• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

தமிழ்நாட்டின் கிளியோபாட்ரா

Status
Not open for further replies.
தமிழ்நாட்டின் கிளியோபாட்ரா

Cleopatra-on+European+coin.jpg


எகிப்திய அரசி கிளியோபாட்ராவைப் பற்றி பல சுவையான கதைகள் சொல்லப்படுகின்றன. இதே போல திருச்சியிலிருந்து மதுரையை அரசாண்ட ராணி மங்கம்மாளைப் பற்றியும் பல கதைகள் உண்டு. இருவரிடையேயும் முழுக்க முழுக்க ஒற்றுமை காணப்படாவிடினும் சில விஷயங்களில் ஒற்றுமை நிலவுகிறது. இதோ சுவையான செய்திகள்:


முதலில் கிளியோபாட்ரா (கி.மு 69-30):

கி.மு 69-ல் ராஜ வம்சத்தில் பிறந்தார். அலெக்சாண்டருக்குப் பின்னர் எகிப்தை ஆண்ட டாலமி அரச வம்சத்தில் உதித்தார். இங்கே ஒரு புதிர். இவர் கிரேக்க வம்சம் இல்லை, ஆப்பிரிக்க கறுப்பினப் பெண் என்று. இதுவரை முடிவு தெரியாத சர்ச்சை. அவருடைய அம்மா யார் என்பதும் உறுதியாகத் தெரியாது. இவரது தந்தையான 12ஆவது டாலமி இறந்தவுடன் இவர் 13ஆவது டாலமியை மணந்தார். அதாவது சகோதரனை கல்யாணம் செய்துகொண்டார். இது எகிப்து நாட்டில் இருந்த வழக்கம்-சகோதர திருமணம்! அதிகாரம் இருக்கும் இடத்தில் மோதல் இருக்கத்தான் செய்யும். சகோதர்ருடன் மோதல்.


கிளியோபாட்ர சிரியா நாட்டுக்குத் தப்பிச்சென்று பெரும்படையுடன் திரும்பிவந்தார். அப்போது ரோமாபுரியை ஆண்ட ஜூலியஸ் சீசர் பாம்பி மன்னனைத் துரத்திக்கொண்டுவந்தார். அவன் எகிப்தில் தஞ்சம் புகுந்தான். காத்திருந்த அழகி (?) கிளி (யோபாட்ரா), ஒரு கம்பளத்தில் தன்னைச் சுற்றிக்கொண்டு ஜூலியஸ் சிசரிடம் பரிசாகக் கொடுக்கச் சொன்னார். கம்பளத்தை விரித்தபோது வெளியே வந்த கிளியின் அழகில் ஜூலியஸ் மயங்கினார். இருவருக்கும் காதல்,கல்யாணம், முடிவில் ஒரு மகன். மீண்டும் சர்சை. பிற்காலத்தில் இந்த மகன் தனக்குப் பிறந்தவன் இல்லை என்று ஜூலியஸ் சொல்லிவிட்டார்.


ஜூலியஸ் சீசர் போரில் கொல்லப்பட்டவுடன் கிளி எகிப்துக்குப் பறந்தது. ஜூலியஸுக்குப் பின்னர் வந்த ஆண்டனி இவளை அழைக்கவே காதல், கல்யாணம், மூன்று மகன்கள்! நல்ல சந்தர்ப்பம் வாய்க்கவே எகிப்து நாட்டின் ஆட்சி அதிகாரத்தைத் திருப்பிப் பெற்றுக்கொண்டு அலெக்சாண்ட்ரியா நகருக்கு வந்தார். தங்க சிம்மாசனத்தில் அமர்ந்த தம்பதிகளுடன் மூன்று பிள்ளைகளும் அமர்ந்த காட்சியைக் காண நாடே திரண்டுவந்தது. இது நடந்தது கி.மு 34 ஆம் ஆண்டு.


கி.மு.31-ல் பெரும் போர் ரோமாபுரியில் மூண்டது. கிளியோ கொல்லப்பட்டதாக வதந்தியைப் பரப்பினர். இதைக் கேட்ட ஆண்டனி தற்கொலை செய்துகொண்டார். அதைக் கேட்ட கிளியோபாட்ரா ஒரு நல்ல பாம்பை நெஞ்சில் வைத்து கடிக்கவைத்து தற்கொலை செய்துகொண்டார். ஆங்கில மாகவி ஷேக்ஸ்பியர் எழுதிய ஆண்டனி கிளியோபாட்ரா நாடகம் உள்பட ஏராளமான திரைப்படங்களும் கிளியின் நினைவைப் போற்றி வளர்க்கின்றன. அவர் பாம்பு கடித்து இறந்தாரா, அழகைப் பராமரிக்க தினமும் கழுதைப் பாலில் குளித்தாரா—எல்லாமே சர்ச்சைக்குரிய புதிர்கள்!!!

novel+on+mangammal.jpg


இனி மங்கம்மாள் (1689-1704) பற்றிய சுவை மிகு செய்திகள்:

கிளி (யோபாட்ரா) யைப் போலவே இவரும் அழகானவர். கிளி போலவே பல போர் புரிந்தவர். கிளி போலவே அழகால், சாதுர்யத்தால் ஆட்சி உரிமை பெற்றவர். மிகவும் திறமையான ஆட்சியாளர். மதுரை நகர் முழுதும் இன்றும் இவர் புகழ் பாடும். மர்மமான முறையில் (சிறையில்?) இறந்தார். ஆனால் இந்தச் செய்திகளில் சில, கிளி வரலாறு போலவே உறுதிப்படுத்தப் படாத செய்திகள். அவர் காலத்தில் வாழ்ந்த சின்ன வெங்கண்ணா, மங்கம்மாளைக் கிண்டல் செய்து எஉதிய கவிகளில் இருந்து பெறப்பட்ட கிளுகிளு செய்திகள் இவை.


அவர் சொல்லும் ரகசியம்: மங்கம்மாளின் இயற் பெயர் கனகா. அவர் தந்தை சந்திரகிரி துபாகுல நாயகர். அவர் ஒரு நடன மாது. வேலை தேடி தஞ்சை விஜயராகவரின் அரவைக்குச் சென்றார். அவர் அந்தப்புரத்தில் சேர்க்க தயாராக இருந்த தருணத்தில் எப்படியோ மதுரை சொக்கநாத நாயகரை(1659-1682) மணந்தார். மங்கம்மாளின் மகன் முத்துவீரப்ப நாயகர் (1682-1689) சிறிது காலம் ஆண்டு இறந்துவிட்டார். உடனே பேரன் விஜரங்க சொக்கநாத நாயக்கரின் பேரில் 1689-ல் ஆட்சியை ஏற்றுக்கொண்டார்.

Rani+Mangammal.JPG


மொகலாயப் பேரரசன் அவுரங்கசீப் தனது ஒரு செருப்பை நாடு முழுதும் ஊர்வலம் விட்டான். அஸ்வமேத யாக குதிரை போகும் இடம் எல்லாம் எப்படி பாரதீய சக்கரவர்த்திகளுக்குச் சொந்தமானதோ அதே போல செருப்பு போனமிடம் எல்லாம் கப்பம் கட்டவேண்டும். ராணி மங்கம்மாள் மிகவும் தைரிய சாலி. அவனது படைத் தளபதி அந்த ஒற்றை செருப்பை காலில் மாட்டிக்கொண்டு மற்றொரு செருப்பு எங்கே என்று கேட்டான். ஆனால் பின்னர் ராமநாதபுரத்தின் கிழவன் சேதுபதி, மைசூரின் சிக்க தேவராயா தஞ்சை மன்னன் ஷாஜி, திருவாங்கூர் மன்னன் ரவிவர்மா ஆகியோர் தொல்லை கொடுக்கவே அவுரங்கசீப்புடன் சமரசம் செய்துகொண்டு கப்பம் கட்டினார்.


மதுரை முழுதும் அன்ன சத்திரங்களைக் கட்டினார். கோவில்களுக்கும் பிராமணர்களுக்கும் வாரி வழங்கினார். மதுரை சவுராஷ்டிர சமூகத்துக்குப் பிராமண அந்தஸ்து வழங்கினார். காவிரிப் பிரச்சினை இவர் காலத்தில்தான் துவங்கியது. சிக்கதேவராயன் காவிரி நதியின் குறுக்கே கண்ணம்பாடியில் அணை கட்டி தஞ்சைப் பாசனத்தைத் தடுக்கவே போர்க் குரல் எழுப்பினார். கடவுள் அருளால் பெரு மழை, வெள்ளத்தில் அணை உடைந்தது. காவிரிப் பிரச்சினையும் தீர்ந்தது. இவர் கடைசி காலத்தில் சிறையில் இறந்ததாக ஒரு செய்தி. எது எப்படியாகிலும் இவரது சத்திரங்களும், கோவில், மசூதி, கிறிஸ்தவ சர்ச்சுகளுக்குக் கொடுத்த தானங்களும், மதுரை தமுக்கம் அரணமனையும் (இப்போது காந்தி மியூசியம்), மீனாக்ஷி கோவில், திருப்பரங்குன்றம் கோவில்களும் இருக்கும் வரை மங்கம்மாளின் புகழ் மங்கவே மங்காது.
அழகால் ஆட்சி பெற்றதும், போர் முனைகளில் எதிரிகளைச் சந்தித்ததும், மர்மமான முறையில் இறந்ததும் இவரை கிளியோபாட்ராவுக்கு அருகில் அழைத்துச் செல்கிறது.
ஆர்.சத்தியநாத அய்யர் எழுதிய நாயக்கர் வரலாறு, டாக்டர் தேவகுஞ்சரி எழுதிய மதுரை வரலாறு, நா.பார்த்தசாரதி எழுதிய ‘ராணி மங்கம்மாள்’ என்னும் சரித்திர நாவல் ஆகியவற்றையும் படித்து இன்புறுக.


Pictures are taken from different sites. Thanks. Contact: [email protected]

(இலக்கியத் திருடர்களுக்கு ஒரு வேண்டுகோள்: என்னுடைய கட்டுரைகளை அப்படியே திருடி தங்கள் பெயரில் தாங்கள் எழுதியது போல வெளியிடுவதைக் கண்டு மனம் வருந்துகிறது. தமிழுக்கும் தமிழ் எழுத்தாளர்களுக்கும் துரோகம் செய்யாதபடி யார் எழுதியது, எந்த வெப்சைட்டில் எடுக்கப்பட்டது என்பதை தயவு செய்து வெளியிடுங்கள்)
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top