• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

ஜனகனுக்கு ஒரு நீதி! நீரோ மன்னனுக்கு வேறொ&#2992

Status
Not open for further replies.
ஜனகனுக்கு ஒரு நீதி! நீரோ மன்னனுக்கு வேறொ&#2992

janaka.jpg


ஜனகனுக்கு ஒரு நீதி! நீரோ மன்னனுக்கு வேறொரு நீதி?


ரோம் நகரமும் மிதிலை நகரமும் எரிந்தன!! வயலின் ஒலியும் வேத ஒலியும் கேட்டன!! நீரோவைத் திட்டினார்கள், ஜனக மஹாராஜாவைப் பாராட்டினார்கள்! இது என்ன நியாயம்?
இரட்டை நகரங்களின் கதையும் புரியாத புதிராக இருக்கிறதல்லவா? இதன் பின்னால் சுவையான பல விஷயங்கள் இருக்கின்றன. சுருக்கமாகத் தருகிறேன்.


மிதிலை எரிந்திட வேதப் பொருளை
வினவும் சனகன் மதி—தன்
மதியினிற் கொண்டதை நின்று முடிப்பது
வல்ல நம் அன்னை மதி (சுப்ரமண்ய பாரதி)


‘’ஜனகன் முதலானோர் கர்மத்தாலேயே உயர்ந்த சித்தியை அடைந்தனர் அன்றோ! மேலும் உலகை நல்வழிப் படுத்தவும் கர்மத்தைச் செய்வதற்கே நீ உரியவன் ஆகிறாய்’’. (பகவத் கீதை ,அத்தியாயம் 3, ஸ்லோகம் 20).
கண்ணனும் பாரதியும் ஏன் இப்படி ஜனகனைப் புகழ்ந்தார்கள்?


நீரோ மன்னனின் கதை

ரோம் நகரை தலை நகராகக் கொண்டு நீரோ ஆட்சி செய்த நாளில், கி.பி.64ல், பெரிய தீ விபத்து நடந்தது. இந்தத் தீ ஆறு நாட்களுக்கு எரிந்ததாகவும் நீரோ மன்னன் வெளியூரில் இருந்து ரோம் நகருக்கு ஓடி வந்து தீ அணைப்பு வேலைகளைச் செய்ததாகவும் மக்களின் குறைகளைத் தீர்த்ததாகவும் டேசிட்டஸ் என்பவர் எழுதி வைத்துச் சென்றுள்ளார். மன்னர் யாழ் போன்ற ஒரு வாத்தியத்தை வாசித்துக் கொண்டிருந்ததாகச் சொல்வது தவறு, அது ஒரு வதந்தி என்றும் அவர் எழுதியுள்ளார். ஆனால் காசியஸ் டியோ என்பவர் அவர் பாட்டு பாடிக்கொண்டிருந்ததாக எழுதி இருக்கிறார்.

Nero.jpg


உண்மையில் அந்தக் காலத்தில் வயலின் (பிடில்) கண்டுபிடிக்கப்படவே இல்லை! ஆனால் யாழ் போன்ற ‘லைர்’ என்னும் வாத்தியம் இருந்தது. கிறிஸ்தவர்களுக்கு எதிராக அவர் நிறைய சட்ட திட்டங்களைக் கொண்டுவந்ததால் அவரை கொடுங்கோலனான சித்தரித்துவிட்டர்கள் என்பது ஒரு சாராரின் விளக்கம். எது எப்படியாகிலும் இன்று ஆங்கில மொழியில் ஒரு சொல்லடைவு இருக்கிறது. ஒருவர் நெருக்கடியான காலத்தில் பொறுப்பற்ற செயல்களைச் செய்தால் ‘’ரோம் பற்றி எரியும்போது நீரோ பிடில் வாசித்தத்து போல’’ என்று சொல்லுவர் (While Rome burned, Nero fiddled= heedless and irresponsible behaviour in the midst of a crisis).


ஜனகர் என்ன செய்தார்?

மிதிலாபுரியை தலைநகராக கொண்டு ஜனகர் என்னும் மன்னன் ஆண்டான். சீதா தேவியின் தந்தை பெயரும் ஜனகர் தான். ஆனால் பல ஜனக மன்னர்கள் இருந்தது ஆராய்ச்சியில் தெளிவாகத் தெரிகிறது. வேதகால ஜனகர் மாபெரும் தத்துவ ஞானி. ஜீவன் முக்தர். தாமரை இலைத் தண்ணீர் போல, பட்டும் படாமல், ஒட்டி உறவாடாமல் வாழ்க்கை நடத்திய அறிஞன். அவருடைய குரு யாக்ஞவக்யர் என்ற மஹரிஷி. ஜனகர் பால் பேரன்பு பூண்டவர்.
குருவின் அன்பில் சிலருக்கு சந்தேகம். ஜனகன் ஒரு மன்னன் என்பதால் அவருக்கு குரு அதிக சலுகை காட்டுவதாக அவர்களுக்கு ஒரு நினைப்பு. இதைப் பொய் என்று காட்ட ஒரு சம்பவம் நடந்தது. ஒரு நாள் பாடம் நடந்து கொண்டிருந்தபோது ஒரு சேவகன் ஓடோடி வந்து மிதிலை நகரம் தீப்பிடித்து எரிவதாகப் பதறினான். எல்லா சிஷ்யர்களும் மூட்டை முடிச்சை எடுத்துக்கொண்டு ஓடினார்கள். ஜனகர் அசையவில்லை. என்னுடைய உடைமை எதுவும் அங்கு இல்லை, இங்கும் இல்லை என்றார். அவர் ஆத்ம ஞானி என்பதால் பற்றறவராக இருந்தார்.
ரோம் விபத்திலும் சரி, மிதிலை விபத்திலும் சரி, உயிர்ச்சேதம் எதுவும் இல்லை. ஆனால் பொருட்சேதம் இருந்திருக்கும். அந்நாட்டு அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுத்திருப்பர் என்பது கண்கூடு.


ஞானியானவர்கள் துக்கம் இன்பம் என்பவைகளைக் கடந்தவர்கள் ஆயினும் உலக நன்மைக்காக எப்போதும் செயல்பட்டுக் கொண்டிருப்பார்கள். அவரை முன் உதாரணமாகக் காட்டி செயலில் ஈடுபடு என்று அர்ஜுனனுக்கு அறிவுரை கூறுகிறான் கண்ணன்.
ஜனகரின் வாழ்வை முழுதும் அறியாமல் நாம் தீ விபத்து சம்பவத்தை மட்டும் வைத்துக்கொண்டு அவரை எடை போட்டுவிடக் கூடாது. அவர் வாழ்வில் மேலும் பல சுவையான சம்பவங்கள் உண்டு.

yajnavalkya.jpg


மேலும் 2 குட்டிக் கதைகள்
ஒருமுறை ஒரு பிராமணர் குற்றம் இழைத்ததற்காக அவரை நாட்டை விட்டு வெளியேறுமாறு ஜனகர் உத்தரவிட்டார். அந்தப் பிராமணர், மன்னா, முதலில் உன் ஆட்சி எல்லையைக் கூறு. பின்னர் நான் போகிறேன் என்றார். ஜனகனுக்கு மிகவும் பெரிய அதிர்ச்சி, வருத்தமும் கூட. சிந்திக்கத் துவங்கினார். கால் மணி நேரத்துக்குப் பின்னர் அறிஞரே! எமது உடைமை ராஜ்யம் என்று எதுவும் இல்லை. எல்லாம் பரம்பரைச் சொத்து. இந்த ஆத்ம ஞானம் என் மனதில் இப்போது உதித்துவிட்டது. நீர் இந்த நாட்டில் தொடர்ந்து இருக்கலாம் என்றார்.
ஆதிசங்கரரைப் பார்த்து நான்கு நாய்களுடன் வந்த புலையன் கேட்ட கேள்வி, அவருக்கு ஆன்ம ஞானம் கொடுத்த சம்பவத்தை இதனுடன் ஒப்பிடலாம்.


இதே போல ஒரு சந்யாசி ஜனகரை கபட வேடதாரி என்று குறைகூறினார். அவருக்குப் பாடம் புகட்ட விரும்பிய ஜனகர், அந்த சந்யாசிக்கு ஏழு நாட்களுக்குப் பின் தூக்கு தண்டனை என்று உத்தரவு போட்டார். மேலும் உப்பு சர்க்கரை இல்லாமல் எல்லா உணவுகளையும் படைக்கவும் உத்தரவிட்டார். ஏழு நாட்கள் சென்றன. சந்யாசியை அழைத்துவரச் சொன்னார். உப்பு சர்க்கரை முதலியவற்றுடன் சுவையான உணவு வகைகள் அவருக்குக் கொடுக்கப்பட்டன.


இப்போது எப்படி இருக்கிறது உணவின் ருசி? என்று ஜனகர் கேட்டார். நீங்கள் தூக்கு தண்டனை என்று சொன்னவுடன் நான் சாப்பிட்ட உணவின் ருசி அப்போதும் தெரியவில்லை, இப்போதும் தெரியவில்லை, என் சிந்தனை எல்லாம் தூக்கு தண்டணப் பற்றிய பயம் ஒன்றுதான் என்றார்.
ஜனகர் சொன்னார்: ஒரு ஆத்ம ஞானியின் நிலையும் இதுதான். அவர்கள் செயல்களைச் செய்தபோதும் அதில் பற்று அவர்களுக்கு இல்லை. உனக்கு எப்படி உணவு ருசி இல்லையோ அப்படியே அவர்களுக்கும் லோக ருசி கிடையாது. அவர்களின் சிந்தனை முழுதும் இறை அருள் ஒன்றே.


ஜனகரின் இந்த உபதேசம் சந்யாசியின் கண்களைத் திறந்தன. மஹாத்மா காந்தி வாழ்வில் நடந்த ஒரு சம்பவமும் இதைப் போன்றதே. ஐயா, காந்தியாரே! ஊருக்கு எல்லாம் உபதேசம் செய்கிறீரே, இரண்டு இளம் பெண்களின் தோளில் கையைப் போட்டவாறே தினமும் பிரார்த்தனைக் கூட்டத்துக்கு வருகிறீரே? இது என்ன நியாயம்? என்று ஒருவர் ரோட்டில் இடை மறித்துக் கேட்டார்.


காந்தி சொன்னார், ’’அன்பரே, உமது கேள்வி மிகவும் நியாயமானதே, நான் என்ன பதில் சொன்னாலும் உங்களுக்குத் திருப்தி தராது. என்னுடன் ஆஸ்ரமத்துக்கு வாருங்கள். என்னுடன் சில காலம் தங்கி இருங்கள். அப்போது நீங்களே உண்மையை உணர்வீர்கள் என்று. ஆகவே ஜீவன் முக்தர்களின், ஆன்ம ஞானிகளின் வெளித் தோற்றத்தையோ, செயல்பாட்டையோ, செயலின்மையையோ வைத்து அவர்களை எடைபோடக் கூடாது.

*********
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top