• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

கூடாரைவல்லி 11-01-2021 ஸ்ரீ சார்வரி வருடம் மார்கழி மாதம் 27ம் நாள் ஜனவரி 11.01.2021 அன்று கூடாரைவல்லி.

கூடாரைவல்லி 11-01-2021

ஸ்ரீ சார்வரி வருடம் மார்கழி மாதம் 27ம் நாள் ஜனவரி 11.01.2021 அன்று கூடாரைவல்லி.

ஸ்ரீ விஷ்ணுசித்த குலநந்தன கல்பவல்லீம்

ஸ்ரீரங்கராஜ ஹரிநந்தன யோக த்ருச்யாம்

ஸாக்ஷாத் க்ஷமாம் கருணயா கமலாமிவாந்யாம்

கோதாமநந்ய சரண: சரணம் ப்ரபத்யே –

கோதா ஸ்துதி.

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியே! தொல்பாவை

பாடி அருளவல்ல பல்வளையாய் - நாடி நீ

வேங்கடவற் கென்னை விதியென்ற இம்மாற்றம்

நாங்கடவா வண்ணமே நல்கு. –

உய்யக்கொண்டார் பாடல்.

ஆழ்வார்கள் பன்னிருவர். இறை அனுபவத்தில் ஆழ்ந்து திளைப்பவர்கள் என்பதால் ஆழ்வார்கள் என்று பெயர் பெற்றனர். கடவுளை நாராயணனாகவும் திருமாலாகவும் கண்டு வணங்கியவர்கள்.

பன்னிரு ஆழ்வர்களில் ஆண்டாள் மட்டுமே பெண்ணாவார். இவர் பூதேவியின் அம்சமாகக் கருதப்படுகிறார். மதுரைக்கு 75 கிலோ மீட்டர் தூரத்தில் வில்லிபுத்தூரில் பெரியாழ்வார் பராமரித்து வந்த நந்தவனத்தில் ஐந்து வயதுப்பெண் குழந்தையாகப் பூமியில் தோன்றி வந்தவர் என்பது நம்பிக்கை.

இறை உணர்வுடனேயே வளர்ந்தவர் ஆண்டாள். தன்னை எப்போதுமே இறைவனுக்கு நாயகியாகவே கருதி வளர்ந்தவர். வயது ஏற ஏற இறை உணர்வும் மிகுதிப்பட்டுக் கொண்டே வந்ததாம். கனவில் தோன்றிய கடவுளின் ஆணைப்படி ஸ்ரீரங்கத்தில் ஆண்டாளை இறைவனுக்கு மணமகளாகத் தந்தவர் பெரியாழ்வார். கருவறைக்குள் புகுந்து ஆண்டாள் இறைவனோடு ஐக்கியமாகிவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

ஆண்டாளின் பாடல்களை மையமாகக் கொண்டு தமிழ் இலக்கிய முறைமையில் பாவை நோன்பு என்ற வழிபடு முறை வளர்ந்தது. ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதத்தில் நோன்பிருந்து இந்த உலகம் உய்ய மழை பொழிய வேண்டும் என்றும் தமக்கு நல்ல கணவன்மார் அமையவேண்டும் என்றும் இறைவனை வேண்டும் வகையில் அமைந்தது பாவை இலக்கியம். இந்தப் பாவை இலக்கியத்துக்குச் சமயச் சார்பு கொடுத்து மிகச் சிறந்த இலக்கியம் படைத்தவர் ஆண்டாள்.

இலக்கிய வரலாற்றாசிரியர்கள் ஆண்டாள் ஒன்பதாவது நூற்றாண்டில் வாழ்ந்திருக்க வேண்டும் என்று கூறுவார்கள். ஆழ்வார்கள் காலம் பற்றி இலக்கிய வரலாற்றாசிரியர்கள் இடையே கருத்து வேறுபாடுகள் உண்டு. அத்தகைய கருத்து வேறுபாடுகள் ஆழ்வார்களின் பாடல்களில் இருக்கும் நயத்தையோ அப்பாடல்கள் வைணவர்கள் மீதும் பொதுவாக ஆழ்வார்கள் இலக்கியத்தைப் படிப்பவர்கள் மீதும் ஏற்படுத்தி வருகிற தாக்கத்தையோ எந்த வகையிலும் பாதிப்பதில்லை. ஆண்டாள் இலக்கியத்துக்கும் இது பொருந்தும்.

ஆழ்வார்களின் பாடல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன. பிரபந்த இலக்கியத்தில் ஆண்டாளின் பாடல்கள் அவற்றின் வெளிப்படையான பாங்கினாலும் எளிமையாலும் ஆழ்ந்த உணர்வுகளைப் பிரதிபலிப்பதிலும் தமக்கென ஒரு சிறந்த இடத்தைப் பெற்றுள்ளன. நம்மாழ்வாரையும் ஆண்டாளைப் போல வேறு எந்த ஆழ்வாரும் இறைவனுக்கும் பக்தனுக்கும் இடையே இருக்கும் நெருக்கத்தை இவ்வளவு சிறப்பாக வெளிப்படுத்த இயலாது.

திருப்பாவையும் நாச்சியார் திருமொழியும் ஆண்டாள் இயற்றியவை. இவ்விரண்டில் நாச்சியார் திருமொழி வங்காள வைணவ இலக்கியத்தைப் போல உணர்வு பூர்வமாக அமைந்த பாடல்களால் ஆனது. ஆயர்பாடியில் வாழ்ந்த இடைப் பெண்களின் பாவை நோன்பின் வடிவில் திருப்பாவை எளிய முறையில் பக்தியை வெளிப்படுத்தும் இலக்கியமாக அமைந்திருக்கிறது. ஆயர்பாடியில் கண்ணனாகத் தோன்றி இறைவன் தன்னைவெளிப்படுத்தினார்.

மார்கழி மாதத்தின் நாளொன்றுக்கு ஒரு பாடல் என்ற வகையில் திருப்பாவையில் முப்பது பாடல்கள் இருக்கின்றன. முதல் பத்து பாடல்கள் பாவை நோன்பின் பலன்களைக் கூறும். அடுத்த பத்து பாடல்கள் ஆயர்பாடிப்பெண்களைப் பாவை நோன்பிருக்க அழைக்கும். கடைசிப் பத்துப் பாடல்கள் வந்திருந்து தமக்கு அருளுமாறு இறைவனை அழைக்கும்.

வருடத்தின் பன்னிரெண்டு மாதங்கள் கடவுளரின் ஒரு நாளாகவும் இரவுமாக ஆகின்றன. ஆடி முதல் மார்கழி வரையிலான மாதங்கள் கடவுளரின் இரவாகின்றன. மார்கழி முதல் ஆனி வரையிலான மாதங்கள் கடவுளரின் பகலாகின்றன. மார்கழி மாதம் கடவுளரின் பகலில் விடியற்காலைப் பொழுதாக அமைகிறது. கடவுளை வணங்கவும் கடவுளைப் போற்றிப் பாடவும் இறைக்கருணை வேண்டிப் பிரார்த்திக்கவும் கடவுளரது பகலின் விடியலான மார்கழி மாதமே மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது. இப்படியாகத்தான் பாவை நோன்பை வைணவப்படுத்தி ஆண்டாள் தமது திருப்பாவைப் பாடல்களை எழுதியிருக்கிறார் எனலாம்.

சூடிக் கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் முப்பது பாடல்கள் கொண்ட திருப்பாவையை அருளிச் செய்தவள். அதில் 27ஆவது பாசுரமான 'கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா' எனும் பாசுரத்தைப் பாடியதும் திருமால் அவளுக்குத் திருமணவரம் தந்ததாக ஐதீகம். இந்த கூடாரவல்லியன்று திருமால் ஆலயங்களுக்குச் சென்று பெருமாளையும், ஆண்டாளையும் தரிசிப்போருக்கு வாழ்வில் நல வளங்கள் சேரும்.



ஆண்டாளின் வேண்டுதல் பாவை நோன்பு இருந்த ஆண்டாள், தனக்கும் ரங்கநாதருக்கும் திருமணம் செய்துவைத்தால், அக்காரவடிசலும் வெண்ணெயும் நைவேத்தியம் செய்து படைப்பதாக கள்ளழகர் பெருமாளிடம் வேண்டிக்கொள்கிறாள். ஸ்ரீரங்கத்தில் ஆண்டாள் ஸ்ரீரங்கநாதருடன் ஐக்கியமான பிறகு, கள்ளழகருக்கு அக்காரவடிசலும் வெண்ணெயும் சமர்ப்பிக்கமுடியாமல் போனது. பின்னாளில் வந்த எம்பெருமானாராகிய ராமானுஜர் இதுபற்றிக் கேள்விப்பட்டு, ஆண்டாள் வேண்டிக்கொண்டபடியே அக்காரவடிசலும் வெண்ணெயும் கள்ளழகருக்குச் சமர்ப்பித்தார். இந்த சம்பவத்தை நினைவுகூரும் வகையில் ஆண்டு தோறும் 27ஆம் கூடாரவல்லி வைபவத்தின்போது, 120 லிட்டர் பால், 250 கி.கிராம் அரிசி, 15 கிலோ கல்கண்டு, கிலோ கணக்கில் முந்திரி, பாதாம், உலர்ந்த திராட்சை என எல்லாம் சேர்த்துப் பல மணி நேரம் சுண்டக் காய்ச்சித் தயாரிக்கும் அக்காரவடிசலும் வெண்ணெயும் நைவேத்தியம் செய்யப்படுகிறது.

கூடாரவல்லி நாளில் ஆண்டாளை தரிசித்தால் மனம் போல் மாங்கல்யம் அமையும்

மாதங்களில் சிறந்தது மார்கழி. அதை தனுர் மாதம் என்றும் போற்றுகிறோம். மார்கழி மாதம் தேவர்களின் நேரமான விடியற்காலையில் "யார் ஒருவர் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து, பக்தியுடன் இறைவனை வழிபடுகிறார்களோ அவர்கள், ஆயிரம் ஆண்டுகள் பகவானை வழிபாடு செய்த பலன்களை தனுர்மாதமான மார்கழி மாத ஒருநாள் வழிபாட்டில் கிடைக்க பெறுகிறார்கள். மாதம் முழுவதும் வழிபட்டால் எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும் என்பது கணக்கில் அடங்காது. சிவ-பார்வதியின் அருளைப் பெறுவதற்காக திருவெம்பாவையையும் பகவான் ஸ்ரீமன் நாராயணன் அருள் பெறுவதற்கு திருப்பாவையையும் மார்கழியில் அதிகாலையில் பாராயணம் செய்பவர்களுக்கு இறை அருள் விரைவில் பெறுவர்

ஆண்டாளின் வேண்டுதல்

பாவை நோன்பு இருந்த ஆண்டாள், தனக்கும் ரங்கநாதருக்கும் திருமணம் செய்துவைத்தால், அக்காரவடிசலும் வெண்ணெயும் நைவேத்தியம் செய்து படைப்பதாக கள்ளழகர் பெருமாளிடம் வேண்டிக்கொள்கிறாள். ஸ்ரீரங்கத்தில் ஆண்டாள் ஸ்ரீரங்கநாதருடன் ஐக்கியமான பிறகு, கள்ளழகருக்கு அக்காரவடிசலும் வெண்ணெயும்சமர்ப்பிக்கமுடியாமல் போனது. பின்னாளில் வந்த எம்பெருமானாராகிய ராமானுஜர் இதுபற்றிக் கேள்விப்பட்டு, ஆண்டாள் வேண்டிக்கொண்டபடியே அக்காரவடிசலும் வெண்ணெயும் கள்ளழகருக்குச் சமர்ப்பித்தார்

உங்களின் எல்லா உறவுகளும் மேம்பட, உங்களைப் புரிந்துகொள்ளாமல் விலகி நிற்கும் உறவுகள், நண்பர்கள் யாவரும் உங்களோடு இணைந்து வாழ இந்த கூடாரவல்லி விரத நாளில் அரங்கனையும் ஆண்டாளையும் வணங்கி, பாசுரங்கள் பாடி, ஆண்டாளுக்கு புதுப்புடவை சாத்தி, அக்காரவடிசல் நைவேத்தியம் சமர்ப்பித்து வணங்குங்கள். ஆண்டவனையே வசீகரித்த இந்த அழகுப்பாடல் உங்கள் உறவுகளை சேர்க்காமல் விட்டுவிடுமா?

கண்ணனைப் பிடிக்கும் எல்லோருக்கும் ஆண்டாளையும் பிடிக்கும். கண்ணனையே கணவராக வரித்துக்கொண்ட ஆண்டாளின் பாடல்கள் வெறும் அலங்காரக் காவியம் இல்லை. அது ஜீவனை உருக்கும் பக்திப்பிரவாகம். கண்ணனையே கணவராக அடையவேண்டும் என்பதற்காக மார்கழி மாதம் பாவை நோன்பு கடைப்பிடிக்கும் ஆண்டாள், தினமும் அதிகாலையில் துயிலெழுந்து, தனது சக தோழியரையும் அழைத்துக்கொண்டு நீராடி, கண்ணனின் புகழ் பாடிப் பரவசம் கொள்கிறாள். விரதக் காலங்களில் கடுமையான நியமங்களையும் அனுஷ்டிக்கிறாள் ஆண்டாள். 'நெய்யும், பாலும் உண்ணமாட்டோம்; கண்களுக்கு மையிட்டு அழகு செய்யமாட்டோம்; செய்யத் தகாத செயல்களைச் செய்யமாட்டோம்; தீங்கு விளைவிக்கும் சொற்களைப் பேசமாட்டோம்' என்றெல்லாம் நியமங்களை அனுஷ்டிக்கும் ஆண்டாள், அத்தகைய நியமங்களை நாமும் கடைப்பிடிக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறாள்.

பலவாறாக தன்னை வருத்திக்கொண்டு அந்த கோவிந்தனை அடைய பூஜிக்கிறாள். பக்தர்களை ரட்சிக்கும் அந்த பரந்தாமன், தீந்தமிழால் தன்னை பூஜிக்கும் கோதைப்பிராட்டியை கைவிடுவானா? மேலும் மேலும் பாக்களை வடிக்க அவளுக்கு அருள் செய்கிறான். 26 நாட்கள் கடுமையான விரதம் இருந்த ஆண்டாள், கண்ணனின் திருவுளப்படி மார்கழி மாதத்தின் இருபத்து ஏழாவது நாளில் என்று பாடி பரவசம் கொள்கிறாள். அதுமட்டுமா? கோவிந்தனால் அளிக்கப்பட்ட சூடகம், தோள்வளை, தோடு, செவியில் அணியும் கொப்பு, கால் தண்டை உள்ளிட்ட பலவகை அணிகலன்களை அணிந்து, புத்தாடை புனைந்து, அலங்கரித்துக்கொண்டு அரங்கனை எண்ணி அகமகிழ்கிறாள். மேலும் அக்காரவடிசல் எனும் நெய் ஒழுகும் சர்க்கரைப் பொங்கலை கண்ணனுக்கு அமுதாக படைத்து தானும் உண்டு 26 நாள் கடுமையான நோன்பை ஆண்டாள் முடித்தாள். அந்த நாளில் தான் அரங்கன், ஆண்டாளை ஏற்றுக்கொள்வதாக வரமளித்த திருநாள். இந்த பாடலைக்கேட்ட கோவிந்தன் உடனே மயங்கி ஆண்டாளை திருவரங்கத்தில் மணந்துகொள்வதாக வாக்களித்தான். எத்தனை மகத்தான பொன்னாள் இந்த கூடாரவல்லி நாள். மானுடப்பெண்ணாக தோன்றி மாதவனையே மணாளனாக பெற்றநாள் அல்லவோ இன்று (11-01-2021). கூடாரை என்றால் வெறுப்பவர், விலகிச் சென்றவர், கருத்து வேறுபாடு கொண்டவர், வெறுப்பவர் என்றெல்லாம் பொருள் சொல்லலாம். உங்களுக்கு எதிராக இருக்கும் எல்லோரையும் விரும்பச் செய்யும் ஆற்றல் கொண்டது இந்த கூடாரவல்லி தினம்.

கூடாரவல்லி:-

”கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா” – என்னும் பாசுரத்திற்கு போகும் முன்னர் கூடார வல்லி நாளின் சிறப்பினைப் பற்றி சுருக்கமாக காண்போம்.

கூடாரை வெல்லும் என்பது மருவிக் கூடார வல்லியானது. கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா என்னும் பாசுரத்தைப் பாடியதும் திருமால் கோதைக்குத் திருமண வரம் தந்ததாக ஐதீகம். கூடார வல்லி என்ற நாளில் கோதை தன்னை கோபிகையாகப் பாவித்துக் கண்ணனை வேண்டி மற்ற கோபியர்களுடன் மாதம் முழுவதும் நோன்பிருந்த ஆண்டாள் அந்தக் குறை ஒன்றும் இல்லாத கோவிந்தனுடன் கூடிய நாள். தன்னிடத்தில் பக்தியில்லாதவர்களைக் கூட வெற்றி கொள்பவன் கோவிந்தன். தன்மேல் பக்தி கொண்டவர்களிடம் தோற்பவனும் அவனே. மற்ற பாசுரங்களில் மார்கழி நோன்பிருக்கும் நியமங்களையும், செய்யத் தக்க, செய்யத் தகாத செயல்கள் யாது? என்பதைப் பற்றி பேசிய ஆண்டாள், இப் பாசுரத்தில் நோன்பை முடித்துக் கொள்ளும் முகத்தான், கண்ணனாகிய கோவிந்தனிடம் சன்மானம் கேட்கிறாள். எப்படிப்பட்ட சன்மானம்? இந்த உலகத்தில் உள்ளவர்கள் எல்லாம் மெச்சும் வண்ணம் கண்ணனையே சம்மானமாக கேட்கின்றாள். பரமனும் மனம் மகிழ்ந்து தூய்மையான பக்தையான கோதைக்கு தன்னையே அர்ப்பணிக்கின்றார்.

ருக்மணி, சீதா, ஆண்டாள் கல்யாண வைபவங்களில் ஆண்டாள்-அரங்கர் கல்யாணம் உயர்வானது. கண்ணன் ருக்மணியையும், ராமன் சீதாப் பிராட்டியையும் தத்தம் அவதாரங்களில் முறையே திருமணம் செய்து கொண்டனர்.

ஆனாள் இப்பூவுலகில் மானிடராக அவதரித்த ஆண்டாள், தெய்வத்தையே திருமணம் செய்து கொள்வதற்கு எவ்வளவு கடுமையான பக்தி வேண்டும்? அதனால்தான் ஆண்டாள்-அரங்கர் கல்யாணம் மிகவும் உயர்வானது என பூர்வாசிரியர்கள் கூறுகின்றனர்.

இன்றைய நாளில் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் சன்னிதியில் ஆண்டாள் சிம்மாசனத்தில் ஸ்ரீதேவி-பூதேவியுடன் ஸ்ரீபெரியபெருமாள் எழுந்தருளி, அவருடன் ஸ்ரீ ஆண்டாள், ரங்கமன்னார், கருடாழ்வார், மற்ற ஆழ்வார்கள், ஆசாரியர்கள் எழுந்தருளி சேவை சாதிப்பர்.

கூடார வல்லியான இந்தச் சிறப்பான நன்னாளில் பெருமாளுக்கு அக்கார அடிசில் என்ற பால்சோறு நைவேத்யம் செய்யப்படுகிறது. திருமண வரம் வேண்டும் கன்னிப் பெண்கள் விரதமிருந்து இன்று ஆண்டாள்-அரங்கரை சென்று சேவித்தால் திருமண வரம் கைகூடுவது உறுதியாகும்.

பாசுரம் 27 :-

கூடாரை வெல்லும்சீர் கோவிந்தா உந்தன்னைப்

பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்

நாடு புகழும் பரிசினால் நன்றாகச் சூடகமே

தோள்வளையே தோடே செவிப்பூவே

பாடகமே என்றனைய பல்கலனும் யாம்அணிவோம்

ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு

மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்

கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.

பாசுரத்தின் பொருள் :-

தன் அடி பணியாதவர்களையும் வெற்றி கொள்ளக் கூடிய சீர்மையான கல்யாண குணங்களைக் கொண்ட கோவிந்தனே!! உன்னை வாயாரப் பாடி, வாய் படைத்த பயன் பெற்றமையால் நாங்கள் பெறும் வெகுமாதியானது யாதெனில், இந்த உலகமே புகழக் கூடிய பரிசினை உன்னிடமிருந்து பெற்று, எங்களை நாங்களே கை வளை, தோள் வளை, காதுகளுக்கு அணிந்து கொள்ளும் தோடும், செவிப்பூவான கர்ணப்பூவினையும், கால்களில் அணியக்கூடிய பாடகமாகிய பாத கடகத்தையும், இது போன்ற பல ஆபரணங்களையும் அணிந்து கொள்வோம். அதன் பின்னர் புதிய ஆடையை உடுத்திக் கொண்டு, நெய்யினால் மூடப்பட்ட பால் சோற்றினை உன்னோடும், நப்பின்னை பிராட்டியோடும், மற்ற தோழியர்களோடும் சேர்ந்து, கூடியிருந்து குளிர்ந்து உண்போம். வந்திடுவாய் கண்ணா என்று கோதைப் பிராட்டி கூறுகிறாள்.

விளக்கவுரை:-

இப் பாசுரத்தில் கோவிந்த நாமத்தினையும், அத்தகையை கோவிந்தனுக்கு கூடியவர் யார்? கூடாதார் யார்?, பாவையர்கள் அணிந்து கொள்ளும் பல்கலன்கள், நோன்பை முடிப்பதற்கு கண்ணனிடம் கேட்கும் வெகுமதிகள், விரதம் முடித்த பின்னர் கூடியிருந்து உண்ணும் அக்கார அடிசிலாகிய பாற்சோறு போன்ற பல்வேறு செய்திகளை ஆண்டாள் விளக்குகிறார்.

கூடாரை வெல்லும் சீர்மை:-

தம்மோடு மாற்றுக் கருத்து கொண்டவர்களை, தன்னோடு இல்லாதவர்களை, தன்னை ஏற்றுக் கொள்ளாதவர்களைக் கூட எதிரி, பொல்லாதவர் என்று கடுமையாகக் கூறாமல் கூடாரை என்று மென்மையான சொல்லை ஆண்டாள் கையாளுகிறார். மாற்றாறை மாற்றழிக்க வல்லானை என்று பாடியவள் அல்லவா? அப்படிப்பட்ட சர்வேஸ்வரனான நாராயணன் நாமத்தினை சங்கீர்த்தனம் செய்யாதவர்கள், அவன் திவ்ய கல்யாண குணங்களை பாடிப் புகழாதவர்கள் என அனைவரையும் தன்னுடைய சீர்மைக் குணங்களால் எளிதில் வெற்றி கொள்பவன் கோவிந்தன். அதாவது கூடாரை வெற்றி கொண்டு அருள் பாலிப்பான். கூடினவர்களிடம் தான் தோற்று அருள் புரிவான். அரக்கர்களை வதம்செய்து திருத்துவான். அடியவர்களிடம் தோற்று மகிழ்விப்பான். அம்பினால் தோற்கச் செய்வான். அன்பினில் வசப்படுவான். அவனே அரங்கன். அவனே கோவிந்தன். அவனே பரமேஸ்வரன்.

இப்படி அடியார்களை வதைக்கும் பகைவர்களையும், அரங்கனின் அருமை தெரியாமல் எதிர்க்கும் விரோதிகளையும் வெற்றி கொள்வான். பள்ளி கொண்ட அரங்கனின் திருமுற்றத்து அடியார்கள், மால்கொள் சிந்தையரான மெய்யடியார்கள், பேராளன் பேரோதும் பெரியோர்களை ஒருக்காலும் பிரிய மாட்டேன் என்றிருக்கும் அடியார்களிடம் தோற்று மகிழச் செய்வான்.

கோவிந்தன் நாமம் :-

ஸ்ரீ ஆண்டாள் முந்தைய இருபத்தாறு பாசுரங்கள் வரை, பரமாத்மாவின் பல்வேறு திருவவதாரங்களைப் பற்றி பேசி பரவசப் பட்டவள், இப் பாசுரத்தில் மட்டும் கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா என்று கோவிந்த நாம சங்கீர்த்தனத்தை கூறுகிறார். இதைத் தொடர்ந்து இருபத்தெட்டாவது பாசுரத்தில் ” குறைவொன்றுமில்லாத கோவிந்தா ”, என்றும், இருபத்தொன்பதாவது பாசுரத்தில் ” இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா”, எனவும் தொடர்ந்து மூன்று பாசுரங்களில் கோவிந்தன் புகழ் பாடுகிறார். காரணம் பாவை நோன்பு முடிந்துவிட்டது. பறை என்கின்ற கைங்கர்ய ஞானத்தைப் பெற வேண்டும். ஆடை அணிகலன்களைப் பெற வேண்டும். தவிரவும் நோன்பு முடித்த பின்னர் கண்ணனோடும், நப்பின்னை பிராட்டியோடும் சேர்ந்து பாற்சோறு உண்ண வேண்டும். இவற்றை அளிப்பவன் சர்வேஸ்வரனான பகவான் கோவிந்தன் மட்டுமே. அவனால் மட்டுமே முடியும். அளிப்பவனும் அவனே. அளித்துக் காப்பவனும் அவனே.

கோ- என்றால் உயிர்கள், விந்தன்- என்றால் காப்பாற்றுபவன். நம்மை எல்லாம் அருகில் இருந்து காப்பவனே கோவிந்தன். மேலும், கோவிந்தா என்றால் எல்லா இடத்திலும், எல்லா காலத்திலும் நம்மோடு நீக்கமற நிறைந்திருப்பவன் என்று பொருள். இதைத்தான் ஸர்வத்ர கோவிந்த நாம சங்கீர்த்தனம் என்று கூறும்பொழுது, அனைவரும், கோவிந்தா, கோவிந்தா என்று அவன் நாமத்தைக் கூறுகின்றனர். கோவிந்தா என்பதற்கு பல பொருள் உண்டு. பகவானின் தசாவதாரங்களை குறிப்பது கோவிந்தா. கோவிந்தா என்றால் வாக்கு, பசு,மாடு, கன்று, பூமி, மோட்சம் அளிப்பவர், நீர், ஆயுதம், பர்வதம் என்னும் மலை, புலன்கள், புலன்களை அடக்கி ஆள்பவர், வேதமோதுவதால் அடையக் கூடியவர்., கூப்பிடு தூரத்தில் இருப்பவர், துதிக்கும் அல்லது துதிக்கப்படுபவர் என்று பல அர்த்தங்களை பூர்வாசிரியர்கள் கூறுகின்றனர்.

ஆதிசங்கரர் தனது பஜகோவிந்தத்தில், கோவிந்தா என்ற திருநாமம், மனிதன் வாழ வேண்டிய முறை, அது ஒரு தத்துவ உபதேசம், நமக்கு விவேகத்தையும், வைராக்கியத்தையும் அளிக்கும் ஞானச் சொல் என்று கூறுகிறார். எனவே கோவிந்தா என்றால் பாவம் விலகும். மோட்சத்திற்கான தடைகள் விலகும்.

கலியுகத்தில் பகவானை தரிசிப்பதற்கு ஒரே வழி நாம சங்கீர்த்தனம் இசைப்பதுதான். அவன் நாமம் இசைக்கும்போது நமக்கு மிக அருகில் வருகின்றான் கோவிந்தன். இப்படி பகவானின் பஞ்ச நாமாக்களான, ராமா, கிருஷ்ணா, கோவிந்தா, நாராயணா, நரசிம்மா என்பதில் நடுநாயகமாக இருக்கும் கோவிந்த நாமத்தை ஆண்டாள் சிறப்பித்துக் கூற காரணம் நாமெல்லாம் அவன் திருநாமத்தை கூறி உய்வடைய வேண்டும்.

Most Powerful Mantra For Health | Achutha Anantha Govinda ஆரோக்கியத்திற்கான மிகவும் சக்திவாய்ந்த மந்திரம் அச்சுதா அனந்த கோவிந்தா “அச்சுதானந்த கோவிந்த நாமோச்சாரண பேஷஜாத் நஸ்யந்தி ஸகலா ரோகா; ஸத்யம் ஸத்யம் வதாம்யஹம்” என்று தினசரி நாம சங்கீர்த்தனத்தை இசைத்து அவன் அன்பைப் பெற வேண்டும் என்பதற்காகத்தான்.

நாடு புகழும் பரிசு:-

”உன்றன்னைப் பாடிப்பறை கொண்டு யாம்பெறு சம்மானம், நாடு புகழும் பரிசினால் நன்றாக” – என்று பாடுகிறார் ஆண்டாள். வாயினால் பாடி, கேசவனைப் பாட, முகில்வண்ணன் பேர்பாட, மைத்துனன் பேர்பாட என்று மற்ற பாசுரங்களில் நாம சங்கீர்த்தனத்தில் பாடி மகிழ்ந்தவள் கோதை. அப்படிப் பாடிய நானும், தோழியரும் உன்னிடமிருந்து கைங்கர்ய ஞானம் என்ற பறையை பெற்றுக் கொண்ட பின்னர், இந்த உலகமே புகழும் வண்ணம், எவ்வித அபிப்ராய பேதமும் இல்லாமல், எல்லோரும் ஏற்கும்படியான உயர்ந்த சபையில் பெறப்படும் பரிசினை பெறப் போகிறேன் கண்ணா என்கிறாள் ஆண்டாள்.

உலகமே ஆமோதிக்கும்படியான, புகழும்படியான பரிசு எப்படிப்பட்டதாக இருக்கும்? அப்பரிசு எவ்வகையில் உயர்ந்ததாக இருக்கும்? ராமர் பட்டாபிஷேகத்தின்போது, சீதாப்பிராட்டி அனுமனுக்கு அளித்த முத்து மாலையைப் போன்றோ, பலராமனாக இருக்கின்றபோது ராமர் பட்டாபிஷேக காட்சியைக் காண்பதற்காக, அனுமனை அழைத்து வர பெரிய திருவடியான கருடாத்மனையே தனது தோளில் சுமந்து வர அனுப்பினாரே பரமாத்மா. அப்படிப்பட்ட ஒன்றாக இருக்குமா? திரௌபதிக்கு தக்க சமயத்தில் வஸ்திரம் தந்து காத்தாரே அப்படிப்பட்டதா? பஞ்ச பாண்டவர்களுக்கு யுத்த வெற்றி வழங்கி தர்மத்தை நிலைநாட்டினாரே அப்படிப்பட்ட பரிசா? அல்லது அதற்கும் மேலானதாகவா? என்று நாம் ஆச்சர்யிக்கும் வகையில் கேட்கிறாள் கோதை.

பல்கலனும் யாமணிவோம் :-

பரமாத்மாவிடம் நாடு புகழும்படியான பரிசினை தந்தருள வேண்டும் என்று கேட்ட ஆண்டாள் தொடர்ந்து, இந்த நோன்பு முடிந்த பின்னர் நாங்கள் அணியத் தக்க புதிய ஆடைகளை நீ தந்து நாங்கள் அணிய வேண்டும். அதோடு கையில் அணியக் கூடிய காப்பும், தோளில் அணியக் கூடிய வளைகள், காதுகளில் அணிந்து கொள்ளும் தோடு, காதின் மேலே அணியும் செவிப்பூ என்னும் கர்ணப்பூ, காலுக்கு அணியக் கூடிய பாத கடகம் என்னும் பாடகம் இவற்றோடு மேலும் புதுப்புது அணிகலன்களை கிருஷ்ணனாலும், நப்பின்னை பிராட்டியாலும் வழங்கப்பட்டு அவைகளை நாங்கள் அணிந்து கொள்வோம் என்று பூரிக்கிறார்கள்.

அக்கார அடிசில் :-

“ஆடையுடுப்போம், அதன்பின்னே பாற்சோறு, மூடநெய் பெய்துமுழங்கை வழிவார ”- இதுகாறும் இயம நியமங்களோடு பாவை நோன்பு இருந்தாகிவிட்டது. இன்று நோன்பை முடித்துக் கொள்ளும் நாள். இன்றைக்கு விரதத்தை முடிப்பதற்காக ஸ்ரீ கிருஷ்ணனுக்கு நைவேத்யம் செய்து பின்னர் நாம் பிரசாதத்தை உண்ண வேண்டும். எப்படிப்பட்ட பிரசாதம்? அதை எப்படி உண்பதாம்? சொல்கிறாள் ஆண்டாள். அதாவது அரிசி ஒருமடங்கும், பால் இரண்டு மடங்கும் சேர்த்து வேகவைத்து, பாலிலே வெந்த சோறு மறையும் வண்ணம், ”நெய்யிடை நல்லதோர் சோறும்” என்றாரே பெரியாழ்வார், அப்படி நெய்மிதக்க இனிப்புச் சோறு தயாரித்து, படையலிட்டு பின்னர் அதை அள்ளி, நெய்யெல்லாம் முழங்கையில் ஒழுகும் வண்ணம் ரசித்து, சுவைத்து உண்பார்களாம். ஸ்ரீ ஆண்டாளுக்கு மிகவும் உவப்பான இப்பாற் சோறுதான் அக்கார அடிசில் என்றழைக்கப்படுகிறது. நூறுதடா அக்கார அடிசில் உனக்கு சமர்ப்பிப்பேன் என்று திருமாலிருஞ்சோலை பெருமானிடம் வேண்டிக் கொண்ட ஆண்டாள், அது நிறைவேறுவதற்குள் ரங்கமன்னாருடன் இரண்டறக் கலந்ததனால் அவ்வாக்கு ஆண்டாள் மானிடராய் இருக்கும் வரை நிறைவேறவில்லை. பின்னர் வந்த ஸ்ரீ ராமானுஜர்தான் நூறுதடா அக்கார அடிசிலைப் பெருமாளுக்கு படையலிட்டு ஆண்டாள் வாக்கை நிறைவேற்றியவர். இதனால் ராமானுஜர், கோதை பிராட்டியால் ” எங்கள் அண்ணலே வாரும் ” என்று அழைக்கப்பட்டார்.

கூடியிருந்து குளிர்வோம் :-

”நைவேத்யம் பகவானுக்கு இல்லை, பக்தருக்கத்தான் “ – என்று கூறுவார் காஞ்சி மஹாப் பெரியவர். அதனால் விரதம் இருந்தாலும் பிரசாதத்தை மறுக்கக் கூடாது என்று கூறுவார்கள். அதனால் கண்ணன் கொடுத்த பரிசை ஆண்டாள் உண்டு நோன்பை நிறைவு செய்து கொள்கிறாள். தான் மட்டும் தன்னிச்சையாக உண்ணவில்லை. கண்ணனை அழைக்கிறாள், நப்பின்னைப் பிராட்டியை அழைக்கிறாள். கூடியுள்ள தோழிமார்களை எல்லாம் அழைத்து, நாமே கண்ணனின் சோறாகவும், கண்ணனே நமக்கு சோறாகவும் கூடியிருந்து உண்டு பேரின்பம் காண்போம்!! வாருங்கள் என்று கூட்டத்தை அழைக்கிறாள். சமபந்தி போஜனா முறையை அன்றே நமக்கு அறிமுகப்படுத்தியவள் கோதை நாச்சியார். இப்படி கூடியிருந்து குளிர்ந்து நோன்பை முடித்த பின்னர், கோதைக்கு தன்னையே பரிசாக, இவ்வுலகம் ஏற்கும் வண்ணம் அளித்தாராம் அரங்கன்.

பாசுர உள்ளுறை :-

மேலோட்டமாகப் பார்த்தால் நோன்பு முடித்தல், பாவையர் அணிந்துகொள்ளும் அணிகலன்கள், பாற்சோறு என்பதாகத்தான் நம்மால் அறிய முடிகிறது. ஆனால் உள் பொருளாக, மறையாக ஞான தத்துவத்தை நமக்கு போதிக்கிறாள் ஆண்டாள்.

பல்கலன் என்று சொல்வது ஞானம், பக்தி, வைராக்யத்தைக் குறிக்கும்.

சூடகம் என்பது நம்மையெல்லாம் ரட்சித்துக் காக்கும் கடவுளை காப்பாக உருவகப்படுத்துகிறது.

ஸ்ரீவைஷ்ணவர்கள் தங்கள் தோளில் அணியும் சங்கு, சக்கர முத்திரைகள் தோள்வளையாக கூறப்படுகிறது.

த்வயம் என்று சொல்லக் கூடிய பக்தி செவிப்பூவாக உணர்த்தப்படுகிறது.

காலுக்கணியும் பாடகம் என்பது சரணாகதியை போதிக்கிறது.

அடியார்கள் பரமனுக்கு உரிமையானவர் என்பதைக் கூறுகிறது ஆடை என்ற சொல்.

பகவத் கைங்கர்யத்தைப் பாங்காய் விளக்குகிறது பாற்சோறு.

மூட நெய்பெய்து என்ற சொல்லாடலால், ஆத்மார்த்தமாக அகந்தையின்றி செய்யப்படும் பகவத் சேவையை வலியுறுத்துகிறது.

இறுதியில் கூடியிருந்து குளிர்வோம் என்பதன் மூலம் மோட்ச சித்தியை அடைவோம் வாருங்கள் என அழைக்கும் வண்ணத்தில் உள்ளுறையாக உணர்த்தப்பட்டுள்ளது.

முடிவுரை :-

ஸ்ரீ ஆண்டாளின் திருப்பாவை முப்பது பாசுரங்களில், இப்பாசுரம் மிகவும் தனித்துவம் வாய்ந்ததாகும். இதை பக்தி சிரத்தையுடன் பாராயணம் செய்தால் பக்திச் செருக்கு, ஞானச் செருக்கின்றி வைராக்யத்துடன் வாழலாம். மேலும் திருமணமாகாத பெண்கள் விரதமிருந்து, இப்பாடலை பாராயணம் செய்தால் விரைவில் திருமணம் கைகூடும். அவர்களுக்கு எவ்விதத் தடைகளும், எதிரிகளும் இருக்கமாட்டார்கள். வாருங்கள் நாமும் அரங்கனுக்கு அக்கார அடிசில் நைவேத்யம் செய்து ஸ்ரீஆண்டாள்-அரங்கன் பேரருளைப் பெறுவோம்.

ஆண்டாள் உலக ஒற்றுமையை சமுதாய ஒற்றுமையை ஏற்படுத்தியிருக்கிறாள். அதாவது இறைவன் முன்னே அனைவரும் சமம் எனும் உணர்வை வலியுறுத்தியவள். நமக்கெல்லாம் வழிகாட்டி!

அதன் பொருட்டே, வைணவத் தலங்களில் சமதர்ம சமுதாயம் எனும் அடிப்படையில், காலை மாலை வேளைகளில், ஆண்டாளின் பாசுரமும் திவ்விய பிரபந்தப் பாசுரங்களும் பாடப்படுகின்றன. பிறகு பக்தர்கள் அனைவரும் ஒன்றாகக் கூடியிருந்து (இதை கோஷ்டி விநியோகம் என்பர்) பிரசாதங்களை விநியோகம் செய்யும் மரபு உண்டாயிற்று. அந்த சமயத்தில் உயர்ந்தவர், தாழ்ந்தவர், அறிவுடையார், அறிவிலார், ஆண், பெண், குழந்தைகள், முதியவர்கள் என எந்த வேறுபாடும் இல்லாமல், அனைவரும் ஒன்றாகப் பாடி பகவானுக்கு அமுது செய்த பிரசாதங்களை உண்டு மகிழும் வழக்கம், நாம் பெற்றது ஆண்டாளால்தான் என்கிறார் மதுரை அம்பி பட்டாச்சார்யர்.

வாழி திருநாமம்

திருவாடிப் பூரத்து செகத்துதித்தாள் வாழியே

திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே

பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளை வாழியே

பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே

ஒரு நூற்று நாற்பத்து மூன்று உரைத்தாள் வாழியே

உயரரங்கற்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே

மருவாரும் திருமல்லி வள நாடி வாழியே

வண்புதுவை நகர்க் கோதை மலர்ப் பதங்கள் வாழியே.

ஆண்டாளைப் பற்றியும், அவள் பாடிய திருப்பாவையின் சிறப்பு பற்றி அவளை வாழ்த்திய வாழ்த்துரையும் பிற்காலத்தில் ஆன்றோர்களால் இயற்றப்பட்டு இன்றும் பாடப்பட்டு வருகின்றன.

முதல் பாடல் வேதாந்த தேசிகனாலும் மற்றவை வேதப்பிரான் பட்டராலும் பாடப்பெற்றவை.

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்!!

ஸ்ரீ ஆசார்யர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்
 

Attachments

  • 134141804_3463620717084063_2660681811943884866_n.jpg
    134141804_3463620717084063_2660681811943884866_n.jpg
    148.6 KB · Views: 102

Latest ads

Back
Top