திருநாவலூர் ஆலயம்

Status
Not open for further replies.
திருநாவலூர் ஆலயம்

திருநாவலூர் ஆலயம்




perumal.jpg


கிரேதா யுகத்தில் சம்புவனக் காடாக இருந்த திருநாவலூர் பகுதியில் சுயம்புமூர்த்தியாக உருவான இறைவன் திரேதா யுகத்தில் திருநாவலேஸ்வரர், திருத்தொண்டீஸ்வரர் என்றும்; அம்பாள் சுந்தராம்பிகை, நாவலாம்பிகை என்றும் அழைக்கப்பட்டனர். துவாபர யுகத்தில் திருமாநல்லூர் என்று அழைக்கப்பட்ட இப்பகுதி, பிறகு நாவல் மரக்காடுகள் நிறைந்த பகுதியாக இருந்ததால் திருநாவலூர் என்று அழைக்கப்பட்டு வருகிறது. இறைவன் பக்தஜனேஸ்வரர் என்றும்; அன்னை மனோன்மணி அம்பாள் என்றும் அழைக்கப்பெறுகின்றனர்.

இவ்விறைவனை மகாவிஷ்ணு, சூரியன், பிரம்மா, இந்திரன், கருடாழ்வார், சண்டிகேஸ்வரர், சப்தரிஷிகள் வந்து பூஜித்துள்ளனர். நால்வரில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார் கயிலாயத்தில் இறைவன் இட்ட கட்டளையின்படி இவ்வூரில் வந்து பிறந்து, இளைஞனாக வளர்ந்த பிறகு இறைவனே முதியவர் கோலத்தில் வந்து சுந்தரரை ஆட்கொண்ட சிறப்புடையது இத்தலம்.

கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் இவ்விறைவனை பூஜை செய்து வந்தார் சடையனார். இவரது பிள்ளையாக அவதரித்து வளர்ந்து வந்தார் சுந்தரர். இளம்பிள்ளையாக ஓடி ஆடி விளையாடும் பருவத்தில், தமது சிறிய தேரை இழுத்துக் கொண்டு தெரு வழியே சென்று கொண்டிருந்தார். அப்போது இவ்வூருக்கு அருகில் உள்ள சேந்தமங்கலத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்த நரசிங்க முனையர் என்ற சிற்றரசர் இவ்வீதி வழியே குதிரைகள் பூட்டிய தேரில் வலம் வந்தார். அப்போது சிறுவன் சுந்தரர் சிறிய தேரை முன்னே இழுத்துப் போவதைக் கண்டார். சிறுவனைப் பார்த்து, ""வழிவிடப் பா'' என்று மன்னர் கேட்க, மன்னரைத் திரும்பிப் பார்த்த அந்த சிறுவனின் வசீகரத் தோற்றத்தையும் ஒளி பொருந்திய முகத்தையும் பார்த்த மன்னர் மெய்சிலிர்த்தார்.

அப்போது சிறுவன் தனது துடுக்கான பேச்சால், ""எமது தேர் போன பின்புதான் உமது தேர் போக முடியும். அப்படி அவசரமாகப் போக வேண்டும் என்றால் வலது, இடது புறம் உள்ள வீதி வழியே போய்க் கொள்ளுங்கள்'' என்று சொல்ல, மன்னருக்கு வியப்பும் ஆச்சரியமும் ஏற்பட்டது. மன்னர் எதுவும் பதில் பேசாமல் வேறு வழியே ஒதுங்கிப் போய்விட்டார். ஆனால் அதன்பிறகு மன்னருக்கு இருப்பு கொள்ளவில்லை. இவ்வளவு அழகும் தெய்வீக முகமும் துடுக்கான பேச்சும் கொண்ட இந்த சிறுவனை தமது பிள்ளையாக எடுத்து வளர்க்க விரும்பினார். மறுநாள் சுந்தரரின் தந்தையான சடையனாரிடம் வந்து தனது விருப்பத்தைத் தெரிவித்தார். சடையனார் மன்னரின் விருப்பத்தை நிறைவேற்ற முடிவு செய்தார். ஆனால் அதற்கு ஒரு நிபந்தனையையும் விதித்தார். ""தினசரி ஒருமுறை சுந்தரரை சேந்தமங்கலத்தில் இருந்து அழைத்து வந்து இவ்விறைவனை வழிபடச் செய்ய வேண்டும்'' என்று சொன்னார். அதற்கு ஒப்புக் கொண்ட மன்னர் நரசிங்க முனைவர், அதே நேரத்தில் தானும் சுந்தரரோடு இவ்வாலயம் வந்து வழிபடுவதற்கு இவ்வாலயத்திலேயே தனியாக ஒரு சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்யச் சொன்னார். அதன்படியே புதுலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. (அந்த லிங்கம் இப்போதும் கோவிலின் உள்பிராகாரத்தில் தென்கிழக்கு மூலையில் உள்ளது.)

அதன்படி சுந்தரரும் மன்னரும் இவ்வாலயம் வந்து தினசரி இறைவனை தரிசித்துச் சென்றனர். அப்படிப்பட்ட மன்னர் நரசிங்க முனையர் 63 நாயன்மார்களில் 43-ஆவது நாயன்மாராகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

perumal1.jpg


இவரிடம் வளர்ந்த சுந்தரர் வாலிபப் பருவத்தை அடைந்தார். அப்போது மன்னர் சுந்தரருக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்து, அதன்படி இவ்வூருக்கு அருகில் உள்ள மணம் தவழ்ந்த புத்தூர் சடங்கவி சிவாச்சாரியாரின் மகளை மணம் பேசி முடித்தனர்.

அதன்படி திருமணம் செய்ய மணமகன் உட்பட அனைவரும் புறப்பட்டுச் செல்லும்போது, நடுவழியில் வயோதிகர் ஒருவர் சுந்தரரைத் தடுத்து நிறுத்தினார். (அந்த இடம் இப்போதும் தடுத்தாட் கொண்டூர் என அழைக்கப்படுகிறது.) தடுத்து நிறுத்தியதோடு அல்லாமல் அந்த முதியவர், ""தம்பி சுந்தரா, நீ எனக்கு அடிமைப்பட்டவன். நான் இடும் பணிகளை சிரமேற்கொண்டு செய்யக்கூடிய அடிமையான நீ என்னை மீறி எப்படி திருமணம் செய்து கொள்ளலாம்? அதற்கு அனுமதிக்க முடியாது. வா என்னோடு'' என்று அழைத்தார், இதைக் கேட்டு கோபமுற்றனர் சுந்தரரும் அவருடன் வந்தவர்களும்.

""என்ன பெரியவரே, திருமணம் செய்யப் போகும் மாப்பிள்ளையை மடக்கி உமது அடிமை என்கிறீர்கள். அதற்கு என்ன ஆதாரம் உங்களிடம் உள்ளது?'' என்று உடனிருந்தவர்கள் கேட்க, அந்தப் பெரியவர் தனது மடியில் இருந்த ஒரு ஓலைச்சுருளை எடுத்து நீட்டி, ""இவன் எனக்கு அடிமை என்பதற்கு இதில் ஆதாரம் உள்ளது'' என்று சொல்ல, கடும் கோபம் கொண்ட சுந்தரர் பெரியவர் நீட்டிய ஓலையை வெடுக்கென பிடுங்கி அருகிலிருந்த தீயில் போட்டுவிட்டார். அது எரிந்து சாம்பலாகிவிட்டது.

அப்போது பெரியவர், ""பெரியோர்களே, இந்த இளைஞன் செயலைப் பார்த்தீர்களா? இப்படிப்பட்டவனிடம் எனக்கு எப்படி நீதி கிடைக்கும்?'' என்று சொல்லி மன்றாடினார். அப்போது சுந்தரருடன் இருந்தவர்கள், ""பெரியவரே, உம்மிடம் இருந்த ஓலையைப் பிடுங்கி இந்த இளைஞன் நெருப்பில் போட்டது தவறுதான். இருந்தாலும் இவன் உமக்கு அடிமை என்பதற்கு வேறு ஏதேனும் ஆதாரம் உண்டா? நிரூபிக்க முடியுமா'' என்று கேட்க, அதற்குப் பெரியவர், ""அய்யா, பெரியவர்களே! இந்த துடுக்கான இளைஞன் இப்படியெல்லாம் செய்வான் என்று எமக்கு முன்கூட்டியே தெரியும். அதற்காகத்தான் முன்னெச்சரிக்கையாக எரிந்துபோன ஓலைக்குப் பதிலாக மாற்று ஓலை வைத்துள்ளேன். ஆனால் அதையெல்லாம் இங்கே காட்ட முடியாது. நீங்கள் எல்லாம் இந்த இளைஞனுக்கு வேண்டியவனாக இருக்கிறீர்கள். அதனால் எனக்கு இங்கே நீதி கிடைக்காது. அவருக்கு சாதகமாகத்தான் நீங்கள் சொல்வீர்கள். எனவே எனக்கு உண்மையிலேயே நீதி கிடைக்க செய்ய வேண்டுமானால் எனது ஊருக்கு வாருங்கள். அங்கு உள்ள பெரியவர்களும் நீங்களும் உட்கார்ந்து பேசி தீர்ப்பு சொல்லுங்கள்'' என்று பெரியவர் சொல்ல, சரியென ஒப்புக்கொண்டு அனைவரும் அவரைப் பின்தொடர்ந்தனர்.

திருவெண்ணெய் நல்லூர் சென்று சேர்ந்தனர். பெரியோர்கள் அனைவரும் ஒன்று கூடி, ஐந்து பேர் கொண்ட நீதிமான்களை உட்கார வைத்து, அவர்களுக்கு எதிரே குற்றம்சாட்டிய பெரியவரும், குற்றத்திற்காளான சுந்தரரும் நிற்க, பொதுமக்கள் முன்னிலையில் வழக்காடு மன்றம் தொடங்கியது.

அப்போது, ""சுந்தரர் உமக்கு அடிமை என்பதற்கான ஆதாரத்தைக் காட்டுங்கள்'' என்று நீதிமான்கள் கேட்க, பெரியவர் தமது உள்அங்கியில் இருந்து ஒரு மாற்று ஓலையை எடுத்து நீட்டி, சுந்தரரைக் காட்டி, ""இவரது பாட்டனார் ஆரூரான் எமக்கு எழுதிக்கொடுத்த அடிமை சாசனம். அதன்படி இவரது முப்பாட்டன், பாட்டன், இவரது அப்பா, இவர் உட்பட அனைவரும் எமக்கு அடிமை. இதோ ஓலை'' என்று கொடுத்தார்.

ஓலையை நீதிமான்கள் படித்துப் பார்த்து, சுந்தரரின் பாட்டனாரின் கையெழுத்தையும் ஆய்வு செய்து, ""இதில் உள்ளது அனைத்தும் உண்மை. எனவே, சுந்தரர் இந்த பெரியவருக்கு அடிமையானவர்தான்'' என்று தீர்ப்பு அளித்தனர்.

perumal2.jpg



அதன்பிறகு அடிமைப்பட்ட இளைஞனை அழைத்துக்கொண்டு பெரியவர் மேற்கு நோக்கி நடந்தார். அப்படி நீண்ட தூரம் இருவரும் போகும்போது சுந்தரர், நம் திருமணத்தை தடுத்து நிறுத்தியதோடு, நம்மை அடிமை என்று ஒரு ஓலையைக் காட்டி அழைத்துச் செல்கிறாரே என்ற கோபத்தில், ""அய்யா பெரியவரே! உமக்கு வீடு, வாசல் இல்லையா? பித்தனைப்போல அழைத்துக்கொண்டு போகிறாயே! எங்கே போவதாக உத்தேசம்?'' என்று கேட்டார். எதுவும் பேசாத முதியவர் திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீஸ்வரர் கோவிலுக்கு முன்பாகப் போய் நின்று, ""சுந்தரா, இதுதான் என் வீடு'' என்று சொல்லியபடியே கோவிலுக்குள் நுழைந்தார். அவர் பின்னே சுந்தரரும் நுழைந்தார். முன்னே சென்ற பெரியவரை திடீரென காணவில்லை. சுற்றும் முற்றும் தேடிப் பார்த்தார். ""பெரியவரே, எங்கே இருக்கிறீர்கள்'' என்று கூப்பிட்டும் பார்த்தார். அப்போது கோவிலின் மேல்விதானத்தில் இருந்து ஒரு குரல் கேட்டது.


""சுந்தரா, இன்னுமா என்னைத் தெரியவில்லை? கயிலாயத்தில் உமக்கு அளித்த சாபத்தின்படி நீ இங்கு வந்து பிறந்தாய். உமக்கு தண்டனை காலம் முடிந்து எம்மிடம் சேரும் காலம் வந்துவிட்டது. அதனால்தான் உம்மை தடுத்தாட் கொண்டோம். எனவே, இனிமேல் இப்புவியில் எம்மைப் பாடி பெயரும் புகழும் அடைவாயாக'' என ஒலித்தது.

இதைக் கேட்டு மெய்சிலிர்த்த சுந்தரர், அப்போதுதான் வயோதிகர் உருவத்தில் வந்து தடுத்தாட் கொண்டு அழைத்து வந்தது இறைவன் சிவபெருமானே என்பதை உணர்ந்ததோடு, அவ்வாலயத்தின் முன்பு நின்றபடியே, ""பித்தா பிறைசூடி பெருமானே'' என பாட ஆரம்பித்துவிட்டார். சுந்தரர் முதன்முதலில் பாடிய தேவாரப் பாடல் இதுவே.

இத்தகைய சுந்தரரால் பூஜிக்கப்பட்ட இறைவன்தான் சுயம்புவாய் முகிழ்த்த திருநாவலூர் இறைவன்.

மேலும் மகாவிஷ்ணு இங்கு வந்து இறைவனை வழிபட்ட பிறகே இரண்யனை வதம் செய்தாராம். அதனால் மகாவிஷ்ணுக்கு இவ்வாலயத்தில் வரதராஜப் பெருமாள் என்ற பெயரில் தனிச்சந்நிதி உள்ளது. சிவாலயத்தினுள் விஷ்ணு ஆலயம் இருப்பது ஒரு சிறப்பு. தமக்கு ஏற்பட்ட வக்ர தோஷம் நீங்குவதற்காக சுக்கிரன் இங்கே வந்து இறைவனை வழிபட்டு தோஷம் நீங்கப் பெற்றார். அதனால் இது பரிகார தலமும்கூட.

மேலும் இங்கு வந்து இறைவனை வழிபடுவோருக்கு திருமணத் தடை, தார தோஷம் நீங்கும்; வேலை வாய்ப்பு கிடைக்கும்; கடன் நிவர்த்தியாகும்; குழந்தை பாக்கியம் உண்டாகும். வெள்ளிக்கிழமைகளில் வெண்தாமரை, வெண்பட்டு, வெள்ளை மொச்சை ஆகியவற்றைக் கொண்டு பூஜை செய்தால் தடைகள் அனைத்தும் நீங்கும்.

""பூர நட்சத்திரத்தில் சுந்தரருக்கு தட்சிணாமூர்த்தி ஞான உபதேசத்தைப் போதித்த இடமும் இதுதான். கருடாழ்வார் தனக்கு ஏற்பட்ட நாகதோஷத்தை நீக்க வேண்டி இவ்வாலயம் வந்தார். அப்போது குளித்து முடித்து இறைவனை வழிபடலாம் என்று எண்ணும்போது இங்கு குளிப்பதற்கு குளம் இல்லை. உடனே கருடாழ்வார் மேற்குப் பகுதியில் உள்ள கல்வராயன் மலையில் இருந்து கிழக்கு நோக்கி தமது மூக்கினால் தோண்டி ஒரு நதியை உருவாக்கினார். அந்த நதியில் குளித்து நாக தோஷம் நீங்கப் பெற்றார். அந்த நதிக்குப் பெயர் கருடநதி. அது மருவி இப்போது கெடிலம் நதி என்று அழைக்கப்படுகிறது. இந்த நதியின் வடகரையில்தான் இவ்வாலயம் அமைந்துள்ளது'' என்கிறார் இவ்வாலய அர்ச்சகர் செந்தில்குமார்.

இவ்வளவு சிறப்பு பெற்ற பரிகாரத் தலமாக விளங்கும் திருநாவலூர் ஆலயம் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், உளுந்தூர்பேட்டைக்கும் விழுப்புரத்திற்கும் இடையில், கெடிலம் பஸ் நிறுத்தத்திற்கு கிழக்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.


?????? ???????? ????????...
 
Status
Not open for further replies.
Back
Top