சீதா ராமாயணம்

அவள்
அவதாரம் ஆவாள்,
அயோத்தி ராமனுக்கு
அவ தாரம் ஆவாள்..


ஜனகனின் புத்திரி
ஜானகி,
மிதிலையின் மகளாம்
மைதிலி..


வையம் தழைக்க வந்த
வைதேகி, அந்த
சிவதனுசு ஒடித்த
சீலனைக் கரம் கொண்டு
கவர்ந்த நாயகி.


கோசலை குமரன் நினைப்பிலே
கானகம் சென்ற உத்தமி.
மாயமான் விரித்த வலையிலே
மச்சினனை அர்ச்சித்த பைங்கிளி.


வஞ்சகம் புரிந்த ராவணன்
துறவியாய் வந்த வேளையில்
லக்குவன் இட்ட கோட்டினை
கடந்திட்டாள், லங்கையில்
அடைப்பட்டாள்.


வேதியர் வேடமிட்ட
வைதேகி மணாளன்
வானர சேனை சேர்த்தான்
லங்கைக்கு அழகிய பாலம்
அமைத்தான்.


வான் வழியில் வந்திட்ட
வானரத்தின் கரம்தனிலே
தந்திட்டாள் கணையாழி
தம் தலைவனுக்கு நினைவாக.


சாது வழியில் தூது விட்டும்
சரியவில்லை ராவணனும்.


தூதனாக சென்ற அனுமனும்
தம் வாலில் இட்ட தீயினால்
இலங்கையை கொளுத்திட்டான்
இராமனிடம் திரும்ப வந்தான்.


கண்டேன் சீதையைக் கேட்ட
ராமனும் கலக்கம் விடுபட்டான்
கணையாழி கண்டதும் கண்ணீர்
சொறிய நின்றான்.


பின்னர் போரிட நாளும்
குறித்து வைத்தான்.


வேதனையுற்ற விபீஷணனை
விரட்டாது அணைத்துக் கொண்டான்
வைதேகி ராமன்..


நாளும் வந்தது,
நீண்ட போரும் மூண்டது.


மேகநாதன் மடிந்திட்டான், கும்ப
கர்ணனும் காலமுற்றான்.
இன்று போய் நாளை வந்த
இராவனனும் இறுதியுற்றான்.


வெற்றி பெற்றான் தசரத மைந்தன்.


லக்குவனை லஜ்ஜித்த
லக்குமியை தண்டிக்க, அவளை
அக்கினியில் புகச் செய்தான்
ஆரண்யத்து அழுக்கையும்
அழிய செய்தான்.


அண்ணலின் அடிபற்றி
அயோத்தியும் திரும்பினாள்.
முடி சூடலும் நடந்தது, அவள்
மடி கனக்கவும் ஆனது..


குடிமகனின் கூற்றிலே
கோசலை மைந்தனும்
கட்டிய மனைவியை
கானகம் கடத்தினான்.


வனத்தினிலே வால்மீகி
வஞ்சிதனைக் காத்திட்டார்,
அங்கு அவள்
லவ - குசனை ஈந்திட்டாள்.


நந் நாளும் வந்தது, நாயகி
நாடு திரும்ப நேர்ந்தது.


ஐயகோ !!!


அந்த பத்தினி தெய்வத்தை
மீண்டும் பரீட்சித்தான்
பட்டாபி ராமன்.


வேதனையுற்ற வைதேகி
வேள்வியினில் நுழைந்தாள்
வான் வழியில் கறைந்தாள்..


சீதா ராம், ஜய ஜய ராம்..
சீதா ராம், ஜய ஜய ராம்..
 
Back
Top