• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

கார்த்திகை தீப வழிபாடு ஸ்பெஷல்

கார்த்திகை தீப வழிபாடு ஸ்பெஷல்

கார்த்திகை தீப வழிபாடு ஸ்பெஷல்


22.11.18 பௌர்ணமி


மகாவிஷ்ணு, பிரம்மா இருவருக்கும் சிவபெருமான் ஜோதிப் பிழம்பாய் காட்சி அளித்த நாள், கார்த்திகை பௌர்ணமி தினமாகும்.


ஜோதிப் பிழம்பே மலையாக எழுந்தருளும் திருவண்ணாமலையில் கிரிவலம் மேற்கொண்டால் பாவங்கள் அனைத்தும் விலகி நன்மைகள் வந்து சேரும் என்பது ஐதீகம்.


23.11.2018 கார்த்திகை மகாதீபம்


அதிகாலை 4 மணிக்கு கோயிலில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. இதையடுத்து, மாலை 6 மணிக்கு அண்ணாமலையில் ஜோதி ஸ்வரூப மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதே நாளில் அர்த்தநாரீஸ்வரரும் காட்சி தருகிறார்.


அருணாசலத்தில் அஷ்டலிங்க வழிபாடு


நினைத்தாலே முக்தி கிடைக்கும் திருவண்ணாமலையில் உள்ள அஷ்ட லிங்கங்களை வழிபட்டால், அனைத்து பலன்களும் கிடைக்கும். கிரிவலம் செல்வோர் இந்த லிங்கங்களை வழிபடுவது மிகவும் அவசியம். மகான்களும், சித்தர்களும், முனிவர்களும், ரிஷிகளும் வாழ்ந்த இந்தப் புண்ணியத் தலத்தில் சில நிமிடங்களாவது இருக்க வேண்டுமே என்று நினைப்போரும் உண்டு. இதனால் தான் நாள்தோறும் ஏராளமானோர் இங்கு வருகை தந்து, அண்ணாமலையாரை வழிபட்டு செல்கின்றனர்.


திருவண்ணாமலையில் பௌர்ணமி நாளில் அண்ணாமலையாரை வழிபட்டு, 14 கி.மீ. தொலைவு கிரிவலம் வந்து கிரிவலப் பாதையில் உள்ள அஷ்ட லிங்கங்களை வழிபட்டால் நன்மைகள் சேரும்; தீமைகள் விலகும். கிரிவலப் பாதையில் எண்ணற்ற கோயில்கள், மடங்கள், ஆசிரமங்கள் நிரம்பியுள்ளன. இங்கேயே அஷ்ட லிங்கங்களும் உள்ளன.


இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசானிய லிங்கம் என்று 8 லிங்கங்கள் ஒவ்வொன்றும் ஓவ்வொரு திசையை நோக்கி அமைக்கப்பட்டுள்ளன. தெரிந்தோ, தெரியாமலோ செய்யும் பாவங்கள், புண்ணியங்கள் உள்ளிட்டவற்றை எமனிடம் அளிப்பது இந்த அஷ்ட திக் பாலகர்கள் தான். இவர்களே அண்ணாமலையில் அஷ்ட லிங்கங்களாக அமைந்திருந்து பூமியைக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த லிங்கங்கள் மனிதனுடைய ஒவ்வொரு காலகட்டத்தைக் குறிக்கின்றன. இவற்றை வேண்டி வணங்கும் பக்தர்களுக்கு நன்மைகள் பயக்கும்.


01 இந்திர_லிங்கம்:


கிரிவலம் வரும் வழியில், கோயிலின் கிழக்கு கோபுரத்துக்கு அருகே கிழக்கு திசையில் இந்திர லிங்கம் உள்ளது. தேவர்களின் தலைவரான இந்திரன் தனது பதவியை நிலை நிறுத்திக் கொள்ள திருவண்ணாமலையில் அங்கப் பிரதட்சிணம் செய்துள்ளார். அப்போது கிழக்குத் திசையில் ஒரு இடத்தில் வந்தபோது மின்னத் தொடங்கியுள்ளது. அப்போது அண்ணாமலையாரின் திருஅருள் என்பதை அறிந்த இந்திரன் தனது பதவி நிலைக்க சிவனிடம் வேண்டினார். அப்போது இந்திரனுக்கு சுயம்பு லிங்கமாக சிவன் காட்சியளித்தார். இதுவே இந்திர லிங்கமாகும். இந்திர லிங்கத்தை வழிபட்டால் திருமகளின் அருள் கிடைக்கும். செல்வம் பெருகும். பதவி உயர்வு, பணிமாற்றம், பணிப் பாதுகாப்பு உள்ளிட்டவையும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.


02 அக்னி_லிங்கம்:


கிரிவலப் பாதையில் இரண்டாவதாகவும், வலது புறத்தில் உள்ளது அக்னி லிங்கம். தென்கிழக்குத் திசை பஞ்ச பூதங்களில் அக்னி தலமே திருவண்ணாமலை என்பதால், இந்த லிங்கத்துக்கு தனி இடம். வாழ்க்கையில் வரும் இடைஞ்சல்களை அகற்றும் சக்தியுள்ளது. அக்னி லிங்கத்தின் கீழ் திசையில் அக்னி தீர்த்தம் உள்ளது. எதிரில் இருப்பது அக்னி மண்டபம். அக்னி லிங்கத்தின் அருகேயே ரமண மகரிஷி, சேஷாத்ரி சுவாமிகளின் ஆஸ்ரமம் உள்ளது. கிரிவலப் பாதையில் 3 ருத்ர மூர்த்திகள் அங்கப் பிரதட்சிணம் செய்தனர். அவர்களின் திருமேனிகள் ஜோதியாக மாறியது. ஒரு செவ்வாய்க்கிழமை அவர்கள் கிரிவலம் வந்தபோது, குறிப்பிட்ட இடத்தைக் கடக்கும்போது பனிமலை போன்ற குளிர்ச்சியை உணர்ந்தனர். அந்த இடமே சுயம்பு லிங்கமான அக்னி லிங்கம் என்கிறது ஆலய வரலாறு. அக்னி லிங்கத்தை வழிபட நோய்கள், பயம் நீங்கும். எதிரிகள் தொல்லை எரிந்து சாம்பலாகும்.


03 எம_லிங்கம்:


கிரிவலப் பாதையில் மூன்றாவதாக உள்ளது எம லிங்கம் ஆகும். தெற்கு திசைக்குரியது. தென் திசையில் எம தீர்த்தம் உள்ளது. எமன் திருவண்ணாமலையில் அங்கப் பிரதட்சிணம் செய்தபோது, அவரது பாதம் பட்ட அடிச்சுவடுகள் எல்லாம் தாமரைப் பூக்களாக மாறின. அந்த இடத்தில் செம்பொன் பிரகாசமாக ஒரு லிங்கம் தோன்றியது. அதுவே எம லிங்கம். பூமியில் உள்ள மனிதர்களின் ஆயுள் முடியும்போது அவர்களின் உயிரை எடுக்கச் செல்லும் எம தூதர்கள் வானுலகில் இருந்து பூமிக்கு வந்து, இங்கு வழிபட்ட பின்னரே உரிய பகுதிக்குப் பயணிப்பதாக பக்தர்களின் நம்பிக்கை. எமலிங்கத்தை வழிபட்டால் எம பயம் நீங்கும். நீதி நெறி நிலைக்கும். பொருள் வளம் பெருகும்.


04 நிருதி_லிங்கம்:


கிரிவலப் பாதையில் நான்காவதாக நிருதி லிங்கம் உள்ளது. இதன் திசை தென்கிழக்கு. சனி தீர்த்தம் என அழைக்கப்படும் தெப்பகுளம் இதனருகில் உள்ளது. மண் என்ற வார்த்தையின் தூய தமிழ்ப் பெயர் நிருதி ஆகும். அஷ்ட திக் பாலகர்களில் ஒருவரான நிருதீஸ்வரர் கிரிவலம் வந்தபோது. குறிப்பிட்ட இடத்தில் குழந்தையின் ஒலியும், பெண்ணின் சலங்கை ஒலியும் கேட்டது. அப்போது நிருதீஸ்வரர் அங்கு நின்று, அண்ணாமலையாரை வணங்கினார். அண்ணாமலையார் தோன்றிய இடமே நிருதி லிங்கம். இந்த இடம், சிவன் பார்வதிக்கு காட்சியளித்த இடம். இங்கிருந்து பார்த்தால் அண்ணாமலையின் வடிவம் சுயம்புவான ரிஷபமாகத் தெரியும்! நிருதி லிங்கத்தை வழிபட்டால் தோஷங்கள் நீங்கும். மகப்பேறு கிடைக்கும். ஜன்ப சாபம் நீங்கும். புகழ் வந்து நிலைக்கும்.


05 வருண_லிங்கம்:


கிரிவலப் பாதையில் ஐந்தாவதாக உள்ளது வருண லிங்கம். இதற்குரிய திசை மேற்கு. இதன் அருகே வருண தீர்த்தம் உள்ளது. இந்த லிங்கத்தை சனி பகவான் ஆட்சி செய்கிறார். அஷ்ட திக் பாலகர்களில் ஒருவர், மழைக்கு அதிதேவதையாகிய வருண பகவான். இவர் முட்டிக் கால் போட்டும், ஒற்றைக் காலால் நொண்டியும் கிரிவலம் வந்தார். அப்போது ஓரிடத்தில் வானத்தைத் தொடும் அளவுக்கு நீருற்று எழுந்தது. அந்நீரைத் தெளித்து அண்ணாமலையாரை வணங்கிட, அங்கு வருண லிங்கம் தோன்றியது!. வருண லிங்கத்தை வழிபட்டால் சிறுநீரக நோய்கள், சர்க்கரை நோய், நீர் சார்ந்த சகல நோய்கள், கொடிய நோய்கள் நீங்கும். உடல் நலம் செழிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.


06 வாயு_லிங்கம்:


கிரிவலப் பாதையில் ஆறாவதாக வாயு லிங்கமும் இதன் அருகே வாயு தீர்த்தமும் உள்ளது. வடமேற்கு திசைக்குரியது. வாயு பகவான் சுழிமுனையில் சுவாசத்தை நிலைகொள்ளச் செய்தவாறு கிரிவலம் வந்தார். அப்போது அடி அண்ணாமலையைத் தாண்டியதும், ஓரிடத்தில் நறுமணம் வீசியது. அங்கே பஞ்சகிருத்திகா செடியின் பூக்கள் மலர்ந்த நேரத்தில் சுயம்புவாக வாயு லிங்கம் உருவானதாக வரலாறு. வாயு லிங்கத்தை வழிபட்டால் சுவாசம் சார்ந்த நோய்கள், இதய நோய்கள் குணமாகும். பெண்களுக்கு நலமும், மன நிம்மதியும் உண்டாகும். கண்திருஷ்டி நீங்கும்.


07 குபேர_லிங்கம்:


கிரிவலப் பாதையில் உள்ள ஏழாவது லிங்கமாக இருப்பது குபேர லிங்கம். வடதிசைக்குரிய இந்த லிங்கத்தின் அருகே குபேர தீர்த்தம் உள்ளது. குபேரன் கண் மூடி தியானித்து, தலை மீது கரம் குவித்தவாறு குதிகாலால் கிரிவலம் வந்தார். அப்படி பல யுகங்கள் கழிந்த பிறகு ஒரு நாள் திருமாலும், மகாலட்சுமியும் அண்ணாமலையை சக்கரபாணி கோலத்தில் தரிசனம் செய்வதைக் கண்டார். அந்த இடத்தில் உண்டான லிங்கமே குபேரலிங்கம் என்கின்றனர். முறையற்ற வழியில் பணம் சேர்த்தவருக்கு பிராயசித்த ஸ்தலம் குபேர லிங்கம். குபேர சம்பத்து தரும் இடம் இது. இங்கு வழிபட்டால் செல்வம் சேரும்.


08 ஈசானிய_லிங்கம்:


கிரிவலத்தில் எட்டாவது லிங்கமாக இருப்பது ஈசானிய லிங்கம். இது வட கிழக்கு திசைக்குரியது. அதிகார நந்தி எனப்படும் நந்தி பகவான் கிரிவலம் வந்தபோது, அண்ணாமலையின் தரிசனம் இந்த இடத்தில் கிட்டியதாக தெரியவருகிறது. இங்கு வழிபட்டால் சனித் தொல்லையிலிருந்து விடுபடலாம். இங்கு தியானித்தால் நன்மைகள் சேரும். தவம் பலிக்கும். சிவனின் அருள் கிடைக்கும். அனைத்து காரியங்களிலும் வெற்றி பெறலாம். என்றும் அன்புடன் உங்கள் ஆச்சார்யா பாபாஜி வாட்சப். 8678915314, 9840848127.


தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!


காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி!
கயிலை மலையானே போற்றி! போற்றி!
நன்றி--ஆன்மீகம்
 

Latest ads

Back
Top