழ்ச்சியுடன் இல்லத்துக்கு எடுத்துச் சென்றான். அவன் மனைவி பங்கயச் செல்வி அன்புடனும், ஆசையுடனும் குழந்தையை வளர்த்து வந்தனர்.


திருமழிசையில் தோன்றியதால் ‘திருமழிசையாழ்வார்’ என்ற பெயர் பெற்ற இவருக்குப் ‘பக்திசாரர்’, ‘மழிசைப் பிரான்’ என்ற திருநாமங்கள் உண்டு.


‘பிரான்’ என்ற சொல் பெருமாளை குறிக்கும் ஆழ்வார்களில் ‘பிரான்’ என்ற ஏற்றத்தை பெற்றவர் இவர் ஒருவரே. "கிடந்தவாறு எழுந்து இருந்து" என்று ஆவார் கூற ஆராவமுதன் தன் சயனத்தை விட்டு எழ ஆரம்பித்தான். அன்று முதல் ஆராவமுதன் ஆராவமுதாழ்வார் என்றும் இவர் மழிசைப்பிரான் என்றும் அழைக்கப்படுகின்றனர்.


’ஆழ்வார்’ என்ற பெயரை பெருமாள் ஏற்றுக் கொண்டு ஆராவமுதாழ்வார் ஆனார்.


சமணம், சாக்கியம், சைவம் போன்ற பல சமயங்களில் புகுந்து ஆராய்ந்து இறுதியாக வைணவ சமயத்தின் மூலமாகத்தான் பரம்பொருளைக் கண்டறிய முடியும் என்பதைக் கண்டவர்.


திருமழிசையாழ்வார் பல மதங்களைத் தழுவி, உண்மை அறியாது தவித்த போது அவரை திருத்தியவர் பேயாழ்வார் தான்.


தாம் அருளிய நான்முகன் திருவந்தாதி முதல் பாட்டில்


“நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும்
தான் முகனாய்ச் சங்கரனைத்தான் படைத்தான்” என்று ஸ்ரீநாராயணனே பரம்பொருள் என்றும், அவனே எல்லாவற்றிற்கும் மூல காரணம் என்றும் அடித்துக் கூறிகிறார்.


மாற்று சமயக் கருத்துகளைவிட திருமாலே பரம்பொருள் என்னும் பேருண்மையை நிலைநாட்டுவதில் மற்ற ஆழ்வார்களைக் காட்டிலும் இவர் அழுத்தமாகச் சொல்லுவதால், ஆழ்வாரை, மணவாள பெருமாள் நாயனார், "உறையில் இடாதவர்" என்று ஆசாரிய ஹ்ருதயத்தில் போற்றியுள்ளார். ( என்றும் பகை அழிக்க ஆயத்தமாய் இருப்பவர் என்று பொருள், இங்கே பகை என்பது மாற்றுச் சமய கருத்துகளைக் குறிக்கும் )


மற்றைச் சமயங்கள் பல தெரிந்து, மாயோன்
அல்லால், தெய்வம், மற்று இல்லை என உரைத்த
வேதச் செழும் பொருள்


என்று வேதாந்த தேசிகன் தேசிக பிரபந்ததில் இதைக் குறிப்பிடுகிறார்.


திருமழிசையாழ்வாரின் பெருமையை உணர்த்தும் வகையில் பல கதைகள் கூறப்படுவதுண்டு. அவற்றுள் முக்கியமானது அவருடைய சீடன் கணிகண்ணனைப் பற்றி கதை.


கணிகண்ணன் பல்லவ மன்னனின் ஆணைப்படிக் கச்சியை விட்டு வெளியேறிய போது, திருமழிசை ஆழ்வாரின் பாட்டுக்கு ஏற்பத் திருவெஃகாவில் பள்ளி கொண்டிருந்த பெருமாள் தன் பைந்நாகப் பாயைச் சுருட்டிக்கொண்டு இவர் பின் சென்றார். பிறகு மனம் வருந்தி மன்னன் மன்னிப்பு கேட்க, இவரது வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் ஊர் திரும்பினார்.


இந்தக் கதையின் ஆதாரம் திருமழிசை பாடிய இரண்டு தனிப்பாடல்கள்:


கணிகண்ணன் போகின்றான் காமரு பூங்கச்சி
மணிவண்ணா நீகிடக்க வேண்டா துணிவுடைய
செந்நாப் புலவனும் செல்கின்றேன் நீயும் உன்றன்
பைந்நாகப் பாய் சுருட்டிக் கொள்.


என்று முதல் பாட்டுக்குப் பெருமாள் எழுந்து செல்ல, சமாதானமானதும் அதைச் சற்றே மாற்றி


கணிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்க வேண்டும் துணிவுடைய
செந்நாப் புலவரும் செலவொழிந்தான் நீயுமுன்றன்
பைந்நாகப் பாய் படுத்துக்கொள்.


என்று முடியுமாறு பாட, திரும்ப வந்து விட்டாராம்.


இவர் மங்களாசாசனம் செய்த திவ்யதேசங்கள் 17 - 1) திருஅரங்கம் 2) திருஅல்லிக்கேணி
3) திருஅன்பில் 4) திருஊரகம் (காஞ்சிபுரம் அருகில்) 5) திருஎவ்வுள் (திருவள்ளுர்) 6)திருகஇத்தலம் (கபிஸ்த்தலம்)7) திருக்குடந்தை (கும்பகோணம்)8) திருக்குறுங்குடி
9) திருக்கோட்டியூர்10) திருத்துவாரபதி (த்வாரகா)11) திருக்கூடல்12) திருப்பரமபதம் 13) திருப்பாடகம் 14) திருப்பாற்கடல்15) திருவடமதுரை (மதுரா)16) திருவெகா (காஞ்சிபுரம் அருகில்) 17) திருவேங்கடம் ]


மணவாள மாமுனிகள் "துய்மதி பெற்ற மழிசை பிரான்" ( உபதேசரத்தினமாலை 4 ) என்றும் இவர் அவதரித்த திருநாளை "நல்லவர்கள் கொண்டாடும் நாள்" ( உபதேசரத்தினமாலை 12 ) என்றும் சிறப்பித்துக் கூறுகிறார். இன்று திருமழிசை ஆழ்வார் திருநட்சத்திரம்.


திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம்!!
 
hi praveen sir,

i like all 12 alwars details in brief.....recently im learning 108 divya desam lecture by veluludi krishanan upanyasam....very nice

detail thirumazhisai alwar details..thanks..
 
Status
Not open for further replies.
Back
Top