குறட்பாவில் விடுகதைகள்

Status
Not open for further replies.

saidevo

Active member
குறட்பாவில் விடுகதைகள்

குறட்பாவில் விடுகதைகள்

தமிழில் விடுகதைகளுக்குப் பஞ்சமே யில்லை. ஒருவரியில் இருவரியில் பலவரியில் என்று அவை ரத்தினச் சுருக்கமாகவோ வெற்றிலைப் பெருக்கமாகவோ காணப்படுகின்றன. முதலில் புதிராகவும் விடையை அறிந்தபின் வியப்பாகவும் காணும் விடுகதைகளை வெண்பாக்களில் சேகரித்து எழுதுவோம். சின்னச் சின்ன விடுகதைகளைக் குறட்பாவில் எழுதலாம்.

விடுகதை ஒன்றைக் குறட்பாவிலோ, மற்ற வகை வெண்பாவிலோ அமைக்கக் கீழ்வருவது போன்ற விதிகளை அமைத்துக்கொள்ளலாம்.

1. வெண்பாவின் ஈற்றடியில் உள்ள மூன்று சீர்களில் ஒன்றில் விடை அமைய வேண்டும்.

2. விடைச்சொல் சிதைவோ புணர்ச்சியோ உறாது அதுவாகவே அமைய வேண்டும். புணர்ச்சி தவிர்க்க முடியாத போது புணரும் எழுத்தை அடைப்புக் குறிகள் மூலமோ வேறு விதத்திலோ காட்டுதல் நலம்.

3. விடைச்சொல் மறமொழி யாவதால் அது மற்ற சீர்களுடன் இலக்கணத்தில் பொருந்தி நின்றாலும் பொருளில் பொருந்தாது நிற்குமாதலால் அதை இனங்கண்டு கொள்வது எளிதாகுமாறு அமைக்க வேண்டும்.

4. விடைச்சொல்லைப் பலவிதமான மறைமொழிகளில் (encryption) கூறலாம். எவ்வித மறைமொழி உத்தியாயினும் விடை எளிதில் காண முடிவதாக இருக்கவேண்டும்.

5. மறைமொழியும் பொருளுடன் அமைந்தால் விடை காணுவது சுவையான சிக்கலாக இருக்கும். பொருளில்லாதோ வேற்று மொழிச் சொல்லாகவோ அமைந்தாலும் தனித்து நின்று கண்பட்டு விடை காண வைக்கும்.

6. சில மறைமொழி உத்திகள்:
6.1. அதிக பட்சம் இரண்டு எழுத்துகளை மறையாக்கலாம், ஒற்றுகள் தவிர்த்து.

6.2. மறையாகும் எழுத்து விடையின் எழுத்தைச் சேர்ந்த இனமாக--குறிலெனில் குறிலாக, நெடிலெனில் நெடிலாக--இருக்கவேண்டும். அவ்வாறு வரும் குறில்/நெடில் தகுந்த முந்தைய அல்லது பின்வரும் எழுத்தாக அமைந்தால் விடைகாண எளிதாக இருக்கும். தள்ளியுள்ள எழுத்துகளாகவும் அமையலாம்.

உதாரணமாக, ’பட்டு’ என்னும் விடைச்சொல்லை முன்பின் அடுத்துள்ள எழுத்துகள் மூலம் ’நட்டு, மட்டு, மிட்டு’ என்று அமைக்கலாம். தள்ளி வரும் எழுத்துகள் மூலம் ’கட்டு, முட்டு, மொட்டு’ என்று அமைக்கலாம்.

6.3. விடைச்சொல்லின் எழுத்துகள் இடம் மாறியோ, ஒலி மாறியோ வரலாம். சான்று: ’சிவா’ என்பது ’வாசி’ அல்லது ’விசா’ என வரலாம்.

6.4. இரண்டு எழுத்துகளை மறைக்கும் போது ஒன்றின் மறை அருகில் வருவதாகவும் மற்றது தள்ளி வருவதாகவும் அமைக்கலாம். சான்று: ’பெண்மணி’ என்பதைத் ’தண்பணி’ எனலாம்.

6.5. வேறுவித உத்திகளைக் கையாளுவோர் அவற்றை இந்தப் பட்டியலில் சேர்க்கலாம்.

*****
 
மேலுள்ள விதிகளின் படி அமைக்கப்பட்ட குறட்பா விடுகதைகளை இரண்டிரண்டாக இந்த இழையில் அஞ்சலிடுகிறேன். அன்பர்கள் ஆர்வமுடன் பங்குகொண்டு விடையைக் கண்டுபிடித்து இடுமாறு கேட்டுக் கொள்கிறேன். முதலில் இரண்டு உதாரண விடுகதைகள்:

மேனியெலாம் கண்ணெழிலாள் சிக்கியோர் சீரழிப்பாள்
வீன்மலை யென்று விடை. ... 1

விடை: மீன்வலை; மறைமொழி: வீன்மலை (எழுத்துகளின் ஒலி மாறி வந்தது).

பசுவினம் ஒன்பது தாண்டினால் வந்து
இசித்திடும் ஈமத்து நின்று. ... 2

விடை: ஆபத்து; மறைமொழி: ஈமத்து (ஆ-வெழுத்தின் அடுத்த நெடில் ஈ; ப-வுக்கு ம. ஆ என்றால் பசு)


*****

இனி நீங்கள் விடைகளைப் பதியலாம்.

பார்க்கும் இரத்தினம் வண்ணம் கருமையாம்
பேரது பெண்பணி யென்று. ... 3

உறுகண்*ஓர் விந்தை உளம்சேர் அழகி
குறையும் வளரும் நிலை. ... 4
[உறுகண்=நோய்]


*****
 
மூன்றெழுத்து ஆடையில் மோகினியாய்த் தோன்றுவர்க்கு
ஈன்றெடுக்கும் பல்லுயிர் விட்டு. ... 5

அள்ளலாம் கொள்ளலாம் தள்ளலாம் விள்ளினாலும்
கிள்ளினாலும் கூடுவாள் யார்? ... 6

பாடியது ராகம் பறந்தது தூக்கமே
நாடினால் கிட்டாப் பசு. ... 7

காயாகும் முன்னர் கனியான வானவன்
சேயாம் களனி யிது. ... 8

காவியுடை யில்லாத் தவம்செய் துறவியாம்
வாவியுள் பக்கி யென. ... 9

தான்மட்டும் ஒட்டிக்கொள் வான்பிற வெட்டுவான்
யான்தரிக்கக் கோலாவான் யார்? ... 10

*****
 
Status
Not open for further replies.
Back
Top