கோயில் தரிசனத்திற்குச் செல்லும்போது

கோயில் தரிசனத்திற்குச் செல்லும்போது

முதலில் தாயார் சந்நிதிக்குத் தான் செல்ல வேண்டும். அவளிடம்,"நான் தப்பு செய்து விட்டேன். எனக்கு அருள்புரிய வேண்டும்,'' என்று சொல்லி பிரதட்சிணம் (சுற்றி வருதல்) செய்தால் போதும். அதற்குள் தன் கணவரிடம் அருள்புரியும் படி நமக்காக வேண்டுவாள். ஆனால், பரம்பொருளான திருமால் சாதாரண மனிதரைப் போன்றவர் அல்லவே! அவரே உலகை பரிபாலனம் செய்பவர். சட்டத்தை வகுத்தவரே அதை மீறி விட்டால் அர்த்தம் இல்லாமல் போய்விடுமே.


"வேதத்தையும், உடம்பையும், நல்லது கெட்டது பகுத்தறியும் அறிவையும் கொடுத்தும் கூட சரியான வழியில் நடக்கத் தெரியாத இவர்களைத் தண்டிப்பதை தவிர வழியில்லை,'' என்று தாயாரிடம் விளக்கம் கொடுப்பார்.


"என்ன தான் இருந்தாலும் நீங்கள் தந்தை தானே! நானல்லவா அவர்களைப் பெற்றவள். உங்களை விட எனக்கே பொறுப்பு அதிகம்,'' என்று அன்பை நிலைநாட்டுவாள். அதே சமயத்தில்,""தப்பு மேல் தப்பு என்று செய்து கொண்டே இருந்தால் என்று அவர்களைத் திருத்துவது?'' என்ற பொறுப்புணர்வும் அவளுக்கு எழவே செய்யும். அதற்காகத்தான் ஒரு உபாயத்தை ஏற்படுத்தி வைத்தாள்.


பெருமாளிடம்,"சுவாமி! சாஸ்திரத்தை ஒரு கையில் வைத்துக் கொள்ளுங்கள். அதே நேரம் கருணையையும் மறந்து விடாதீர்கள். யார் ஒருவர் செய்த தவறை உணர்ந்து வருந்தினாலும், மன்னித்தருளும்படி அழுதாலும் அவர்களை ஏற்றுக் கொள்ளுங்கள். தப்பு செய்து விட்டு வருந்தாதவர்களுக்கு மட்டும் சாஸ்திரம் நிர்ணயித்துள்ள தண்டனையை வழங்குங்கள்,'' என்றாள்.


வைஷ்ணவ சம்பிரதாயம் தாயாரின் அருட்செயலை "புருஷகாரம்' எனச் சொல்கிறது.


"புருஷனை புருஷனாக ஆக்குபவள்' என்பது பொருள். அதாவது, ஆண்மகனை ஆணாக இருக்கச் செய்பவள் என்பதாகும். கையைச் சுருக்கிக் கொண்டு இருப்பது ஆண்மகனுக்கு அழகல்ல. கொடுப்பது தான் ஆணுக்குப் பெருமை. பெருமாளுக்கே அதை எடுத்துச் சொல்லி, நமக்காக பரிந்து பேசுபவள் மகாலட்சுமி தாயார் தான். அவளின் திருவடியைப் பிடித்துக் கொண்டு பெருமாளே சரணாகதி என்று வழிபட்டால், வாழ்வில் எல்லா நன்மைகளும் உண்டாகும். இந்த உண்மையை மனதில் நினைத்தாலே போதும். வாழ்வு இனிமையாகி விடும்.
 
Back
Top