• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

குருவின் “வீட்டோ” அதிகாரம்!

Status
Not open for further replies.
குருவின் “வீட்டோ” அதிகாரம்!

shirdi-sai.jpg


ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய ஐந்து வல்லரசுகளுக்கு மட்டும் ‘வீட்டோ’ எனப்படும் வெட்டு/ரத்து அதிகாரம் உண்டு. உலக அமைதிக்கான எந்த தீர்மானமும், ஐந்து நாடுகளில் ஒரு நாடு ரத்து அதிகாரத்தைப் பிரயோகித்தாலும் நிறைவேறாது. ராணுவத்தையும் அனுப்ப முடியாது. இதே போல குரு-வுக்கும் அதிகாரம் உண்டு. கடவுளே கூட குருவின் அதிகாரத்துக்குப் பணிய வேண்டும்.
இந்து மதம் ஒரு ஒப்பற்ற மதம். இதில் குரு என்பவருக்கு மிகவும் மதிப்பும் மரியாதையும் உண்டு. குருவே பிரம்மா, விஷ்ணு, மஹேஸ்வரன் என்று வடமொழி ஸ்லோகம் புகழுகிறது. மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில் அம்மா, அப்பாவுக்கு அடுத்த இடம் குருவுக்கே. நாலாவது இடம்தான் கடவுளுக்கு!


குரு என்ற சம்ஸ்கிருதச் சொல் ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதிக்குள் போனது மட்டுமில்லாமல் இப்போது துறைக்கு துறை குரு என்ற சொல்லும் பயன்படுத்தப் படுகிறது.
இந்து மதத்தில் கடவுளும் கூட சில விதிகளுக்குக் கட்டுப்படே நடக்கவேண்டும். அசுரர்களுக்கோ தேவர்களுக்கோ வரமோ சாபமோ கொடுத்துவிட்டால் அந்தச் சொல்லை அவரே கூட மாற்றமுடியாது என்பதை ‘’சாபங்களும் வரங்களும்’’ ஆங்கிலக் என்ற கட்டுரையில் எழுதியுள்ளேன். இதேபோல பக்தர்களுக்கு யாரேனும் தீங்கு செய்துவிட்டால் கடவுள் தலையிட மாட்டார். அந்த பக்தனிடம்தான் தவறிழைத்தவர் மன்னிப்பு கேட்கவேண்டும் இதையும் ஒரு கட்டுரையில் எழுதிவிட்டேன். (இக்கட்டுரையின் இறுதியில் தலைப்புகளைக் காண்க).
குருவின் சக்தி கடவுளுக்கும் மிஞ்சியது என்பதற்கு எவ்வளவோ கதைகள் உண்டு. இரண்டு கதைகளை மட்டும் பார்ப்போம்.


சுந்தரர் வரலாறு
சைவப் பெரியார்களுள் நால்வரில் ஒருவர் சுந்தரர். எட்டாம் நூற்றாண்டில் அப்பருக்கும் சம்பந்தருக்கும் பின்னர் வந்தவர். அவருடைய நெருங்கிய நணபர் சேர மன்னன் சேரமான் பெருமாள் நாயனார். அவரும் பெரிய சிவ பக்தர். சுந்தரரை குருவாகவே நினைத்துப் போற்றியவர். சுந்தரருக்கு 18 வயதானபோது சிவபெருமான் அவரை கைலாயத்துக்குத் திரும்ப அழைக்க எண்ணினார். ஐராவதம் என்னும் வெள்ளை யானையை அனுப்பிவைத்தார். சுந்தரருக்கு ஒரே மகிழ்ச்சி. உடனே புறப்பட்டு விட்டார்.


ஆருயிர்த் தோழரான சேரமானுக்கு உள்ளுணர்வால் இது தெரிந்துவிட்டது. உடனே தனது குதிரையில் தாவி எற்றினார். சிட்டாகப் பறக்கும் குதிரையானாலும் பூலோக குதிரை எப்படி கயிலாயத்துக்குப் போக முடியும்? காதில் நமச்சிவாய மந்திரத்தை ஓதினார். ராக்கெட் போல பறந்து, நேரே கையிலாயத்துக்குப் போய்விட்டது. ஆனால் சுந்தரரை உள்ளே விட்ட நந்திகேஸ்வரர், சேரமானை தடுத்து நிறுத்திவிட்டார். அவரிடம் உள்ளே போக ‘டிக்கெட்’ (அனுமதி) இல்லை. அவர் அழையாத விருந்தாளி! சுந்தரர் போய் சிவனிடம் சிபாரிசு செய்யவே உள்ளே வர அனுமதிக்கப்பட்டார். அழைப்பில்லாமல் வந்தது ஏன் என்று சிவன் வினவினார். சுந்தரரை விட்டு தனியே இருக்க முடியாது. அவர் என் குரு என்றார். அப்போதும் சிவனுக்கு மனம் இரங்கவில்லை. சுந்தரர் ஒரு பதிகம் பாடி சிவனை வழிபடவே சேரமானுக்கு அனுமதி கிடைத்துவிட்டது. பக்தருக்கு தகுதி இல்லாவிட்டாலும் குருவின் அருள் இருந்தால் இறைவனும் மறுக்க முடியாது!


967e3-shankarastatue.jpg


விஷ்ணுவுடன் நாரதர் மோதல்

திரி லோக சஞ்சாரி நாரதர் ,வைகுண்டத்தை நோக்கி விரைந்து கொண்டிருந்தார். அவர் சென்ற வழியில் விஷ்ணு பக்தனான ஒரு கிராமத்தான் அவரைப் பார்த்துவிட்டான். நாரதரை நலம் விசாரிக்கவே அவர் வைகுண்டத்துக்குப் போவதாகக் கூறினார். கிராமத்தான் கெஞ்சலாகக் கெஞ்சினான், “ஐயா, கல்யாணம் ஆகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. எப்போது எனக்குக் குழந்தை பிறக்கும்? என்று விஷ்ணுவிடம் கேட்டு வாருங்கள்.”என்றான். அவனும் விஷ்ணு பக்தன் ஆதலால் நாரதர் மறுகவில்லை.

வைகுண்டம் போனவுடன் மறக்காமல் கேட்டார். விஷ்ணு கொடுத்த செய்தி நல்ல செய்தி இல்லை. அப்படியே கிராமத்துக்கு வந்து, ‘’அப்பனே உனக்கு இப் பிறவியில் குழந்தை பாக்கியம் இல்லை’’ என்று விஷ்ணு சொல்லிவிட்டார் என்றார்.


அந்த கிராமத்தானுக்கு முன்னைவிட பக்தி அதிகரிக்கவே அந்த ஊருக்கு வந்த ஒரு சந்யாசிக்குப் பணிவிடை செய்து அவரை குருவாக ஏற்றான். அவர் அவனது பக்தியை மெச்சி, அவனுக்கு மூன்று குழந்தைகள் பிறக்கும் என்று ஆசிர்வதித்தார்.
பல ஆண்டுகள் உருண்டோடின. நாரதர் அதே கிராமத்தின் வழியாக வைகுண்டம் போய்க் கொண்டிருந்தார். கிராமத்தானைப் பார்த்தபோது மூன்று குழந்தைகளோடு விளையாடிக் கொண்டிருந்ததைக் கண்டு திடுக்கிட்டார். அவனிடம் சென்று கேட்டபோது குருவின் திருவருளில் குழந்தை கிடைத்ததை அவன் கூறினான்.


வைகுண்டம் சென்ற நாரதர், கோபத்தோடு விஷ்ணுவை ஏசினார். ‘’ஏன் பொய் சொல்லி, என் பெயரையும் கெடுத்தீர்கள்?’’ என்று கடிந்தார். என்ன நடந்தாது? ஏன் இவ்வளவு கோபம்? என்று விஷ்ணு கேட்கவே , குழந்தையே பிறக்காது என்று என்னிடம் சொல்லி அனுப்பிய ஆளுக்கு ‘’எப்படி ஐயா மூன்று குழந்தை பிறந்தது?’’ என்று சத்தம் போட்டார்.
விஷ்ணுவோ சிரித்துக் கொண்டே, “அட, அவன் யாராவது ஒரு குருவின் காலில் விழுந்திருப்பான். அவனுக்குக் குழந்தை பிறந்திருக்கும். குரு ஒருவருக்கே விதியை மாற்றும் சக்தி உண்டு? இது என்ன உனக்குத் தெரியாதா?” என்று போட்டார் ஒரு போடு!
நாரதரும் குருவைத் தேட ஓட்டம் பிடித்தார்!!

வள்ளுவனும் கூட பெரியாரின் (குருவின்) பெருமையை, இரண்டு அதிகாரங்களில் , இருபது குறள்களில் சொல்லி இருக்கிறார்.


அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல் (குறள் 443)


ஏந்திய கொள்கை உடையார் சீறின் இடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும் (குறள் 899)


உயர்ந்த கொள்கை உடைய பெரியோர்களை பகைத்துக் கொண்டால் அரசனே ஆனாலும் கெட்டு அழிவது உறுதி.


குருர் பிரம்மா, குருர் விஷ்ணோ, குருர் தேவோ மஹேஸ்வர:
குருஸ் சாக்ஷாத் பரம் பிரம்ம தஸ்மை ஸ்ரீ குரவே நம:


இந்தக் கட்டுரைகளை வேறு இடங்களில் வெளியிட விரும்புவோர், பிளாக்—பெயரையும் கட்டுரையாளர் லண்டன் சுவாமிநாதன் பெயரையும் வெளியிடவேண்டும்.

Pictures are taken from different sites.
Source books: Sixty Three Nayanar Saints by Swami Sivananda, Stories as told by Swami
Ramdas; I have compared them and added my comments.


Please read my earlier posts on this subject:
1.Do Words Have Power? An interesting Study on curses and Boons.
2.யார் பெரியவர்? கடவுளா? பக்தனா?
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top