• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில்

praveen

Life is a dream
Staff member
திருக்கச்சி அல்லது காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் என்பது பெருமாள் கோயில் என்று வைணவர்களால் போற்றப்படுகிறது.

வைணவ பாரம்பரியத்தில் திருவரங்கம் மற்றும் திருவேங்கடம் ஆகிய தலங்களுக்கு அடுத்ததாக முக்கியத்துவம் வாய்ந்த தலம்

இத்திருக்கோயிலின் இராஜகோபுரம் மேற்கு நோக்கி அமைந்தள்ளது. காஞ்சியில் தெற்குப் பகுதி - நகரத்திற்கு மையத்தில் அமைந்துள்ள திருக்கோயிலாகும். மூலவர் வரதராஜப் பொருமாள் மேற்குப் பார்த்த வண்ணம், நின்ற திருக்கோலத்தில் சேவார்த்திகளுக்கு அருள் புரிந்து கொண்டுள்ளார். பெருந்தேவி தாயார் கிழக்கு பார்த்த வண்ணம் எழுந்தருளி சேவார்த்திகளுக்கு அருள்புரிந்து கொண்டுள்ளார்.

வரலாறும் சிற்பக்கலையும்:

இக்கோயில் எவரால் முதலில் நிறுவப்பட்டது என்பது தெரியவில்லை. எனினும் கி.பி. 1053 ல் சோழர்களால் வேழமலையில் குகைவரைக் கோயில் கிழக்கு மேற்கே விரிவாக்கப் பெற்றது என்று கல்வெட்டுகளின் மூலம் அறியப்படுகிறது. முதலாம், விக்கிரம சோழனும் கோயிலை விரிவுபடுத்தினர்.

பதினான்காம் நூற்றாண்டில் தாயார் சன்னதியும், அபிஷேக மண்டபமும் அமைக்கப்பெற்றன. சோழர்களின் வீழ்ச்சிக்குப்பின், விஜயநகர அரசர்கள் கிழக்கு கோபுரம், ஊஞ்சல் மண்டபம் மற்றும் கல்யாண மண்டபங்களை நிறுவினர்.

கல்யாண மண்டபம் எட்டு வரிசைகளில், வரிசைக்குப் பன்னிரண்டு தூண்களாக 96 சிற்பகலை மிக்க ஒரே கல்லாலான தூண்கள் நிறைந்த மண்டபம் ஆகும். தூண்களில் யாளி, போர்குதிரை, குதிரை மீது வீரர்கள் மற்றும் பல்வகை சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

இதற்குள் உள்ள சிறிய நன்கு தூண் கொண்ட மண்டபத்தையும் சேர்த்து நூறு கால் மண்டபம் என அழைக்கப்படுகிறது. இதன் நான்கு மூலைகளில் தொங்கும் கற்சங்கிலிகள் சிற்பக்கலையின் விந்தையாகும். கிழக்கு கோபுரம் ஒன்பது நிலைகளுடன் சுமார் 180 அடி உயரமுடையது. தற்போது இக்கோபுரம் சிதிலமடைந்துள்ளது.

தல வரலாறு :

தொண்டை நாட்டில் அமைந்துள்ள திவ்ய தேசங்களுள் மிகவும் சிறப்பாகக் பேசப்படும் திருப்பதியும், பெரும்பாலான மக்களுக்குத் தெரிந்திருக்கக் கூடியதுமான திருக்கோவில் இது ஆகும்.காஞ்சிபுரம் என்று மக்கள் நினைத்து உடன்
1. பட்டுப்புடவை
2. காஞ்சி அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோவில்
3. வரதராஜ பெருமாள் திருக்கோவில் ஆகியவை மக்களுக்கு நினைவிற்கு வரும்.
108 திவ்ய தேசங்களுள் கோயில் என்பது திருவரங்கத்தைக் குறிக்கும், திருமாலை என்பது திருவேங்கடத்தானை - திருப்பதியைக் குறிக்கும், பெருமாள் கோயில் என்றால் அது காஞ்சி வரதராஜரைக் குறிக்கும்.

கோயில் அமைப்பும் உட்சன்னதிகளும்:

மூலவராகிய தேவராஜப் பெருமாள், வேழ மலை (அத்திகிரி) மீது நின்ற திருக்கோலத்தில் மேற்கே திருமுகமண்டலமுடன் நாற்கரத்துடன் அருள்பாலிக்கிறார். மூலவர் மலை மீது அமைந்துள்ளார் என்பதற்கு சான்றாக கர்பகிரகத்தின் நேர் கீழே குன்று குடைவரை கோயிலில் யோக நரசிங்க பெருமாள் வீற்றுக்கிறார். பெருமாளை காண்பதற்கு இருப்பதிநான்கு படிகளை ஏறிச்செல்லும் போது காணப்படும் தங்க பல்லி மற்றும் வெள்ளி பல்லி, இக்கோவிலில் பிரசிதம். மூலவரை நோக்கிய படி தென்மேற்கே பெருந்தேவி தாயாருக்கு தனி சன்னதியும், திருக்குளத்தின் எதிரே சக்கரதாழ்வர் சன்னிதி உள்ளது. கோயில் வெளி பிரகாரத்தில் கண்ணன், ராமர், வராஹா பெருமாள் சன்னதிகளும், ஆண்டாள், ஆழ்வார்கள், களியமானிக்க பெருமாள், ஆச்சார்யர்கள் சன்னதிகளும் மற்றும் நம்மாழ்வார் சன்னதியும் உள்ளன. இராஜகோபுரம் 96 அடி உயரமுள்ளது.

அத்தி வரதர் எனப்படும் மரத்தல் செய்யப்பட்ட பெருமாள், திருக்குளத்தில் பள்ளி கொண்டிருக்கிறார். முழுதும் அத்திமரத்தால் ஆன பள்ளிகொண்ட பெருமாள் நீண்ட நெடிய உருவம்.40 ஆண்டுகளுக்கு ஒருமுறை, குளத்து நீரை முழுவதும் வெளியேற்றி ஸ்ரீ அத்திவரதரின் திருவுருவச் சிலையை வெளியெடுத்து, கோயிலில் பள்ளிகொள்ள வைத்து ஒருமாத காலத்திற்கு உற்சவங்கள் பிரமாதமாக நடக்கும். அத்திவரதரை தம் வாழ்நாளில் தரிசிப்பது மிகப் பெரும் பேறு ஆகையால், எங்கிருந்தெல்லாமோ வந்து மக்கள் பெருமாளைத் தரிசிப்பர்.

திருக்குளத்தின் கிழக்குத்திசையில் சக்கரத்தாழ்வார் என பேசப்படுகின்ற சுதர்சன ஆழ்வார் சந்நிதி அமைந்துள்ளது.தமிழகத்தில் எங்கும் காணமுடியாத மிகப்பெரிய அளவில் சுதர்சன ஆழ்வார் திருமேனி காட்சி தருகின்றது. இவர் 16 கைகளுடன் சங்கு சக்கரங்கள் தாங்கி காட்சியளிக்கின்றார்.

வைணவ மதம் வளர்க்கப்பட்ட தலம் :

ஒரு சமயம் மும்மூர்த்திகள் உலக நன்மைக்காக செய்த யாகத்தில், பங்கு கொண்ட தேவர்களுக்குக் கேட்ட வரம் எல்லாம் கொடுத்தார் மகாவிஷ்ணு எனவே அவருக்கு வரதர் என்று பெயர் ஏற்பட்டதாகக் கூறுவர். யாகத்தில் அளித்த அவர்ப் பாகத்தை ஒரு சித்திரை மாத திரிவோண நன்நாளில் நாராயணன் புண்ணியகோடி விமானத்தில் சங்கு, சக்கர, கதையுடன் தோன்றி ஏற்றுக் கொண்டார்.

ஸ்ரீ மந் நாராயணன் புண்ணியக்கோடி விமானத்துடன் இங்கு எழுந்தருளிய நன்நாள் சித்திரை மாதத்து திருவோண தின்த்திலாகும். அந்நாளில் தேவர்கள ஒன்று சேர்ந்து இத்தலத்தில் நித்திய வாசம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ள, நாராயணன் சம்மதித்தார். உடன் ஐராவதம் என்ற யானையே மலை வடிவில் கொண்டு நாராயணனைத் தாங்கி நின்றது. இதனால் இதற்கு அத்திகிரி என்று மற்றொரு பெயரும் ஏற்பட்டது.

வைய மாளிகைப் பல்லி :

ஸ்ருங்கிபேரர் என்ற முனிவருக்கு ஹேமன், சுக்லன் என்று இரண்டு மகன்கள் இருந்தனர். இவர்கள் கெளதம் முனிவரிடம் வித்தைப் பயின்றனர். இவர்கள் இருவரும் விஷ்ணு பூஜைக்குப் பழம் புஷ்பம், தீர்த்தம் கொடுக்கும் பணியினை மேற்கொண்டிருந்தனர். ஒரு நாள் கொண்டு வந்த தீர்த்தத்தை மூடாமல் வைக்க, அதில் ஒரு பல்லி விழுந்து விட்டது. இதை அறியாத இவர்கள் அத்தீர்த்தத்தை அப்படியே கொண்டு வந்து கெளதம முனிவரிடம் கொடுக்க, முனிவர் அதை பெற்றுக் கொண்ட போது அதில் இருந்த பல்லி வெளியில் தாவி ஓடியது.

அதைக் கண்டு கோபமுற்ற கெளதம முனிவர் அவர்கள் இருவரையும் நோக்கி பல்லியாகக்கடவது என்று சாபம் அளித்தார். இதனால் கவலை அடைந்த ஹேமன், சுக்லன் இருவரம் முனிவரின் பாதங்களில் விழுந்து வணங்கி, சுவாமி அறியாமையால் தவறு நடந்து விட்டது எங்களை மன்னித்து, பாபவிமோசனமும் கூற வேண்டும் என வேண்டினர். உடனே முனிவர் சாந்தம் அடைந்து இந்திரன் யானை வடிவம் கொண்டு (கஜேந்திரனாக) வரதனை தரிச்சிக்க இச்சந்நிதியில் நுழைவான் அச்சமயம் உங்கள் சாபம் அகலும் என்று கூறினார்.

அதன் பின்பு ஹேமன், சுக்லன் இருவரும் இத்தலத்தலதிற்கு வந்து மூலவர் அறையின் வெளிப்பிரகாரத்தில், மூலவரின் வடகிழக்கே பல்லியாக வந்து அமர்ந்தனர். குறிப்பிட்ட காலம் நெருங்கியதும் இந்திரன், கஜேந்திரன் (யானை வடிவில்) வடிவம் கொண்டு இத்தலத்தில் நுழைந்த உடன் இவர்களின் சாபம் அகன்றது என்பது, பல்லியின் புராண வரலாற்றுச் சான்றோர்கள் கூறுகின்றனர்.

மேலும் இத்திருக்கோயிலினுள் :-

1. அழகிய சிங்கர் சந்நிதி

2. சக்கரதாழ்வார் சந்நிதி

3. தன்வந்திரி சந்நிதி

4. வலம்புரி விநாயகர் சந்நிதி

5. திருவனந்தாழ்வார் சந்நதி

6. கருமாணிக்க வரதர் சந்நதி

7. மலையாள நாச்சியார் சந்நதி

ஆகியச் சந்நிதிகள் தனித்தனியாக அமைந்துள்ளன.

அத்திவரதர் :

இத்திருக்கோயிலினுள், வெளிப்பிரகாரத்தில் அமைந்துள்ள திருக்குளத்தில், அத்தி மரத்தால் செய்யப்பட்ட, கிடந்து நிலையில் உள்ள அத்திவரதர் சிலையை 40 வருடங்களுக்கு ஒரு முறை வெளியில் எடுத்த முறைப்படி பூசைகள் செய்து, ஒரு மண்டலகாலம் பொது மக்களின் தரிசனத்திற்காக வைப்பது வழக்கமாக உள்ளது. கடைசியாக 1979 ஆம் அண்டு எடுக்கப்பட்ட பொது மக்களின் பார்வைக்கும், தரிசனத்திற்கும் வைக்கப்பட்டது.



திருவிழாக்கள் :

பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் இடம்பெற்றுள்ள 108 வைணவத் திருத்தலங்கள் திவ்ய தேசங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இதில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலும் ஒன்று. வரதராஜ பெருமாள் அஷ்ட நட்சத்திரத்தில் பிறந்தவர். இதனால் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் அஷ்ட நட்சத்திரம் பிறக்கும் தேதியில் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவ விழா தொடங்கும். இவ்விழா 10 நாள்கள் நடைபெறுகிறது.

கொடியேற்றம்:

வைகாசி மாதம் அஷ்ட நட்சத்திரம் பிறக்கும் நாளில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கும். அன்று அதிகாலை 3 மணிக்கு மூலவருக்குத் திரு ஆராதனை செய்யப்படும். தொடர்ந்து வரதராஜ பெருமாள், மலையில் இருந்து கீழே இறங்குவார். பின்னர் அதிகாலை 4.15 மணிக்கு கொடி மரத்தில் கொடி ஏற்றப்படும். இந்த நிகழ்வை ஏராளமான பக்தர்கள் கண்டு களிப்பர். தொடர்ந்து 4.30 மணி அளவில் தங்க சப்பரத்தில் தேவி, பூதேவி சகிதமாக சிறப்பு அலங்காரத்தில் வரதராஜ பெருமாள் 4 மாட வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாளிப்பார்.

கருட சேவை

பிரம்மோற்சவ விழாவின் 3-வது நாள் கருட சேவை நடைபெறும். இதையொட்டி அதிகாலை 4.30 மணி அளவில் சிறப்பு அலங்காரத்தில் வரதராஜ பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளுவார். அப்போது கோபுர தரிசனமும் நடைபெறும். பின்னர் நான்கு ராஜ வீதிகள் மற்றும் முக்கிய வீதிகள் வழியாக கருட வாகனத்தில் வரதராஜ பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். கருட சேவை உற்சவத்தின்போது, உற்சவப் பெருமாளுக்கு முன்பாக வேத பாராயண கோஷ்டியினர் வேத பாராயணத்தைப் பாடியவாறு செல்வர்.

தேரோட்டம்

பிரம்மோற்சவ விழாவின் ஏழாவது நாள் அதிகாலை 4.15 மணிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சகிதமாய் எழுதந்தருளுவார். பின்னர் வரதராஜ பெருமாள், கோயிலில் இருந்து காந்தி சாலை தேரடிக்குக் கொண்டு வரப்பட்டு அங்கு நிலையில் இருக்கும் தேரில் அதிகாலை 5.15 மணிக்கு அமர்த்தப்படுவார்.

இதைத் தொடர்ந்து தேரின் மீது அமர்ந்திருக்கும் வரதராஜ பெருமாளை, தேரின் மீது ஏறிச் சென்று வழிபட அதிகாலை 5.15 முதல் காலை 6 மணி
வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். பின்னர் 6 மணிக்குத் தேர் புறப்பாடு நடைபெறும். தேரோட்டத்தைக் காணப் பல்வேறு ஊர்களில் இருந்து லட்சக்கணக்கான

பக்தர்கள் வந்து தேரை வடம் பிடித்து இழுப்பர். இதனால் அன்று காஞ்சிபுரம் நகரத்தின் அனைத்துச் சாலைகளிலும் மக்கள் வெள்ளத்தையே காணமுடியும். இத்தேர் காந்தி சாலையில் இருந்து காமராஜர் சாலை வழியாக சென்று காஞ்சி காமாட்சியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள 4 ராஜ வீதிகளிலும் வலம் வந்து நிலைக்கு வரும்.

அன்னதானம்

அன்று பக்தர்கள் மற்றும் வணிக நிறுவனத்தினர் சார்பில் தேரோட்டத்தைக் காண வரும் வெளியூர் பக்தர்களுக்கு மோர், பழரசம், வெண் பொங்கல், தயிர் சாதம், புளி சாதம் ஆகியற்றை வழங்குவர்.

தீர்த்தவாரி

பிரம்மோற்சவ விழாவின் 9-வது நாள் இக்கோயிலில் தீர்த்தவாரி நடைபெறும். அதையொட்டிக் கோயில் உள்புறம் அமைந்துள்ள கல்யாண மண்டபத்தில் தேவி, பூதேவி சகிதமாய் வரதராஜ பெருமாள் எழுந்தருளுவார். அங்கு சிறப்பு ஆராதனை நடைபெறும். பின்னர் அங்கிருந்து வரதராஜ பெருமாள் பக்தர்கள் வெள்ளத்தில் ஊர்வலமாகச் சென்று குளத்தில் இறங்குவார். அப்போது அவருக்குப் படைத்த பிரசாதம் குளத்தில் வீசப்படும். வரதராஜர் குளத்தில் நீராடியதைத் தொடர்ந்து, அங்கு குவிந்திருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குளத்தில் இறங்கி நீராடி மகிழ்வர். பின்னர் வரதராஜர் பக்தர்கள் புடைசூழ உற்சவர் அறைக்குப் புறப்பட்டுவார்.

நிறைவு

பிரம்மோற்சவ விழாவின் 10-வது நாள் கொடி இறக்கப்பட்டு, அன்றுடன் விழா நிறைவு பெறும். பத்து நாள் பிரம்மோற்சவ விழாவில் காலை மற்றும் மாலை வேளைகளில் ஒவ்வொரு நாளும் வரதராஜ பெருமாள், தங்க சப்பரம், சேஷ வாகனம், தங்கப் பல்லக்கு, சிம்ம வாகனம், சூரிய பிரபை, ஹனுமந்த வாகனம், சந்திரப் பிரபை, யாளி வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம், புண்ணியகோடி விமானம், வெட்டிவேர் சப்பரம் ஆகியவற்றில் வலம் வருவார். இந்த 10 நாள் நிகழ்வில் லட்சக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் காஞ்சிபுரத்திற்கு வந்தவண்ணம் இருப்பர். இப்பிரம்மோற்சவத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்கு எல்லா வளங்களையும் பெருமாள் வழங்குவார் என்பது ஐதீகம்.
 

Latest ads

Back
Top