சங்கத் தமிழ் விரிப்பு

Status
Not open for further replies.

saidevo

Active member
சங்கத் தமிழ் விரிப்பு

சங்கத் தமிழ் விரிப்பு

யாப்பருங்கலம், காரிகை இவற்றில் யாப்பிலக்கணச் சான்றுகளாக வரும் செய்யுட்கள் மற்ற பிற செய்யுட்களின் சங்கத் தமிழ் வரிகளை முழுவதும் புரிந்துகொள்ள உரைகளை நாடுகிறோம். சங்கப் பாடல் உரைகள் அநேகமாக ஒரு set forumula-வுக்குள் செய்யுள்-பதவுரை-பொழிப்புரை-விரிப்புரை-மேற்கோள் என்று சங்கத் தமிழ் மொழியிலேயே விளக்க முயல்கின்றன.

ஒரு மாறுதலாக, மனதைக் கவரும் செய்யுட்களின் அழகையும் பொருளையும் இன்றைய வழக்கில், அரும்பொருள் உரைத்துக் கூடியவரையில் பொருள் நீர்த்துப் போகாமல் அதேவகை மரபு வடிவில் கவிதையாக எழுத முயன்றால் என்ன என்று தோன்றிக் கொஞ்ச நாளாக முயல்வதன் விளைவே இந்தத் திரி/நூல். குழுமத்தின் அனுபவக் கவிஞர்கள்களும் இந்த முயற்சியில் தங்கள் கைவரிசையைக் காட்டினால் என் முயற்சியில் இருக்கும் கைவிரிசல்கள் சரிசெய்யப்பட்டுச் சங்கத் தமிழை எல்லோரும் எளிதில் புரிந்துகொள்ள முடியும்.

செய்யுள் 1. நீரின் தண்மையும்
முதலில் காரிகை தரும் அந்தப் புகழ்பெற்ற இணைக்குறள் ஆசிரியப்பா:

(இணைக்குறள் ஆசிரியப்பா)
நீரின் தண்மையும் தீயின் வெம்மையும்
சாரச் சார்ந்து
தீரத் தீரும்
சாரல் நாடன் கேண்மை,
சாரச் சாரச் சார்ந்து,
தீரத் தீரத் தீர்ப்பொல் லாதே.


(நிலைமண்டில ஆசிரியப்பா)
தலைவனின் பிரிவில் தலைவியின் சொற்களில்
அலையுறும் நெஞ்சின் ஆர்ப்பைக் காட்டும்
இந்தப் பாடலைக் கொஞ்சம் அலசுவோமே.

(இணைக்குறள் ஆசிரியப்பா)
தொட்டால் சில்லிடும் நீரின் தண்மை
விட்டால் தீர்ந்து மறையும்
அண்மையில் சூடேறும் தீயின் வெம்மை
சேய்மையில் குறைந்து மறையும்
மலைச்சாரல் நாடன் தலைவனின் நட்போ
தலைப்பட்டால் பொல்லாதது!
ஒன்ற ஒன்ற நன்றாய் வளர்ந்து
வந்தபின் பிரிந்தாலோ
தீர்வதே யில்லாமல்
தீயின் வெம்மையால்
நீரின் தண்மையாய்
நெஞ்சினில் சுட்டும் குளிர்ந்தும் நோகுமே!

தொடரும், தொடர்வார்களாக!

*****
 
செய்யுள் 2. வேரல் வேலி

(நிலைமண்டில ஆசிரியப்பா)
வேரல் வேலி வேர்க்கோட் பலவின்
சார னாட செவ்வியை யாகுமதி
யாரஃ தறிந்திசி னோரே சாரற்
சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கி யாங்கிவள்
உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே.
---கபிலர், குறுந்தொகை 18


(கலிவிருத்தம்)
தலைவனின் களவில் தலைவியின் காதல்
அலைபோ லெழுந்து உயிரை வதைக்கத்
தலைவனிடம் தோழி தலைவியை மணம்கொளத்
தலைப்படு மாறு தெளிவுரை கூறினாளே.

(நிலைமண்டில ஆசிரியப்பா)
வேரல் என்பது மலைவிளை மூங்கில்
சாரல் என்பது மலையினைக் குறிக்கும்
அறிந்திசி னோரே: யாரறி வாரே.

வேரல் மரமே வேர்ப்பலா வேலியாகும்
சாரல் நாட! செவ்விய மதியுடன்
வரைக தலைவியை மணத்தில்! ஏனெனில்
வேர்ப்பலா காம்பென அவளுயிர் சிறிது
வேர்ப்பலா போன்றவள் காதல் பெரிது
பழமது மிகவும் பழுத்து விழுந்தால்
உழன்றிடும் உயிரே நீங்கிடும் அன்றோ?


*****
 
செய்யுள் 3. நிலத்தினும் பெரிதே

(நேரிசை ஆசிரியப்பா)
நிலத்தினும் பெரிதே வானினு முயர்ந்தன்று
நீரினு மாரள வின்றே சாரற்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தே னிழைக்கு நாடனொடு நட்பே.
---தேவகுலத்தார், குறுந்தொகை 3.


அன்று என்பது எதிர்மறைப் பொருளல்ல
அன்று என்பது பொருளில் அசைச்சொல்
உயர்ந்தன்று என்பது எனவே
உயர்ந்தது என்ற பொருளைத் தருமே.

ஆர என்பதோர் உவமைச் சொல்லாம்
ஆர என்றல் மிக்க எனப்பொருள்
சாரல் என்பது மலையாம்
கோலெனச் சொன்னது மரத்தின் கொம்பே.

இழைக்கும் என்னும் இன்சொல் நோக்குக.
இழைத்தல் என்றால் இரைத்தல் செய்தல்
குழைத்தல் பூசுதல் இழையாக்கல்;
இழைக்கத் தேனை உழைக்கும் வண்டுகளே.

கருங்கிளை தாங்கும் குறிஞ்சி மரத்தின்
அரும்பெரும் பூக்களில் சுரும்புகள் தேனிழைக்கும் ... ... ... [சுரும்பு=வண்டு]
மலைநிலத் தலைமகன் மீ(து)அவள் நட்பே
உலகினும் பெரியது உயர்ந்தது வானினும்
உலவிடும் கடலின் நீரினும் ஆழமே
என்பதை உணர்ந்து மணங்கொளத் தலைப்படு
என்றாள் தோழி வேலியின்
பின்புறம் நிற்கும் தலவனை நோக்கியே.

மலையினில் மலரும் குறிஞ்சி மலர்களில்
பலவகை வண்ணம் உண்டே
மலையே சிரிக்கும் மலர்கள் கீழே.
??? ?????????? ??????????...- kurinji - Oneindia Tamil

*****
 
செய்யுள் 4. எறும்பி யளையிற்
(நேரிசை ஆசிரியப்பா)

முன்னுரை:
வதுவைப் பொருளீட்டத் தலைவன் தலைவியைப்
பொதுவில் பிரிந்து சென்ற போது
அதுகண்டு ஆற்றாது அவன்சென்ற வழியின்
துன்பங்கள் குறித்துத் தோழியிடம் அஞ்சும்
தன்னெஞ் சுரைத்துத் தலைவி
ஊரின் அலட்சியம் கூறிப் புலம்பியது.

செய்யுள்:
எறும்பி யளையிற் குறும்பல் சுனைய
உலைக்க லன்ன பாறை யேறிக்
கொடுவி லெயினர் பகழி மாய்க்கும்
கவலைத் தென்பவவர் சென்ற வாறே
அதுமற் றவலங் கொள்ளாது
நொதுமற் கழறுமிவ் வழுங்க லூரே.
---ஓதலாந்தையார், குறுந்தொகை 12.


விளக்கம்:
எறும்பியளை என்றது எறும்பின் வளையே
குறும்பல் சுனையாம் குறுகிய பலசுனை
எறும்புப் புற்றுபோல் பலவாகும்
குறுகிய சுனைகள் உவமை காண்க.

எயினர் என்போர் வில்லேந்திய வேடுவர்கள்
பகழி மாய்த்தல் அம்பினைக் கூர்தீட்டல்
கவலைத் தென்பது கிளைபிரி வழிகளே
அலையும் ஆதவன் அனலில் சூடேறி
உலைக்களக் கல்போல் கொதிக்கும் பாறையில்
எயினர்தம் வில்லின் அம்புகள் கூர்தீட்டும்
வழிபல கடக்க வேண்டும்
தலைவன் பிரிந்து சென்ற பாதையிலே.

நொதுமல் என்பது அக்கம் பக்கம்
கழறுதல் என்றால் இடித்துக் கூறுதல்
அழுங்கல் என்பது இங்கு ஆரவாரம்
கவலைக் குரிய கிளைத்த வழிகளின்
அவலம் நோக்காது ஆர்ப்பரிக்கும் இவ்வூர்
தலைவன் பிரிந்தது மட்டும் கொண்டு
என்நெஞ்சு அறியாது இடித்துப் பேசுதல்
உன்நெஞ்சு அறியாதோ தோழி
என்றாள் தலைவி தன்னுயிர்த் தோழியிடம்.

*****
 
Status
Not open for further replies.
Back
Top