• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

சோளிங்கர் கோவிலில் உள்ள நரசிம்மர்

கார்த்திகை மாதம் கண் திறப்பதாக ஐதீகம் உள்ளது. அதற்கான காரணத்தை கீழே பார்க்கலாம்.

மகிமை வாய்ந்த நரசிம்மர் பல்வேறு வடிவங்களில் பல்வேறு தலங்களில் கோயில் கொண்டு அருள்கிறார். அவற்றில் ஒன்று, சோளிங்கர்.

ஒரு நாழிகை நேரம் இத்தலத்தில் தங்கியிருந்தாலே வீடுபேறு வழங்கும் புண்ணிய தலம் இது. அதனால்தான் கடிகாசலம் என்று பெயர் பெற்றது. இத்திருத்தலத்திற்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகிறார்கள். தக்கான்குளம் என்ற புண்ணிய தீர்த்தத்தில் நீராடி, யோக நரசிம்மரையும் யோக அனுமனையும் வழிபட்டு நோய் நொடி நீங்கி நலம் பெறுகிறார்கள். இந்த கடிகாசல மலையை தரிசித்தாலேயே பேய், பிசாசு, பில்லி சூன்யம் போன்றவை அண்டாது.

ஒரு ஆண்டில் பதினோரு மாதங்கள் இத்தலத்தில் யோக நிலையிலேயே, கண்மூடி அமர்ந்திருக்கும் இந்த சிங்கபிரான், கார்த்திகை மாதம் மட்டும் கண் திறப்பதாக ஐதீகம். ஆகவே இத்தலத்தில் கார்த்திகை மாதம் முழுக்க திருவிழா கொண்டாடப்படுகிறது. இவருடன் அமிர்தபலவல்லித்தாயார், அருகிலுள்ள சிறிய மலையில் சங்கு, சக்கரபாணியாக யோக நிலையில் அனுமன் ஆகியோரும் அருள்பாலிக்கின்றனர்.

கார்த்திகை மாதம் வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்று கிழமைகளில் இந்த கோவிலில் சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெறும். அதிலும் கார்த்திகை ஞாயிற்று கிழமைகளில் நரசிம்மரை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். எனவே இந்த நாட்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். கார்த்திகை ஞாயிற்றுகிழமைகளில் கோவில் நடை அதிகாலை 4 மணிக்கே திறக்கப்பட்டு அபிஷேகமும், பூஜைகளும் நடக்கும். அதன் பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.

பேயாழ்வார், திருமங்கையாழ்வார், நாதமுனிகள், திருக்கச்சி நம்பிகள், ராமானுஜர், மணவாளமாமுனிகள் ஆகியோர் இந்த நரஹரியை மங்களாசாஸனம் செய்து மகிழ்ந்துள்ளனர். திருமங்கையாழ்வார் ‘அக்காரக்கனி’ என இந்த நரசிம்ம மூர்த்தியைப் போற்றிப் பாடியுள்ளார். சுவை மிகுந்த கனி போன்றவராம் இந்த நரசிம்மர். அதோடு மட்டுமல்லாமல் அக்காரக்கனி எனும் மூலிகையினால் ஆனவரும் கூட. இந்த புண்ணிய மலை மீது ஏறி வழிபட முடியாதவர்கள் ஒரு நாழிகை நேரம் திருக்கடிகையை மனதால் சிந்தித்தாலே போதும், மோட்சம் சித்திக்கும் என்று அருளியுள்ளார் பிள்ளைப்பெருமாள் ஐயங்கார். திருமாலின் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக இத்தலம் திகழ்கிறது. காசி, கங்கை, கயா போன்ற புண்ணிய தலங்களுக்குச் சமமாக இத்தலம் போற்றப்படுகிறது.

வேலூர் மாவட்டம் வாலாஜாப்பேட்டை-யிலிருந்து 24kms உள்ள இவ்வூர் சோளிங்கர் என அழைக்கப்பட்டாலும் இதன் அருகில் 3 கி.மீ. தெற்கில் கொண்டபாளையம் எனும் சிறு கிராமத்தில்தான் பெரிய மலையும் சிறிய மலையும் உள்ளன. பெரிய மலைக்கோயிலை 1305 படிகள் ஏறித்தான் செல்ல வேண்டும். இந்த மலைக்கு நேர் எதிரில் யோக ஆஞ்சநேயர் அருளும் சிறிய மலை உள்ளது. அனுமன் கோயிலை அடைய 406 படிகள் ஏறவேண்டும்.

பெரிய மலை அடிவாரத்திலிருந்து ஆலய நுழைவாயில் ராஜகோபுரம் வரை இளைப்பாற்றிக் கொள்ள 7 மண்டபங்கள் உள்ளன. மலையின் நுழைவாயில் 5 நிலைகளும் 7 கலசங்களும் கொண்ட ராஜ கோபுரத்துடனும் நான்குகால் மண்டபத்துடனும் திகழ்கிறது. ஆலயத்துள் நுழைந்ததும் கிழக்கு நோக்கி அமர்ந்த அமிர்தபலவல்லித் தாயாரின் தரிசனம் கிட்டுகிறது. இந்த தாயாருக்கு சுதாவல்லி என்ற பெயரும் உண்டு. மேல் இரு கரங்கள் தாமரை மலர்களை ஏந்தியிருக்க, கீழிரு அபய வரத கரங்கள் காண்போரின் பயம் நீக்கி ஆறுதல் அளிக்கின்றன. இத்தலத்தில் நம் கோரிக்கையை தாயாரிடம் கூறினால் தாயார் அதை நரசிம்மமூர்த்தியிடம் பரிந்துரைப்பாராம். நரசிம்மர், அனுமனிடம் அதை நிறைவேற்றும்படி ஆணையிடுவாராம்.

நரசிம்ம மூர்த்தியின் கருவறை விமானம் ஹேமகோடி விமானம். யோக நரசிம்மர் சிம்ம முகம் கொண்டு, கிழக்கு நோக்கி, யோகாசனத்தில் அமர்ந்துள்ளார். நூற்றுக்கணக்கான சாளக்ராமங்களால் ஆன மாலையை அணிந்துள்ளார். யோக பீடத்தில் திருமாலின் தசாவதார காட்சியை தரிசிக்கிறோம். இந்த மூலவருடன், ஆழ்வார்களால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட மறையாய் விரிந்த விளக்கு, மிக்கான், புக்கான் எனப்படும் உற்சவ மூர்த்திகளும் ஆதிசேஷன், சக்கரத்தாழ்வார், கண்ணன், கருடாழ்வார் போன்ற மூர்த்திகளும், பெருமாளின் எதிர்ப்புறத்தில் சேனை முதலியார், நம்மாழ்வார், ராமானுஜர், சப்தரிஷிகள், கருடன் போன்றோரும் தரிசனம் தருகின்றனர்.

வெள்ளிக்கிழமை தோறும் பெருமாளுக்கும், தாயாருக்கும் திருமஞ்சனம் நடைபெறுகிறது. பால், தயிர், தேன், சர்க்கரை, நெய் ஆகியன சேர்த்து பஞ்சாமிர்தமாக்கி அபிஷேகம் செய்து, பிறகு அதுவே பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. கருடனுக்கு எதிரில் உள்ள சாளரத்திலிருந்து பார்த்தால் அனுமன் அருளும் சின்னமலையை தரிசனம் செய்யலாம். சிறிய மலையில் வீற்றிருக்கும் யோக ஆஞ்சநேயரின் திருக்கண்கள் நேராக பெரிய மலையில் அருளும் நரசிம்மப் பெருமாளின் திருவடிகளை நோக்கியபடி உள்ளனவாம்.

நரசிம்மரையும் தாயாரையும் வணங்கிய பிறகு, கீழிறங்கி சின்ன மலையில் அருளும் அனுமனை தரிசிக்கலாம். படிகள் ஏறி, உச்சியிலுள்ள அனுமன் சந்நதியை அடைகிறோம். வாயுகுமாரன் சாந்த வடிவினனாய், யோக நிலையில் நரசிம்மரை நினைத்து தவம் புரியும் திருக்கோலத்தின் அழகு நம் கண்களையும் கருத்தையும் கவர்கிறது. நான்கு திருக்கரங்களுடன், சங்கு, சக்கரம் ஏந்தியிருக்கிறார். ஒரு கரத்தால் ஜபமாலையைப் பற்றியபடி, ஜபம் செய்யும் பாவனையில் தரிசனமளிக்கிறார். அருகிலேயே உற்சவ அனுமன் நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். ஞாயிறு தோறும் சிறப்பு அபிஷேகம் கண்டருள்கிறார் இந்த மூர்த்தி. குறிப்பாக கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் விசேஷமாக வழிபடப்படுகிறார்.

அடுத்து ராமர் சந்நதி. இம்மலையில் சீதாபிராட்டியுடன் ராமர் நீராடிய குளம், ராம தீர்த்தம் என்று இன்றும் அழைக்கப்படுகிறது. அரக்கர்களை வதைத்த அனுமன் தன் சக்கரத்தை அதில் நீராட்டியதால் சக்கர தீர்த்தம் என்றும் அனுமத் தீர்த்தம் என்றும்கூட பெயர்கள் உண்டு. உடல் நலம் சரியில்லாதவர்கள், தீய சக்திகளால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தீர்த்தத்தில் நீராடி, அனுமனை நினைத்து வரம் கேட்பதைக் காண முடிகிறது. அதையடுத்து ராமபிரானின் குல ஆராதனை மூர்த்தமாகிய ரங்கநாதர் மூலவராகவும் உற்சவராகவும்
காட்சியளிக்கிறார்.

மலையிலிருந்து கீழிறங்கி ஊருக்குள் சென்றால், அங்கே பக்தோசிதசுவாமி என்ற உற்சவ நரசிம்மரை தரிசிக்கலாம். ஊரின் நடுவே நீள் சதுர வடிவில் எழிலாய் அமைந்துள்ளது ஆலயம். ராஜ கோபுரத்தைத் தாண்டி ரங்க மண்டபத்தைக் கடந்து உள்ளே சென்றால் பெருமாளின் சந்நதியை அடையலாம். இருபுறங்களிலும் ஜய, விஜயர்கள் காவல் காக்க உபய நாச்சிமார்களுடன் பெருமாள் அருள்கிறார். அனைத்து திருமால் ஆலயங்களிலும் காணப்படும் சடாரி இத்தலத்தில் ஆதிசேஷன் வடிவில் இருப்பது குறிப்பிட வேண்டிய சிறப்பு. வலப்புறத்தில் ஐம்பொன்னாலான கிருஷ்ண விக்ரகத்தையும் மற்றொருபுறம் சிறிய வடிவிலான வரதராஜப் பெருமாளையும் தரிசிக்கிறோம். தொட்டாச்சார்யார் எனும் பக்தர் வருடந்தோறும் காஞ்சி வரதராஜரின் கருட சேவையை தரிசிப்பது வழக்கம். வயது முதிர்ந்த நிலையில் அவரால் காஞ்சிக்குச் செல்ல முடியாதபோது பெருமாளே தக்கான்குளத்தில் அவருக்கு கருட சேவையை காட்டியருளியதாக ஐதீகம். அதை நினைவுறுத்தும் வண்ணம் இங்கு கொலுவிருக்கும் வரதராஜப் பெருமாளை அருளாளர் என்றும் பேரருளாளர் என்றும் அழைக்கின்றனர். கருவறையை வலம் வரும்போது ஆண்டாள் சந்நதியை தரிசிக்கலாம். எதிரில் ஆழ்வார்களும் ஆச்சார்யார்களும் அருள்கின்றனர்.

ஆண்டு முழுதும் பல்வேறு விதமான திருவிழாக்கள் இத்தலத்தில் நடைபெறுகின்றன.
 

Latest ads

Back
Top